Saturday, 30 December 2017

எப்படி சாத்தியம்?




இது எப்படி சாத்தியமானது? உலகமே வியக்கும் ஓர் அதிசயம்! 

ஊட்டி, மேட்டுப்பாளையம் வனவிலங்கு முகாமில்    பணிபுரிபவர் சரத்குமார் பழனிச்சாமி. வயது 28. உயரம் 6 அடி. 80 கிலோ  எடையுடையவர்.

அவர் ஆபத்தில் இருந்த - நடக்க முடியாத நிலையில் இருந்த - சுமார் 100 கிலோவுக்கு மேலே எடையுடைய - ஒரு யானைக் குட்டியை தோளில் சுமந்து கொண்டு 50 மீட்டர் தூரம் அதனுடைய தாய் யானையிடம் சேர்ப்பிக்க நடந்திருக்கிறார்! கூடவே அந்தக் குட்டி யானை விழாமல் இருக்க அவருடைய  நண்பர்களும் உதவியாக இருந்திருக்கிறார்கள்.

இது எப்படி சரத்குமாருக்குச் சாத்தியம் ஆனது என்று நாம் அனைவருமே வியக்கிறோம். இப்போது அதே செயலை நீங்கள் செய்து காட்டுங்கள் என்றால் அவரால் செய்து காட்ட முடியுமா? நிச்சயமாக முடியாது!  

இது போன்ற செயல்கள் சாதாரண நிலையில் யாராலும் செய்ய இயலாது. அந்தக் குட்டி யானையின் மீது அவருக்கிருந்த அக்கறை - அந்தக் குட்டியானை அதன் தாயிடம் கொண்டு சேர்க்கப்பட வேண்டுமே என்னும் வெறி - இது தான் இது போன்ற அதிரடியான செயல்களுக்கு முக்கிய காரணம்.  இந்தக் குட்டியானையை அதன் தாயிடம் சேர்க்கப்படா விட்டால் அதனால் ஏற்படப்போகும் அபாயம் - அந்தத் தாய் யானை ஊரையே கலங்கடிக்கும் என்னும் பயம் - இவைகளெல்லாம் சேர்ந்து தான் இப்படி ஒரு சாதனையை அவரால் செய்ய முடிந்திருக்கிறது!

சாதாரண காலங்களில் செய்ய இயலாத சில காரியங்கள் யாரும் எதிபாராத நேரத்தில், ஆபத்து அவசர காலத்தில், ஒரு சில நேரங்களில் மனிதர்கள் செய்யத்தான் செய்கிறார்கள். இல்லை என்று சொல்ல முடியாது. அதனைத்தான் நாம் அதிசயங்கள், வியக்கத்தக்க, இயற்கைக்கு மீறிய, அமானுஷ்யம்   என்று சொல்லுகிறோம்! மனிதனுக்கு வாழ்வா, சாவா என்னும் நிலையில் இருக்கும் போது அவன் வாழ வேண்டும் என்று நினைத்தால் அவனால் இதுபோன்ற ஆச்சரியங்களைச் செய்ய முடியும். 

ஆமாம், இந்தச் சாதனையைப் புரிந்த சரத்குமார் என்ன சொல்லுகிறார்? அவர் சொல்லுகின்றார்:  "அந்த நேரத்தில் என்ன நடந்தது என்று எனக்கே தெரியவில்லை! அந்தக் குட்டியானயை அதன் தாயிடம் சேர்ப்பிக்க வேண்டும். அது மட்டும் தான்! வேறு ஒன்றும் நினைவில் இல்லை! உடனே தூக்கி விட்டேன்!  முடியுமா, முடியாதா என்றெல்லாம் நினைக்க நேரமில்லை!    செம கணம்! மூச்சே திணறிவிட்டது" என்கிறார் சரத்!

ஓர் உயிருக்கு உயிர் கொடுத்தவர். வாழ்க பல்லாண்டு என நாமும் வாழ்த்துவோம்!

Friday, 29 December 2017

கேள்வி - பதில் (71)


கேள்வி

ஆர்.கே நகரில் தினகரன் வெற்றி பெற்று விட்டாரே! இனியாவது அங்குல்ல பிரச்சனைகள் தீருமா?

பதில்

பிரச்சனைகள் தீர வாய்ப்பில்லை. தினகரனின் வரவால் அங்கு எந்தப் பிரச்சனையும் தீரப்போவதில்லை என்பது அவரைத் தேர்ந்தெடுத்த வாக்களர்களுக்கும் தெரியும்! அப்படியே தி.மு.க. வோ அல்லது அ.தி.மு.க. வோ தெர்ந்தெடுக்கப் பட்டிருந்தாலும் அந்நகருக்கு எந்தவொரு விடிவு காலமும் ஏற்படப்போவதில்லை என்பதும் மக்களுக்குத் தெரியும்! அதனால் கொடுக்கின்ற பணத்தையாவது வாங்கிக் கொள்ளுவோம் என்பதே மக்களின் மனநிலை. அதனால் தான் யார் பணம் கொடுத்தாலும் வாங்கிக் கொள்ளுகிறார்கள்! மக்களைக் குறை சொல்லுவதில் பயனில்லை!

இதே ஆர்.கே. நகரில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர், அவர் பதவியில் இருந்த காலத்திலேயே  அவரே இந்த நகரின் வளர்ச்சிக்காக எதனையும் செய்யவில்லை! ஒரு முதல்வரே ஒன்றும் செய்யவில்லை என்றால் என்ன அர்த்தம்? வளர்ச்சித் திட்டங்கள் தேவையில்லை என்பது தானே அர்த்தம்! தேர்தல் வரும் போது பணமோ, சட்டிப்பானைகளோ, தொலைக்காட்சிப் பெட்டிகளோ இப்படி  எதையாவது கொடுத்து வெற்றி பெற முடியும் என்பது தானே அம்மையார் காட்டிய வழி! அவர் காட்டிய வழியை மக்களும் ஏற்றுக் கொண்டார்கள்! இந்த அரசியல்வாதிகளால் எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது என்பதனால் கொடுப்பதையாவது பெற்றுக் கொள்ளுவோம் என்னும் மனநிலைக்கு மக்கள் தள்ளப்பட்டு விட்டார்கள்!
அதனாலேயே எந்தக் கட்சிக்காரன் எவ்வளவு கொடுப்பான் என்று பேரம் பேசுகின்ற நிலைக்கு மக்கள் வந்து விட்டார்கள்!

இந்தத் இடைத் தேர்தலில் எல்லாக் கட்சிகளுமே பணத்தை அள்ளி வீசியிருக்கிறார்கள்! முக்கியமாக அ.தி.மு.க. வும் தி.மு.க.வும். ஆனால் சுயேச்சையாகப் போட்டியிட்ட தினகரன் அனைவரையும் மிஞ்சிவிட்டார்! அவர் சேவை செய்ய வரவில்லை. இப்போதைய அரசாங்கத்தை பதவியிலிருந்து கவிழ்க்க வேண்டும் என்பதே அவரின் உயரிய நோக்கம்!  மக்களுக்குத் தற்காலிகமாக பணம் கிடைத்தது. அவர்களுக்கு அது போதும்! தினகரனுக்குப் பதவி கிடைத்தது. அவருக்கு அது போதும். 

இன்னும் மூன்று மாதத்தில் அரசாங்கம் கவிழும் என்று தனது அடுத்த திட்டத்தை தினகரன் அறிவித்து விட்டார். ஆக, இனி அவரின் அடுத்த கட்ட வேலைகள் தொடரும்.

தினகரனிடம்,  கொள்ளையடித்த பணம் கோடிக்கணக்கில் கொட்டிக் கிடக்கிறது. இந்த இடைத் தேர்தலுக்கே கோடி கோடியாக செலவு செய்திருக்கிறார்! இனி அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களை அவர் பக்கம் இழுக்க வேண்டும். ஒவ்வொருனுக்கும் 10 கோடி கொடுக்கிறேன் என்றால்  அனைவரும் வாயைப்பிளந்து கொண்டு வருவார்கள்! இன்னும் கூடுதலாகக் கூட கொடுக்க வேண்டி வரும்! இனி அவர்களுக்கு அரசியலில் எதிர்காலம் இல்லை என்பது அவர்களுக்குத் தெரியும். அதனால் எவ்வளவு "புடுங்க" முடியுமோ  அவ்வளவும் லாபம்!

அதனால் தினகரனின் வெற்றி என்பது அவருக்கும் அவரின் குடும்பத்திற்கு மட்டுமே லாபம்! மக்களுக்கு அல்ல!




Wednesday, 27 December 2017

அலறுகிறது ஆங்கிலம்..!


ஆங்கிலத்தின் நிலைமை நமது நாட்டில் எப்படி இருக்கிறது? பாவமாகத்தான் இருக்கிறது! வேறு என்ன சொல்லுவது? கடைசியாக கோத்தபாரு விமான நிலையத்தில் "merry christmas" என்பதற்குப் பதிலாக   "mary christmas" என்றும் "happy new years" என்று போட்டு பயணிகளைக்  கொஞ்சம் கலகலப்பாக்கி இருக்கிறார்கள்!


        
ஆமாம்! நாம் ஏன் ஆங்கில மொழியில் இவ்வளவு கீழ் நிலைக்குத் தள்ளப்பாட்டோம்? தேசிய மொழிக்கு அடுத்து ஆங்கில மொழியே நாட்டின் தொடர்பு மொழி. தொடர்பு மொழியான ஆங்கிலத்தைக் கற்றுக் கொடுப்பதில் கல்வி அமைச்சு கவனம் செலுத்தவில்லை என்பது தான் உண்மை.  ஆங்கில மொழிக்காக  கோடிக்கணக்கில் பணம் செலவழித்திருப்பார்கள். ஆங்கிலேயர்களைக் கொண்டு ஆங்கிலம் படிக்க வைத்திருப்பார்கள்.     ஆனாலும் அத்தனையும் எந்தவித பலனையும் கொண்டு வரவில்லை! என்ன காரணம்? உண்மையைச் சொன்னால் இங்குள்ள ஆசிரியர்களே ஆங்கிலம் கற்பிக்க தகுதியானவர்கள் தான்.  சீன, இந்திய ஆசிரியர்களுக்கு அந்தத் தகுதிகள் நிறையவே        இருக்கின்றன.  ஆனாலும் கல்வி அமைச்சு மலாய் இனத்தவர்களை வற்புறுத்தி  ஆங்கில ஆசிரியர்களாக நியமிக்கின்றனர்.  பிரச்சனையே இங்கு தான் ஆரம்பமாகிறது. பெரும்பாலான மலாய் இனத்தவர் ஆங்கிலம் படித்துக்   கொடுக்க விரும்புவதில்லை! காரணங்கள் பல. சீன, இந்திய ஆசிரியர்களின் நிலை வேறு. அவர்கள் வீடுகளில் கூட ஆங்கிலத்தையே பயன் படுத்துகின்றனர்.  நிச்சயமாக ஆங்கிலத்தில் இவர்கள் தரம் அதிகமாகவே இருக்கும் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை.

கல்வி அமைச்சு மாணவர்களின் எதிர்காலத்தைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இன்றைய பட்டதாரிகளின் ஆங்கிலத் திறமையின்மையால் வேலைக் கிடைப்பதில் சிரமப்படுகின்றனர். குறிப்பாக வெளிநாட்டு நிறுவனங்கள் ஆங்கிலம் தெரிந்தவர்களையே தேர்வு செய்கின்றனர். வெளி நாடுகளுடன் தொடர்பு உள்ள நிறுவனங்களுக்கு ஆங்கிலத் திறன் உள்ளவர்களே தேவை.

ஆங்கிலக் கல்வி பள்ளியிலிருந்தே தவறுதலாகக் கற்பிக்கப் படுகின்றது. அத்தோடு மலாய் மூலம் ஆங்கிலம் பேசப்படுகின்றது. தவறான ஆங்கிலத்தினாலேயே பல நூறு மாணவர்கள் தங்களது மருத்துவப் படிப்பை இழக்கின்றனர்.

இதற்கு ஏதாவது தீர்வு உண்டா? உடனடியாக கண்ணுக்கு எட்டியவரை தீர்வு தெரியவில்லை!  ஆங்கிலத் திறன் அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தால் உடனே தேசிய மொழிக்கு  எதிரிகளாக மலாய்க்காரர் அல்லாதார்         சித்தரிக்கப்படுகின்றனர்!     

அதனாலேயே எல்லாத் துறைகளிலும் இன்று ஆங்கிலம் அலறிக் கொண்டிருக்கிறது!                                                                           

Sunday, 24 December 2017

30% விழுக்காடு அரசாங்கம் ஒதுக்குமா?


இராணுவத்தில் மலாய்க்காரர் அல்லாதவர்களுக்கு 30 விழுக்காடு ஒதுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ஒருவர்  அரசாங்கத்தை வலியுறுத்திருக்கிறார். வரவேற்கிறேன்! ம.இ.கா. கேட்கத் துணியாததை அவர் கேட்டிருக்கிறார்.

ஆனால் இன்றைய நிலையில் இது சாத்தியமான ஒன்றா? ஒரு காலக்கட்டத்தில் அது தேவையான ஒன்றாக இருந்தது என்பது உண்மை தான். பல இன இராணுவமாக  நாம் இருந்தோம். அது ஒரு இக்கட்டானக் காலக் கட்டம். கம்யூனிஸ்ட் பயங்கரவாதிகளின் அட்டுழியங்கள் இருந்த ஒரு காலக்கட்டம். நாட்டின்  பல பிரபலங்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டனர். பொது மக்கள் பயங்கரவாதிகளால் துன்புறுத்தப்பட்டனர். ஆங்காங்கே கொலைகள் நடந்தன. பொது மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்திக்கொண்டிருந்த பயங்கரவாதிகளை ஆயுதம் ஏந்தி அடக்க வேண்டிய அவசியம் இராணுவத்திற்கு இருந்தது.

அந்தக் காலக் கட்டத்தில் - 1960 களில் - இராணுவத்தில் 30 விழுக்காடு மலாய்க்காரர் அல்லாதார்  இருந்ததாக முன்னாள் இராணுவ தேசப்பற்றாளர் சங்கம் தனது ஆய்வில் கூறுகிறது.

ஆனால் இப்போதைய நிலை என்பது வேறு. நாட்டில் எந்த ஒரு இராணுவ நடவடிக்கையும் தேவைப்படவில்லை. பயங்கரவாத அச்சுறுத்தல்கள் காட்டில் இருந்து வரவில்லை, இப்போது வேறு விதமான அச்சுறுத்தல்கள் நாட்டிற்கு உள்ளிருந்தே வருகின்றன. இதற்கு இராணுவ நடவடிக்கைகள் தேவை இல்லை.

அது மட்டும் அல்ல இப்போதைய இராணுவம் ஓரளவு இஸ்லாமிய மயமாக ஆக்கப்பட்டிருக்கிறது என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டும். அதன் பொருள் ஓர் இஸ்லாமிய நாட்டில் இஸ்லாமிய இராணுவம் என்பதும் காலத்தின் கட்டாயம். இதுவும் மலாய்க்காரர் அல்லாதாரர்களுக்கு ஓர் தடைக்கல்லாக இருக்கும் என்பதும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

மேலும் இராணுவத்தில் பதவி உயர்வு என்பதும் இப்போது அரசியாலாகி விட்டது. பதவி உயர்வுகளை இராணுவம் தீர்மானிப்பதில்லை. தற்காப்பு அமைச்சிலுள்ள அதிகாரிகளே தீர்மானிக்கின்றனர். அதாவது களத்தில் உள்ளவர்கள் தீர்மானிப்பதில்லை. குளுகுளு அறைகளில் இருக்கும் அதிகாரிகள் தீர்மானிக்கின்றனர்! அவர்களே விழுக்காட்டு விகிதங்களைத் தீர்மானிக்கின்றனர்.

ஆனால் இங்கு ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றை சொல்லித் தான் ஆக வேண்டும்.  இந்தியர்களும் சீனர்களும் நாட்டுப்பற்று அற்றவர்கள் என்று இராணுவத்தில் உள்ளவர்களும், அமைச்சர்களும் சொல்லுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. குற்றம் நம்மிடம் இல்லை. செயல்படுத்தும் அதிகாரிகளிடம் தான் உண்டு! அடுத்த முறை நம் மீது "நாட்டுப்பற்று" இல்லை என்று சொல்லப்பட்டால் அவர்கள் மீதே அந்தக் குற்றச்சாட்டை திருப்பி அடிக்க வேண்டும்!

வாழ்க மலேசியா!

Saturday, 23 December 2017

கேள்வி - பதில் (70)


கேள்வி

வைகைப்புயல் வடிவேலுவின் சகாப்தம் முடிவுக்கு வந்து விட்டதா?

பதில்

எல்லாமே ஒரு முடிவுக்கு வந்து தான் ஆக வேண்டும். வைகைப்புயலுக்கும் நேரம் வந்து விட்டது  என்று தான்  சொல்லத் தோன்றுகிறது!

இனி நடித்துத் தான் தனது பிழைப்பை நடத்த வேண்டும் என்னும் நிலையில் அவர் இல்லை. அதனையெல்லாம் தாண்டி அவர் வந்து விட்டார். இப்போது அவர் கடைசியாக நடித்த படம் கூட அவருடைய ஒத்துழைப்பு இல்லாமையால்  கைவிடப்பட்டது! ஆக, இப்போது அவருக்குப் பணம் ஒரு பொருட்டல்ல! கவிப்பேரரசு வைரமுத்துவின் வைர வரிகள் ஞாபகத்திற்கு வருகிறது:" கழுத்து வரைக்கும் காசு இருந்தால் அது தான் உனக்கு எஜமானன்!"   இப்போது அவருக்குச் சோறு போட்ட    சினிமா எஜமானன் அல்ல! அவர் தான் சினிமாவுக்கு எஜமானன் என அவர் நினைக்கிறார்! விட்டுத் தள்ளுங்கள்! அவரைப் பற்றிய தனிப்பட்ட விமர்சனங்கள் வேண்டாம்.

ஆனால் நகைச்சுவையைப் பொறுத்தவரையில் அவருடைய நடிப்புக்கு ஈடு இணை இல்லை! கவுண்டமணி- செந்தில் ஜோடிக்குப் பின்னர் தமிழ்ச் சினிமாவை ஒரு கலக்குக் கலக்கியவர் வடிவேலு! அப்போது அவருடைய உடல்வாகும் அவருக்கு ஏற்றதாக இருந்தது. இடையே ஒரு சில ஆண்டுகள் ஜெயலலிதாவால் சினிமாவிலிருந்து அவர் தூக்கி எறியப்பட்டார்! அதன் பின்னர் அவரின் நடிப்பில் அந்த பழைய நகைச்சுவையைக் கொண்டு வர முடியவில்லை! நம்மாலும் அவரை  ரசிக்க முடியவில்லை! அதன் பின்னர்  அவர் நடித்த படங்கள் அனைத்துமே பெரிய அளவில் பேசப்படவில்லை!

வடிவேலுவின் நடிப்பு என்பது ஒரு தனி பாணி. யாருடனும் ஒப்பிட முடியவில்லை! மதுரைத் தமிழ் அத்தோடு ஒரு கிராமத்துப் பாணி நடிப்பு என்று சொல்லலாம்.  வார்த்தைகளை வைத்தே, ஏற்ற இறக்கங்களை வைத்தே,  நமக்குச் சிரிப்பை வர வழைத்தவர்! நடிகர் நாகேஷ் ஒரு பாணி நடிப்பைக் கொடுத்தார் என்றால் வடிவேலு இன்னொரு பாணியை நடிப்பில் கொண்டு வந்தார்! அவர் பேசுகின்ற பாணி இதுவரையில் நாம் திரையில் கண்டதில்லை!

இனி அவரது நடிப்பைக் காண முடியுமா என்பது தெரியவில்லை. நல்ல நகைச்சுவையைச் சினிமாவில் கொடுத்தவர். கவலையை மறந்து சிரிக்க வைத்தவர். சினிமா இல்லையென்றாலும்               யு-டியூபில் அவருடைய படக்காட்சிகள் சக்கைப் போடு போடுகின்றன! எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம். இன்றுள்ள தமிழக அரசியல்வாதிகளுக்கு அவருடைய வசனங்கள் பெரிய அளவில் பயன்படுகின்றன!

இந்த நேரத்தில் வைகைப்புயலுக்கு நாம்  சொல்ல வேண்டியது ஒன்று தான். தமிழ்ச் சினிமாவில் கொடிகட்டிப் பறந்தவர்கள் பலர். ஆனால் கடைசிக்காலத்தில் அவர்கள் நிலைமை பரிதாபத்திற்குறியதாக அமைந்து விட்டது. குறிப்பாக தியாகராஜ பாகவதரைப் பற்றி சொல்லலாம். சந்திரபாபுவைப் பற்றி சொல்லலாம்.  இன்னும் பலர்.

தலைக்கனம் வேண்டாம்! அதுவே நாம் சொல்லுவது! அவர் தனது நடிப்பைத் தொடர வேண்டும் என்பதே நமது வேண்டுகோள். 

இப்போதைக்கு அவருடைய சகாப்தம் முடிந்து விட்டதாகவே தோன்றுகிறது!







Friday, 22 December 2017

இராணுவம் ஒதுக்குகிறதா?




மலாய்க்காரர் அல்லாதார் இராணுவத்தில் பணி புரிய ஆர்வம் காட்டுவதில்லை என்னும் குற்றச்சாட்டு நீண்ட காலமாக மலாய்க்காரர் அல்லதார் மீது அமைச்சர்களும் அதிகாரத்தில் உள்ளவர்களும் வைக்கின்ற ஒரு குற்றச்சாட்டு. 

ஆனால் இது தவறு என்றும் உண்மையைச் சொன்னால் மலாய்க்காரர் அல்லாதார் இராணுவச் சேவையிலிலிருந்து ஒதுக்கப்படுகின்றனர் அல்லது வாய்ப்புக்கள் மறுக்கப்படுகின்றன என்பதாகக் கூறுகிறார்  தேசிய நாட்டுப் பற்று சங்கத்தின் தலைவர் ஓய்வுபெற்ற பிரிகேடியர் ஜெனரல் முகமது அர்ஷாத். 

சங்கம் வெளியிட்டிருக்கும் ஆய்வுகளிலிருந்து:

 1960 ஆண்டுகளிலிருந்து 1970 ஆண்டு வரை மலேசிய ஆயுதப்படையில் மலாய்க்காரர் அல்லதார் 30 விழுக்காடு இடம் பெற்றிருந்தனர். விமானப்படையிலும் கப்பற்படையிலும் இவர்கள் அதிக எண்ணிக்கையில் இடம் பெற்றிருந்தனர். இப்போது படிப்படியாகக் குறைந்து 5 விழுக்காட்டில் வந்து நிற்கிறது! இதற்குக் காரணம் இப்போது ஆயுதப்படை இன ரீதியில் செயல் படுகிறது!

1980 களில் அரசாங்கத்தின் கொள்கைகள் இராணுவ நிர்வாகத்திற்குள் ஊடுருவத் தொடங்கின. இராணுவத் தளபதிகள் மலாய்க்காரர் அல்லாதாரை "இவர்கள் நம்ம ஆள் இல்லை" என்பதாகப்  பார்க்கத் தொடங்கினர்.  ஒரு சில இராணுவத் தளபதிகள் தங்களது கடமைகளைச் சரியாக செய்த போதிலும் தற்காப்பு அமைச்சைச் சேர்ந்த அதிகாரிகள் இன ரீதியில் செயல்பட்டு கோட்ட முறைகளை உருவாக்கி பிரிவினைகள ஏற்படுத்தினர். பதவி உயர்வுகள் அனைத்தும் அரசியல் ரீதியாக அணுகப்பட்டன. இந்தக் காலக்கட்டத்தில் பதவி ஓய்வு பெற்ற மலாய்க்காரர் அல்லாதார் இராணுவத்தை பற்றிப் பெருமையாகப் பேசவுதற்கு ஏதுமில்லை என்னும் நிலை உருவாகியது.

தகுதியான மலாய்க்காரர்கள் பதவி உயர்வு பெறும் போது மலாய்க்காரர் அல்லதார் அதனை ஏற்றுக் கொண்டனர். ஆனால் தகுதியற்ற மலாய்க்காரர்கள் பதவி உயர்வு பெறும் போது அது அவர்களுக்குச் சங்கடத்தை ஏற்படுத்தியது. தங்களுக்குக் கீழ் இருந்த ஒரு மலாய்க்காரர் பதவி உயர்வு பெற்றதும் அவரை "சார்!" என்று அழைத்து சல்யூட் அடிப்பது அவர்களின் மனநிலையைப் பாதித்தது.

சராசரியாக இருந்த அதிகாரிகள் பதவி உயர்வு பெற்று அவர்களின் கீழ் தகுதி குறைந்த  அதிகாரிகள் உருவாக்கப்பட்டனர். தகுதி குறையும் போது இயற்கையாகவே இராணுவம் சமயத்தை உள் கொண்டு வந்தது! 1980 களில் இராணுவம் சமய மயமாகியது. மலாய்க்காரர்களின் நடவடிக்கைகள் அனைத்தும் சமய மயமாக மாற்றப்பட்டது!  இஸ்லாமியர் அல்லாதார் அந்நியராகப் பார்க்கப்பட்டனர்! நாம் மலேசியர் என்னும் உணர்வு குறைந்து அனைத்தும் சமய அடிப்படையில் பார்க்கப்பட்டது.

இதுவே காலப்போக்கில் இராணுவம், காவல் துறை, பொதுச் சேவைத் துறை அனைத்திலும் பரவி விட்டது என்பதாக தேசிய நாட்டுப்பற்றாளர் சங்கத்தின் தலைவர்,  ஒய்வுபெற்ற பிரிகேடியர் ஜெனரல் முகமது அர்ஷாத் தங்களது ஆய்வின் மூலம் கண்டறிந்தாகக் கூறியுள்ளார்.

இன்றைய இராணுவத் தளபதி ஜெனரல் ராஜா முகமது அஃபாண்டி சமீபத்தில் மலாய்க்காரர் அல்லாதார் ஒவ்வொரு ஆண்டும் 10 விழுக்காடு இராணுவத்தில் சேர்க்கப்பட வேண்டும் என்னும் கோரிக்கையை விடுத்திருக்கிறார். ஏற்கனவே இது போன்ற கோரிக்கைகள் அரசாங்கத் தரப்பிலிருந்து வந்திருக்கின்றன. ஆனாலும் எதுவும் எட்ட வேண்டிய இடத்திற்கு எட்டவில்லை! ஆமாம்! தற்காப்பு அமைச்சு 'மௌனமாக' இருக்கும் வரை 10 விழுக்காடு என்பதெல்லாம் வெறும் கண்துடைப்பாகவே நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்! மேலும் ஒரு காலக்கட்டத்தில்  கம்யூனிஸ்ட் பயங்கரவாதிகளால் நாட்டில் அமைதியின்மை  என்பது தொடர்ந்து கொண்டிருந்தது. அப்போது அனைத்து இனத்தவரும் சேர்ந்து பயங்கரவாதிகளை எதிர்க்க வேண்டிய கட்டாயம் இருந்தது. இப்போது எந்த ஒரு பயங்கரவாதமும்  நாட்டில் நிலவவில்லை! அதனால் இஸ்லாமிய இராணுவமே போதும் என்கிற நிலைமை தற்காப்பு அமைச்சின் நிலைப்பாடாக உள்ளது.  அதனை நாமும் ஏற்றுக்கொள்ளத்தானே வேண்டும்!

இராணுவத்தை நாம் ஒதுக்கவில்லை! அதுவாகவே நம்மை ஒதுக்குகிறது!



Wednesday, 20 December 2017

ஏழை மனதை மாளிகை ஆக்கி....!


"மயக்கமா, கலக்கமா" என்னும் கவியரசு கண்ணதாசனின் பாடலிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி தான் "ஏழை மனதை மாளிகை ஆக்கி" என்னும் இந்த வரி.

நாம் ஏழையாக இருக்கலாம். தினக்கூலியாக இருக்கலாம். இன்றைக்கு உழைத்தால் தான் இன்றையச் சாப்பாடு என்னும் நிலையில் இருக்கலாம். எவ்வளவு தான் கீழ் நிலையில் இருந்தாலும் ஒன்றை மட்டும் நாம் மறந்து விடக் கூடாது. நாம் ஏழையல்ல என்பது தான் அது.  ஏழை என்பது தற்காலிகம் என்னும் எண்ணத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். அது எந்நேரத்திலும் நம்மை விட்டு அகன்று போகலாம். வளமான வாழ்க்கைக்கு உங்களைத் தயார் செய்யுங்கள். ஏழ்மையில் உழன்றாலும் பணத்தில் உழல்வதாக ஒரு சிறிய கற்பனை. ஆமாம், கற்பனைக் கூட ஏழ்மையாகவா இருக்க வேண்டும்? அமரிக்க ஜனாதிபதியாக இருந்த ஆபிரகாம் லிங்கன் தன்னுடைய இளம் வயதில் எழுதுவதற்கு ஏடுகள் கூட இல்லாத நிலையில் மண்வெட்டியில் எழுதிப் படிப்பாராம்! பிற்காலத்தில் அவர் பல தோல்விகளைச் சந்தித்த பின்னர் தான் அவர் ஜனாதிபதி ஆனார். எந்தக் காலத்திலும் அவர் தன்னை ஏழை என்று நினைத்ததில்லை! மனதை மாளிகையாகவே வைத்திருந்தார்!

நாம் இப்போது, இந்த நேரத்தில் ஏழையாக இருக்கலாம். அது தற்காலிகம். மனதை மாளிகையாகவே வைத்திருக்க வேண்டும். ஏழை என்பது நிரந்தரம் அல்ல. நேரங்கள் மாறலாம்! கோலங்கள் மாறலாம்! காட்சிகள் மாறலாம்! ஏழ்மையும் மாறத்தான் வேண்டும். ஏழ்மை ஏன் மாறுவதில்லை? மாற  வேண்டும் என்னும் எண்ணம் நம் மனதில் ஏற்படவில்லை என்றால் ஏழ்மை மாறாது!

ஒரு கறுப்பினக் குழந்தை தனது தாயைப் பார்த்து  "அம்மா! நாம் ஏன் எப்போதும் ஏழையாகவே  இருக்கிறோம்?" என்று கேட்டாள். அதற்குத்  தாய்  சொன்ன பதில்"மகளே!  உண்மையில் நாம் ஏழையில்லை. உன் தந்தை,  நாம் வசதியாக  வாழ வேண்டும் என்று  எந்தக் காலத்திலும் நினக்கவே இல்லை.   அதனால் நாம்  ஏழையாகவே இருக்கிறோம்!" 

அது தான் உண்மை! நாம் வசதியாக வாழ வேண்டும் என்னும் எண்ணத்தை நாம் வளர்த்துக் கொள்ளவில்லை என்றால் அதே பஞ்சப்பாட்டை பாடிக்கொண்டே இருக்க வேண்டியது தான்!

மனம் ஏழ்மையிலேயே ஊஞ்சலாடிக் கொண்டிருக்காமல் அந்த மனதை மாளிகையாக மாற்றுவது என்பது நமது   கையில்!

ஏழை மனதை மாளிகை ஆக்கி....!


Tuesday, 19 December 2017

பூப்புனித நீராட்டு விழா


பூப்புனித நீராட்டு விழா போன்ற சில சடங்குகள் நம்மிடையே இருக்கத்தான் செய்தன. ஆனால் காலப்போக்கில் இது போன்ற சடங்குகள் எல்லாம் வழக்கொழிந்து போயின.

இப்போதெல்லாம் யாரும் இது போன்ற நீராட்டு விழாவினைப் பெரும்பாலும் நடத்துவதில்லை. அதாவது நமது நாட்டைப் பொறுத்த வரை. தமிழகத்தின் நிலை நமக்குத் தெரியவில்லை. ஒரு வேளை கிராமப்புறங்களில் இது தொடரலாம். 

நமது நாட்டைப் பொறுத்தவரை எந்தப் பெற்றோரும் தனது மகள் வயதுக்கு வந்து விட்டாள் என்று தண்டோரா போட யாரும்  தயாராக இல்லை. காரணம் தமிழகத்தைப் போல ஒரே சமூகத்தினர் வாழும் நிலை இங்கு இல்லை. இங்குப் பல சமூகத்தினர் வாழுகின்றனர். அத்தோடு மட்டும் அல்லாமல் மற்ற இனத்தவரும் வாழ்கின்றனர். மற்ற இனத்தவர்களுக்கு - சீனர், மலாய்க்காரர்களுக்கு -   இது போன்ற சடங்குகள் இருப்பதாக நாம் கேள்விப்படுவதில்லை.   

ஒரு காலத்தில் இந்தச் சடங்கில் புனிதம் இருந்திருக்கலாம். இப்போது நிலைமை வேறு.  இப்போது பெண்களைக் கேலி பண்ணுகின்ற நிலைமைக்கு இந்தச் சடங்குகள் கொண்டு செல்லும். அதனாலேயே பெற்றோர்கள் 'கப்சிப்' என்று அடக்கமாக இருக்கின்றனர். 

இப்போது ஏன் இந்தப் பிரச்சனைக்கு அவசியம் வந்தது? சமீபத்தில் ஒரு நண்பர் தனது மகளின் "பூப்புனித நீராட்டு விழா" வுக்கு அழைப்பினைக் கொண்டு வந்தார். எனக்கு அது கொஞ்சம் அதிர்ச்சியைக் கொடுத்தது! காரணம் இப்படி ஒரு அழைப்பிதழை இதற்கு முன் யாரும் எனக்குக்  கொண்டு வந்து கொடுத்ததில்லை!  இதெல்லாம் உறவுமுறைகளுக்குக் கொடுத்தால் ஏற்றுக் கொள்ளலாம். நான் அவர்களின் உறவுமுறை அல்ல.  அத்தோடு இது போன்ற சடங்குகளை நான் வரவேற்பதில்லை. ஏதோ ஒரு காலத்தில் நடந்தது.  அது விடுப்பட்டுப் போன பின்னரும் ஏன் அதனைத் தொடர வேண்டும்?  அவசியம் என்றால் உற்றார் உறவினரை அழைத்து நான்கு சுவர்களுக்குள் முடித்துக் கொள்ளலாம்.  ஒரு வேளை அது  நடக்கலாம்.  பழைய சாங்கியங்களைத் தொடர்பவர்கள் இருக்கத்தானே செய்கிறார்கள்! செய்யட்டும். ஆனால் அதற்கு விளம்பரங்கள் தேவை இல்லை! விளம்பரங்கள் ஆபத்தை விளைவிக்கும் என்பதைப் புரிந்து கொண்டால் சரி.

எது எப்படி இருந்தாலும் தேவை இல்லாதவற்றை ஒதுக்கி விடலாம்!  அப்படித் தேவை இல்லாத ஒன்று தான் இந்தப் பூப்புனித நீராட்டு விழா! அதுவும் பல இனங்கள் வாழ்கின்ற நாட்டில் தவிர்க்கப்பட வேண்டும்!


Monday, 18 December 2017

இந்திய அரசியல் தலைவர்கள்...!


நமது மலேசிய அரசியல் தலைவர்கள், குறிப்பாக இந்திய அரசியல்வாதிகளைப் பற்றி பேசும் போது , அதுவும் இன்றைய இந்திய அரசியல்வாதிகளைப்  பற்றி பேசும் போது - ஏனோ நமக்கு ஒரு விதத் தளர்ச்சியே ஏற்படுகிறது. ஆளுங்கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதிகளாகட்டும் அல்லது எதிர்க்கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதிகளாகட்டும் .....ம்ம்ம்ம்ம்...... ஒருவருமே சரியாக இல்லை! 

நாம் சொல்ல வருவதெல்லாம் இவர்களால் இந்த சமுதாயத்திற்கு என்ன பயன் என்பது மட்டும் தான். இவர்கள் அனைவருமே தங்கள் குடும்பத்திற்கு நல்லதைச் செய்யும் சேவையாளர்களாக இருக்கிறார்கள் என்பதில் எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை!

முன்பெல்லாம் படித்தவர்கள் அரசியலுக்கு வர வேண்டுமென்று அனைவரும் கூறி வந்தோம்.  இப்போது படித்தவர்கள் வந்துவிட்டார்கள் ஆனால் படிக்காதவர்கள் செய்த சேவையின் அளவுக்காவது  இவர்கள் செய்கிறார்களா என்றால் எல்லாமே தடுமாற்றமாக இருக்கிறது! அவனும் குடித்து விட்டுத் தடுமாறினான் இவனும் குடித்து விட்டுத் தடுமாறுகிறான்! மக்களுக்கான சேவையைப் பற்றி யாரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை!

இவர்களால் என்ன தான் இந்திய சமுதாயத்திற்கு மாற்றத்தைக்    கொண்டு வர முடிந்தது? 

சமுதாயத்தின் பணத்தைத் திருடி வயிறு வளர்த்தவன் இந்த சமுதாயத்தைப் பார்த்து கேள்வி கேட்கிறான்: "மற்ற இனத்தவர்கள் எல்லாம் முன்னேரும் போது ஏன் உங்களால் மட்டும் முன்னேற முடியவில்லை?"  இப்படியெல்லாம் கேள்வி கேட்கும் போது நமக்கும் வயிறு எரியத்தான் செய்கிறது! இவனே மக்களின் பணத்தைக் கொள்ளையடித்து குபேரன் ஆனவன்!    சொந்த முயற்சியால் முன்னேறாதவன்!  கொள்ளையடித்தவன் முன்னேறி விட்டானாம்!  கொள்ளையடிக்காதவனைப் பார்த்து "ஏன் முன்னேறவில்லை?" என்று கேள்வி கேட்கிறான்!

எல்லாமே நமது குற்றம் தான்! நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல்வாதி அவன். ஆனால் அவனைப் பார்த்து நாம் ஆயிரம் வணக்கங்கள் போடுகிறோம்! குனிகிறோம்! வளைகிறோம்! கூனிக்குறுகிறோம்! இது தேவையா?

அரசியல்வாதி நமக்கு எஜமானன் அல்ல! அவன் நமது சேவகன்! அவனை வைக்க வேண்டிய இடத்தில் நாம் வைக்கவில்லை! அதனால் தான் இவ்வளவு குளறுபடிகள்! இந்த சமுதாயத்திற்குக் கொடுத்த வாக்குறுதிகள், உறுதி மொழிகள் எதுவுமே நிறைவேற வில்லை! அவன் பதவிக்காகப் பல்லை இளித்துக் கொண்டிருக்கிறான்!   நாம் நமது உரிமைகளை இழந்து கொண்டிருக்கிறோம்.

கொஞ்சம் யோசியுங்கள். மலாய்க்காரர்களோ, சீனர்களோ அவர்களது அரசியல்வாதிகளை என்ன நிலையில் வைத்திருக்கிண்றனர். நாம் எப்படி வைத்திருக்கிறோம்!

நாம் மாற வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் தான் நமது எஜமானர்கள்! நாம் கூலிகள்!


Sunday, 17 December 2017

மைக்கா ஹோல்டிங்ஸ்..அவ்வளவு தானா?


"மைக்கா ஹோல்டிங்ஸ்" என்பது ஒரு முடிந்து போன கதை; கருத்துக் கூற ஒன்றுமில்லை!"  என்கிறார் ம.இ.கா.வின் முன்னாள் தலைவர் துன் சாமிவேலு!

அப்படியா? எதனை வைத்து துன் அவர்கள் இதனை முடிந்து போன கதை என்கிறார்? 

மைக்காவில் முதலீடு செய்தவர்கள் இன்னும் பலர் தங்களது முதலீட்டை திரும்பப்  பெற்றுக்கொள்ளவில்லை என்பதை துன் அறியாதவரா?  

இந்தப் பிரச்சனையை அப்படியெல்லாம் அவ்வளவு சீக்கிரத்தில் "முடித்துவிட்டு" போய் விட முடியாது என்பதை துன் அவர்கள்       புரிந்து கொள்ள வேண்டும். அந்தப் பிரச்சனைக்கு இன்னும் உயிர் இருக்கிறது. மைக்காவால் பயன் பெற்றவர்கள், கோடி கோடியாய் குவித்தவர்கள் வேண்டுமானால் "அது முடிந்து  போன கதை" என்று கூறலாம். ஆனால் சராசரியனுக்குப் போட்ட முதல் கூட கிடைக்கவில்லை! அப்படிக் கிடைக்காதவனுக்கு அது முடிந்து போன கதையாக எப்படி இருக்க முடியும்?

இது தேர்தல் காலம். ஒவ்வொரு தேர்தல் காலத்திலும் இந்தப் பிரச்சனை தலைதூக்கத் தான் செய்யும்! தேர்தல் பிராச்சரத்தின் போதும் ம.இ.கா.விக்கு எதிராகத்தான் குரல் வரும்!   துன் சாமிவேலு பதவியில் இருக்கும் வரை அவர் இதனை எதிர்கொள்ளத் தான் வேண்டும்!  மைக்காவை வைத்து கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்தவர்கள் - இன்னும் சம்பாதித்துக் கொண்டிருப்பவர்கள் - தங்களது சாதனைகளை நினைத்து பெருமைப்படலாம்! ஆனால் பாட்டாளி மக்களின் சாபம், வயிற்றெரிச்சல் என்பது சாதாரண விஷயம் அல்ல!

பி.கே.ஆர். கட்சியின் இளைஞர் பிரிவு  சொல்வது சரியே. அரச விசாரணைக் கமிஷன்  அமைக்க வேண்டும் என்பதும் சரியே! எல்லாக் காலங்களிலும் இந்தத் தமிழ்ச் சமுதாயத்தை ஏமாற்றியே பிழைக்கும் அரசியல்வாதிகள் மீண்டும் மீண்டும் தவறுகள் செய்து கொண்டே போவதை நாம் பார்வையாளர்களாக இருந்து பார்த்துக் கொண்டே இருக்க முடியாது.

வருகின்ற பொது தேர்தலில் ம.இ.கா. நிச்சயம் மைக்கா பிரச்சனையை எதிர்நோக்கும் என்பது உண்மையே! இன்றைய தலைமைத்துவத்துக்கும் இதில் பங்கு உண்டு என்பதால் அவர்களும் பதில் சொல்லக்  கடமைப்பட்டவர்களே!     

கதை முடியவில்லை! தொடரும்!                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                  

Saturday, 16 December 2017

அடுத்த பிரதமர் துங்கு மக்கோத்தா?



சமீப காலங்களில் மலேசிய மக்களை மிகவும் கவர்ந்தவர்களாக ஜொகூர் அரச குடும்பத்தினர் விளங்குகின்றனர். துங்கு மக்கோத்தா, துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராகிம் அவர்கள் ஜொகூர் மக்களின் இதயம் கவர்ந்தவராக வலம் வருகிறார். ஜொகூர் மாநிலத்தில் அவர் செய்து வருகின்ற மாற்றங்கள், துணிச்சலாக அவர் எடுக்கும் முடிவுகள் அனைத்தும் மக்களைக் கவர்கின்றன என்பதில் ஐயமில்லை.

வருகின்ற பொதுத் தேர்தலில் ஜொகூர் மாநிலத்தில் யார் வெற்றி பெறுவார் என்பதில் கருத்துக்கள் மாறுபடுகின்றன. ஆளும் கட்சியா அல்லது எதிர்கட்சியா என்பதை இப்போது நம்மால் கணிக்க முடியவில்லை. ஆனால் துங்கு மக்கோத்தாவின் செல்வாக்கை வைத்தே வருகின்ற  பொதுத்தேர்தல் முடிவுகள் இருக்கும் என்பது மட்டும் உறுதி.

சிங்கப்புரின் சிந்தனையாளர்  மையம், இசியாஸ்-யூசோப் இஷாப் கல்வி நிலையம் நடத்திய ஆய்வொன்றில் ஜொகூர் மக்கள் ஆளுங்கட்சியா - எதிர்க்கட்சியா யாரைத் தேர்ந்தெடுப்பது என்பதில் இன்னும் சரியான நிலைப்பாட்டை எடுக்க முடியவில்லை  என்பதாகக் கூறுகிறது.  அவர்கள் துங்கு இஸ்மாயில் என்ன முடிவு எடுக்கிறாரோ அவர்களே வெற்றி பெறுவார்கள் என்று கூறப்படுகிறது. துங்கு இஸ்மாயில் நாட்டின் பிரதமராக வருவது நாட்டை சரியான வழியில் கொண்டு செல்வார் என்பது தான் முக்களின் முடிவு.

பொதுவாக ஜொகூர் சுல்தான் அல்லது துங்கு இஸ்மாயில்  இருவருமே ஜொகூர் மக்களின் மனங்கவர்ந்தவர்களாகவே இருக்கின்றனர். என்ன சொல்லுகிறார்களோ அதனைச் செய்கிறார்கள். குறிப்பாக சமயம், மொழிப்பிரச்சனைகளில் சரியான வழிகாட்டியாக இருக்கிறார்கள். 

துங்கு இஸ்மாயில் நாட்டின் பிரதமராக வருவது என்பது மக்களுக்கு நல்லதொரு செய்தியாக இருக்கும். இது நடக்குமா  அல்லது சாத்தியமா என்பதெல்லாம் நம்மால் யோசித்துப் பார்க்க முடியவில்லை. ஆனால் ஜொகூரில் அவர் நினைக்கின்ற மாற்றங்களை அவர் செய்வார் என எதிர்பார்க்கலாம். 

ஜொகூர் அரச குடும்பத்தினரை வாழ்த்துகிறோம்!


Friday, 15 December 2017

தீர்வு பிறந்துவிட்டதா...?


குனோங் ரப்பாட் தமிழ்ப்பள்ளிக்கு ஒரு தீர்வு பிறந்துவிட்டதாக சொல்லப்படுகிறது! நமக்கும் மகிழ்ச்சியே!

கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக இழுத்துக் கொண்டும், சர்ச்சைக்குள்ளாகிக் கொண்டும் இருந்த ஒரு பிரச்சனை   முடிவுக்கு வந்தால் நாம் நிச்சயமாக மகிழ்ச்சியடையலாம்! அப்பள்ளியின் புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று சிறப்பாக நடைபெற்றது!  அப்படியென்றால் இது வரை அடிக்கல் நாட்டு விழா நடைபெற்ற அனைத்துக் கட்டடங்களும்      ஒரு முடிவுக்கு வந்ததா? என்கிற கேள்வியெல்லாம் வேண்டாம்!  எதிர்மறையான சிந்தனை வேண்டாம் என்று நினைத்தாலும் அது ஏனோ "இதெல்லாம் ஒரு திருட்டு வேலை!"  என்று தான் மனம் சொல்லுகிறது! மன்னிக்கவும்!




போன பொதுத் தேர்தலின் போது நடந்தது என்ன? அப்போதைய   துணைப் பிரதமர் டான்ஸ்ரீ முகைதின் யாசின் இந்தப்பள்ளியின் கட்டடத்திற்கென 25  இலட்சம் வெள்ளி  ஒதுக்கப்பட்டிருப்பதாக அறிவித்தார். அத்தோடு அந்தப் பிரச்சனை முடிந்தது.  ஒரு வேளை கட்டடம் கட்டப்பட்டுவிட்டதென அவர் நினைத்தாரோ என்னவோ! எதுவும் அசையவில்லை! அதன் பின்னர் பல போராட்டங்கள்; பல சர்ச்சைகள்; பல அறிக்கைகள்! 

இப்போது அடுத்த  பொதுத்தேர்தல் எந்த நேரத்திலும் வரலாம் என்கிற நிலை.  இந்த நேரத்தில் எல்லாப் பிரச்சனைகளும் ஒரு முடிவுக்கு வந்து விட்டதாக - நாம் அதனை நம்ப வேண்டும் - என்பதாக ஓர் அடிக்கல் நாட்டு விழா!  இந்த முறை துணைப்பிரதமரோ அல்லது பிரதமரோ அல்லது எந்த அம்னோ அமைச்சர்களோ கலந்து கொள்ளவில்லை!   துணைப்பிரதமர் கூட ஒன்றும் செய்ய இயலாத நிலையில் "வெறும் ம.இ.கா. அமைச்சர்கள் என்ன  செய்ய முடியும்?"  என்று நாம் நினைத்தால் அது தவறில்லையே!  ம.இ.கா. அமைச்சர்கள் என்றால் அவர்களுக்கு மரியாதை இல்லை என்பதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோமே! இன்னுமா நாம் நம்ப வேண்டும்! அப்படி இவர்களால் முடியும் என்றால் இது நாள் வரை டத்தோ   கமலநாதன் என்ன செய்து கொண்டிருந்தார்?

டத்தோஸ்ரீ சுப்ரமணியம் சொன்ன ஒரு கருத்து சிந்திக்கத்தக்கது: மாநில அரசின் அனுமதி, நில ஆய்வுப் பணிகள் ஆகியன பரிசீலனையில்  இருக்கின்றன!  ஆனால் கட்டடத்திற்கான நிதி ஒதுக்கீடு 70,000 லட்சம்  வெள்ளி தயார் நிலையில் இருக்கிறது!

இவைகளெல்லாம் நாம் கேட்டு சலித்துப் போன விஷயங்கள்! ஒன்று மட்டும் நிச்சயம். இன்னும் ஆறு மாதத்திற்குள் கட்டடம் கட்டபடுமானால் - அல்லது தேர்தலுக்கு முன்னர் கட்டி முடிக்கப்பட்டால் - ம.இ.கா. தலைவருக்கு என் வாழ்த்துகளும், வணக்கங்களும்! ஏன்? நானே அவர் காலில் விழுந்து நன்றி சொல்லுவேன்!

நல்ல தீர்வு பிறக்கட்டும்!

நன்றி: வணக்கம் மலேசியா





Thursday, 14 December 2017

கேள்வி - பதில் (69)

கேள்வி

நடிகர் விஷால் செய்வது சரியா?

பதில்

திரைப்பட உலகினர் அனைவரும் அவரை எதிர்க்கின்றனர். அவருடைய செயல் தமிழ்த் திரை உலகத்தைப் பாதிக்கும் என்பது தான் பொதுவான குற்றச்சாட்டு. காரணம் தமிழ்த் திரை உலகம் முற்றிலுமாக அரசாங்கத்தை நம்பியே செயல்படுகிறது.
மற்ற மாநிலங்களை விட தமிழ் நாட்டில் தான் அதிகமான வரிகளினால் தமிழ்ச் சினிமா பாதிக்கப்படுவதாக தயாரிப்பாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அதனால் அரசாங்கத்தின் ஆதரவு தமிழ்ச் சினிமாவுக்கு மிகவும் தேவை என்கிற நிலையில் தான் சினிமா உலகம் உள்ளது.

இந்த நிலையில் தான் விஷாலின் அரசியல் நுழைவு தமிழ்ச் சினிமாவைப் பாதிக்கும் என்று சினிமா உலகினர் தங்களது எதிர்ப்பைக் காட்டுகின்றனர்.  அரசாங்கத்தோடு பேச்சு வார்த்தை நடத்த அது முட்டுக்கட்டையாக இருக்கும் என்பதே பலரின் கருத்து.

சரி! அப்படியே போட்டியிட்டாலும் அவரால் வெற்றி பெற முடியுமா? அதுவும் முடியாது என்பது விஷாலுக்கே தெரியும். பின் ஏன் அவர் போட்டியிட வேண்டும்? அவர் தி.மு.க. வால் களம் இறக்கப்படுபவர்  என்பது அவர் மீதான இன்னொரு குற்றச்சாட்டு.  தி.மு.க. ஏன் அவரை இந்தப் போட்டிக்கு இழுக்க வேண்டும்? அது தான் தி.மு.க. வின் தந்திரம்! காரணம் அந்தத் தொகுதியில் கணிசமான தெலுங்கு மக்களின் வாக்குகள் இருக்கின்றன. அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் மதசூதனன் ஒரு தெலுங்கர். அதே போல விஷாலும் ஒரு தெலுங்கர். அங்குள்ள தெலுங்கு மக்களின் வாக்குகளைப் பிரிப்பது தான் விஷாலுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் வேலை.  இப்போது விஷால் பண நெருக்கடியில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்தப் போட்டியின் மூலம் அவரது பண நெருக்கடியை தி.மு.க. ஏற்றுக்கொள்ளும் என நம்பப்படுகிறது!

மற்றபடி விஷால் அரசியலில் நுழைவதால்  அவர் சொல்லுவது போல் பெரியதொரு மாற்றத்தை அவரால் கொண்டு வந்து விட முடியாது! அதெல்லாம் சாத்தியமில்லை.  அப்படியே அவர் ஒரு முழு நேர அரசியலுக்கு வந்தாலும் அவர் தூக்கி எறியப்படுவார்!   பண நெருக்கடி தான் அவரின் இந்த அரசியல் நுழைவு என்பது தான் உண்மையாக இருக்க முடியும்!

எப்படியோ இந்த இடைத் தேர்தலில் அவர் போட்டியிட தகுதிப் பெறவில்லை! அது தான் அவருக்கு நல்லது! வருங்காலங்களில் எதுவும் நடக்கலாம்!

Wednesday, 13 December 2017

தெருக்கூத்து ஆடப்போறேன்..!


நம் ஒவ்வொருக்கும் ஏதாவது ஒரு கனவு இருக்கத்தான் செய்யும். ஆனால் நம்முடைய பிரச்சனை எல்லாம் "அது" தான்  நமது கனவு என்று உறுதியாக நமக்குத் தெரிவதில்லை.  அதனைத்தான் நம்மை அறியாமல் நாம் செய்து கொண்டிருப்போம்  அது தான் நமது கனவு என்று அறியாமலே! நமது பெற்றோர்கள் அவர்கள் கனவுகளை நம்மீது திணிப்பதில் தீவிரமாக இருப்பார்கள். நம்மிடம் உள்ள திறமைகளை அவர்கள் ஊக்குவிப்பதில்லை.  நம்மாலும் ஊக்கப்படுத்திக் கொள்ள முடிவதில்லை. இது தான் படித்தவரிடையே உள்ள ஒரு நிலை.

ஆனால் படிக்காதவர்கள், ஏழ்மையில் உழல்பவர்கள் இவர்களுக்கும் கனவுகள் இருக்கத்தான் செய்யும்?  ஏதோ பெரியதாக இல்லாவிட்டாலும் சிறியதாகவாவது இருக்கத்தான் செய்யும். சிறிது கூட ஒரு காலக்கட்டத்தில் பெரிதாக வெடித்துச் சிதறலாம்! யார் கண்டார்?

அப்படித்தான் அந்த ஏழை விவசாயி மகனுக்கும். படிப்போ கம்மி. சரியான கல்வி இல்லாமல் விவசாயமும் சொல்லக்கூடிய அளவுக்கு இல்லாமல் இருக்கும் ஒரு குடும்பத்தில் பிறந்த அந்த சிறுவனுக்கு இருந்த கனவோ கொஞ்சம் வித்தியாசமான கனவு. யாரும் எதிர்ப்பார்க்க முடியாத கனவு. யாரும் விரும்பாத ஒரு கனவு. அப்படி அந்த சிறுவன் கண்ட கனவு தான் என்ன? "நான் தெருக்கூத்து ஆடப்போறேன்" என்னும் கனவு! விவசாயம் செய்கின்ற குடும்பத்தில் தெருக்கூத்து ஆடுவதா? கேவலம் இல்லையா? அப்போது அந்த சிறுவனுக்கு தெருக்கூத்து மட்டும் தான் தெரிந்திருந்தது. வேறு எதனைப்பற்றியும் அறிந்திருக்கவில்லை. 

பெற்றோர்கள் தங்களது ஏழ்மையின் காரணமாக பலரிடம்    முட்டி மோதி கடைசியாக ஒரு நாடகக் குழுவில் சேர்த்து விட்டனர். அது ஒரு சிறிய ஆரம்பம். அது போதும். வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம். நாடகக்குழுவில் சிறிய வேலை, பெரிய வேலை என்றில்லாமல் எல்லா வேலையும் செய்தான். நடிப்பில் சிறிய வேடம், பெரிய வேடம் என்றில்லாமல் எல்லா வேடமும் ஏற்றான் பெண் வேடம் உட்பட. 

பல ஆண்டுகள் நாட உலகில் பேர் போட்டுக் கொண்டிருந்த போது சினிமா வாய்ப்பு ஒன்று தேடி வந்தது. முதல் படம்.      முதலில் பாதி படம் எடுத்த பின்னர் தயாரிப்பாளர் திருப்தி அடையாததால் அதனை அழித்துவிட்டு மீண்டும் படத்தை எடுத்து வெற்றிகரமாக முடித்தார். அந்தப் படம் தான் பராசக்தி. அந்த இளைஞன் தான் கணேசன். அப்புறம் பராசக்தி கணேசன். அதன் பின்னர் சிவாஜி கணேசன்; நடிகர் திலகம் சிவாஜி கணேசன்; செவாலியர் கணேசன். 

சிறு வயதாக இருந்த போது ஏற்பட்ட ஒரு பொறி. எங்கிருந்தது வந்தது என்று தெரியவில்லை. ஒரு வேளை கிராமத்தில் ஏதாவது தெருக்கூத்து நடந்திருக்கலாம். அதனையே ஒரு இலட்சியமாக எடுத்துக் கொண்டு அதனை நோக்கி தனது பயணத்தைத் துவக்கிய நடிகர் திலகத்தின் வெற்றி என்பது சாதாரணமான வெற்றி அல்ல. அசாதாரண வெற்றி. ஆனால் அது தான் எனது இலட்சியம். அது தான் எனது பயணம்.கவனம் வேறு திசையில் பயணிக்கவில்லை. ஒரு வேளை சாப்பாடு. அல்லது இரு வேளையாக  இருக்கலாம். ஆனால் வயிற்றை மட்டும் நிரப்புவது நோக்கமல்ல. இலட்சியம் மட்டுமே நோக்கம். 

தெருக்கூத்து ஆட வேண்டும் என்ற கனவு கண்ட ஒரு சிறுவனுக்கு இன்று தமிழகத்தில் மாபெரும் சிலை வைக்கப்பட்டிருக்கிறது! இன்று நடிக்க வருபவர்களுக்கு அவர் தான் நடிப்புக்கு இலக்கணம். அவரின் நடிப்பை மீற யாருமில்லை! அவர் நடிக்காத வேடங்கள் இல்லை.

