Sunday 22 October 2017

சிவகார்த்திகேயனுக்கு ......நன்றி!


நடிகர் சிவகார்த்திகேயனுக்கு நன்றி!

பொதுவாகச் சொல்லப் போனால் சமீப காலத்திய நடிகர்களைப் பெரும்பாலும் எனக்குத் தெரியாது. அவர்களின் படங்களை நான் பார்த்ததில்லை. அது ஏனோ அவர்களின் படங்கள் எனக்குத் தூக்கத்தையே கொண்டு வருகின்றன! ரஜினியின் கபாலி படத்தை நான்  தியேட்டரில் பார்த்தேன். கமல்ஹாசன், ரஜினி படங்களைத் தவிர மற்றவர் படங்களைத் தியேட்டரில் பார்ப்பதில்லை. ஏதோ தொலைக்காட்சியில் அவ்வப்போது யார் அந்த நடிகர் என்று தெரியாமலேயே பார்ப்பதுண்டு!  இதற்கெல்லாம் காரணம் படம் பார்க்கும் போதே - ஒரு பத்து நிமிடம் போதும் - தூங்கி விழுந்து கொண்டிருப்பேன்!  திரைப்படங்களின் மீது ஆர்வமில்லை; அவ்வளவு தான்!

தீபாவளி சமயத்தில் நடிகர் சிவகார்த்திகேயனோடு ஒரு தொலைக்காட்சியில் நேர்காணல் நடந்து கொண்டிருந்தது. அதனைப் பார்த்துக் கொண்டிருந்த போது நல்லதொரு கருத்தை அவர் சொல்லிக் கொண்டிருந்தார். அது எனக்குப் பிடித்திருந்தது.  நல்ல கருத்தை யார் சொன்னால் என்ன?  நான் உங்களோடு பகிர்ந்து கொள்ளுகிறேன்.

"நான் சினிமா உலகில் யாரையும் போட்டியாகக் கருதவில்லை. நானே தான் எனக்குப் போட்டி. ஒவ்வொரு படத்திலும் இன்னும் சிறப்பாக நடிக்க வேண்டும் என்பதைத் தவிர மற்ற நடிகர்களுடன் நான் போட்டிப் போடுவதில்லை!" 

நாம் அனைவருமே கேட்டு, கடைப்பிடிக்க வேண்டிய ஒரு கருத்து. நாம் வேலை செய்கின்ற இடத்தில் யாரும் நமக்குப் போட்டியில்லை. நம்முடைய வேலையை நாம் இன்னும் சிறப்பாகச் செய்தால் நமது முன்னேற்றத்தை யாரும் தடுத்து விட முடியாது. வியாபாரம் நாம் செய்கின்றோமா?  நமக்கு யாரும் போட்டியில்லை. நமக்கு நாமே ஒவ்வொரு ஆண்டும் சில இலக்குகளை வைத்து அதனை நோக்கி நாம் பயணிக்க வேண்டும். யார் உடனும் போட்டி தேவை இல்லை. இந்த ஆண்டை விட அடுத்த ஆண்டு   இன்னும் அதிகமாக நாம் செயல்பட வேண்டும். நமது இலக்கை அடைய வேண்டும். எல்லாமே நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்ளும் ஒருவகையான உந்துதல்.

மற்றவருடன்  போட்டி போடுவதால் என்ன நடக்கும்? தேவையற்ற சர்ச்சைகள், முணுமுணுப்புக்கள்,  பொறாமை - இவைகளெல்லாம் நம்மைப் பின் நோக்கி இழுக்குமே தவிர நம்மை முன் நோக்கி நகர்த்தாது. அது மட்டுமா? நமது உடல் நலனுக்கும் கேடு விளைவிக்கும். எந்தத் துறையில் நாம் இருந்தால் என்ன? நாம் நமது பங்கினை நூறு விழுக்காடு கொடுக்க வேண்டும். யாருடனும் ஒப்பீடு வேண்டாம். நமது திறமைகள் மற்றவர்களோடு ஒப்பிடும் போது ஒரே மாதிரி இருப்பதில்லை. மற்றவர்கள் நம்மை விட குறைவானத் திறமையுடைவர்களாக 
 இருப்பார்கள். நமக்குத் தெரியாத வேறு ஒரு துறையில் அவர்கள் திறமைசாலிகளாக இருப்பார்கள்.

அதனால் நமது திறமைகளை நாம் நமது துறையிலேயே அதிகக் கவனம் செலுத்தி வளர்த்துக் கொள்ள வேண்டும். நாம் யாருடனும் போட்டி போட வேண்டியதில்லை. யாருடனும் நமக்குப் போட்டி வேண்டாம். நமக்கு நாமே தான் போட்டி!

சிவகார்த்திகேயனுக்கு நன்றீ!

No comments:

Post a Comment