Thursday 5 October 2017

இப்படியும் ஒரு பிழைப்பா...?


பொதுவாக மானம், சூடு, சொரணை இல்லாதவர்கள் என்று யாரைச் சொல்லலாம்? எதுவும் உறைப்பதில்லை, எதைச் சொன்னாலும் உறைப்பதில்லை ஆனால் பணத்திற்கு மட்டுமே பல்லைக் காட்டும் அப்படி ஒரு ஜென்மங்களை - நிச்சயமாக இறைவனின் படைப்பாக இருக்க முடியாது. இறைவன் மனிதனுக்கு மன நிறைவாகத்தான் செய்வாரே தவிர குறையாக எதனையும் செய்ய மாட்டார்.

ஆனாலும் இப்படிப் பட்ட படைப்புக்களையும் பார்க்க முடிகிறதே, என்ன செய்ய?

நமது நாட்டின் 14-வது பொதுத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் பெரிய கொடுமை, தேர்தலில் போட்டியிடவிருக்கும் வேட்பாளர்களை நாட்டின் மூன்றாவது பெரிய இனமான இந்தியர்களைப் பிரதிநிதிக்கும் மலேசிய இந்தியர் காங்கிரஸ், தனது வேட்பாளர்களை தானே தேர்ந்த எடுக்க முடியாது என்னும் நிலமையில் தள்ளப்பட்டிருப்பதாகத் தகவல் கசிந்திருக்கிறது! இந்தப் பொறுப்பையும் ஆளுங்கட்சியின் முதுகெலும்பாகத் திகழும் அம்னோவே எடுத்துக் கொண்டதாகச் சொல்லப்படுகின்றது!

அப்படியென்றால் இந்தத் தேர்தலில் ம.இ.கா.வின் மிச்சம் மீதம் உள்ள எலும்புகளும் நொறுக்கப்பட்டு விட்டதாகக் கூறலாம்!

பொதுவாக ம.இ.கா. மேல் நமக்கு ஒன்றும் எந்த ஒரு நல்ல்லெண்ணமும் இல்லை. காரணம் நம்மேல் அவர்களுக்கு எந்த ஒரு கருணையிம் இல்லை. திருடுவதற்காகத்தான் கட்சியில் இருக்கிறோம் என்றால் அவர்கள் மேல் நமக்கென்ன மதிப்பு வரும்? ஆனாலும் அது இந்தியர்களின் கட்சி. அது நமது முன்னோர்களின் தியாகத்தால் உருவான கட்சி. நமது முப்பாட்டன்கள் பட்டினி கிடந்து வளர்த்த கட்சி.  அவர்களின் இலக்கு இந்திய சுததிந்திரம்; இந்தியர்களின் முன்னேற்றம். பிற்காலத்தில் அக்கட்சிக்குத் தலைமையேற்ற தலைவர்கள் அக்கட்சியைத்  தங்க முட்டை இடும் வாத்தாக பயன்படுத்திக் கொண்டனர்! மக்களின் பணத்தைக் கொள்ளையடிப்பதும்,  அரசாங்கம் கொடுத்த மானியங்களைத் தங்களின் சுயநலத்திற்குப் பயன்படுத்துவதும் - அவர்களின் வேகத்தை யாராலும் தடுத்த நிறுத்த முடியவில்லை! காரணம், கூடவே குண்டர் கும்பல்கள்!  இன்று வரை  அது தொடர்ந்து கொண்டிருக்கிறது! இப்போது அவர்கள் இந்தியரிடையே செல்லாக்காசு ஆகிவிட்டனர்.    

இந்த நிலையில் தான் இருக்கும் கொஞ்ச நஞ்ச மரியாதையும் அம்னோ பறித்துக் கொண்டது.  பொதுத் தேர்தலில் ம.இ.கா. வேட்பாளர்களை  அம்னோவே தேர்ந்தெடுக்கும் என்னும் நிலை வந்தால் ....நெஞ்சு பொறுக்குதில்லையே!...என்று பாடுவதைத் தவிர, நமக்கு வேறு வழி தெரியவில்லை!

அப்படி அம்னோ தேர்ந்தெடுத்தால் யாருக்கு முதல் மரியாதை? என்னைக் கேட்டால் துணைக்கல்வி அமைச்சர் கமலனாதனுக்கு பெரிய வரவேற்புக் கிடைக்கும்! காரணம் தமிழ்ப்பள்ளிகளை ஒழிப்பதற்கும், அழிப்பதற்கும் கமலநாதனே சரியான ஆள் என்று அம்னோ புரிந்து கொண்டது!   அது மட்டும் அல்ல.  தமிழ்ப்பள்ளிகளுக்கு ஒதுக்கப்படும் மானியங்கள் பெரும்பாலும் பள்ளிகளுக்குப் போய் சேருவதில்லை என்னும் குற்றச் சாட்டும் உண்டு.   இது அம்னோவுக்குப் போய்ச் சேருகிறது என்பது உண்மை. இவ்வளவு தாராளம் காட்டும் கமலநாதனை அவர்கள் ஒதுக்கிவிட மாட்டார்கள் என நம்பலாம். அடுத்ததாக வேள்பாரிக்கும் வாய்ப்புக்கள் நிறையவே உண்டு. அதனை "துன்" கவனித்துக் கொள்ளுவார்!  

எப்படியோ,   ம.இ.கா. வுக்கும் இந்தியர்களுக்கும் சம்பந்தமில்லையென ஆகி விட்டது! "இப்படியும் இரு பிழைப்பா!" என்று நாம்  காறித்துப்பி என்ன ஆகப்போகிறது!  அவர்கள் அல்லவா துப்ப வேண்டும்!                                                                                                                                                                                                                                                                              

No comments:

Post a Comment