நமக்கும் வேறு துறையில் ஆட வேண்டுமென்று ஆசை இருக்கலாம்! நடக்கட்டும்!

Tuesday, 12 December 2017

குழந்தைகளின் பால் பவுடரிலும் போலிகள்!



இன்றையக் காலக்கட்டத்தில் எல்லாவற்றிலும் போலிகள் புகுந்து விட்டன. அரிசிகளில் போலி என்றார்கள். வாங்கும் வஞ்சனை மீன்களில்  பிளாஸ்டிக் கலந்திருப்பதாகச் சொல்லுகிறார்கள்! இவைகள் எல்லாம் சமீப கால செய்திகள். 

ஆனால் இப்போது கடைசியாக வந்த செய்தி இன்னும் கொடூரம். குழைந்தைகளின் பால் பவுடரில் கலப்படம் நிகழ்ந்திருப்பதாக  வெறும் வதந்தியாகச் சொல்லவில்லை. அந்தச் செய்தி  உண்மை என்பதாக உள்நாட்டு வாணிபத்துறை அமைச்சைச் சேர்ந்த அதிகாரிகள் உறுதிப்படுத்தியிருக்கின்றனர்.  ஜொகூர்பாருவில்  ஐந்து வெவ்வேறு இடங்களில் நடத்திய  சோதனையில் 210  போலிப்பால் பவுடர் பெட்டிகளை அதிகாரிகள் கைப்பற்றினர். அதன் மதிப்பு சுமார் 42,000 ரிங்கிட். சீனர் மருந்துக்கடை மற்றும் மளிகைக்கடைகளில் நடந்த சோதனைகளில்  இந்தப் போலிப்பால் பவுடர்கள் கைப்பற்றப்பட்டன.

சென்ற ஆகஸ்ட் மாதத்திலேயே இந்தக் குழந்தைகளின் பால் பவுடர் தயாரிக்கும் நிறுவனம்  போலிப்பால்கள் சந்தையில் உளவுவதாக வாணிபத்துறை அமைச்சின் கவனத்திற்குக் கொண்டு வந்து விட்டனர். அதுவுமின்றி சமீபத்தில் ஒரு குழைந்தையின் பெற்றோர் இந்தப் பாலை அருந்திய பின்னர் தங்களது குழந்தை தொடர்ந்து வாந்தி எடுத்ததாகப் புகார் செய்திருக்கின்றனர். அதன் பின்னரே அமைச்சின் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க ஆரம்பித்தனர். இப்போது இந்தப் போலிப்பால் சோதனைக்கூடத்திற்கு  அதன் தரமறிய அனுப்பப்பட்டிருக்கிறது..

இப்போதைக்கு நமக்குத் தெரிந்ததெல்லாம் இந்தப் போலிப்பால் ஜொகூர்பாரு, செனாய் பகுதிகளில் மட்டுமே உலவுவதாக தெரிய வருகிறது. ஜொகூரில் மற்றப் பகுதிகளிலோ அல்லது மற்ற மாநிலங்களிலோ அதன் நிலை தெரியவில்லை. பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

ஒன்று மட்டும் நிச்சயம். இது போன்ற போலிகள் நடப்பதற்குக் காரணம் நம்முடைய சட்டங்கள் கடுமையாக இல்லை என்பது தான். சட்டங்கள் கடுமையாக இருந்தால் மட்டுமே இதனைத் தடுக்க முடியும். அது வரை போலிகளோடு நாம் வாழத்தான் வேண்டும். அனைத்தும் வாணிப அமைச்சின் கையில்!




Sunday, 10 December 2017

தேவசூரியா ....ஒரு பாடம்!


மலேசியத் தமிழ்ப்பெண்களுக்கு தேவசூரியா ஒரு பாடம்! மலேசியப் பெண்ணான தேவசூரியா தமிழ் நாட்டைத் சேர்ந்த ஒரு இளைஞனைத் திருமணம் செய்து, அந்த இளைஞர் இங்கு நிரந்தரமாகத் தங்க முடியாத சூழ்நிலையில், அவரோடு அவரது மனைவியான தேவசூரியாவும் தமிழகம் சென்றிருக்கிறார். அங்கு அவரது மாமியாரால் துன்புறுத்தப்பட்டு,  அடிபட்டு, உதைப்பட்டு,  அங்கிருந்து விரட்டப்பட்டு ஒரு வழியாக மீண்டும் மலேசியா வந்து சேர்ந்திருக்கிறார்.

அவர் இங்கு வருவதற்கு பலர் உதவியிருக்கின்றனர். அதுவும் தனக்கு அறிமுகமில்லாத ஒருவரிடம் தனது கதையைச் சொல்லி கதறி அழுது அதனை அந்த நண்பர், விடியோவாக எடுத்து வலைத்தளங்களில் பரவலாகியதைத் தொடர்ந்து அவருக்கு உதவ பலர் முன் வந்தனர். மலிண்டோ விமான நிறுவனம் தேவசூரியாவுக்கும் அவரது மகனுக்கும் விமான டிக்கெட்டுக்களைக் கொடுத்து உதவியது. ராமநாதபுரத்திலிருந்து மீண்டும் திருச்சி விமான நிலையத்திற்கு அவர்கள்  வருவதற்கான செலவுகளை மலேசிய ருத்ரா தேவி சமாஜ் அமைப்பு ஏற்றுக் கொண்டது. 




தற்காலிகமாக ரவாங், ஸ்ரீசாரதாதேவி இல்லத்தில் அவர் தங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ருத்ராதேவி சமாஜ் செய்து  தந்துள்ளது. அவரின்  உடனடிச் செலவுகளுக்காக கிள்ளான் மலையாளி சங்கம் ரொக்கம் ரி.ம.1500.00 கொடுத்து உதவியுள்ளது.  இவர்கள் அனைவரையும் நாம் பாராட்ட வேண்டும். தக்க நேரத்தில் செய்யப்பட்ட உதவி; மறக்க முடியாத உதவி. அவருடைய கணவரும் இங்கு வருவதற்கான வாய்ப்புக்கள் இருந்தால் அவரோடு சேர்ந்து கொள்ளட்டும்.  வாழ்த்துவோம்!

இவரது நிலை மற்ற பெண்களுக்கும் ஏற்படக் கூடாது என்பது தான் நமது எண்ணம். காரணம் தமிழ்ப் பெண்களே வெளிநாட்டு ஆடவர்களை அதிகமாகத் திருமணம் செய்து கொள்ளுகின்றனர்; அவதிப்படுகின்றனர்.       தாய் தகப்பன் சொல்லுவதையும் கேட்பதில்லை. நண்பர்கள் சொல்லுவதையும் கேட்பதில்லை. சொந்தப்புத்தியும் இல்லை. பத்திரிக்கைகளையும் படிப்பதில்லை. நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதையும் தெரிந்து கொள்ளுவதில்லை.  சின்னத்திரை நாடகங்களைப் பார்த்தால் புத்தி கெட்டுப்போகுமே தவிர புத்தியா வரும்? அதுவே நமது கவலை!

இங்கு நம்மிடையே வங்காளதேசிகளைத் திருமணம் செய்து கொண்டவர்கள், பாக்கிஸ்தானியரைத் திருமணம் செய்து கொண்டவர்கள் பலர் இருக்கின்றனர். நாம் சொல்ல வருவதெல்லாம் இங்கேயே உங்களின் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள். கனவில் கூட உங்கள் கணவர்களின் நாடுகளுக்குப் போகலாம் என்று நினைக்காதீர்கள். இங்கு இருக்கும் உங்களின் அன்பான கணவர் அவருடைய நாட்டுக்குப் போனால் வம்பான கணவராக மாறி விடுவார்! போகும் வழியிலேயே உங்களை "விற்று" விட்டுப் போய்விடுவார்! அவர்களுடைய நாடுகளில் பெண்களை ஒரு பெண்ணாக பார்க்க மாட்டார்கள்.  அனைத்தும் ஆண்களின் ஆதிக்கம் தான்! 

இதோ! இந்த தேவசூரியா நமது பெண்களுக்கு ஒரு பாடம். இவரைப் பற்றி மட்டும் தான் இப்போது நமக்குத் தெரிந்திருக்கிறது. வெளி வராத தேவசூரியாக்கள் நிறைய இருக்கலாம். நமக்குத் தெரியவில்லை அவ்வளவு தான்!

மற்றப் பெண்களுக்கு இவர் ஒரு பாடமாக அமையட்டும்!

Friday, 8 December 2017

அப்படி என்னா வயசாச்சு...?


உங்களுக்கு அப்படி என்ன தான் வயசாச்சு?  வயசானால் பரவாயில்லை. தேவை எல்லாம், இருக்கும் வரை நமக்குப் பிடித்ததைச் செய்ய வேண்டும். 

நமது முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் அரசியலில் இன்னும் கலக்கிக் கொண்டிருக்கிறாரே! காரணம் அரசியல் என்பது அவரோடு கலந்து விட்டது. அவர் எதிரணியில் இப்போது இருந்தாலும் - அப்படியே இல்லாவிட்டாலும் - எதனையாவது எழுதி கலக்கிக் கொண்டு தான் இருப்பார்!  சும்மா ஓய்ந்து இருப்பது எல்லாம் அவரது இயல்பு அல்ல! 

இந்த வரிசையில் தமிழர்கள் என்று பார்த்தால் பெரியார் ஈ.வே.ரா, ராஜாஜி, கி.ஆ.பெ.விஸ்வநாதம், கலைஞர் கருணாநிதி போன்றவர்களை நம்மால் மறக்க முடியாது. பெரியார் ஈ.வே.ரா தள்ளாத வயதிலும் , ஒவ்வொரு நாளும், கூட்டங்களில் கலந்து கொண்டு தனது பிரச்சாரங்களைத் தொடர்ந்து கொண்டிருந்தார் அவருடைய பேச்சுக்கள் அனைத்தும் தமிழர்களின் மூட நம்பிக்கைகள், சாதிய வேறுபாடுகள்   சார்ந்தவை. அவர் இறக்கும் போது அவருடைய வயது 94.

நீண்ட காலம் வாழ்ந்த இன்னொரு பெரியவர் மூதறிஞர் ராஜாஜி.  கடைசிவரை அரசியலில் இருந்து கொண்டும் எழுதிக் கொண்டும். எல்லா அரசியல் தலைவர்களிடமும் கருத்து வேறுபாடுகளுடன் தொடர்ந்தே கொண்டே இருந்துவர். 1959-ல் சுதந்தராக் கட்சியைத்  தொடங்கியவர்.  அப்போது அவருக்கு வயது 81.  1967-ல் நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் அவருடைய கட்சி 45 இடங்களைப் பிடித்து சட்டமன்றத்தில் முதன்மை எதிர்கட்சியாக விளங்கியது. அவருடைய உயிர்க்கொள்கை என்பது மதுவிலக்கு மட்டுமே. அவர் இறப்பதற்கு ஒரு சில வாரங்களுக்கு முன்னர்   அவரே நேரடியாகக் கோபாலபுரம் சென்று முதல்வர் கருணாநிதியிடம் "எக்காரணத்தைக் கொண்டும் சாராயக்கடைகளைத் திறந்து விடாதீர்கள்" என்று  அவரின் கைகளைப் பிடித்துக் கெஞ்சியவர்.   எந்தத் தேர்தலில் போட்டியிடாமல் இந்தியாவின் பெரிய பெரிய பதவிகளை வகித்தவர். அவர் இறக்கும் போது அவருக்கு வயது 95.

அடுத்து முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்கள். 95 வயது வரை வாழ்ந்தவர். தமிழறிஞர். இவர் எழுதிய புத்தகங்கள் மொத்தம் 23.  அனைத்தும் தமிழ் வளர்ச்சித்துறையால் நாட்டுடமை ஆக்கப்பட்டன.  ஆரம்பகாலங்களில் பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தில் ஈடுபாடு காட்டியவர். பின்னர் பெரியார் திராவிடம், திராவிடர் என்னும் நிலை எடுத்த போது அவரோடு இவர் ஒத்துப் போக முடியவில்லை. தமிழ், தமிழர், தமிழ் நாடு, தமிழ்த் தேசியம் என்பதே இவரின் மூச்சாக இருந்தது. எல்லாக் காலங்களிலும் தமிழ், தமிழருக்காகவே வாழ்ந்தவர். அவர் இறப்பதற்கு இரு நாள்களுக்கு முன் "தமிழ் நாட்டில் தமிழைக்  கட்டாய மொழியாக்கினால் மன நிறைவோடும், மகிழ்ச்சியோடும் சாவேன்" என்றார்.

இப்பொது நம்மிடையே இருப்பவர் கலைஞர் மு. கருணாநிதி. வயது 93. திரைப்படங்களுக்கு  கதை-வசனம் எழுத ஆரம்பித்தவர். சமீபகாலம் வரை எழுதிக் கொண்டிருந்தவர். முழு நேர அரசியல்வாதி. எழுத்தும், அரசியலும் அவருக்கு முழு நேரம். ஓய்வு ஒழிச்சலின்றி எழுதிக் கொண்டிருந்தவர். சமீபகாலமாக அனத்தும் செயல் இழந்துவிட்ட நிலையில் பிறரின் உதவியோடு நடமாடி வருகிறார். ஒன்றைக் கவனியுங்கள். மேலே குறிப்பிட்ட அனைவரையும் விட ஒரு வகையில் இவர் வித்தியாசப்படுகிறார்.   சாராயக்கடைகளைத் திறக்காமல் இருந்திருந்தால் ஒரு வேளை இவர் இன்னும் எழுதிகொண்டும் அரசியல் பண்ணிக்கொண்டும் இருந்திருப்பார் என் நம்பலாம்.

இவர்களெல்லாம் பிரபலங்கள். இதோ எனக்குத் தெரிந்த எழுத்தாள நண்பர் ஒருவர்.  வயது 82. கிறிஸ்துமஸ் சிறப்பு மலருக்காக ஒரு கதை எழுதி  கணிப்பொறியில் பதிவேற்றம் செய்து கொண்டிருந்தார். வருகின்ற 25-ம் தேதி நாளிதழில்  அவரது கதை   வரும் என எதிர்பார்க்கலாம். ஏதோ அவருக்குத் தெரிந்த ஒரு கலை. அதனைப் பயன்படுத்துகிறார். 

வயதைப் பற்றியெல்லாம் கவலைப்பட வேண்டாம். உங்களால் என்ன  முடியுமோ, என்ன தெரியுமோ -  உங்களின் வயதைப்பற்றி கவலைப்படாமல் - அந்த தெரிந்த கலையைப் பயன் படுத்துங்கள். வயசைப்பற்றி என்ன கவலை? வரும்போது வரட்டும்! போகும் போது போகட்டும்! அட! சின்ன வயதில் தான் பிடித்ததைச் செய்ய முடியவில்லை! இப்போதாவது செய்வோமே!


கேள்வி - பதில் (68)


கேள்வி

கன்னியாகுமரி மீனவர்கள் தமிழக அரசுக்கு எதிராக வெகுண்டு எழுந்திருக்கிறார்களே!!

பதில்

உண்மை தான். அவர்களுக்கு வேறு வழி தெரியவில்லை. அதனால் தான் "நாங்கள் கேரளாவுடன் இணைவோம்" என முழக்கமிடுகிறார்கள்! அதில் தவறு ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை!

அரசு என்றால் அதற்கு    உயிர் இருக்க வேண்டும். அது இயங்க வேண்டும்.  ஏதோ, ஒன்றுமே நடவாதது போல ஒய்யார நடை போட்டுக் கொண்டிருந்தால் யாரால் பொறுத்துக் கொள்ள இயலும்? ஓர் இயங்காத அரசை வைத்துக் கொண்டு யார் என்ன செய்ய முடியும்? மக்களால் தெர்ந்தெடுக்கப்பட்ட  ஓர் அரசு மக்களுக்கு எதிராகவே செயல்பட்டு வந்தால் அப்புறம் எதற்கு அந்த அரசு? 

மனிதர்களை மனிதர்களாக மதிக்க வேண்டும். மீனவர்கள் என்றால் அவ்ர்கள் தீண்டத்தகாதவர்கள் என்னும் எண்ணத்தை இவர்கள் கொண்டிருக்கிறார்கள் என்பது புரிகிறது. பக்கத்து மாநிலத்து முதலமைச்சர் நேரிடையாகவே பாதிக்கப்பட்ட மீனவர்களை, பாதிக்கப்பட்ட இடங்களைச் சென்று பார்வை இடுகிறார். 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலத்தில் அவர் சொல்லாமல் இவர்கள் தங்கள் கழுத்தைக் கூட திருப்பாமல் அவரின் உத்தரவுக்காகக் காத்துக் கொண்டிருந்தவர்கள்! இப்போது மோடியின் உத்தரவுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று தோன்றுகிறது! 

இது போன்ற துயரச் சம்பவங்கள் ஏற்படுகின்ற போது உடனே மத்திய அரசுக்குக் கடிதம் எழுதி எத்தனை கோடி தங்களுக்கு வேண்டும்  என்று தான் கேட்கிறார்களே தவிர உடனடியாக எந்த நடவடிக்கையும் இவர்கள் எடுப்பதில்லை! எந்தத் துயர சம்பவங்கள் நடந்தாலும் சரி அதன் மூலம் எவ்வளவு பணம் கறக்கலாம் என்பதில் தான் இவர்கள் குறியாக இருக்கிறார்கள்!

இப்படியெல்லாம் ஓர் அரசு! வெட்கப்பட வேண்டிய ஒரு செயல். தமிழர்கள் தலைக்குனிய வேண்டிய ஒரு செயல். தமிழர்களைத் தலை குனிய வைத்திருக்கும் ஓர் அரசு. இவர்களை வைத்தே அம்மாவின் "புனிதத்தன்மையை" ஓரளவு புரிந்து கொள்ளலாம்!  

பிரதமருக்குக் கடிதம் எழுதி தான் பிரச்சனைகளைக் களைய வேண்டுமென்றால் அது என்ன அரசு?  முதலமைச்சர் மீனவர்களைப் போய் பார்ப்பதற்குக் கூட பிரதமரின் தயவு வேண்டுமென்றால் இவர்களைப் போன்றவர்கள் பதவியில் இன்னும் இருக்க வேண்டுமா? 

கன்னியாகுமரி மீனவர்கள் சொல்லுவது சரி தான்.தங்களது குடும்பங்களை, சொந்த பந்தங்களை இழந்து தவித்துக் கொண்டிருக்கும் அவர்களை ஏதோ நாதியற்ற சமூகமாகப் பார்க்கும் தமிழக அரசு தேவை இல்லை தான்! அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் போது வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும் அ.தி.மு.க. அரசை மக்கள் தூக்கி எறிய வேண்டும்! வருகின்ற இடைத் தேர்தலிலும் அவர்களின் வைப்புத் தொகையை இழக்க வைக்க வேண்டும்!               




Thursday, 7 December 2017

உலகத் தலைவர்களுக்கு தமிழில் கடிதம் எழுதும் தமிழர்!




உலகில் உள்ள தலைவர்கள் மட்டும் அல்ல, மிகவும் பிரபலமானவர்கள் - இவர்களுக்கெல்லாம் கடந்த இருபது ஆண்டுகளாக தமிழில் கடிதங்கள் எழுதிக் கொண்டிருப்பவர், தமிழார்வமிக்கவர். 



