Wednesday 30 June 2021

இந்த பாகுபாடுகள் இன்னும் தேவையா?

 இன்னும் எத்தனை ஆண்டுகள் தான் பூமிபுத்ராக்களுக்கு அந்த சலுகை வேண்டும்,  இந்த சலுகை வேண்டும் என்று அரசியல்பவாதிகள் சொல்லிக் கொண்டிருக்கப் போகிறார்கள்?

அப்படியெல்லாம் சொல்லிச் சொல்லித்  தான் இன்று நாடு இன்றைய சீர்கேடான  நிலைமைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.

நல்லது நடந்தது என்றால் பாராட்டலாம். இன்று நாம் எதிர்நோக்குகின்ற நிலையை வைத்துப் பார்க்கும் போது நல்லது நடக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டியிருக்கிறது.

நம்மால் ஏளனமாக பார்க்கப்பட்ட நாடுகள் எல்லாம் இப்போது நம்மை முந்தி தள்ளிவிட்டுப் போய்க் கொண்டிருக்கின்றன.

ஏன், கொவிட்-19 தொற்றை எடுத்துக் கொள்ளுங்களேன். நமது நிலை என்ன? இறப்பு விகிதத்தைப் பார்க்கும் போது நமது நாடு தாய்லாந்து. வியட்னாம், சிங்கப்பூர் போன்ற நாடுகளை விட அதிகமான அளவில் பதிவு செய்திருக்கிறது.

இதற்குக் காரணம் என்ன, எங்கே நாம் தவறுகள் செய்திருக்கிறோம்  என்பன போன்ற காரணங்களை நாம் ஆராயவில்லை. ஆராய வேண்டும் என்கிற எண்ணமே நமக்கு எழவில்லை! "ஏன் ஆராய வேண்டும்? வந்தால் வரட்டுமே! செத்தால் என்ன கெட்டுப் போய்விட்டது? தொற்று ஏன் கூடிக் கொண்டே போகிறது?" போன்ற பொது மக்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்ல ஆட்சியில் உள்ளோர் தயாராக இல்லை! ஏதோ ஒரு சில தகவல்களை நகல் எடுத்து வைத்துக் கொண்டு பேசுவதையே  கடமையாகக் கொண்டிருக்கிறார்கள் நமது அமைச்சர்கள்!

பேரரசர் நாடாளுமன்றத்தை விரைவில் கூட்டங்கள் என்று சொன்னால் அதற்குப் பலவாறான வியாக்கியானங்கள்! இப்போது இல்லை! அது அப்புறம் என்று ஒரு பக்கம் விளக்கம்! ஓ! இல்லை! பேரரசருக்கு எந்த அதிகாரமும் இல்லை! பிரதமருக்குத் தான் சகல அதிகாரமும் என்கிற இன்னொரு விளக்கம்!  அதற்கு ஏற்றாற் போல ஒரு சட்டத்துறைத் தலைவர்! ஒரு சபாநாயகர்!  நாமும் "என்னடா! நடக்கிறது இங்கே!" என்கிற ஒரு கேள்வி!

படித்தவர் சொல் சபையேற வேண்டும். ஆனால் இங்கு ஏறவில்லை! அதற்குத்தான் படித்தவர் தேவை என்பதாகக் காலங்காலமாக சொல்லி வருகிறோம்.

இனப் பாகுபாடு தொடர்ந்தால் படித்த ஒரு சமுதாயத்தை நம்மால்  உருவாக்க முடியாது!

No comments:

Post a Comment