Tuesday 10 October 2017

ஐயோடா..! 700 ....இடங்கள் கூடுதலாகவா...?

இந்திய மாணவர்களுக்கு இன்னும் 700 இடங்கள் கூடுதலாக தேசியப் பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் என்னும் பிரதமரின் அறிவிப்பு  வரவேற்கப்பட வேண்டிய ஒன்றாக இருந்தாலும் அது இந்திய மாணவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கக் கூடிய ஒன்றாகவும் இருக்க வேண்டும்.

ம.இ.கா. வைத் தவிர வேறு யாருக்கும் இது மகிழ்ச்சி அளிக்கும் என்று எதிர்பார்க்க முடியாது.! காரணம் அது அவர்களுக்கு வெறும் எண்ணிக்கை.  ஆனால் அது நமக்கோ தரம்; தரம் வாய்ந்த கல்வி.  எல்லாப் பாடங்களிலும் 'ஏ' பெற்றவர்கள் பலர் மருத்துவம், பொறியியல் கல்வி கற்க விரும்புவர். இந்திய மாணவர்கள் எந்தப் பாடங்களை விரும்பவில்லையோ அதையே அவர்களுக்குக் கொடுக்க வேண்டுமென்று கல்வித்துறை பணிக்கப்பட்டிருக்கிறது என அறிகிறோம். கல்வித்துறையின் இந்த விரும்பத்தகாத செயலினால் மாணவர்கள் பலர் கடன் பெற்றாவது தாங்கள் விரும்பிய கல்வியைத் தொடர வெளி நாடுகளுக்குச் செல்லுகின்றனர்.

மூன்று பெரிய இனங்கள் வாழ்கின்ற நமது  நாட்டில், மூன்றாவது பெரிய இனமான இந்தியர்களே, குறைவான வளத்துடன் வாழ்பவர்கள் என்பது புதிய செய்தி அல்ல, அனைவரும் அறிந்ததே. ஆனால் பிள்ளைகளின் கல்வி என்று வரும் போது இந்தியர்கள் தங்களது தகுதிக்கு அதிகமாகவே செலவு செய்கின்றனர். இதனை யாருடனும் ஒப்பிட முடியாது. மலாய் மாணவர்களின் கல்வியை அரசாங்கம் கவனித்துக் கொள்ளுகிற்து. சீனரின் பொருளாதாரம் அவர்களைக் கையேந்த வைப்பதில்லை.  இந்தியர்கள் மட்டும் தான் தங்களது சொத்துக்களை விற்று தங்களது பிள்ளைகளைப் படிக்க வைக்கின்றனர். இதற்கு ஒரே காரணம் அரசாங்கம் தனது குடிமக்களின் ஒர் அங்கமான இந்தியர்களை ஓரங்கட்டுவது தான். 

மருத்துவம், பொறியியல் படிக்க விரும்பும் மாணவர்களைக் கால்நடை மருத்துவம் மீன்பிடித்துறை மருத்துவம் என்று அங்குத் தள்ளிவிடுவது ஏற்புடையதல்ல.  இன்னும் எந்த ஒரு வசதியும் இல்லாத  மாணவர்கள் பலர், என்ன தான் படிக்க வேண்டும் என்று தெளிவில்லாத மாணவர்கள், இவர்களுக்குக் கொடுக்கப் படும் கல்வி நமக்கே தலையைச் சுற்ற வைக்கும். அவர்களின் பெற்றோர்களுக்கு எந்த  ஒரு வசதியும் இல்லாததால் எதையாவது படிக்கட்டும் என்று விட்டு விடுகிறார்கள். சமீபகாலமாக நான் பார்த்த பல மாணவர்கள் மனித வள மேம்பாட்டுத் துறை (Human Resources) பட்டதாரிகளாக வெளி வருகின்றனர்! இவர்களுக்கு யார் தான் வேலை கொடுப்பார்? நாம் சொல்ல வருவதெல்லாம் அவர்களுடைய கல்வித்  தகுதியைப் பார்த்து அவர்களுக்கான துறையைக் கொடுங்கள்.  பிற்காலத்தில் அந்தக் கல்வி அவர்களுக்கு வேலை வாய்ப்புக்களைக் கொடுக்கும். அல்லது அரசாங்க வேலை கொடுங்கள்.

போகிற போக்கைப் பார்க்கும் போது  இந்தியர்களுக்கென இன்னுங்கூட நிறைய இடம் கொடுக்கிறோம் என்று சொல்லி அவர்களுக்கென்றே ஒரு துறையை ஒதுக்கி  அங்கே அவர்களைத் தள்ளி விட தயாராய் இருப்பது போல் தோன்றுகிறது! இதன் மூலம் தரமற்ற கல்வியை இந்தியர்களின் மேல் திணிப்பதாகவே நாம் எண்ண வேண்டி உள்ளது. 

நாம் சொல்லுவதெல்லாம்: இடங்களைக் கூடுதலாகக் கொடுங்கள். ஆனால் அவைகள் தரம் உள்ளவைகளாகக் கொடுங்கள். அதுவே நமது வேண்டுகோள்.

No comments:

Post a Comment