Friday 20 October 2017

"துளசி" யும் போலியா..?


அடாடா! எது தான் போலியாகத் தயாரிக்கப்பட வேண்டும் என்பதில் எந்தப் போலித் தயாரிப்பாளனுக்கும் விவஸ்தையே இல்லை.  உணவுப் பொருட்களில் போலி, மருந்துகளில் போலி  இப்படி அனைத்துமே போலி! போலி! போலி! இப்படிப் போலியாக தயாரிக்கிறானே அந்த முதலாளி அவன் வீட்டுப் பிள்ளைகள் மட்டும் என்ன தப்பி விடுவார்களா?

அந்தக் கால திரைப்படம் ஒன்றில் "கலப்படம், கலப்படம்! எங்கும் எதிலும் கலப்படம்" என்று பாடல் வரும். எஸ்.சி.கிருஷ்ணன் பாடியிருப்பார். ஆக, இந்தப் போலித் தயாரிப்புக்களுக்கு அந்தக் காலத்திலேயே அடிக்கல் நாட்டி விட்டார்கள்!

 சமீபத்தில், நான் பயன்படுத்தும் குளிக்கும் சவர்க்காரம் கூட போலியானது என்பதை அறிந்து அதிர்ந்து போனேன். துளசி சவர்க்காரம் தான் நான் பயன்படுத்துகிறேன்.  காரணம் ஏதோ மூலிகைக் கலந்தது என்பதால் - அல்லது துளசி என்பதே ஓரு மூலிகை என்பதால் அதனைப் பயன்படுத்தவதில் தவறு ஒன்றுமில்லையே!

ஆரம்ப காலத்தில் நான் வாங்கும் போது "துளசி" என்று கொட்டை எழுத்துக்களில் அதன் மேல் அட்டையில் தமிழில் எழுதப்பட்டிருக்கும்.  தமிழில் எழுதியிருந்தால் நமக்கு ஒரு ஈர்ப்பைக் கொடுக்கும் என்பது உண்மை தானே! நான் வாங்குவதற்கு அதுவும் ஒரு காரணம். தமிழ் சம்பந்தப்பட்ட எதுவாக இருந்தாலும் அதற்கு நான் முதலிடம் கொடுப்பேன். ஆனால் நான் கடைசியாக இந்தத் துளசி சவர்க்காரத்தை வாங்கிய போது ஒன்றைக் கவனித்தேன். முற்றிலுமாக தமிழ் தவிர்க்கப்பட்டிருந்தது. அட! சீன மொழி,  அரபு மொழி எல்லாம் அச்சடிக்கப் பட்டிருந்தது ஆச்சயரியமாக இருந்தது! அப்போது தான் ஞாபகம் வந்தது.  எந்த சீனன் துளசி சவர்க்காரம் பயன்படுத்துகிறான்? ஆகா! இங்கும் போலி புகுந்து விட்டதே என்னும் அதிர்ச்சி!

போலிகளுக்கு ஆதரவு கொடுக்கக் கூடாது என்பதில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. ஒரு நிறுவனம் தயாரிக்கும் ஒரு பொருளை இன்னொரு நிறுவனம் போலியாகத் தயாரிப்பது யாராலும்  ஏற்றுக்கொள்ள முடியாது. போலித் தயாரிப்புக்கள் மக்களுக்குத் தீங்கு விளைவிப்பவை.

இது போல பல பொருட்கள் போலியாக இருக்கலாம். தமிழ் எழுத்துகள் உள்ள பொருட்கள் பெரும்பாலும் போலியாக இருப்பதில்லை. அடுத்த முறை பொருட்களை வாங்கும் போது தமிழ் இருக்கிறதா என்று பார்த்து வாங்குங்கள். போலிகளைப் புறக்கணிப்போம்!

No comments:

Post a Comment