Tuesday 10 October 2017

பஞ்சாபி மொழி பேசும் சீனப்பெண்...!


நமது மலேசிய நாட்டில் பல மொழிகள் பேசுபவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அக்கம் பக்கம் உள்ளவர்கள், பள்ளிகள், வேலை இடம் - இப்படி எந்த இடமாக இருந்தாலும் மற்றவர்கள் மொழி பேச வேண்டும், கற்றுக்கொள்ள வேண்டும்      என்னும் ஆர்வம் உள்ளவர்கள் ஒரு சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.

                     
அந்த வரிசையில் ஒரு சில தினங்களாக வலைத்தளங்களில்
வலம் வரும் ஒரு சீனப் பெண்மணி,  கிறிஸ்தல் லிம்.  அவர் பேசும் மொழி பஞ்சாபி. அது தான் இங்கு நம்மை ஆச்சிரியப்பட வைக்கும் ஒரு செய்தி. சீனர்கள் தமிழ் பேசினால் அது ஆச்சரியம் இல்லை. அதனை நாம் சாதரணமாக எடுத்துக் கொள்ளுகிறோம்.  பஞ்சாபியர்கள் தமிழ் பேசுவது ஆச்சரியமான விஷயம் அல்ல. அவர்கள் எல்லாக் காலங்களிலும் நம்மிடம் தமிழில் பேசுவதை நாம் பார்க்கிறோம். ஆனால் பஞ்சாபி  மொழி பேசுவது என்பது அது அவ்வளவு எளிதல்ல.  காரணம் பஞ்சாபியர்கள், நமது நாட்டைப் பொறுத்தவரை, மிகக் குறைவான மக்களே உள்ளனர். அவர்களுடனான நமது தொடர்பே மிகக் குறைவு. கொஞ்சம் உயர்தர வர்க்கமாகவே அவர்கள் உள்ளனர். இந்த நிலையில், அதுவும் ஒரு சீனப் பெண்மணி பஞ்சாபி மொழி பேசுவது என்பது உண்மையில் ஆச்சரியம் தான்! மொழிகளைக் கற்றுக் கொள்ள வேண்டும், பேச வேண்டும் என்று எண்ணம் உள்ளவர்களுக்கு எந்தச் சூழலிலும் கற்றுக் கொள்வார்கள்  என்பதற்கு கிறிஸ்தல் லிம் நல்லதொரு உதாரணம்.

அவர் பஞ்சாபி  மொழி மட்டும் அல்ல, இந்தியும் பேசும் திறமை உள்ளவராம். இந்தி மொழி பேசுபவர் யார் என்று கூட நமக்குத் தெரியாத நிலையில் நாம் இருக்கிறோம்! அவர் இந்தியையும் விட்டு வைக்கவில்லை!

வர்த்தகத் துறையில் உள்ளவர்களுக்கு பல மொழிகளைப் பேசுவதன் மூலம் நமது தொடர்புகளை அதிகரித்துக் கொள்ள முடியும்.  இந்தப் பெண் இதனை நன்கு உணர்ந்திருக்கிறார். நாம் கூட ஒரு சீனர் தமிழ் பேசினால் அவருடன் வியாபாரம் செய்ய விரும்புகிறோம். நம் நாட்டில் வியாபாரம் செய்யும் குஜாராத்தியர்கள் பெரும்பாலும் தமிழ் பேசுபவர்களாக இருக்கிறார்கள். அவர்களுடைய வியாபாரம் பெரும்பாலும் நம் இனத்தவர்களுடன் தான். 

மற்றவர்களின் மொழிகளைப் பேசுவதன் மூலம் நமது தொடர்புகள் அதிகமாகும்.  பஞ்சாபி மொழி மட்டும் அல்ல இன்னும் பல மொழிகளைத் தெரிந்து வைத்திருக்கும் இந்தப் பெண்ணை வாழ்த்துவோம். வர்த்தக உலகத்தில் வேற்றிகரமாக உலா வருவார் என்பதில் ஐயமில்லை!

No comments:

Post a Comment