Thursday 26 October 2017

கோயில், சர்ச், மசூதி


மெர்சல் படம் வந்ததிலிருந்து தமிழக பா.ஜ.க. வினர் பலவித குற்றச்சாட்டுக்களை நடிகர் விஜயின் மீது வலிந்து திணித்து வருகின்றனர்.  அது அரசியல் என்று வைத்துக் கொள்ளலாம். இதில் குறிப்பாக அவர் விஜய், ஜோசப் விஜய், என்று அவர் முழுப்பெயரைச் சொல்லி அவர் கிறிஸ்துவர் என்றும் அதனால் தான் அவர் மெர்சல் படத்தில் கோயில் கட்டுவதை எதிர்க்கிறார் என்றும் அவர் மீது குற்றம் சாட்டப்படுகின்றது.

இந்த நேரத்தில் ஒன்றைச் சுட்டிக் காட்ட வேண்டும். அவர் பிறப்பால் கிருஸ்துவர் என்பது உண்மை தான். அவர் தந்தை பிறப்பால் கிறிஸ்துவர்; அவர் தாயார் பிறப்பால் ஓர் இந்து. விஜய் ஓரு கிறிஸ்துவராக இருந்தாலும் திருமணத்திற்குப் பின்னர் அவர் இந்துவாக மாறிவிட்டார். அவர் மனைவி ஓர் இந்து. இதெல்லாம், இப்படி மாறுவது, அப்படி மாறுவது என்பதெல்லாம் ஒன்றும் அதிசயமான செய்தி அல்ல. அதற்கு ஏதேனும் காரணங்கள் இருக்கலாம். சில மாதங்களுக்கு முன்னர் விஜய் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு முகத்தை மறைத்துக் கொண்டு போனதாக ஒரு செய்தியைப் படித்தேன்!  ஆக,  தமிழக பா.ஜ.க., குறிப்பாக எச்.ராஜா அவர்கள், ஓர் இந்துவை, கிறிஸ்துவர் என்று சொல்லி கலாய்த்துக் கொண்டிருக்கிறார்! விஜயைப் பற்றி எல்லாத் தகவல்களையும் திரட்டியவர் இதனையும் அவர் திரட்டி இருக்க வேண்டும். அது தான் நியாயம். எச்.ராஜா,  வட இந்திய  மாநிலத்தைச் சேர்ந்தவர்; தமிழ் நாட்டில் குடியேறிய குடும்பம் அவருடையது. வட மாநிலங்கள் மதக்கலவரத்திற்குப் பெயர் போனவை. அங்கு செய்ய வேண்டிய வேலையை இப்போது இங்கு செய்து கொண்டிருக்கிறார்! நமக்கும் வருத்தம் தான்!

இன்னொன்று கோயில். கோயில் என்பது ஒரு பொதுவான சொல். அது எல்லா வழிப்பாட்டுத் தலங்களையும் குறிக்கும். தமிழகக் கிராமங்களில் இப்போதும் கிறிஸ்துவ தேவாலயங்களை, கோயில் என்று தான் பேச்சு வழக்கில் உள்ளது. படித்தவர்கள் மட்டுமே "சர்ச்" என்கிறார்கள். அதுவும் தமிழக பாணியில்! குறிப்பாக மலேசியாவில் தேவாலயங்களைப் பேச்சு வழக்கில் கோயில் என்று தான் குறிப்புடுகிறோம். ஆங்கிலத்தில் பேசும் போது மட்டுமே CHURCH என்கிறோம்.

முஸ்லிம்கள் பேச்சு வழக்கிலும் பள்ளிவாசல் அல்லது மசூதி என்று பயன்படுத்துவது உண்மை தான். ஆனால் முஸ்லிம் அல்லாத சாதாரண 
மக்களிடையே அதுவும் ஒரு வழிபாட்டுத்தலம். அவ்வளவு தான். அதுவும் ஒரு கோயில் தான்.

புத்தமத வழிபாட்டுத்தலங்களை புத்தக் கோயில் என்று தான் சொல்லுகிறோம். ஆக, கோயில் என்பது ஒரு பொதுவானச் சொல். அதனால் தான் வேளாங்கண்ணி மாதாக் கோயில், பூண்டிமாதா கோயில் என்று இன்றளவும் நாம் சொல்லிக் கொண்டிருக்கிறோம். 

ஒரு வேளை, எச். ராஜா போன்ற பிராமணர்களிடையே கோயில் என்பதற்கு வேறு அர்த்தம் இருக்கலாம். அதனை நான் அறியவில்லை! மன்னிக்கவும்! மற்றபடி வழிபாட்டுத்தலங்கள் அனைத்துமே கோயில்கள் தான்!

No comments:

Post a Comment