அவருடைய பெயர் மணி. வயது 46. தமிழில் ஏழாம் வகுப்பு வரைப் படித்தவர். திருச்சி, நகைப்பட்டறை ஒன்றில்  பணி புரிகிறார். ஆரம்ப காலத்தில் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் வாழ்த்து அட்டைகளை அஞ்சலில் அனுப்பத் தொடங்கியவர். அது இன்று வரைத் தொடர்கிறது. அது இன்னும் விரிவடைந்து இப்போது உலக அளவில் கொடிகட்டிப் பறக்கிறது!

இந்தியத் தலைவர்கள் பலருக்குக் கடிதங்கள் அனுப்பியிருக்கிறார். உலகத் தலைவர்களுக்கும் கடிதங்கள் அனுப்பி வருகிறார். இவர் அனுப்பும் கடிதங்கள் அனைத்தும் தமிழிலேயே இவரால்  எழுதப்படுகின்றன. தமிழில் எழுதுவதால்  அவர்கள்  புரிந்து கொள்வார்களா? "தலைவர்கள் என்றால் அவர்களிடம் மொழிப் பெயர்ப்பாளர்கள் இருப்பார்கள் அதனால் எந்த மொழிப் பிரச்சனையையும் அவர்கள்  எதிர்நோக்குவதில்லை"  என்கிறார்  மணி.

அவர் தொடர்பு கொண்ட பிரபலமான தலைவர்கள் என்றால்:  அமெரிக்க அதிபர், இங்கிலாந்து, கனடா நாட்டு பிரதமர்கள், போப் 16-ம் பெனடிக், இந்திய பிரதமர்கள், ஜனாதிபதிகள், பதவியில் இருக்கும் அரசியல் தலைவர்கள் - இப்படி எல்லாத் தலைவர்களுக்கும் கடிதங்கள் எழுதி பதிலும் பெற்றிருக்கிறார். அப்படியே அவர்களிடமிருந்து பதில் வரவில்லை என்றால் அவர்களுக்கு நினைவூட்டல் கடிதங்கள் அனுப்புவாராம்! யாரும் அவரிடமிருந்து தப்பிக்க வழி இல்லை!

தமிழகத் தலைவர்களுக்கும் கடிதங்கள் அனுப்பியிருக்கிறார். ஆனால் முன்னாள் குடியரசு தலைவர்  அப்துல் கலாம் மட்டும் தான் 10 நாள்களுக்குள் பதில் அனுப்பினாராம்.

"என் கைப்படத் தமிழில் எழுதி அதற்குப் பதிலும் வரும் போது  கிடைக்கின்ற பெருமித உணர்வுக்கு ஈடு இணயில்லை" என்கிறார் மணி. இது நாள் வரை அவர் சேகரித்த கடிதங்களை அரசு நூலகம் அல்லது காட்சியகத்திற்குக் கொடுக்கவிருப்பதாக அறிவித்திருக்கிறார். 

ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு ஆசை.   நண்பர் மணியின் ஆசை வித்தியாசமானது.  அவர் கடிதங்கள் மட்டும் எழுதவில்லை. அதன் மூலம் பலரின் வரலாறுகளையும் அவர் தெரிந்து வைத்திருக்கிறார். நகைப்பட்டறையோடு தனது வாழ்க்கையைக் குறுக்கிக் கொள்ளாமல் நவீன உலகின் சிற்பிகளைப் பற்றியும் தெரிந்து வைத்திருக்கிறார்! வாழ்த்துகள்!

நன்றி! தி இந்து

Wednesday, 6 December 2017

பூனை ஏன் குறுக்கே போகிறது..?


பூனை குறுக்கே போனால் அதற்கு ஒரு ஜோசியம். உடனே  எதிர்மறையான எண்ணங்கள் நம் மனதுக்குத் தோன்றுகின்றன. காரணம் நாம் அப்படித்தான்  பழக்கப்படுத்தப் பட்டிருக்கிறோம்.

ஆனால் என்றைக்காவது ஏன் இந்தப் பூனை குறுக்கே போகிறது என்று யோசித்திருக்கிறோமா?  அப்படி நாம் சிந்திப்பதில்லை! காரணம் அது நமக்குத் தேவை இல்லாத ஒரு விஷயம்!

நான் வசிக்கும் வீடமைப்புப் பகுதியில் இஸ்லாமியர்கள் அதிகம். இஸ்லாமியர்கள் நாய்களை வளர்ப்பதில்லை. அதனால் பூனைகளின் ஆதிக்கம் அதிகம். எந்நேரமும் பூனைகளின் சத்தம், சண்டை, சச்சரவு ஒலித்துக் கொண்டே இருக்கும்! இந்தப் பூனைகள் பெரும்பாலும் வீடுகளில் வளர்க்கப்படும் பூனைகள். அதனால் இந்தப் பூனைகள் சாப்பாட்டுப் பஞ்சத்தை எதிர் நோக்குவதில்லை. ஆனால் என்னதான் வீடுகளில் நாம் ஊட்டி ஊட்டி வளர்த்தாலும் அவைகளுக்கென்று தனிப்பட்ட உணவு வகைகளைத் தேடிப் போவது அதன் குணம்!

வீடுகளைச் சுற்றி அப்படி என்ன தான் இருக்கும்?  எலிகள் அதிகமாக சுற்றிக் கொண்டிருக்கும். கொஞ்சம் செடிகொடிகள், மரங்கள் இருந்தால் குருவிகளும் இரைத் தேடிக் கொண்டிருக்கும். இவைகள் தாம் பூனைகளின் இலக்கு. எலிகள் என்றால் பூனைகளுக்கு இரவு நேர வேட்டை. குருவிகள் என்றால் பகல் நேர வேட்டை.

இந்த வேட்டையின் போது தான் பூனைகள் சாலைகளின் குறுக்கே போவதும், ஒடியாருவதும் நடந்து கொண்டிருக்கும்! அதுவும் இல்லெயென்றால் அதன் ஜோடியை நோக்கி ஓடிக்கொண்டு இருக்கும்! பூனை அதன் சாப்பாட்டுக்காக ஓடுகிறது அல்லது ஜோடியை நோக்கி ஓடுகிறது! பாவம்! அதற்கு அதன் பசி! இதற்கெல்லாம் போய் நமது முன்னோர்கள் - சே! நமது பின்னோர்கள்! - அதற்கென்று வீணாக ஒரு கதையைத் ஜோடித்து தேவையற்ற  ஒரு ஜோசியம் சொல்லி நமது பொன்னான நேரத்தை வீணடித்திருக்கிறார்கள்!

பட்டுக்கோட்டையாரின் பாடல் ஒன்று ஞாபகத்திற்கு வருகிறது. "வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை வேடிக்கையாகக் கூட நம்பிவிடாதே.. நீ வீட்டுக்குள்ளே பயந்து கிடந்து வெம்பி விடாதே!"

ஆக, பூனை தனது பசிக்காக இரைத் தேடி ஓடுகிறது  அதன் பசியை போக்க வேண்டுமே தவிர அதன் பசியைக் கூட ஒரு ஜோசியமாக வைத்து வீட்டுக்குள்ளே பயந்து கிடந்து வெம்பிப் போவது, சோம்பிப்போவது சோம்பேறிகளின் வேலை!



பெண்களே! தமிழக ஆடவர்கள் வேண்டாமே!


மலேசியத் தமிழ்ப் பெண்கள் தமிழ் நாட்டு ஆடவர்களைத் திருமணம் செய்வதைத் தவிர்க்க வேண்டும்!  இப்போது பத்திரிக்கைகளில் அடிபட்டுக் கொண்டிருக்கும் ஒரு பெயர் தேவசூரியா. இவருக்குத் தமிழ் நாட்டில் என்ன நேர்ந்தது என்பதைப் பலர் அறிவர். 

பெற்றோர்களின் ஏற்பாட்டில்  நடபெறுகின்ற திருமணங்களைப் பற்றி நாம் இங்கு பேசவில்லை. தமிழ் நாட்டில் இருந்து இங்கு வேலை செய்ய வருபவர்களைத் திருமணம் செய்து கொள்வது - அதுவும் இந்துவாக இருந்தால் - முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். இங்கு வேலை செய்ய வருபவர்கள் பெரும்பாலும் அடித்தட்டு மக்கள். வறுமை, ஏழ்மை என்னும் நிலையில் இருப்பவர்கள். இங்கு வேலை செய்ய வந்த அவர்களை "நாங்கள் காதலித்தோம்! திருமணம் செய்து கொண்டோம்!" என்றெல்லாம் கதை சொல்லிக் கொண்டிருக்க முடியாது.  உங்கள்  எதிர்காலம் தான் முக்கியம். அவர்கள்  இங்கேயே  தங்கி உங்களைக்  காப்பாற்ற  முடிந்தால் நமக்கும் மகிழ்ச்சியே. 

ஆனால் நேரம் வரும் போது அங்குப் போகக் கூடிய சூழல் ஏற்பட்டால் உங்களால் அங்கு சமாளிக்க முடியுமா என்பதை ஒன்றுக்கு நூறு தடவை யோசிக்க வேண்டும். அங்குள்ள கலாச்சாரம் வேறு. இங்கு உங்களுடைய மாமனார், மாமியார் பிடிக்கவில்லை என்றால் ஏதோ ஒரு முதியோர் இல்லத்தில் அவர்களைத் தள்ளி விடலாம்! அதற்கு உங்கள் கணவரும் தலையாட்டுவார்!  தமிழ் நாட்டில் இந்தக் கலாச்சாரம் நகர்ப்புறங்களில் உண்டு! ஆனால் கிராமப் புறங்களில் இன்னும் மாமியார்களின் ஆதிக்கம் தான்! பணத்தோடு போனால் வரவேற்பு கிடைக்கும். இல்லாவிட்டால் பிணமாகத்தான் வரவேண்டி வரும்!

இது தமிழக  அல்லது இந்திய இளைஞர்கள் மட்டும் அல்ல.  வங்காள தேசிகள், பாக்கிஸ்தானியர்கள் - இவர்களைத் திருமணம் செய்து கொள்ளுபவர்களுக்கும் இதே நிலைமை தான். இது சமயம் சார்ந்த நாடு என்பதால் இவர்கள் இங்கே நிரந்தரமாகத் தங்குவதற்குச் சலுகைகள் உண்டு. ஆனாலும் இவர்களும் தப்பித்தவறி வங்களாதேசமோ, பாக்கிஸ்தனுக்கோ சும்மா போய் பார்த்து வருகிறேன் என்று போனால் கூட    இவர்கள்  நாடு திரும்புவது என்பது சந்தேகம் தான்! இங்கு இருக்கும் வரை அவர்கள் நல்லவர்கள் தான். அங்கு போய்விட்டால் அப்புறம் மனிதம் பற்றியெல்லாம் அவர்களிடம் பேச முடியாது!

அதனால் பெண்களே! எச்சரிக்கையாய் இருங்கள். திருமணம் செய்து கொள்ளத்தான் வேண்டும் என்றால் நாட்டைவிட்டு வெளியேறாதீர்கள். இங்கேயே இருந்து கொண்டு அரசாங்கத்திடம் மனு செய்யுங்கள். ஒரு வேளை நீங்கள் வெற்றி பெறலாம். சாத்தியம் உண்டு. ஆனால் தமிழ் நாட்டில் போய் சாதிக்கலாம் என்று நினைத்து விடாதீர்கள்!

முடிந்தவரை தமிழக ஆடவர்களைத் தவிர்க்கப் பாருங்கள்! அதுவே சிறந்த வழி!

Tuesday, 5 December 2017

வெற்றிலையும் வெற்றி தரும்..!


வெற்றிலையைப் பற்றிய கட்டுரை  ஒன்றினை "நண்பன்" நாளிதழில் லேசாக பார்வையிட நேர்ந்தது. அப்போது பின்னோக்கி எனது கவனம் சென்றது. 

பல தோட்டங்களில் நான் பணி புரிந்திருக்கிறேன்.  பெரும்பாலும்  வெற்றிலை பயிரிடுவதை நான் பார்த்ததில்லை. வெகு சிலரே அதனைப் பயிரிடுவர். ஆனால் ஒரு தோட்டத்தில் மட்டும் பல பேர் இந்த வெற்றிலைப் பயிரிடுவதை தொழிலாகவே செய்கின்றனர். காலையில் வேலைக்குப் போய் வந்ததும் அவர்களின் முழு நேர கவனமும் இந்த வெற்றிலைப் பயிரிடுவதில் தான் இருக்கும்.  குறிப்பாக தமிழகம், நாமக்கல் பகுதிலிருந்து வந்தவர்களே இந்த வெற்றிலை பயிரிடுவதில் அதிகம் கவனம் செலுத்துகிறார்கள் என்பதே எனது அனுபவம். 

வெற்றிலைப் பயிரிடுவது மிகவும் ஒரு சிரமமானத் தொழில். அதனை அக்கறையோடு பாதுகாக்க வேண்டும். வெற்றிலை முற்றி விடக்கூடாது.  பிஞ்சாகவும் இருக்கக் கூடாது. அதனால் அதனைத் தினசரி அதன் வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும்.

நான் பார்த்த அந்தக் காலக் கட்டத்தில் அப்போதே இந்த வெற்றிலைகளை அருகிலுள்ள பட்டணங்களுக்கு அனுப்பி வியாபாரத்தில் ஈடுபட்டவர்கள் இந்த நாமக்கல் வாசிகள்.  ஒன்றை என்னால் மறக்க முடியவில்லை. எனது வயதை ஒத்த நண்பர் ஒருவர் இந்த வெற்றிலையைப் பயிரிடவில்லை என்றாலும் அவர் மற்றவர்களிடம் வெற்றிலைகளை வாங்கி சிங்கப்பூருக்கு ஏற்றுமதி செய்து கொண்டிருந்தார்!  அந்த நண்பர் அத பின்னர் பல வியாபாரங்களில் ஈடுபட்டு பெரிய அளவில் தன்னை உயர்த்திக் கொண்டார். அவருடைய சிங்கப்பூர் தொடர்பு அவரை வேறு புதிய பாதைகளையும் திறந்து விட்டது.

வெற்றிலை என்பது பார்ப்பதற்கு ஒரு சிறிய வியாபாரம் தான். அதனையும் பெரிய அளவில் கொண்டு செல்லலாம். அதுவும் மலேசிய நாட்டில் இந்தியர்கள் மட்டும் தான் வெற்றிலை போடும் பழக்கம் உள்ளவர்கள் என்று சொல்ல முடியாது. மலாய்க்காரர்களும் வெற்றிலைப் போடும் பழக்கம் உள்ளவர்கள் தான். திருமணங்கள், மங்களகரமான நிகழ்வுகள் அனைத்துக்கும் வெற்றிலைகளைப் பயன்படுத்தும் வழக்கம் நமக்கு மட்டும் அல்ல மலாய்க்காரர்களுக்கும் உண்டு.

இந்த நேரத்தில் விவசாயம் சார்ந்த ஒரு தொழிலை அரசாங்கம் ஆதரவு கொடுக்க வேண்டும் என்பதில் எந்தக் கருத்த வேறு பாடும் இல்லை. இந்த வியாபாரத்தில் ஈடுபடுபவர்களுக்கு அரசாங்கம் உதவ வேண்டும். இந்தியர்கள் என்பதற்காக எந்த புறக்கணிப்பும் இருக்கக் கூடாது என்பதே நமது வேண்டுகோள்.

வெற்றிலையிலும் வெற்றி பெறலாம்!

Friday, 1 December 2017

ம.இ.கா.விற்குப் போட்டியா..?


ம.இ.கா.விற்குப் போட்டியாக இன்னொரு கட்சி - வெற்றி முன்னணி - உருவாகிக் கொண்டு இருப்பதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன! 

தேர்தல் காலங்களில் நிறைய இயக்கங்கள், மன்றங்கள், சங்கங்கள் ஆங்காங்கே பதிவு செய்யப்பட்டு, இந்தியர்களுக்கு இது நாள் வரை செய்யாத  உதவிகள் எல்லாம் செய்யத் தயாராகி வருகின்றன!  இந்த சமூகத்தின் மீது எந்த அக்கறையும் இல்லாதவர்கள் எல்லாம் இப்போது தான் அக்கறைக் காட்ட ஆரம்பித்திருக்கின்றனர்! நாம் அவர்கள் மீது அக்கறைக் காட்டுவதில்லை! காரணம் ஏதோ அவர்கள் வீட்டுப் பிள்ளைக்குட்டிகளாவது , இந்த சமுதாயத்தின் பெயரை வைத்து,  நன்றாக இருந்து விட்டுப் போகட்டுமே என்கிற பெருந்தன்மை தான்! அரசாங்கத்தின் நோக்கம் எல்லாம் இந்தியர்களின் வாக்குகள் அவர்களுக்குப் போய்ச் சேர வேண்டும். அவ்வளவு தான்! அது மட்டுமே அவர்களது குறிக்கோள்! அதனால் தான் இந்த இயக்கங்கள், மன்றங்கள், சங்கங்கள் -  இந்தத் தேர்தல் காலங்களில் - தீடீர் தீடீரென, புதிது புதிதாக முளைத்துக் கொண்டிருக்கின்றன! இந்தியர்களின் வாக்குகளை நாங்கள் பெற்றுத் தருகின்றோம் என்று தலைவர்களுக்கு உறுதிமொழி கொடுக்கின்றன! 

இந்த நேரத்தில் தான்  ஒரு புதிய கட்சி! அதுவும் அரசியல் கட்சி! அதுவும் ம.இ.கா. வுக்கு எதிராக - இந்தியர்களைப் பிரதிநிதிக்க - ஒரு அரசியல் கட்சி. இது ஒன்றும் 'யாரோவால்' ஆரம்பிக்கப் படுகின்ற ஒரு கட்சி அல்ல. மேலே பெருந்தலைகளின் ஆதரவோடு ஆரம்பிக்கப் படுகின்ற ஒரு அரசியல் கட்சி. 

ம.இ.கா.வின் இன்றைய நிலை என்ன என்பது நாம் அனைவரும் அறிந்தது தான். அவர்கள் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புக்கள் மிக மிகக் குறைவு என்பது தான் அவர்களின் இன்றைய நிலை. மலாய்க்காரர்களும் அவர்களுக்கு ஆதரவாக இல்லை என்பதும் இன்றைய யதார்த்தம்.  ஆனாலும், அவர்கள் எதைப்பற்றியும் கவலைப்படாமல், இந்தியர்களின் நலன் சார்ந்த விஷயங்களில் எந்த அக்கறையும் காட்டாமல், என்னமோ சொர்க்கலோகத்தில் இருப்பது போல கனவில் மிதந்து கொண்டிருக்கிறார்கள்! அவர்களை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. தேர்தலில் தோற்றாலும் அவர்கள் செனட்டராகலாம்! அதன் மூலம் அமைச்சராகலாம்! அமைச்சருக்கு உதவியாளராக இருக்கலாம்! அரசாங்க அமைப்புக்களில் பதவிகளில் அமரலாம்! இப்படித் தேர்தலில் தோற்றுப்போனாலும் அவர்களுக்கு வாய்ப்புக்கள் என்னவோ பிரகாசமாகத் தான் இருக்கிறது!  இப்படியெல்லாம் வாய்ப்புக்கள் வரும் போது மக்களுக்குத் தொண்டு செய்ய வேண்டுமென்று அவர்களுக்கு என்ன தலை எழுத்தா? அவர்களுக்கு அரசியலில் ஆர்வமில்லை.  ஏதோ வந்தோமா, சொத்து சேர்த்தோமா, பிள்ளைகளை ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பினோமா என்னும் மனப்போக்குக்  கொண்டவர்களாகத்தான்  இருக்கிறார்கள்!

