Monday 30 October 2017

மீண்டும் மீண்டும் தொழிலேயே....!


நாம் ஒரே விஷயத்தைப் பலமுறை கேட்டிருப்போம். ஆனால் அது ஏனோ நமது மனதில் பதிவதில்லை! பலமுறை கேட்ட அந்தச் செய்தி நமக்குத் தேவையான செய்தியாக இருக்கும். ஆனாலும் எப்போதும் போல நாம் அலட்சியம் காட்டுவோம்.

அப்படி நாம் அலட்சியம் காட்டும் செய்திகளில் ஒன்று தொழில் செய்வோருக்கு மிகவும், மிக மிக அவசியமான ஒரு செய்தி. சமீபத்தில் ஒரு தொழிலதிபர் கொடுத்த பேட்டியில் சொன்ன செய்தியை மீண்டும் நினைவுபடுத்துகிறேன்:

"நான் எனது வியாபாரத்தில் வரும் வருமானத்தை மீண்டும் எனது வியாபாரத்திலேயே அந்த வருமானத்தைப் போடுகிறேன். எனது வியாபாரத்தைப் பெரிய அளவில் கொண்டு செல்ல வேறு வழி எனக்கு இல்லை. யாரும் எனக்குப் பணம் கொடுக்கப் போவதில்லை.  இந்த வழி ஒன்று தான் எனது தொழிலைப் பெரிய அளவில் கொண்டு செல்ல எனக்கு உதவியிருக்கிறது."

அவர் தனது தொழிலைச் சிறிய அளவில் தொடங்கியவர்    இப்போது பெரிய அளவில்  வளர்ந்திருக்கிறார். இன்னும் வளருவதற்கான வாய்ப்புக்கள் நிறையவே உண்டு. 

இப்படிச்  சொல்லும் போது அவருடைய செலவுக்கு என்ன பண்ணுவார் என்னும் கேள்வி எழுவது இயற்கை. அவருடைய வருமானம் என்னும் போது நிறுவனத்திற்கு ஏற்படும் செலவுகள் போக என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டும். தனது செலவுகளுக்கு மற்ற ஊழியர்களைப் போல அவரும் ஒரு தொகையை மாதச் சம்பளமாக எடுத்துக் கொள்ளுவார்.  சம்பளத்தைத் தவிர வேறு செலவுகளுக்கு என்று எதனையும் எடுத்துக் கொள்ளுவதில்லை. என்ன சம்பளமோ அதற்குள்ளேயே செலவுகள். அது  ஒரு கட்டுப்பாடு; ஒர் ஒழுங்குமுறை.

சில வியாபார நண்பர்களைப் பார்க்கும் போது நமக்கே வருத்தமாக இருக்கும். அவர்களுக்கென்று ஒரு சம்பளம் எடுத்துக் கொள்ளுவதில்லை. தங்களது சொந்தச் சிலவுகளைக் கூட்டிக் கொண்டே போவது. குடும்பத்தினரின் கட்டாயத்திற்காக நிறுவனத்தின் பணத்தில் கை வைப்பது.  தங்களின்   நிறுவனத்தில்  பணி புரியும் ஊழியர்களின் சம்பளத்தைக்  கொடுக்க  முடிவதில்லை. இன்னும் பல முக்கிய  மாதா மாதம் கட்ட  வேண்டிய பணத்தைக் கட்ட முடிவதில்லை.  இப்படிப் பல சிக்கல்களில் சிக்கிக் கொள்வது. அதன் பின் "வியாபாரம் நஷ்டம்" என்று சொல்லி நிறுவனத்தைக் குற்றம் சொல்லுவது. பிரச்சனை  நம்மிடமிருந்து தான் ஆரம்பமாகிறது என்பதை நாம் ஏற்றுக் கொள்ளுவதில்லை!  

அதனால் தான் சொல்லுகிறேன். ஒவ்வொரு மாதமும் ஏற்படுகின்ற செலவுகளுக்கு  நாம்  முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.ஒவ்வொரு  மாதமும்  இலாப நஷ்டத்தை  தெரிந்து கொள்ள வேண்டும். செலவுகள்  போக  மீத  இலாபத்தையே  மீண்டும் நிறுவனத்திலேயே முதலீடு செய்ய வேண்டும். 

இது  தான்  சிறப்பான  நேர்மையான  வழி. வங்கிகள்  நமது  சமுதாயத்தினருக்குக் கடன்  கொடுக்க  விரும்பவதில்லை.  காரணம் நமது  நிறுவனத்தின்  மீது  கடன்  வாங்குவது; அதன் பின்னர்  அந்தப்  பணத்தை வேறு  எதற்கோ செலவு  செய்வது  என்பதெல்லாம் நமக்கு இயல்பான  காரியம்.

நமது நிறுவனங்கள்  வளர  வேண்டும்.  நாம் தொழில்  செய்யும்  சமுதாயமாக  மாற  வேண்டும். நமது  நிறுவனங்களின்  வளர்ச்சியில் இன்னும்  நாம்  முனைப்பு  காட்ட  வேண்டும்.

ஆக, அந்த  தொழிலதிபர் சொன்னது  போல  வருமானத்தை  மீண்டும்   மீண்டும்  நமது  தொழிலேயே  நாம் முதலீடு  செய்ய  வேண்டும். எப்போதோ கேட்டதாக  இருக்கலாம். ஆனால்  இப்போதும்  அது  தான் சரியான  வழி.

மீண்டும், மீண்டும்,  மீண்டும் தொழிலேயே...!








No comments:

Post a Comment