Sunday 29 October 2017

கேள்வி - பதில் (63)


கேள்வி

நடிகர் கமல்ஹாசன் களத்தில் இறங்கிவிட்டாரே!

பதில்

உண்மை தான்!  எதிர்பார்க்கவில்லை! சமீபத்தில் எண்ணூர்,  கொசஸ்தலை கழிமுகத்தில் கொட்டப்படும் சாம்பல் கழிவுகள், ஆக்கிரமிப்புக்களைப் பார்வையிட்டிருக்கிறார். அத்தோடு அவரைத் தமிழக விவசாய சங்கத்தினரும் தங்களுடன் கலந்துரையாடல் நிகழ்வுக்கு வரும்படியும் அழைப்பு விடுத்திருக்கின்றனர்.

இவைகளெல்லாம் நல்ல செய்திகள் தான். ஓரளவு மக்களோடு மக்களாக ஒட்டி உறவாட களம் இறங்கியிருக்கிறார். தமிழ் நாட்டில் நிறைய குறைகள் இருப்பது அவருக்குத் தெரியும்.    ஆனால் மக்களுடனான தொடர்புகள் அவருக்கு இல்லை. இப்போது தான் வேட்டியைத் தூக்கிக்கொண்டு களத்தில் இறங்கியிருக்கிறார்.

டுவீட் செய்வது வேறு களம் இறங்குவது வேறு என்பது இப்போது அவருக்குப் புரிந்திருக்கும். நேரடியாகப் பார்க்கும் போது கொஞ்சமாவது நெஞ்சிலே ஈரம் கசியும். அரசியல்வாதிகள் செய்ய முடியாததை அவர் செய்திருக்கிறார்.  எப்படிப் பார்த்தாலும் அரசியல்வாதிகள் தங்களது தொகுதி பக்கம் போவதில்லை என்று சபதம் எடுத்திருக்கிறார்கள்! அதனால் யாராவது போய்த்தான் ஆக வேண்டும். அங்குள்ள மக்கள் அனுதினமும் ஏதோ ஒரு வகையில் தங்களது எதிர்ப்புக்களைக் காட்டிக்கொண்டு  தான் இருக்கிறார்கள். ஆட்சியர், தங்கள் தொகுதி சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர்  என்று அவர்களிடம்  தங்களது மனுக்களைச் சமர்ப்பித்துக் கொண்டு தான்  இருக்கிறார்கள். ஆனாலும் எதுவும் எடுபடவில்லை!  ஏழைச் சொல் அமபலம் ஏறாது என்று சும்மவா சொன்னார்கள்! ஆனால் அவர்கள் ஏழைகள் அல்ல. அந்தத் தொகுதியின் எஜமானர்கள். அதனை அவர்களும் உணரவில்லை, இவர்களும் உணரவில்லை! அதனால் வந்த வினை!

சரி! இப்போது கமல் அந்த இடத்திற்கு வருகை தந்ததின் மூலம் ஏதாவது பயன் உண்டா? எத்தனையோ எதிர்கட்சித் தலைவர்கள் அங்கு வந்து கொண்டும் போய்க்கொண்டும் தான் இருக்கிறார்கள். ஆனால் அவர்களையெல்லாம்  ஆளுங்கட்சியினர்  காவல்துறையினரை வைத்து விரட்டிவிடுவார்கள். கமல் விஷயத்தில் அப்படி எல்லாம் செய்து விட முடியாது என்பது ஒரு கூடுதல் பலம்.  அடுத்து, கமல் என்ன செய்வார்? டுவீட் செய்வார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே! அத்தோடு மட்டுமா? ஒரு வேளை சம்பந்தப்பட்ட துறையினருக்கு அவர் புகார் அனுப்பலாம்.  அவர் மட்டும் அல்ல, அந்தத் தொகுதியைச் சேர்ந்த அனைவரையும் புகார் அனுப்பும்படியும் செய்யலாம். தனது நற்பணிமன்றத்தையும் புகார் அனுப்பப் பணிக்கலாம். எது வேண்டுமானாலும் நடக்கும். இதன் மூலம் நல்லது நடந்தால் நமக்கும் மகிழ்ச்சியே!  ஆனால் அரசியல்வாதிகள் லேசுபட்டவர்கள் அல்ல.  இதன் மூலம் கமலுக்கு நல்ல பெயர் கிடைப்பதை விரும்பமாட்டர்கள். அவர்கள் என்ன ஆயுதத்தைப் பயன் படுத்துவார்கள் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

அது சரி! இந்த களப்பணி மூலம் கமல் என்ன சாதிக்கப் போகிறார்? நேரடியாக அரசியலில் இறங்குவார் என்பதற்கான அறிகுறியா? இல்லை! அரசியலில் இறங்குவார் என்பதற்கான எந்தச் சாத்தியமும் இல்லை என்பதாகத்தான் நான் நினைக்கிறேன். ஒரு வேளை வருங்காலங்களில் அப்படி ஒரு நிலைமை வரலாம். அதற்கான வேலைகளை இப்போதே ஆரம்பித்து விட்டார் என்று நினைக்கிறேன்.

யார் வந்தால் என்ன,  தமிழ் நாட்டுக்கு நல்லது நடந்தால் சரி. அவன் தமிழனாக இருக்க வேண்டும். தமிழ் உணர்வு மிக்கவனாக இருக்க வேண்டும். தமிழர் நலனில் அக்கறை உள்ளவனாக இருக்க வேண்டும். அதுவர் நமது எதிர்பார்ப்பு!



                                                                     


No comments:

Post a Comment