இந்த  நிலையில் தான் ஒரு  புதிய  அரசியல்  கட்சி  உதயமாகிறது. அனேகமாக  இந்த  மாதக் கடைசியில் - டிசம்பரில் - அதிர்காரபூர்வமாக  செய்திகள்  வெளியாகும்  என  எதிர்பார்க்கலாம்.  ம.இ.கா.வின் பலவீனம் இவர்களின் பலம்!  

ஆனாலும் ஓர் அரசியல் கட்சி புதிதாகத் தொடங்குவது என்பது சாதாரண விஷயம் அல்ல. ம.இ.கா.விற்கு நீண்ட கால சரித்திரம் உண்டு. கட்சியினால் எந்தப் பிரச்சனையும் இல்லை. அக்கட்சியின் தலைவர்களால் அது தோற்கடிக்கப்பட்ட ஒரு கட்சி! அவ்வளவு தான்! 

புதிய கட்சி எந்தத் திசையை நோக்கிப் பயணிக்கும் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அதற்கென்ன? சீக்கிரமே தெரிந்து விடும்!

அணில் ஜோசியம் தெரியுமா..?


பொதுவாக ஜோசியத்தின்  மேல் எனக்கு நம்பிக்கை இல்லை.  இப்போது மட்டும் அல்ல, எப்போதுமே  அப்படித்தான்!  ஒரு காலக் கட்டத்தில் இந்த ஜொசியம், கைரேகைக்கலை, எண்கணிதம் - இவைகளிலெல்லாம் பூகுந்து விளையாடியிருக்கிறேன்! ந்ண்பர்களுக்குக் கைரேகைகளைப் பார்த்து பலன் சொல்லியிருக்கிறேன்! எண்கணிதம் பார்த்து பெயரை மாற்றிக் கொடுத்திருக்கிறேன்! சரியாகவே கணித்துக் கொடுத்திருக்கிறேன்!  ஆனால் வந்த வேகத்தில் அதனை வேண்டாம் என்று ஒதுக்கித் தள்ளி விட்டேன்! அது எனது பொழுது போக்கும் அல்ல, எதிர்காலமும் அல்ல! அதற்கு நிறைய ஆராய்ச்சிகள் தேவை. நிறைய நேரத்தைச் செலவு பண்ண வேண்டி வரும். என்னிடம் இருந்த அந்தப் புத்தகங்களை அனைத்தும் நண்பர்களுக்குக் கொடுத்து விட்டேன்!

ஆனால் நம்மிடையே நிறைய ஜோசியங்கள் உண்டு. பூனை குறுக்கே போனால்...!  காக்கை கரைந்தால்.....! பல்லி கத்தினால், பல்லி தலையில் விழுந்தால்....இப்படி இன்னும் இருக்கலாம்! யார் கண்டார்! எனக்குத் தெரிந்தது அவ்வளவு தான். இப்போது எனக்குத் திடீரென ஒரு சந்தேகம்! அணில் குறுக்கே போனால்...? அல்லது வீட்டினுள் புகுந்தால்...? காரணம் காலையில் நான் காரை எடுத்துக் கொண்டு போகும் போதெல்லாம் இந்த அணில்கள் குறுக்கே நெடுக்கே இப்படியும் அப்படியும் ஓடுவதைப் பார்க்கின்றேன்.  அட! எதற்கு எதற்கோ குறி சொல்லும் தமிழனுக்கு இதற்கு மட்டும் கண்டு பிடிக்காமலா போயிருப்பான்!  ஏனோ அந்த எண்ணம் இன்று காலை தான் எனக்குத் தோன்றியது!

தமிழ் விக்கிபெடியாவைக் கொஞ்சம் அலசினேன்! ஏமாற்றம் தான்! எதுவும் கிடைக்கவில்லை! ஒன்றுமே தெரிந்து கொள்ள முடியாவிட்டாலும் ஒன்றை மட்டும் தெரிந்து கொண்டேன்! அணில்கள் ராமருக்குப் பாலம் கட்ட உதவியதாம். அது சரி! கடவுளுக்கே உதவி செய்த அணிலைப் பற்றி ஏதாவது கெடுதல் சொல்ல முடியுமா, என்ன? நல்லதைத் தானே சொல்ல முடியும். அதனால் தான் யாரும் ஜோசியம் சொல்லத் துணியவில்லை!

சரி! பரவாயில்லை!  நானே ஒரு முடிவுக்கு வந்து விட்டேன். இனி இந்த அணில்கள் என் கண்களுக்குப் பட்டால் உடனே "ஆகா! இன்று அற்புதமான நாள்! நீங்கள் எனக்குப் பாலங்கட்ட உதவிதற்காக நன்றி! நன்றி!" அதனாலென்ன?  நினைக்கிறதே, நினைக்கிறோம், கொஞ்சம் நேர்மறையாகவே, நினைப்போமே! நல்லது நடக்கும் என நம்புவோமே!

 இந்த அணில்களை நினைக்கும் போதெல்லாம் அது ஒரு பாவப்பட்ட பிராணியாகவே தோன்றுகிறது. மரங்களை வெட்டி விடுகிறார்கள். பழ மரங்கள் காணாமல் போய்விட்டன. அவைகள் என்ன தான் செய்யும்? இப்படியும்  அப்படியும்     அலைந்து கொண்டு இரை கிடைக்காமல், வீடுகளில் புகுந்து கொண்டு, இரைகளைத் தேடி.......! பாவந்தான்!  அவைகள் சாப்பிட சில நாள்களுக்கு  இரை கிடைக்கவில்லை என்றால் அதன் முன் பற்கள் வளர்ந்து விடுமாம்! அதன் பின்னர் சாப்பிட இயலாமல் அவைகள் இறந்து போகுமாம்!

மனிதன் செய்யும் அட்டூழியங்களினால் இந்த அணில்களும் காணாமல் போய்க் கொண்டிருக்கின்றன! இந்த நேரத்தில் இன்னொரு ஜோசியமா? வேண்டவே வேண்டாம்! இருக்கிற ஜோசியமே போதும்!


Thursday, 30 November 2017

வாய்த் தவறினேன்!! மன்னியுங்கள்!


கூட்டரசுப் பிரதேச அமைச்சர் டத்தோஸ்ரீ துங்கு அட்னான் துங்கு மன்சூர் எல்லாருக்கும் தெரியும் படியாக "என்னை மன்னியுங்கள்! சமயங்களில் நான் "லூசுத்தனமாக" பேசிவிடுவேன்! பெரிது படுத்தாதீர்கள்!" என்று மன்னிப்பு கேட்டுக் கொண்டிருக்கிறார்!

பொதுவாக அவர் மன்னிப்பு கேட்கும் நபர் அல்ல. ஆனால் இந்த சமயம் அவர் மலாய்க்காரர்களிடம் வசமாக மாட்டிக் கொண்டார்! அதனால் மன்னிப்புக் கேட்கும் அவசியம் அவருக்கு     ஏற்பட்டுவிட்டது! தேர்தல் வருகிறது என்றாலே இப்படி எல்லாம் நடக்கத்தான் செய்யும். 

ஆனால் உண்மையாகச் சொல்ல வேண்டுமென்றால் அவர் மன்னிப்புக் கேட்க வேண்டிய அவசியமில்லை! உண்மையைத்தான் பேசினார். அதற்குத் தான் இந்த மன்னிப்பு! 

மாரா கல்லூரி ஆரம்பிக்கபட்டதின் நோக்கம், நிச்சயமாக, ஓர் உயர்வான நோக்கம் தான். அதில் ஏதும் ஐயம் இல்லை. கல்வித் துறையில் மிகவும் பின் தங்கிய சமூகமாக இருந்த மலாய்க்காரர்களுக்கு அன்றைய நிலையில் அரசாங்கத்தின்  உதவி அவர்களுக்குத் தேவைப்பட்டது என்பது உண்மை. அதனைக் குறை சொல்ல ஒன்றுமில்லை. எப்படியோ, ஏதோ ஒரு வழியில் அவர்கள் அரசாங்கத்தின் அனைத்து காலி இடங்களையும் நிரப்பும் பணியை இந்த மாரா கல்லுரிகளை வைத்து  நிரப்பட்டது.  தகுதியின் அடிப்படையில் அல்ல, தகுதியே இல்லாத நிலையில் தான் நிரப்பட்டது!  அது ஒரு காலம். அதன் பலாபலனை அப்போதிருந்தே மலேசியர்கள் அனுபவத்திக் கொண்டிருக்கிறர்கள் என்பதும் உண்மை!

ஆனால் இப்போது இந்த மாரா கல்லுரிகளின் நிலை என்ன? இப்போது அதன் கல்வித்தரம் உயர்த்தப்பட்டிருக்கிறது என்பதில் ஐயமில்லை. எல்லா உயர் கல்வி நிறுவனங்களைப் போல நல்ல சிறப்பான தரமான     கல்வியை இந்தக் கல்லூரிகள் கொடுக்கின்றன. இங்கு  சொல்லப்படுகின்ற குற்றச்சாட்டு இந்த மாணவர்களால் அந்தக் கல்வியின் தரத்துக்கு ஈடுகொடுக்க முடியவில்லை என்பது தான். அதாவது வேறு தரமான கல்லூரிகளில் படிக்க 'இலாயக்கு' இல்லாத மாணவர்கள்  அனைவரும் இந்தக் கல்லுரிகளில் கொண்டு வந்து குப்பைகளைக் கொட்டுவது போல் கொட்டப்படுகிறார்கள்! கெட்டிக்கார மலாய் மாணவர்கள் வெளி நாடுகளுக்கு அனுப்பப்படுகிறார்கள். அல்லது உள்ளுரிலேயே தரமான கல்விக்கூடங்களுக்கு அனுப்பப்ப்படுகிறார்கள்.. ஆனால் எதற்குமே தகுதி இல்லாதவர்கள் மாரா கல்லுரிகளை நிரப்புகிறார்கள்.! அதற்குக் காரணம் வழக்கம் போல அரசாங்க பதவிகளை நிரப்ப இவர்கள் தேவைப்படுகிறார்கள். அதனால் அரசாங்க ஊழியர்களின் தரம் எப்போது மாறும் என்று நம்மால் கணிக்கப்பட் முடியவில்லை!

இந்த மாரா கல்லுரிகளின் குப்பைகளைத் தான் துங்கு அட்னான் "மந்தமான மாணவர்கள்" என்று ஒரு நிகழ்ச்சியில் கூறியிருந்தார்! குப்பைகளைக் கிளரினால் என்ன நடக்கும் என்பதை துங்கு இந்நேரம் புரிந்திருப்பார்! அதனால் தான்  வாய்த் தவறினேன்! மன்னியுங்கள்! என்று மன்னிப்புக் கேட்க வேண்டியதாகிவிட்டது!

நாமும் மன்னிப்போம்!


Tuesday, 28 November 2017

பள்ளிக்கால நண்பர்...!


ஓரிரு நாள்களுக்கு முன்னர் எனது பள்ளிக்கால நண்பர் ஒருவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. சந்தித்து நீ.....ண்....ட  காலம் ஆயிற்று. அதிகம் பேச முடியவில்லை. நான் வேலையில் மூழ்கி இருந்தேன். ஆனாலும் ஏதோ முடிந்த வரையில் இருவரும் பழைய ஞாபங்களைப் பகிர்ந்து கொண்டோம்.

அவரை எனது பள்ளிகால நண்பர் என்று சொன்னேன். என்னோடு அவர் பள்ளியில் படிக்கவில்லை. அப்போது அவர் அச்சகம் ஒன்றில் அச்சுக்கோப்பாளராக வேலை செய்து கொண்டிருந்தார்.  என்னோடு படித்தவர்களும் அவருக்கு  நண்பர்கள் தான்.  ஆனால் இதில் என்ன எனக்கொரு ஆச்சரியம் என்றால் அவரோடு எந்த வகையிலும் சம்பந்தப்படாத என்னோடு படித்த மற்றவர்களைப் பற்றியும்  அவர் தெரிந்து வைத்திருந்தார்! அது எப்படி என்று எனக்குத் தெரியவில்லை. எங்களுடைய தலைமை ஆசிரியரின் பெயரைத் தெரிந்து வைத்திருந்தார். என்னோடு படித்த சில பெண்களின் பெயரைத் தெரிந்து வைத்திருந்தார்! இதெல்லாம் "எப்படி?" என்று எனக்குப் புரியவில்லை! ஆனாலும் இந்தச் செய்திகள் எல்லாம் எங்கள் பக்கம் இருந்து தான் அவருக்குப் போயிருக்க வேண்டும்! இல்லாவிட்டால் எப்படி? இப்போது எனக்கு ஞாபத்திற்குக் கொண்டு வர முடியவில்லை. 

நான் இன்னும் முக்கிய செய்திக்கு வரவில்லை.  ஆமாம்!    எங்களைப் போன்ற மாணவர்களுக்கு வெளியே அச்சகத்தில் வேலை செய்யும் ஒருவருடன் எப்படி தொடர்பு எப்படி ஏற்பட்டது? அந்தக் காலக்கட்டத்தில் சிங்கப்பூர் வானொலியும், மலாக்கா வானொலியும் "நேயர் விருப்பம்" நிகழ்ச்சிக்கு மிகவும் பிரபலமானவை. (சிங்கப்புர் என்றால் கோலலம்பூர் என்று நினைத்துக் கொள்ளுங்கள்),  அப்போது மலாக்கா நேயர் விருப்பம் தெரசா அவர்களால் நடத்தப்பட்டது. சிங்கப்பூர் நிகழ்ச்சி கமலாதுரை, செசிலியா போன்றவர்களால் நடத்தப்பட்டது. இந்த நேயர் விருப்ப நிகழ்ச்சியில் எங்களோடு படித்த குப்புசாமி என்னும் மாணவரின் பெயர் மிகவும் பிரபலம். எல்லா நேயர்விருப்ப நிகழ்ச்சியிலும் அவர் பெயர் ஒலிக்கும்! அப்படியென்றால் நாடுபூராவும் அவர் பெயர் நேயர்விருப்ப நிகழ்ச்சியில் ஒலிக்கும். ஆகா! அது ஏதோ சினிமா நடிகர் மாதிரி ஒரு கர்வம்!  இதில் எங்களுக்கும் பங்கு உண்டு!  

இந்த நண்பர் மூலம் தான் இந்த அச்சக நண்பர் அறிமுகமானர். அப்போது அவருடைய அச்சகத்தில் புதிதாக நேயர்விருப்ப கார்டுகள் அறிமுகப் படுத்தியிருந்தார்கள். அதனை எங்களுக்கெல்லாம் காட்டி, அதில் கொஞ்சம் சிக்கனம் இருப்பாதாகக் கூறி, எங்களையெல்லாம் வாங்க வைத்தார்! இப்படித்தான் அந்த அச்சக நண்பர் அறிமுகமானார். இப்படித்தான் அவருடைய அறிமுகம் ஏற்பட்டது!

இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு அவரைச் சந்தித்ததில் என்ன மாற்றத்தைக் கண்டேன்? இப்போது அவர் பேசுகின்ற தமிழ் ஏதோ தமிழ்ப் பண்டிதர் பேசுவது போல் இருந்தது. அழுத்தம், திருத்தமாக தமிழைப் பேசுகிறார். தமிழாசிரியர்கள் கூட இப்படிப் பேசுவதை நான் பார்த்ததில்லை! அப்படி ஒரு தூய தமிழில் பேசுகிறார். வார்த்தைகள் தெளிவாக வந்து விழுந்தன. அழுத்தமாக இருந்தன. 

இன்றைய நிலையில் இப்படித் தமிழ் பேசுவது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஆனாலும் கேலி செய்ய ஒன்றுமில்லை. அந்தத் தமிழ்ப்பற்று, இனப்பற்று அவரிடமிருந்தது. அன்றைய இளைஞர்களிடையே இருந்த அந்த மொழிப்பற்று இன்னும் அவரிடம் அப்படியே இருக்கிறது.

ஒரு வேளை நாங்கள் தான் மாறிவிட்டோமோ!


Monday, 27 November 2017

பயங்கரவாதம் ஒழிக்கப்பட வேண்டும்!


உலக அளவில் அடிக்கடி நடைபெற்றுக் கொண்டிருக்கும் பயங்கரவாதத் தாக்குதல்கள் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும். இதில் கருத்து வேறு பாடுகள்  யாருக்கும் இருக்க முடியாது.

கடைசியாக எகிப்து, அல்ரவ்டா  பள்ளிவாசல் மேல் தொடுக்கப்பட்ட கொடூரத் தாக்குதல் மிகவும் மனிதாபிமான மற்ற தாக்குதல் என்று நாம் சொல்லிக் கொண்டு தான் இருக்கிறோம் ஆனால் அதனைக் கேட்கத்தான் ஆளில்லை.

எல்லா மதங்களிலும் பிரிவினைகள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் பிரிவினைகளை இந்த அளவுக்கு -  பள்ளிவாசல்களை குண்டு வைத்துத் தகர்க்கும் அளவுக்கு , மக்களைக் கொல்லும் அளவுக்கு  - வெறுப்பது - என்பது மிகவும் கொடூரம். இந்தப் பயங்கரவாதத் தாக்குதலில் 305 மேற்பட்ட மக்கள் பள்ளிவாசலின் தொழுகையின் போது கொல்லப்பட்டிருக்கின்றனர். அதில் 27 பேர் சிறுவர்கள். இன்னும் 128 பேர் காயமடைந்து இருக்கின்றனர். இந்தத் தாக்குதலில் முப்பதுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் சம்பந்தப் பட்டிருக்கின்றனர் என்பதாகச்   செய்திகள் கூறுகின்றன.

இந்தத் தாக்குதலில் ஏற்பட்ட உயிர்ச் சேதங்கள் ஒரு புறம் இருக்க சம்பந்தப்பட்ட குடும்பங்களில் பாதிப்புக்கள் எப்படி இருக்கும் என்பதை நினைத்துப் பார்க்க முடியவில்லை. தந்தைகளை இழந்த குடும்பங்கள், மகன்களை இழந்த பெற்றோர்கள், கணவர்களை இழந்த பெண்கள் -  இந்தக் குடும்பங்கள் எப்படித் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள போகின்றனர்? பிரச்சனைகள் இல்லாதக் குடும்பங்களே இல்லை. அதிலும் குறிப்பாக பொருளாதாரச் சிக்கல்கள் இல்லாதக் குடும்பங்களை எங்கே பார்ப்பது? இந்த நிலையில் அந்தக் குடும்பங்களின் நிலை என்ன? யார் அவர்களைக் காப்பாற்றுவார்?

இந்தக் கேள்விகளுக்குப் பதில் கிடைப்பது சிரமம். பயங்கரவாதிகளை யார் யோசிக்க வைப்பது? அவர்களும் ஏழ்மை நிலையில் இருந்து பணத்துக்காக பயங்கரவாதிகளாக மாறியவர்கள். இங்கு ச்மயம் என்பதெல்லாம் ஒன்றுமில்லை. பணத்துக்காகத் தான் இந்த வேலைகள் எல்லாம் நடந்து கொண்டிருக்கின்றன.

பயங்கரவாதம் ஒழிக்கப்பட வேண்டும். இதனைத் தொடர விடக் கூடாது என்பது தான் அனைவரின் பிரார்த்தனையும். ஒழிக்கப்படும் நாள் விரைவில் வரும் என நம்புவோம்!


