Wednesday 4 October 2017

அங்கேயும் ஆசை உண்டு....!


காலையில் ஒரு நண்பரைப் பார்க்க நேர்ந்தது. 

தமிழ் பேசுபவர் தான். ஆனால் தமிழரில்லை. பூமிபுத்ரா என்னும் அந்தஸ்தோடு இருப்பவர். அவரைப் போன்ற படித்தவர்கள் தங்களைக் கேரள வம்சாவளி என்று சொல்லுவதையும் விரும்பவதில்லை. தங்களை யாரோடும் ஒப்பிடாதாவாறு  'மலபாரி'  என்று சொல்லுகின்ற ஒரு சிறுபான்மையினர்.  அவர்கள் தங்களை  இந்தியர்களாக நினைப்பதில்லை. மலபாரி என்று சொல்லுவதில் பெருமைப் படுபவர்கள். ஆக, இவர்கள் தங்களைப் பூமிபுத்ராகவும் நினைப்பதில்லை; இந்தியராகவும் நினைப்பதில்லை! இருந்துவிட்டுப் போகட்டும்!

நண்பரின் மகள் பல்கலைக்கழக படிப்பை முடித்துவிட்டு இப்போது ஒரு நிறுவனத்தில் பொறுப்பான பதவியில் இருக்கிறார். அம்மா, மகன், மகள் மூன்று பேருக்குமே தமிழ் பேச வராது. பெரும்பாலும் மலாய் மொழி தான்.  அம்மா தமிழ் பேசினால் வெள்ளைக்காரர் பேசுவது போல் இருக்கும்!  மகன், மகள் ....அதுவும் இல்லை!

வேலையில் இருக்கும் பட்டாதாரி மகளுக்கு இப்போது மாப்பிளை பார்க்கும் படலம் ஆரம்பமாகி விட்டது. ரொம்பவும் சலித்துக் கொண்டார். சிலருடைய படங்களைக் காட்டிக் கொண்டிருந்தார்.  என்னா செய்யிறது?  பசங்க எல்லாம் மலாய் பெண்ணா பார்த்திட்டுப் போயிடுறானுங்க! அதனால மாப்பிள கிடைக்கிறதல பெரிய தலைவலியா இருக்கு!  ஏன்? மலபாரி எல்லாம் அவ்வளவு சீக்கிரத்தில் வேறு பக்கம் சாய மாட்டாங்களே!  பெரும்பாலும் உங்களுக்குள்ளேயே பார்த்துக்கொள்வீர்களே! என்னா ஆச்சு? இல்லைங்க! மொத மாறி இல்லை! பையனுங்க மாறிட்டாங்க! 

ஏன்? உங்க மகள் மாறலியா? ஒரே மதம் தானே! 

அதான், பிரச்சனை!  'நாம்ப' என்ன அவங்க மாறியா பிள்ளைங்கள வளர்க்கிறோம். ஏங்க! நமக்கும் அவங்களுக்கும் சரிபட்டு வருங்களா? 'நம்ப' பண்பாடு எல்லாம் வேறைங்க! ஒரு நல்ல வரன் வந்திச்சு. அவங்க தமிழ் பேசத் தெரியலேன்னு வேணான்னுட்டாங்க! ஊர்த் தொடர்புள உள்ளவங்க தமிழ் தெரியுனும்னு, எதிர்பார்க்கிறாங்க! இப்படியும் இல்லே! அப்படியும் இல்லே!   இப்ப, மாப்பிளைய தேடிக்கிட்டே இருக்க வேண்டி இருக்கு!

என்னடா உலகம் இது!  ஒரு சமயத்தில் தமிழையும், தமிழனையும் கண்டால் தீண்டத்தகாதவனைப் போல் பார்ப்பதும், மாப்பிளைப் பார்க்கும் போது 'நம்ம' பண்பாட்டைப் பற்றி யோசிப்பதும், இவர்களுக்கு என்ன ஆயிற்று?  முற்றும் நினைந்த பின் முக்காடு எதற்கு?

அங்கேயும் ஆசை உண்டு! வெளியே வருவதில்லை!

No comments:

Post a Comment