Monday 2 October 2017

அரசியல் குண்டர்கள்....!


குண்டர்கள் இல்லாமல் அரசியலில் பேர் போட முடியுமா? முடியாது என்பது தான் நிகழ்கால அரசியல். ஆனால் இதற்கு விதை போட்டு நீண்ட நாட்கள் ஆகிவிட்டன. அதனால் அது வேர்விட்டு, மரமாகி  இப்போது குண்டர்களே அரசியலைக் கையில் எடுத்துக் கொண்டனர்! ஆனாலும் அவ்வப்போது சில நியாயங்களை  நீதிமன்றங்களில் பார்க்கவும் முடிகிறது.

தீபாவளி காலங்களில் குண்டர்களின் அடாவடித்தனத்தை நாம் எப்போதும் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம். கத்திக்குத்து, கொலை போன்ற செய்திகளைப் பார்க்கவும் முடிகிறது.

இப்போது ஒரு வித்தியாசமான செய்தியைப் படிக்க முடிந்தது. சிரம்பான் தீபாவளிச் சந்தையைப் பற்றிய செய்தி. கடந்த ஏழு ஆண்டுகளாக நெகிரி மாநில தமிழ் இளைஞர் மணிமன்றம் வெற்றிகரமாக இச்சந்தையை நடத்திக் கொண்டு வருவதாக சொல்லப்படுகிறது. இந்த ஆண்டு தனது தொடர் வெற்றியை மணிமன்றத்தால் தக்க வைத்துக் கொள்ள முடியவில்லையாம். காரணம் மாநில ம.இ.கா. தனது, சதி, சூழ்ச்சியின் மூலம் அந்தச் சந்தையை அபகரித்துக் கொண்டதாம்.

இதில் நாம் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது: ம.இ.கா. சீனர்களிடமிருந்தோ, மலாய்க்காரர்களிடமிருந்தோ, வங்காளதேசிகளிடமிருந்தோ அபகரித்துக் கொள்ளவில்லை! அதெல்லாம் முடியாது என்பது நமக்கும் தெரியும். ஆனால் தமிழர்களிடமிருந்து அபகரிக்க எத்தனை சூழ்ச்சி, எத்தனை சதி வேண்டுமானாலும் அவைகளைச் செய்ய ம.இ.கா. என்றென்றும் தயார் நிலையில்! 

இந்தச் சந்தை ஆரம்பித்த போது வெறும் 17 கடைகள் தான் இருந்தனவாம். அதனை 100 கடைகளாக அதிகரிக்கச் செய்ய வைத்தது எங்கள் சாதனை என்கிறார் மன்றத் தலைவர். ஆனாலும் ஏன் அவர்களுக்கு இப்படி ஒரு சோதனை? "நீங்கள் மட்டும் தான் பணம் சம்பாதிக்க வேண்டுமா? ம.இ.கா. காரன் சம்பாதிக்கக் கூடாதா?" என்னும் கேள்வி எழுப்புகிறதாம் ம.இ.கா. தரப்பு! ஆக, பணம் தான் இந்தச் சோதனைகளுக்கெல்லாம் காரணம் என்று புரிகிறது!  ஆனாலும் மன்றத் தரப்பு இதனை மறுக்கிறது! நாம் சொல்ல வேண்டியதெல்லாம் ஒன்று தான்: திருடனாய் பார்த்துத் திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது!  பட்டுக்கோட்டையார் பாடியது.

கடந்த மன்றத்துக் காலங்களில் சந்தை ஆரம்பிக்கும் முதல் ஓரிரு நாள்களுக்கு வியாபாரம் செய்ய முடியாத அளவுக்கு இவர்களின் தலையீடு இருக்குமாம்! வயதானவர்களுக்கு மூட்டை முடிச்சுகள் கொடுக்கிறோம் என்னும் பெயரில் சந்தையில் வியாபாரம் செய்ய முடியாதபடி முழு போக்குவரத்தையும் அடைத்துக் கொள்ளுவார்களாம்! ம.இ.கா. வும் தனது பங்குக்கு தங்களது மாபெரும் தலைவர்களை வரவழைத்து தங்களது சாதனைகளை விளக்கி வியாபாரத்தைக் கெடுப்பார்கள் என நம்பலாம்! வியாபாரம் செய்ய பணத்தையும் கொடுத்து, இது போன்ற தடங்கள்களையும் முறியடித்து, கடைசியில் பார்த்தால் ...வியபாரிக்குக் கிடைப்பது....என்ன?

ஆமாம்! இங்கு எங்கே குண்டர்கள்? கொஞ்சம் ஆழமாகப் போய் நீங்களே தெரிந்து கொள்ளுங்கள்!


No comments:

Post a Comment