Saturday, 25 November 2017

கேள்வி - பதில் (67)


கேள்வி

தமிழகத்தை ஆளும் அண்ணா தி.மு.கா,  ஈ பி எஸ் அணிக்கு இரட்டை இலை சின்னம் கிடைத்ததனால் என்ன மாற்றம் ஏற்படப்போகிறது?

பதில்

இரட்டை இலைச் சின்னம் ஈ பி எஸ் அணியினருக்குத் தான் கிடைக்கும் என்பது ஏறக்குறைய நாம்  அறிந்தது  தான்.  இன்றைய நிலையில் அவர்கள் தான் தமிழகத்தின் ஆளுகின்ற கட்சி. பா.ஜ.க.வின் ஆதரவு  அவர்களுக்குத் தான். மற்ற அணியினரிடம் இரட்டை இலை போயிருந்தால் தமிழகத்தின் ஆட்சி கவிழ்ந்து விடும்! தாக்குப் பிடிக்காது. ஆளுங்கட்சியில் இருப்பவர்கள்  ஆளுக்காள் பிய்த்துக் கொண்டு போய்விடுவார்கள். அதனால் பா.ஜ.க. வுக்கு ஆளுங்கட்சியின் தயவு தான் தேவை.

இது முற்றிலுமாக பா.ஜ.க. வின் அரசியல்! ஈ.பி.எஸ். அணி இருக்கும் வரை பாஜ.க. வின் அரசியல் தான் நடந்து கொண்டிருக்கும்.  தமிழகத்தின் மேல் இன்னும் என்னென்ன நெருக்கதல்கள் ஏற்படுத்த முடியுமோ, என்னென்ன புதிய புதிய சட்டங்களைக் கொண்டு வந்து தமிழகத்தை வீழ்த்த முடியுமோ, அத்தனையையும் மத்திய அரசு செயல்படுத்துவதற்கு ஈ.பி.எஸ். அணி அவர்களுக்குத் தேவை. ஏன்? ஜல்லிக்கட்டுப் பிரச்சனையைக் கூட மத்திய அரசு செயல்படுத்துவதற்கு இவர்களின் உதவி அவர்களுக்குத் தேவை.  அதையும் விட்டுக் கொடுக்க இவர்கள் தயார். இவர்கள் நோக்கமெல்லாம் பணம் மட்டுமே! பணத்திற்காக எதனையும் இழக்க அ.தி.மு.கா.வினர் தயார். அது  நாடாக இருந்தாலும் சரி, தங்களது பிள்ளைக்குட்டிகளாக இருந்தாலும் சரி! அனைத்தையும் இழக்கத் தாயார். அதனால் தான் தங்கள் பிள்ளைக்குட்டிகளை எல்லாம் அமரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து என்று அங்கு அனுப்பி விடுகின்றனர் அல்லது  அங்கு  சொத்துக்களை வாங்கிக் குவிக்கின்றனர். இவர்களுக்கு நாட்டுப்பற்றோ, இனப்பற்றோ மொழிப்பற்றோ இல்லாத ஒருவித ஜந்துக்கள் இவர்கள்!

என்ன செய்வது? கடந்த ஐம்பது  ஆண்டுகளாக தமிழகத்தை ஆண்டு அனுபவித்தவர்கள். நாட்டைக் கொள்ளையடித்தவர்கள். அவர்களிடம் போய் "உனக்கு ஏன் தமிழன் என்னும் பற்று இல்லை! உனக்கு ஏன் தமிழ் மொழி மீது பற்று இல்லை! உனக்கு ஏன் நமது கலாச்சாரத்தின் மீது பற்று இல்லை" என்றெல்லாம் கேள்விகள் கேட்பது கோமாளித்தனம்!

இந்த இரட்டை இலை வருகையினால் பெரிய மாற்றம் எதுவும் தமிழகத்திற்கு வரப்போவதில்லை. ஏறக்குறைய இவர்கள் அவர்களின் அம்மாவுக்கு என்ன கதி ஏற்பட்டதோ அது தான் இவர்களின் கட்சிக்கும் நடக்கும்!

அடுத்து இவர்களுக்கு புதை குழி தான்!




நான் ஒரு முட்டாளுங்க...!


"நான் ஒரு முட்டாளுங்க!" என்னும்  பாடல்  ஒரு காலக்கட்டத்தில் மிகவும் பிரபலம். அந்தப் பாடலைப் பாடியவர் பிரபலப் பாடகர், நடிகர் ஜே.பி.சந்திரபாபு. அந்தப் பாடல் கேட்பதற்கு இனிமையாகவும் சிலக் கருத்துக்களைச் சொல்லும் பாடலாகவும் கவிஞர் கண்ணதாசன் எழுதியிருந்தார். அந்தக் காலக் கட்டத்தில்  சந்திரபாபு நகைச்சுவை நடிகராகவும் பாடகராகவும்  மிகவும் பிரபலம்.

ஆனால் இந்தப் பாடல் பட்டித்தொட்டிகளிலெல்லாம் ஒலிக்க ஆரம்பித்த போது வேறு ஒரு தாக்கத்தையும் இந்தப்பாடல் ஏற்படுத்தியது. பொதுவாக அவரது ரசிகர்கள்  அவரை ஒரு முட்டாளாகவே நினைத்தனர்! காரணம் சொந்த வாழ்க்கையில், அந்த நேரத்தில் வெற்றிகரமாக நடிகராக இருந்தும் கூட, அவர் பல  தோல்விகளைச் சந்தித்துக் கொண்டிருந்தார். அதனால் அவருக்கு ஏகப்பட்ட பிரச்சனைகள். முற்றிலுமாகக் குடிபோதையில் தன்னையே அழித்துக் கொண்டார். தான் ஒரு முட்டாள் என்பதாகவே அவரும் நினைக்க ஆரம்பித்து விட்டார். அப்படியே ஒரு முட்டாளாகவே அவரது கடைசி காலம் அமைந்து விட்டது.

அதனால் தான் நாம் எந்தக் காலத்திலும் எதிர்மறையான எண்ணங்களை வளர்த்துக் கொள்ளக் கூடாது என்பதை வலியுறுத்துகிறோம். 

நம்மைப் பற்றி நமக்கு உயர்ந்த அபிப்பிராயம் இருக்க வேண்டும். நான் ஒரு முட்டாள், நான் ஒரு மடையன், நான் கையாளாகதவன் என்றெல்லாம் நம் மனதிலே ஒரு எண்ணத்தை உருவாக்கிக் கொள்ளக் கூடாது. மற்றவர்கள் எப்படி வேண்டுமானாலும் நினைத்துவிட்டுப் போகட்டும். நாம் அப்படியொரு எண்ணத்தை வளர்த்துக் கொள்ளக்கூடாது. நான் கெட்டிக்காரன், நான் திறமைசாலி என்பதாகத்தான் நமது எண்ணங்கள் இருக்க வேண்டும். மிக முக்கியம். நான் வெற்றியாளன் என்னும் எண்ணம் மிக ஆழமாக மனத்தில் பதிய வைக்க வேண்டும். கையில் பணம் இல்லாவிட்டாலும் 'அது தற்காலிகம்' என்று சொல்லிவிட்டு மீண்டும் நமது எண்ணங்களை வெற்றியை நோக்கிய பயணமாக ஆக்கிக்கொள்ள வேண்டும்.

ஜே.பி. சந்திரபாபு ஒரு முட்டாள் அல்ல.  ஆனால் அப்படி ஒரு  எண்ணத்தை அவர் ஏற்படுத்திக் கொண்டார். அவரைச் சுற்றி இருந்தவர்களும் அதனை வளர்த்து விட்டனர்.  நம்மைச் சுற்றி இருப்பவர்கள் நம்மை முட்டாள் என்று சொன்னாலும், மடையன் என்று சொன்னாலும் எந்த எதிர்மறை வாசகங்களை நம் மீது திணித்தாலும் - நாம் மட்டும் - அதனை ஏற்றுக்கொள்ளக் கூடாது. அது தான் - அந்த ஒன்று தான் - வாழ்க்கையில் நம்மை உயர்த்தும். மனத்தைப் பாறையாக்கிக் கொள்ள வேண்டும். நாம்  நம்மைப் பற்றி என்ன நினைக்கிறோமோ அது தான் நாம்.  மற்றவர்கள் நம்மைப் பற்றி நினைப்பவை அது  அவர்களுடைய பார்வை. அதற்கு நாம் பொறுப்பு அல்ல.

மற்றவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைத்தாலும், என்ன எண்ணம் கொண்டிருந்தாலும், நம்மைப் பற்றிய நமது உயர்வான எண்ணத்தை எக்காரணத்தைக் கொண்டும் நாம் தாழ்த்திக் கொள்ளக் கூடாது!

நம்மை நாம் உயர்த்துவோம்! மற்றவரையும் நாம் உயர்த்துவோம்!! 

Wednesday, 22 November 2017

கேள்வி - பதில் (66)


கேள்வி

நடிகர் கமல்ஹாசன் கேரள முதல்வர் பினராயி விஜயனைச் சந்தித்தாரே அதனால் என்ன பயன்?

பதில்

கமல் அரசியலுக்குப் புதியவர் என்பதால், அரசியல் அனுபவம் பெற்ற பினராயி விஜயிடம் பேச்சு வார்த்தைகள் நடத்தினார்  என்பதாக செய்திகள்வெளியாயின. அது மட்டும் அல்ல  மேற்கு வங்க மாநிலத்தைச்  சேர்ந்த  மம்தா  பானர்ஜீ  என்னும் ஒரு முதலைமைச்சரையும் அவர் சந்தித்திருக்கிறார்.

இது ஒரு நல்ல  முயற்சி  தான்.  தனக்குத்  தெரியாத  ஒரு  புதியத்  துறையைத் தேர்ந்தெடுக்கும்  போது  சில  அனுபவங்களைப்  பெறவாவது  இது  போன்ற பேச்சு  வார்த்தைகள்  தேவை  தான். அதனை அவர் செய்திருக்கிறார்.  நமக்கும்  அது  பொருந்தும்.

கமல்,  கேரள முதல்வரைச் சந்தித்து  என்ன  பேசினார்  என்பது  தெரியாவிட்டாலும்  தமிழ்  நாட்டைப்  பாதித்த/பாதிக்கிற ஒரு  சில  விஷயங்களையாவது  அவர்  பேசியிருந்தால்  மனதுக்குக்  கொஞ்சம்  நிறைவாக  இருந்திருக்கும்.  கமல்  தமிழக  முதல்வர்  அல்ல.  அவர்  பேசுவதால்  எந்தப்பயனும்  இல்லை  என்பது  நமக்கும்  தெரியும்.   

எது  எப்படியோ,  ஒரு  விஷயம்  மனதைக்  குடைந்து  கொண்டே  இருக்கிறது.  கேரளாவில்  ஒரு  விபத்தில்  பாதிப்படைந்த  ஒரு  தமிழருக்கு எந்த  ஒரு  கேரள  மருத்துவமனையும்  அவருக்குச்  சிகிச்சை  அளிக்க ஏற்றுக்கொள்ளவில்லை.  அதன்  பின்னர்  இன்னும்  இரண்டு  தமிழர்களுக்கும்  அதே  கதி  தான்.  மருத்துவமனைகள்  கை விரித்து விட்டன.  

இது  ஏன்  என்று  நமக்குப்  புரியவில்லை. சாகும்  நிலையில்  இருந்தும்  கூட  அவர்கள்   உதவத்   தயாராக இல்லை. ஆனாலும்  தமிழ் நாட்டில்  அவர்கள்  என்னவொரு  நிம்மதியான  வாழ்க்கை வாழுகிறார்கள் என்பதை நான் சொல்லித் தெரிய  வேண்டியதில்லை. ஊடகத் துறையில்  அவர்களின்  செல்வாக்கு  அதிகம். சினிமா, சின்னத்திரை என்று  எடுத்துக்  கொண்டாலும் அவர்கள்  தான்  முன்னணியில்  நிற்கிறார்கள்.  ஏன்?  இன்றைய நிலையில்  சென்னை  நகரில்  மலையாளிகளின் ஆதிக்கம்  அதிகம். இதனையே  நாம்  கேரளாவில் பார்க்க  முடியுமா?  தமிழர்களைக்  கேரளாவில் பார்த்தாலே அவர்களை  விரட்டி அடிக்கிறார்களாம் மலையாளிகள். இதனை நான் சொல்லவில்லை. ஒரு  மலையாளியே இதனைச் சொல்லுகிறார்!  அவரே சொல்லுகிறார்:  நான் தமிழ்  நாட்டுக்கு அடிக்கடி வந்து  கொண்டிருக்கிறேன்.  யாரும்  என்னை  முறைத்துக் கூடப்  பார்த்ததில்லை  என்கிறார். 

அது  தான்  தமிழன்  செய்கின்ற  தவறோ?  அனைவரையும்  வரவேற்பதே  தமிழனுக்குக்  கொள்ளி  வைக்கிறதோ?  நமது  கொள்கையை  நாம் மாற்றிக்கொள்ள வேண்டுமோ?

அது  சரியோ, தவறோ  தெரியவில்லை!  ஆனால்  கமல்ஹாசன் இது பற்றிப்  பேசியிருந்தால்  நமக்கும்  சந்தோஷமே!  வெறும்  சந்திப்பு  என்பது  யாருக்கும்  பயனில்லை!

Saturday, 18 November 2017

தியாகு, நீர் வெற்றி பெற வேண்டும்..!


தியாகுவின் 350 கிலோ மீட்டர் நடைப்பயணம் வெற்றி பெற வேண்டும். 


தமிழ்ப்பள்ளிகளைக் காக்க 350 கிலோ மீட்டர் நெடும்பயணத்தை மேற்கொள்கிறார், தியாகு. ஜோகூர், துன் அமினா தமிழ்ப்பள்ளியில் தொடங்கி , புத்ரா ஜெயாவை நோக்கி அமைகிறது அவரது பயணம்.  25.11.17 அன்று தொடங்கி 11.12 17 அன்று முடிவடைகிறது.  சுமார் 17 நாட்கள். பயணத்தினூடே ஆங்காங்கே கவன ஈர்ப்புக் கூட்டங்கள் தனது கருத்துக்களைப் பதிவு செய்ய. மக்களுக்கு விழிப்பை ஏற்படுத்த.

அரசாங்கத்தின் இருமொழி திட்டத்தை தவறாகக் கையாண்ட தலமையாசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தான் அவருடைய நோக்கம் என்றாலும் இந்த இரு மொழித் திட்டம் முற்றிலுமாக தமிழ் மொழியை அழிக்க வழி வகுக்கும் ஒரு திட்டம் என்பதை மக்களின் கவனத்திற்குக் கொண்டு வருவதும், நோக்கமாகவும் இந்தப் பயணம் அவருக்கு அமைகிறது.

இந்த இரு மொழித் திட்டத்தில்,  தமிழ்ப்பள்ளிகளுக்கான அடையாளமே  இருக்கக் கூடாது என்பது அரசாங்கத்தின் திட்டம். அரசாங்கத்தின் இத்திட்டத்திற்கு முழு ஆதரவு கொடுப்பவர் துணைக்கல்வி அமைச்சர் கமலநாதன். அத்தோடு ஒரு சில தமிழ்ப்பள்ளி தலமை ஆசிரியர்களையும் அவருடன் சேர்த்துக் கொண்டு தமிழ்ப்பள்ளிகளை அழிப்பதற்கான வேலைகளில் அவர் முழு மூச்சாக இறங்கியிருக்கிறார்.  தமிழ்ப்பள்ளிகளின் மேல் கை வைக்கும் இவர்கள் சீனப்பள்ளிகள் மேல் கை வைக்க முடியவில்லை. கை வைக்கவும் முடியாது. சீனர்களின் பலம் அங்கு இருக்கிறது.  இங்கு நாம் பிரிந்திருக்கா விட்டாலும், பிரித்து வைப்பதற்கு அரசாங்கம் உள்ளுற பல வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறது! வலுக்கட்டாயமாக நாம் பிரித்து வைக்கப்படுகிறோம். அதனால் தான் ஒரு சில தலமை ஆசிரியர்களின்  இருமொழி திட்டத்திற்கான ஆதரவு!

இந்த அநீதிகளைத் தடுக்க வேண்டும் என்பதற்காகவே தியாகு அவர்கள் இந்த 350 கிலோ மீட்டர் நெடும் பயணத்தை துவக்குகிறார். 27 வயதான தியாகு, ஓர் மருந்தியல் பட்டதாரி.  அவருடன் கை கோப்பவர்கள் இன்னும் சில தமிழ் ஆர்வலர்கள்.

இந்த நடைப்பயணம் என்பது நமது எதிர்ப்பைத் தெரிவிக்கும் பல வழிகளில் இதுவும் ஒன்று. ஆனாலும் நம்மிடையே மெத்தப் படித்தவர்கள் பலர் பெரிய பதவிகளில் உள்ளனர். அவர்களும் தாய் மொழிப்பற்றோடு அரசாங்கத்தை அணுகினால் - பேச்சு வார்த்தை நடத்தினால் - இன்னும் நமக்கு வலு சர்க்கும்.  மற்றைய இயக்கங்களும், குறிப்பாக வர்த்தக இயக்கங்களும், ஒதுங்கி இருப்பதை தவிர்க்க வேண்டும். இது நமது பிரச்சனை. நாம் ஒன்றுபட வேண்டும். 

தியாகுவும் அவர் தம் குழுவினரும் இந்த நடைப்பயணத்தை வெற்றிகரமாக முடிக்க -  உங்களுக்காகப் பிரார்த்திக்கிறேன். வாழ்த்துகள்!

நன்றி: செம்பருத்தி


Friday, 17 November 2017

எதிர்கட்சி ஆதரவாளரா தலமையாசிரியை?





துடிப்பு மிக்க தலமையாசிரியை ஒருவர், பள்ளிக்கு மாற்றலாகி ஓர் ஆண்டு காலம்  கூட  ஆகாத  நிலையில், திடுதிப் என மாற்றப்பட்டிருக்கிறார். 

பட்டர்வொர்த், மாக்மாண்டின் தமிழ்ப்பள்ளியின் தலமை ஆசிரியை, திருமதி தமிழ்ச்செல்வி தான் அந்த மாற்றத்திற்கு உரியவர். இந்தத் தீடீர் மற்றம் ஏன்?  மாக்மாண்டின் தமிழ்ப்பள்ளியின் விரிவாக்கதிற்கு 1,00,000 ஒரு இலட்சம் வெள்ளியும், பள்ளியின் பாலர் பள்ளியின் வளர்ச்சிக்கு  10,000 பத்தாயிரம் வெள்ளியும் அவருக்குத் தேவைப்பட்டது.  துணைக்கல்வி அமைச்சர் பி.கமலநாதனின் அமுதசுரபியான எந்த ஒரு சாராய ஆலைகளாலும்  அதனைக் கொடுக்க இயலாத நிலையில், தலமை ஆசிரியை மாநிலத்தை ஆட்சி  செய்யும் எதிர்கட்சி அரசாங்கத்திடம் உதவியை  நாடியிருக்கிறார். மாநில  முதல்வர், துணை முதல்வர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பள்ளிக்கு வருகை தந்து பள்ளிக்குத் தேவையான நன்கொடையை அளித்திருக்கின்றார்கள். மத்திய அரசாங்கம் தேவையான நன்கொடையை அளிக்க முடியாத நிலையில்  மாநில அசாங்கம் பள்ளிக்குக் கை கொடுத்தது மத்திய அரசால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எப்படி? எப்படி? எப்படி? என்று மேலும், கீழும் குதித்துவிட்டு கடைசியில் "எங்களிடமா உன் வில்லத்தனம்?"  என்று அந்தத் தலமை ஆசிரியரை  பிறை தமிழ்ப்பள்ளிக்கு மாற்றி விட்டார்கள்!

