Thursday 19 October 2017

இது வாழ்த்துச் செய்தி அல்ல....!


பத்திரிக்கைகளில் வரும் தலைவர்களின் தீபாவளி வாழ்த்துச் செய்திகளைப் படிக்கும் பழக்கமில்லை. சும்மா அப்படியே 'மேய்ந்து' விட்டுப் போகும் பழக்கம் உண்டு! காரணம் அவர்கள் சொல்லும் எதுவும் புதிதல்ல. அவர்கள் சொல்லுவதை அவர்களே கேட்கப்போவதில்லை! நாமும் கேட்கும் நிலையிலில்லை! சொல்லுவதற்கும் ஒரு தகுதி வேண்டும். அரசியல்வாதிகளுக்கு அந்தத் தகுதி இல்லை என்பதால் நாமும் தகுதியற்றவர்களின் செய்திகளைப் படிக்க தயாராக இல்லை!

இப்படி 'மேய்ந்து' கொண்டு வரும் போது மைபிபிபி கட்சியின்,தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எம்.கேவியஸ் கொடுத்த தீபாவளி செய்தியில் ஏதோ ஒரு செய்தி இருப்பதாகத் தோன்றியது.

"அந்த வாழ்க்கையை எவ்வாறு அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதை இலக்கை வைத்து பயணிக்க நாம் தயார் நிலையில் இருப்பதே சிறப்பு....

வாழ்க்கை என்பது அனைத்தையும் கடந்து செல்வது என்று  எண்ணி சந்திக்கும் சவால்களைத் தவிடு பொடியாக்கிப் பயணிப்பவர்களுக்கும்.....

வளரும் நம்மை இழுத்துப் பிடித்து கீழே தள்ளும் கூட்டத்தை இனியும் நம்பாலும் வெற்றிச் சிகரத்தை நோக்கி பயணிக்கத் தொடங்குங்கள்."

இது போன்ற வாசகங்கள் தனி மனித முன்னேற்றத்தைப் பற்றி பேசுகின்றன. நான் வழக்கமாக வாங்கும் பத்திரிக்கையில் கேவியசின் செய்தி வரவில்லை ஒரு வேளை அது அரசியலாக இருக்கலாம்.   இது "வணக்கம் மலேசியா" இணையத் தளத்தில் வந்த செய்தி.

நான் அவரின் அரசியலை ஆதரிப்பவன் அல்ல. ஆனாலும் நல்லதொரு செய்தியைக் கொடுத்திருக்கிறார் கேவியஸ். நமது தனி மனித முன்னேற்றமே நமது சமுதாயத்தின் முன்னேற்றம். நாம் ஒவ்வொருவரும் வாழ்க்கையில் முன்னேற அவர் சொல்லுவது போல ஓர் இலக்கை வைத்து பயணிக்க வேண்டும். நமக்கும் சவால்களுக்கும் ஒரு பஞ்சமும் இல்லை. அனைத்துச் சவால்களையும் தவிடு பொடியாக்கி பயணம் செய்பவர்களைத் தான் இந்த உலகம் கை தட்டி வரவேற்கிறது. வளரும் நம்மை வளர விடாமல் தடுக்க நமக்கு ஆயிரம் சோதனைகள். சோதனைகள், வேதனைகள் வரத்தான் செய்யும். அவைகள் தான் நம்மை சரியான பாதையில் கொண்டு செல்லும். யாரையும் அவ்வளவு எளிதில் நம்பி விடாதீர்கள்.  அதுவும் அரசியல்வாதிகளை அரைக்காசுக்குக் கூட நம்பாதீர்கள். கடவுளை நம்புங்கள்; உங்களை நம்புங்கள். வெற்றிச் சிகரமே நமது நோக்கம்; நமது பயணம். 

நமக்கு வேண்டியது ஒரே ஒரு இலக்கு. அது தான் வெற்றி! வெற்றி! வெற்றி!




No comments:

Post a Comment