Saturday 7 October 2017

தலித் அர்ச்சகர்கள்...!


தமிழக அரசியல்வாதிகள் சட்டம் இயற்றுவார்கள், பயிற்சிகள் கொடுப்பார்கள் ஆனால் கோவில்களில் வேலை கொடுப்பதில் சாதி பார்ப்பார்கள்!  இது தான் தமிழக அரசியல்!  அர்ச்சகப் பயிற்சி பெற்ற 206 பிராமணர் அல்லாதாரில் ஒருவர் கூட  இது வரை தமிழக அரசு எந்த ஒரு கோவிலிலும் பணி நியமன ஆணை பிறப்பிக்கவில்லை. இது ஒன்றே போதும், சாதி பார்ப்பதில் திராவிடக் கட்சிகள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்பது!  இந்தியாவுக்கே வழிகாட்டி என்கிற பெயரே போதும் என்று சட்டத்தை இயற்றியதோடு நிறுத்திக் கொண்டார்கள்!

ஆனால் தமிழகத்து பக்கத்து மாநிலமான கேரள அரசு ஒரு முன்மாதிரி  மாநிலமாக இந்த அர்ச்சர்கள் விஷயத்தில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியிருக்கிறது எனச் சொல்லலாம். கோயில் அர்ச்சகர்கள் பணியில் பிற்படுத்தப்பட்ட - தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்காக 32 விழுக்காடு இட ஒதுக்கீடு செய்துள்ளது. அதில் குறிப்பாக 30 பேர் பிற்படுத்தப்பட்ட சுமூகத்தைச் சேர்ந்தவர்கள்; 6 பேர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் அனைவருக்கும் பணி நியமன ஆணையும் வழங்கப்பட்டுள்ளது.

பொதுவாக சாதி ஒழிப்பு என்று வரும் போது தமிழகமே முன்னணி மாநிலம் என்று பெயர் எடுத்த மாநிலம். இப்போது நம்மிடையே நமது பெயருக்குப் பின்னால் எந்தச் சாதியும் வருவதில்லை! அதை நாம் விரும்புவதும் இல்லை! ஏதோ ஒரு சிலர்,  சாதியினை விடாப்பிடியாக உடும்புப்பிடியாக பிடித்துக் கொண்டு இருப்பதை பார்க்கிறோம். அவர்கள் வெகு சிலரே!  ஆனால் கேரளத்தில் சாதி ஒழிந்ததாகத் தெரியவில்லை. அங்கு நாயர், பிள்ளை, மேனன், நம்பூதிரி  என்பதெல்லாம் பெருமைக்குரிய சாதிப் பெயர்களாக இருக்கின்றன! நாம் எதற்காக வெட்கப்படுகிறோமோ அதற்காக அவர்கள் பெருமைப்படுகிறார்கள்! நமது தமிழ் சினிமாவையே எடுத்துக் கொள்ளுங்கள். கேரள நடிகைகளைப் பார்க்கிறோம். நாயர், மேனன், பிள்ளை என்பவை பெருமைக்குரிய அடையாளமாகக் கருதப்படுகிறது!

இப்படி சாதியை உயர்த்திப் பிடிப்பவர்கள் மாநிலம் தான் கேரள மாநிலம். ஆனால் அந்த மாநிலம் தான் தலித்துகளும் அர்ச்சகர்கள் ஆகலாம் என்று சட்டம் போடுகிறது.  சாதியை ஒழிப்போம் என்று சொல்லும் தமிழ் நாடு சாதியை வளர்க்கிறது! தமிழன் சாதியை வேண்டாமென்றாலும் திராவிடக் கட்சிகள் சாதியை ஒழிக்காமல், சாதியை வளர்க்கவே விரும்புகின்றன. சாதியை வைத்தே தமிழர்களைப் பிரிக்கும் வேலையில் திராவிடக் கட்சிகள் இறங்கியிருக்கின்றன என்பதே உண்மை!

தலித்துகளோ, பிற்பட்டவர்களோ - அவர்களும் அர்ச்சர்கள் ஆகலாம் என்பது மிக உயரிய அங்கீகாரம். எல்லாக் காலங்களிலும் ஏதோ ஓரிருவர் மட்டும் தான் இறைவனுக்கு உகந்தவர்கள் என்கிற மாயை உடைக்கப்பட்டிருக்கிறது. வரவேற்கிறோம்!

கேரளத்தை வழி நடத்தும் முதல்வர் பினராயி விஜயனுக்கு நமது வாழ்த்துகள்!

No comments:

Post a Comment