ஏன் மாற்றினோம் என்பதற்கு ஒரு நொண்டிச்சாக்கையும் கூறியிருக்கிறார்கள்! இவர் மட்டும் அல்ல இன்னும் ஏழு தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த தலமை ஆசிரியர்களும் மாற்றப்பட்டிருக்கிறார்கள் என்பதாக! ஆனால் இங்குக் கேட்கப் படுகின்ற கேள்வி: நன்கொடை கொடுப்பதற்கு முன்னதாக ஏன் இந்த மாற்றம் வரவில்லை? என்பது தான்!

கமலநாதன் சார்! நீங்கள் நீடூழி காலம்  வாழ்ந்து 'அம்னோ'வுக்குச் சேவை செய்து பல பட்டங்களையும் பதவிகளையும் பெற வாழ்த்துகிறேன்!

மீன் பிடிக்க இனி இந்தி தெரிந்திருக்க வேண்டும்..!


தமிழக மீனவர்கள் இது நாள் வரை சிங்களக் கடல்படையினரின் அனைத்து  அராஜகத்திற்கும் பொறுமை காத்தனர். இன்னும் காத்துக் கொண்டு தான் இருக்கின்றனர். மீனவர்கள் சுடப்பட்டனர்.  மீனவர்களின்  படகுகள் வலுக்கட்டயமாக அபகரிக்கப்பட்டன. மீனவர்கள்  சிறைவைக்கப்பட்டனர். ஒரு பக்கம் கைது செய்வதும்,  இன்னொரு பக்கம் ஓரிருவரை விடுதலை  செய்து நல்ல  பெயர்  வாங்க  நினைப்பதும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இந்தத்  தொடர் நடவடிக்கைக்கு தமிழக  அரசும் இந்திய  அரசும் துணைப் போவதும்  பொதுவாக நாம் அறிந்த செய்தி தான். 

ஆனல்  சிங்களக் கடல்படையினர்  தமிழக  மீனவர்களை  "உங்களுக்கு ஏன்  சிங்களம்  தெரியவில்லை"  என்னும்  கேள்வியை மட்டும்  அவர்கள்  இது நாள் வரை கேட்கவில்லை!  இனி  அதையும்  கேட்கும் நிலை  வந்துவிட்டதாகத்  தோன்றுகிறது!  ஆமாம்!  அவர்கள்  எல்லையில்  மீன் பிடிப்பதாகத்தான்  சிங்களப் படையினரின் குற்றச்சாட்டு.  அவர்கள்  எல்லையில்  திருட்டுத்தனமாக மீன்  பிடிப்பதற்கும்  சிங்களம் தெரிந்திருக்க  வேண்டும்  என்று  இனி  மீனவர்கள்  குற்றம்  சாட்டப்படலாம்!  தெரியாவிட்டால்  அவர்களுக்கு  ஓரிரு  மாதங்கள் சிறைதண்டனை அதிகரிக்கப்படலாம்!  ஒரு  கோமளித்தனமான  அரசு  என்றால்  எதுவும்  நடக்கும்.  நீதி,  நியாயம்  பற்றியெல்லாம்  அவர்களிடம்  எதிர்பார்ப்பது  என்பது  கோமாளித்தனம்!

இனி  இது போன்ற  பிரச்சனைகள்  வரலாம்  என்று  ஏன் எதிர்பார்க்கிறோம்? எல்லாம்  இந்திய  கடலோரக்  காவல்படையினர்  செய்த  அடாவடித்தனம். சொந்த  நாட்டு  மீனவர்களைச்  சுட்டுத்தள்ளியிருக்கின்றனர். ஒருவேளை இவர்கள்  சிங்கள  மீனவர்கள் என்று  அவர்கள்  சுடப்பட்டிருக்கலாம்!  காரணம்  இவர்கள்  காவல் காக்கும்  பணியில்  உள்ளவர்கள்.  அவர்களுக்கு யார் அத்து மீறினாலும் அவர்கள்  சுடப்பட  வேண்டும்  என்பது  அவர்களுக்குக்  கொடுக்கப்பட்ட  கட்டளை. இந்த  மீனவர்கள்  இந்திய கடலோரப் பகுதிகளில்  அத்து  மீறி  இருக்கலாம்! அந்தப்பக்கம்  போனால்  சிங்களம் இராணுவம் அத்து  மீறல் என்கிறது!  இந்தப்பக்கம் வந்தால்  இந்திய  இராணுவம்  அத்து மீறல்  என்கிறது! இது  தான்  தமிழக  மீனவனின்  நிலை.  அப்படியென்றால்  அவன்  எங்கு தான்  மீன்  பிடிப்பது?  அதிலும்  இந்திய  இராணுவம் "உனக்கு ஏன்  ஆங்கிலம்  தெரியவில்லை! உனக்கு  ஏன்  இந்தி  தெரியவில்லை?"  என்பது  போன்ற  கேள்விகள்  வேறு!  அவன்  மேல்  தாக்குதல் நடத்திவிட்டு மேலும் இதுபோன்ற  கேள்விகள்!

தமிழக  மீனவனாக இருந்தாலும்  அவனுக்கு  இந்தி  தெரியவேண்டும்,   என்பது  மத்திய  அரசாங்கத்தின்  கொள்கையாக  இருக்க  வேண்டும்!  அவர்களின்  கொள்கையை  இப்போது  இராணுவத்தின்  மூலம்  நிறைவேற்ற  முயற்சி  செய்கிறார்கள்  என்றே  தோன்றுகிறது!

இப்போது  மத்திய  அரசாங்கம்  தெளிவாக  இருக்கிறது. கடலில்  மீன்  பிடிக்கும் மீனவனாக  இருந்தாலும் சரி அவனுக்கு இந்தி  தெரிந்திருக்க  வேண்டும் என்பது  தான்! இந்த  மீனவர்களை இப்படியே  விட்டால் அவன் இந்தக்  கடல் பகுதியையே  தமிழ்  மயமாக்கி விடுவான் என்கிற ஒரு  பயம்! இது  ஒன்றும்  புதிது  இல்லையே. இது தமிழர் சார்ந்த  பகுதி.  அனைத்தும்  தமிழ்  தானே! இங்குள்ள  மீனும் தமிழ்  மீன்கள்  தானே! அவைகளும்  தமிழ் தானே  பேசுகின்றன!

பயம்  வேண்டாம்!  ஆளப்போகிறான்  தமிழன் என்பது விரைவில் தெரியும்!


Thursday, 16 November 2017

கேள்வி - பதில் (65)


கேள்வி

கமல்ஹாசனின் முதலமைச்சர் கனவு நிறைவேறுமா?

பதில்

நிறைவேறுமா, நிறைவேறாதா  என்று இப்போதைய நிலையில் சொல்ல முடியவில்லை. தமிழக மக்களின் மன நிலை எப்படிப் போகும் என்று கணிப்பது மிகவும் கடினம்.

அவர் பேசும்  போது  நல்ல  அறிவுஜீவியாகவே  தோன்றுகிறார்.  நல்ல  வாதங்களை  எடுத்து  வைக்கிறார். நல்ல  திறமைசாலியாகவே நமக்குத்  தோன்றுகிறது.

ஆனாலும்  ஒரு  சினிமா  நடிகர்  என்னும் போது  கொஞ்சம் சந்தேகக் கண் கொண்டு தான் பார்க்க வேண்டியிருக்கிறது.  ஏற்கனவே  ஒரு சினிமா வசனகர்த்தாவான  கருணாநிதியை அவ்வளவு  சீக்கிரத்தில  நாம்  மறந்துவிட  முடியாது.  "பராசக்தி" படம்  வெளிவந்த  காலத்தை நினைத்துப் பார்க்கிறேன்.  அடாடா!  தமிழகத்துக்கு விடிவு  காலம்  பிறந்து விட்டது. தமிழன்  தலை  நிமிர்ந்து  விடுவான்  என்னும்  எதிர்பார்ப்பு எத்திசையையும்  ஒங்கி  ஒலித்துக் கொண்டிருந்த காலக்கட்டம் அது. தமிழர் நடுவே இப்படி ஒரு தமிழனா  என்று வியந்து  அவரை அண்ணாந்து பார்த்துக்கொண்டிருந்த நேரம் அது.  இப்போது  பார்க்கும்  போது  நம்  அனைவரையுமே  ஒரு  தெலுங்கர்   முட்டாளாக்கி  விட்டரே  என்று நொந்து  கொள்ள  வேண்டியிருக்கிறது!  கருணாநிதி  ஒரு  தெலுங்கர்  என்பதே ஓரிரு  ஆண்டுகளுக்கு  முன்பு  தான்  எனக்கே  தெரிய வந்தது! அந்த  அளவுக்கு  அவர்  தமிழர்  வேஷம் போட்டுக் கொண்டிருந்தார். அவர் தெலுங்கர்  என்பதற்காக  அவரை  நான்  வெறுக்கவில்லை. ஆனால் தமிழனைக்  குடிகார  இனமாக  மாற்றியமைத்தாரே  அதுவே  போதும்  அவர்  ஒரு  தமிழர்  துரோகி என்று!

கமல்ஹாசன்  தமிழன்  தான்.  வரவேற்கலாம்  தான். அவர்  என்ன தான் தன்னைப்  பிராமண  எதிர்ப்பாளன் என்று  சொல்லிக்  கொண்டாலும்  இன்றைய  நிலையில்  அப்படியெல்லாம்  ஏமாந்து விடக்கூடாது என்பதும் கவனத்தில்  கொள்ள  வேண்டியுள்ளது.  பிராமணன்,   பிராமணனாகத்தான் இருப்பான். மத்தியில் பிராமணர்கள் ஆட்சி. தமிழகத்திலும்  அவர்களின்  ஆட்சி  தான்!  கமல்ஹாசன் எப்படி  ஒரு  தமிழனாக  இயங்க  முடியும்?  அவர்  சுதந்திரமாக இயங்க  விடுவார்களா பிராமணர்கள்?  எதிர்க்க முடியாத நிலையில்  அவரும்  அவர்களோடு  இணைந்து  கொண்டால்...?

எதனையும் உறுதிப்படுத்த முடியவில்லை.  அவரின் அறிவுக்கும்  ஆற்றலுக்கும் அவர்  முதலமைச்சராக வரலாம்!

நல்லது நடக்கும்  என  எதிர்பார்ப்போம்!


Tuesday, 14 November 2017

எந்த வயதிலும் அம்மா, அம்மா தான்!




அம்மா அடா கீட்டிங்,  வயது 98; மகன் டாம் கீட்டிங்,  வயது 80. மகன் தள்ளாத வயதில் 'கூட மாட உதவ ஆள் இல்லாததால்,     ஹூட்டன், லிவர்பூலில்    உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் 2016 -ம் ஆண்டு முதல் வசித்து வருகிறார். மகனுக்கு தீர்க்க முடியாத ஒரு பிரச்சனை. காலை நேரத்தில் அவருக்கு "காலை வணக்கம்" சொல்ல ஒருவருமில்லை; படுக்கப் போகும் போது 'இரவு வணக்கம்' சொல்ல ஒருவருமில்லை. சாப்பாட்டு நேரத்தில் மணி அடித்தால் அவரைக் கூப்பிட ஆளில்லை.

மகனின் கஷ்டத்தை  உணர்ந்த தாய் அவரும் மகனுக்கு உதவியாக அந்த முதியோர் இல்லத்தில் வந்து சேர்ந்து கொண்டார். தாயார் ஒரு முன்னாள் நர்ஸாக இருந்தவர். அதனால் மகனுக்கு உதவியாகவும்,  இல்லத்தில் உள்ள வயதானவர்களையும் 'பேசியே'  கவனித்துக் கொள்ளுகிறார்! 

அந்த அம்மாவுக்கு டாம் மூத்த மகன். மகன் திருமணம் செய்து கொள்ளவில்லை. எல்லாக் காலங்களிலும் அம்மாவோடேயே கூட இருந்து பழகிவிட்டவர். அம்மாவுடைய உதவி இல்லாமல் அவர் தனித்து இருந்ததில்லை. அதனால் மகன் சிரமப்படக் கூடாது என்பதால் முதியோர் இல்லத்திலும் வந்து தங்கிக் கொண்டு மகனுக்கு உதவியாக இருக்கிறார்.

அம்மா என்ன சொல்லுகிறார்? "அம்மா என்றால் எப்போதும் அம்மா தான்! அந்தக் கடமை எப்போதும் இருக்கிறது!"  என்கிறார்.

எப்படிப் பொழுது போகிறது?  இருவரும்  தொலைக்காட்சி பார்க்கின்றனர்.  காற்பந்து பார்ப்பதில் ஆர்வம் அதிகம். 

அடாவுக்கு டாமை தவிர்த்து இன்னும் மூன்று பிள்ளைகள். அவர்களின் வழி பேரப்பிள்ளைகள் இருக்கின்றனர். பேரப்பிள்ளைகள் அடிக்கடி வந்து பார்த்துவிட்டுப் போகின்றனர். பேரப்பிள்ளைகளுக்கும் ஏகப்பட்ட மகிழ்ச்சி.  அம்மாவும் மகனும் எல்லாக்காலங்களிலும் ஒன்றாகவே இருந்திருக்கின்றனர். கடைசிக்காலத்திலும் அவர்கள் ஒன்றாகவே இருப்பது மனதுக்கு மகிழ்ச்சியளிப்பதாகக் கூறுகின்றனர்.

முதியோர் இல்லத்தின் நிர்வாகி என்ன சொல்லுகிறார்? "இப்படித் தாயும் மகனும் இங்கு தங்கியிருப்பது ஓர் அரிதான நிகழ்ச்சி. பெரும்பாலும் இப்படி இருப்பதில்லை. இவர்கள் இருவரும் மகிழ்ச்சியாக இருப்பதற்கு அனைத்தும் நாங்கள் செய்கிறோம்" என்கிறார்.

டாமுக்கும் இல்லத்தில் இருப்பது பிடித்திருக்கிறது. "எல்லாரும் நல்லபடியாகக் கவனித்துக் கொள்ளுகிறார்கள். அம்மாவும் என் கூட இருப்பது இன்னும் மகிழ்ச்சி.  ஆனால் அம்மா இடையிடையே "டேய் ஒழுங்காயிரு!" என்று கண்டிப்பாக இருப்பார்.

இன்னும் நீண்ட நாள் வாழ இறைவனைப் பிரார்த்திப்போம்!






Sunday, 12 November 2017

ஏன் தமிழன் ஆள வேண்டும்..?


தமிழன் தான் தமிழ் நாட்டை ஆள வேண்டுமா என்று கேட்டால் "ஆமாம்! தமிழ் நாட்டை தமிழன் தான் ஆள் வேண்டும்!" என்று சத்தம் போட்டுச் சொல்ல வேண்டிய காலம் வந்துவிட்டது. அது தமிழர்களின் உரிமை. எல்லா மாநிலங்களிலும் அந்தந்த மாநிலத்தைச் சார்ந்தவர்களே தான் முதலமைச்சராக இருக்கிறார்கள். அதனால் தமிழன் தான் தமிழ் நாட்டை  ஆள வேண்டும் என்று நாம் சொல்லுவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. தமிழர் அல்லாதார் கேள்வி எழுப்புவதும் சரியில்லை.

இத்தனை ஆண்டுகள் எழாத கேள்வி இப்போது ஏன் எழுகிறது? கடந்த ஐம்பது ஆண்டுகளாக தமிழ் நாட்டை ஆளும் வாய்ப்பு யாருக்குக் கிடைத்தது? கருணாநிதி, எம்.ஜி. ராமச்சந்திரன், ஜெயலலிதா - இவர்கள் அனைவருமே தமிழர் அல்லாதார். இடையிடையே அவர்கள் தங்களைத் தமிழர்கள் என்று சொல்லிக் கொண்டாலும் உண்மையில் அவர்கள் தமிழர்கள் அல்ல.  அதுவல்ல நாம் எழுப்பும் கேள்வி.  இந்தத் தமிழர் அல்லாதார் மூலம் தமிழ் மக்கள் அடைந்த பயன் என்ன?  அவர்கள் செய்த துரோகங்கள் தான் அதிகம். நல்லவைகளை விட கொடுமைகளே அதிகம்.

குடி குடியைக் கெடுக்கும் என்பார்கள். சாராயக்கடைகளை அரசாங்கமே ஏற்று நடத்துகிறது! யாருடைய நிறுவனங்கள் அவை? கருணாநிதி, ஜெயலலிதா குடும்ப நிறுவனங்கள்!  எம்.  .ஜி.ஆர். சினிமாப் படங்களில் குடிப்பதில்லை. ஆனால் அவர் ஆண்ட காலத்திலும் சாராயக்கடைகளை அதிகரித்தாரே தவிர குறைப்பதற்கான  எந்த  முயற்சிகளும் எடுக்கவில்லை! அவர் நல்லவராக இருந்து என்ன பயன்? தமிழக மக்களைக் குடிகாரர்களாக ஆக்கிய அவரை  எப்படித்  தமிழர்கள் நல்லவர்  என்று சொல்ல முடியும்? 

தமிழ் நாட்டில் தமிழ் மொழியின் நிலை என்ன?  கருணாநிதியைத் தமிழறிஞர் என்கிறோம். அவர் காலத்தில் தானே ஆங்கிலத் தனியார்  பள்ளிகள் அதிகமாகின  உருவாகின? அரசுப்  பள்ளிகளை "கார்ப்பரேஷன்"  பள்ளிகள்  என்று கேவலாமாகப் பேசப்பட்டன.  அவர் அதனை ரசித்தாரே தவிர அரசுப் பள்ளிகளை மேம்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையே!  ஓரு தமிழறிஞர் தமிழின் வளர்ச்சிக்கு எந்த விதத்திலும் கைகொடுக்கவில்லையே! அவர் குழி தோண்டி அல்லவா புதைத்தார்!

தமிழர் வரலாறு மாணவர்களுக்குத் தெரியவில்லையே! யார் குற்றம்? மீனவர்கள் பிரச்சனை ஓயவில்லையே, யார் குற்றம்? ஈழத் தமிழர்களை  கொத்து கொத்தாகக் கொன்று குவித்தனரே அதனைக் கண்டும் காணதவாறு இருந்தது யார் குற்றம்? அப்போது ஆட்சியில் இருந்தவர்கள் யார்? தமிழர் அல்லாதவர்கள் தானே?இந்த அளவு தமிழர்களைக் கேவலமாக ஆட்சி செய்த இந்த தமிழர் அல்லாதார் ஆட்சியைத் தொடர வேண்டுமா, என்ன?

இவர்களின் ஆட்சியில் தமிழர்களுக்கு நல்லது நடந்திருந்தால் நாங்கள் ஏன் "தமிழ் நாட்டை தமிழன் ஆள வேண்டும்" என்னும் கோஷத்தை எழுப்புகிறோம்? அதற்குத் தேவையே இருந்திருக்காதே! நடந்தது காட்டுமிராண்டி ஆட்சி! அது ஏன் தோடர வேண்டும்?

ஆக, இனி தமிழ் நாட்டை தமிழன் தான் ஆள வேண்டும் என்னும் குரல் ஒலித்துக் கொண்டு தான் இருக்கும்! வாழ்க தமிழினம்!


தொடர்ந்து குரல் கொடுப்போம்! இழந்தவைகளை மீட்போம்!