Saturday 14 October 2017

2,94,000 பேர் திவால்!


நமது நாட்டில் 2,94,000 பேர் திவால் நிலையில் உள்ளனர் என திவால் துறை அறிவித்திருக்கின்றது. இதில்  35 வயதிலிருந்து 45 வரை  உள்ளவர்களே அதிகம்.  இவர்களே 70% திவலானவர்கள் பட்டியலில் இருக்கின்றனர்.   பெரும்பாலும் வீட்டுக்கடன், கார் கடன்,  கடன் அட்டை,  தனிப்பட்ட கடன் மற்றும்  தவணைமுறை கடன்களை முறையாகக் கட்ட இயலாததினால் ஏற்பட்ட திவால்கள்  இவை.  இவர்களில் 25 வயது கீழ் உள்ளவர்களும் கடன் கொடுக்கப்பட்டு திவால் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர். இவர்கள் 1109 பேர்.  மிகவும் அதிர்ச்சி தரும் தகவலே! குறைவான வயதினருக்குப் கடன் தருவதும் பிறகு அவர்களைத் திவால் நிலைக்குத் தள்ளுவதும் நிறுவனங்கள் செய்யும் பொறுப்பற்ற செயலாகவே நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு ஆண்டும் சுமார் 8,000 பேரிலிருந்து 20,000 பேர் வரை பல காரணங்களுக்காக திவால் ஆகின்றனர்.  இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று களத்தில் இறங்கியிருக்கின்றனர் திவால் துறையினர். "இந்தத் திவால் பிரச்சனையை நீட்டிக் கொண்டு போவது முறையல்ல.  பிரச்சனைக்கு முடிவு கட்ட வேண்டும். சம்பந்தப்பட்டவர்கள் பிரச்சனையத் தீர்க்க முன் வர வேண்டும். வெட்கப்படுவதற்கு ஒன்றுமில்லை! எங்கள் துறையினர் உங்கள் வருகைக்காகக் காத்துக் கிடக்கின்றனர்"  என்று கூறுகிறார் திவால் துறையின் தலைமை இயக்குனர்,  அப்துல் ரகுமான் புத்ரா.  "திவால் ஆனவர்களையும்,  அவர்களை நீதிமன்றத்தின் வழி,  மீண்டும் தங்களது பணிகளைத் தொடர வழி வகைகளைக் காண முடியும்"  என்கிறார் அவர்.

எப்படியிருப்பினும் இனி ஒவ்வொரு ஆண்டும் குறைந்த பட்சம் 10,000 பேர் திவால் நிலையிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்று திவால் துறை திட்டமிட்டிருக்கிறது. அடுத்த ஐந்து ஆண்டுகள் வரை  அவர்களது பணிதொடரும். சம்பந்தப்பட்டவர்கள் திவால் துறையைச் சந்தித்து தங்களது பிரச்சனைகளை முடிவுக்குக் கொண்டு வர வேண்டு மென்பதே நமது அவா.  ஏதோ ஒரு காரணத்தால் நாம் திவாலாகியிருக்கிறோம். அதனாலென்ன?  திவால் துறை நம்மைக் கூப்பிடுகிறார்கள். பிரச்சனைகளை முடிவுக்குக் கொண்டு வாருங்கள் என்கிறார்கள். வாய்ப்புக்கள் கொடுத்தும் "எனக்கென்ன" என்று அலட்சியம் காட்டுவது உங்களது எதிர்காலத்தைப் பாதிக்கும். 

நாட்டில் இந்த அளவுக்குத் திவாலானவர் எண்ணிக்கையை அறிந்து நமது பிரதமர் கூட வருத்தப்பட்டிருக்கிறாராம். வருத்தப்படத்தான் செய்வார். காரணம் 70 விழுக்காடு திவாலானவர்கள் நல்ல திடகாத்திரமான நிலையில் உள்ளவர்கள். உழைக்கும் நிலையில் உள்ளவர்கள். இளையத் தலைமுறை.    அவர்களைத் திவாலானவர்கள் என்று ஒதுக்குவது  நாட்டிற்கு ஏற்புடையதல்ல!

திவாலுக்கு ஒரு சவால்! சமாளி!


No comments:

Post a Comment