Wednesday, 18 October 2017
குழப்பத்தை ஏற்படுத்தும் .......!
நமது இஸ்லாமியச் சொற்பொழிவாளர் சிலர் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்துவதே நோக்கமாகக் கொண்டிருப்பது நமக்கும் வருத்தத்தையே அளிக்கிறது. அதுவும் ஓர் இந்தியரான ஜாக்கிர் நாயக்கிற்கு எப்போது நாட்டில் அடைக்கலம் கொடுத்தார்களோ அப்போதிருந்தே அவரிடமிருந்து நமது உள்ளூர் சொற்பொழிவாளர்கள் "நிறைய" கற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
நமது ஒரே வருத்தம் இவர் ஜொகூர் மாநிலத்தவர் அல்ல. பினாங்கு மாநிலத்தைச் சேர்ந்தவர்.ஷாகூல் ஹமீது என்பது இவரது பெயர். இத்தனை ஆண்டுகள் நாம் கேட்காததையெல்லாம் இப்போது இவரைப் போன்ற சொற்பொழிவாளர்கள் மூலம் நாம் கேட்க முடிகிறது!
என்ன சொல்லுகிறார்? முஸ்லிம் அல்லாதவர்கள் கடைகளில் முஸ்லிம்கள் முடி வெட்டிக் கொள்ளுவது ஏற்புடையதல்ல என்கிறார் ஷாகூல். முஸ்லிம் அல்லாதவர்களால் நடத்தப்படும் பள்ளிகளுக்கு உங்கள் பிள்ளைகளை அனுப்பாதீர்கள். சமயத்தின் முறைப்படி இவைகள் எல்லாம் தவறானவை என்கிறார். "பிறந்த நாள் வாழ்த்துகள்" என்று வாழ்த்துவதோ "ஹலோ" என்று தொலைப்பேசியை எடுத்ததும் கூறுவதோ தவிர்க்கப்பட வேண்டும் என்கிறார்.
இப்படிப் பேசுவதற்கெல்லாம் என்ன ஆதாரம் என்று நமக்கும் புரியவில்லை. முஸ்லிம் அல்லாதவர்கள் கடைகளுக்குப் போகக் கூடாது என்பதில் - முஸ்லிம்கள் அல்லாதவர்களும் உள்ள ஒரு நாட்டில் - இதெல்லாம் சாத்தியமா என்பது ஏன் அவருக்குப் புரியவில்லை? எல்லா நேரங்களிலும் "முஸ்லிம் கடைகளுக்கும் மட்டும் தான்" என்கிற கொள்கை சாத்தியம் இல்லை! இன்று அரசாங்கம் மாணவர்களைக் கோடிக்கணக்கில் பணம் செலவு செய்து வெளி நாடுகளுக்குப் படிக்க அனுப்புகிறார்களே - முஸ்லிம் அல்லாதவர்கள் தானே படித்துக் கொடுக்கிறார்கள்!
இவர்களால் எப்படி இப்படியெல்லாம் பேச முடிகிறது என்பது நமக்குப் புரியவில்லை! இவர் என்ன பிறந்ததிலிருந்து முஸ்லிம்களை மட்டுமா பார்த்தும், பேசிக் கொண்டும் இருக்கிறார்? அதுவும் தவறு தானே? நீங்கள் குழம்பியிருக்கிறீர்கள் என்பது தெரிகிறது. அது உங்களோடு இருக்கட்டும்! மக்களைக் குழப்ப வேண்டாம்! அதுவே நமது வேண்டுகோள்.
Labels:
நடப்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment