Monday 16 October 2017

சோதனை மேல் சோதனை......!


அவரவர் வேலையை அவரவர் பொறுப்புணர்வோடு செய்வது எத்துணை முக்கியம் என்பதை சமீபத்திய நிகழ்வு ஒன்றைச் சுட்டிக்காட்டுவது நமது கடமை. அதுவும் பல இன, சமயத்தினர் வாழ்கின்ற நாட்டில் பொறுப்புணர்ச்சி என்பது மிக, மிக அவசியம்.   "நாங்கள் எதை வேண்டுமானாலும் பேசுவோம் காரணம் எங்களுக்குக் கீழ் தான் நீங்கள், நாங்கள் அல்ல!" என்னும் பொறுப்பற்ற, திமிர் பேச்சுக்கள்  இப்போது அதிகமாகக் காதில் விழ ஆரம்பித்து விட்டன! 

பேசுபவர்கள் யார்? படிக்காத பாமரனா? இல்லை!  அவன் அப்படிப் பேசமாட்டான். அவன் அறிவுள்ளவன். அவன் சக நண்பர்களுடன் வாழ்பவன்; வாழ வேண்டும். ஆனால் மிக அறிவுள்ளவர்கள் என தங்களுக்குத் தாங்களே நற்சான்றிதழ் கொடுத்துக்  கொண்டு. கண்ணாடி மாளிகையில் இருந்து கொண்டு மற்ற சமயத்தினர் மீது கல் வீசுகிறார்களே, ஜாகிர் நாயக் போன்றவர்கள், இவர்கள் போன்றவர்களால் தான் நாட்டில் அமைதி  குலைகிறது என்பது உண்மை.

சமீபத்திய நிகழ்வினை அறிவீர்கள். சமயச் சொற்பொழிவாளரும், முன்னாள் ஜாக்கிம் அமைப்பின் அதிகாரியுமான ஷாமிஹான் மாட் ஜின் மற்ற இனத்தவரின் மீதான தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தியதின் மூலம் ஜொகூர் சுல்தானின் கோபத்திற்கு ஆளாகி இருக்கிறார். ஜொகூர் சுல்தான் ஷாமிஹானைப் பற்றி சொன்னவை:  இவர் திமிர்ப்பிடித்தவர்; மற்ற இனத்தவரை அவமதிப்பவர்; பொய் சொல்லுவதில் கெட்டிக்காரர்; நல்லதைக் கற்றுக் கொடுக்காதவர்

கடைசியாக, ஜொகூர் சுல்தான் என்ன சொல்லு வருகிறார்? மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டு இலாகாவான (ஜாக்கிம்) இனி  ஜொகூருக்குத் தேவை இல்லை; தடை விதித்திருக்கிறார். சமயப்பிரச்சாரர்களின் பின்னணியை ஆராயும்படி பணித்திருக்கிறார். மாநிலத்திற்குத் தேவையற்றவர்களைக் களை எடுத்து,  அவர்களது அங்கீகாரங்களை மீட்டுக் கொள்ளும்படி கூறியிருக்கிறார்.

சமீபத்தில் சமயப்பள்ளி ஒன்று தீப்பிடித்து எரிந்தது. மாணவர்கள் பலர் சாம்பலாயினர். இத்தீச் சம்பவத்திற்குக் காரணமான மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். ஆனால் உரிமம் இல்லாது பள்ளியை நடத்திய உஸ்தாஸ்கள் கண்டு கொள்ளப்படவில்லை!  இங்கும் சமயம் பொய் சொல்ல வைத்திருக்கிறது. பொய் சொல்லுபவர்களால் எப்படி மாணவர்களுக்கு  நல்லொழுக்கத்தைக் கற்றுக் கொடுக்க முடியும்?

நாம் மீண்டும் சொல்லுகிறோம். சமயத் தலைவர்கள் என்று சொல்லிக் கொள்ளுபவர்கள் நாட்டிற்கு நல்லதைச் செய்ய வேண்டும்; நல்லதைச் சொல்ல வேண்டும். மக்களுக்கு நம்பிக்கையை ஊட்ட வேண்டும். மக்களை மிரட்டும் தொனியிலேயே  பேசிக் கொண்டிருப்போர்,  களை எடுக்கப்பட வேண்டும். 

இதுவே நமது வேண்டுகோள். சோதனைகள் வரும் போவும். ஆனால் சோதனை மேல் சோதனை வேண்டாம்!

No comments:

Post a Comment