Thursday, 12 October 2017
73 வயது ....ஆரம்பம் தான்!
என்னப்பா, சொல்றீங்க? 73 வயது எல்லாம் ஒரு வயதா? 73 வயது பாட்டிக்கு வாகனம் ஓட்டும் ஆசை வந்து விட்டது. ஏற்கனவே பாட்டி கார் ஓட்டும் உரிமம் வைத்திருந்தவர் தான். உரிமம் காலாவதியாகி நீண்ட காலம் ஆகிவிட்டது. இப்போது பாட்டி கார் ஓட்டும் கட்டாய நிலையில் இருக்கிறார்.
ஒவ்வொரு மாதமும் கிளினிக் போக வேண்டும். இனிப்பு நீர், இரத்தக் கொதிப்பு பரிசோதனை செய்ய வேண்டும். மாத்திரைகள் வாங்க வேண்டும். பள்ளிவாசல் போக வேண்டும். பிள்ளைகள் யாரும் அருகில் இல்லை. எல்லாம் வேலையின் நிமித்தம் வெகு தூரத்தில் இருக்கிறார்கள்.
ஆக, அந்த சங்கடத்தில் இருந்து மீண்டு விட்டார் பாட்டி. கார் ஓட்டும் உரிமம் கிடைத்து விட்டது. இனி பிரச்சனை இல்லை. தானே காரை ஓட்டிக் கொண்டு போகலாம். யாரையும் பார்த்துப் பயப்பட வேண்டியதில்லை என்கிறார்! கார் ஓட்டுவதற்கான அடிப்படைகளைப் புரிந்துகொண்டேன் ஆனால் வயதானதால் கொஞ்சம் எச்சரிக்கையாகவே இருக்க வேண்டி உள்ளது என்கிறார் பாட்டி.
அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள், எனது பிள்ளைகள் - பலராலும் கேலிக்கும்கிண்டலுக்கும் ஆளானேன்! அதே சமயத்தில் ஊக்கமூட்டும் வார்த்தைகளும் வந்து விழுந்தன. எது எப்படி இருப்பினும் என்னுடைய நோக்கம் ஒன்று தான். எனக்கு கார் ஓட்டும் உரிமம் வேண்டும். அது எனது கட்டாயத் தேவை. இந்த வயதில் கார் ஓட்டும் உரிமம் கிடைத்ததற்காக கடவுளுக்கு நன்றி!
இந்த நேரத்தில் நாம் சொல்ல வேண்டியது என்ன? வயதானவர்களை ஒரங்கட்டாதீர்கள். சொந்தமாக இயங்க விடுங்கள். அவர்கள் தேவைகளை அவர்களே பூர்த்தி செய்ய முடிந்தால் செய்ய விடுங்கள். இன்று நம்மிடையே உள்ள பிரச்சனை எல்லாம் வயதானவர்களைத் தாழ்த்திப் பேசி அவர்களுக்குத் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தி விடுகிறோம். எந்த வயதில் யார் என்ன சாதிப்பார்கள் என்று யாராலும் கணித்து விட முடியாது. கொஞ்சம் நம்பிக்கை, கொஞ்சம் துணிச்சல், கொஞ்சம் பாராட்டு என்று வயதானவர்களுக்குக் கொடுத்துப் பாருங்கள். பிறகு தெரியும் அவர்களுடைய சாதனைகள்!
பாட்டிக்கு மீண்டும் ஒரு புதிய ஆரம்பம். பாட்டிக்கு நீண்ட ஆயுளை இறைவன் அருள்வாராக!
Labels:
கோடிஸ்வரர்கள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment