Saturday 28 October 2017

உழைத்து உழைத்து ஓடாய்......!


உழைத்து உழைத்து ஓடாய் தேய்ந்து போனேன் என்று சொல்லக் கேட்டிருக்கிறோம். இன்னும் சிலர் இந்தக் குடும்பத்துக்காக உழைத்து உழைத்து  தேய்ந்து போனது தான் மிச்சம் என்று சொல்லுபவர்களும் இருக்கிறார்கள்.

எப்படிப் பார்த்தாலும் அவர்கள் தேய்ந்து போயிருக்கிறார்கள் என்பது  தான் இங்கு நாம் பேச வந்த செய்தி. தேய்ந்து போயிருந்தால் மகிழ்ச்சி அடையுங்கள். நீங்கள் தேய்ந்து போயிருப்பதால் தான் இன்னும் துருப்பிடிக்காமல் நல்ல படியாக இருக்கிறீர்கள்.  துருப்பிடித்த ஓர் இரும்புத் துண்டை பாரூங்கள்.. அது என்ன நமக்கு  மகிழ்ச்சியையா கொடுக்கிறது? அதில் ஏற்பட்டிருக்கிற அந்தத் துருவை அகற்ற நாம் என்ன பாடுபட வேண்டியிருக்கிறது. அதுவே பயன்பாட்டில் இருந்திருந்தால் அது துரு பிடிக்க வழியில்லை. ஒரு வேளை தேய்ந்து போயிருக்கலாம். அது இயற்கை தானே! 

அப்படித்தான் மனிதனும்.  நாம் உழைக்கத்தானே பிறந்திருக்கிறோம்? உழைப்பது தானே நமது வேலை. படைப்பின் நோக்கமே அது தானே.  வீணில் உண்டு களிப்பதற்கா இந்தப் படைப்பு? நாம் செய்கின்ற வேலைகளில் வேறுபடலாம். ஆனால் ஏதோ ஒரு வகையில் உழைப்பு என்பது அனைவருக்கும் பொதுவானது. உழைத்துத் தான் ஆக வேண்டும். உழைக்கும் போது தான் நமது அனைத்து  உடல் உறுப்புக்களும் தங்களது வேலைகளை சரிவரச் செய்கின்றன. உழைப்பு என்று ஒன்று இல்லாவிட்டால் - அந்த உறுப்புகளுக்கு நாம் வேலைக் கொடுக்காவிட்டால் - என்ன நடக்கும்? அது துருப்பிடித்து வியாதிகளை உருவாக்கும். அதனைச் சரி செய்ய மருந்து மாத்திரைகளை விழுங்கி, விழுங்கி ஏற்பட்டுவிட்ட பாதிப்பை நிவர்த்தி செய்யும் வேலையை டாக்டரிடம் விட்டுவிடுவோம். ஆனாலும் நாம் தானே அந்த வேதனையை அனுபவிக்கிறோம்! வேலை செய்யாத உறுப்புக்கள், செத்துப்போன உறுப்புக்களுக்குச் சமம். அதனை மீண்டும் உயிர்ப்பிப்பதற்கு அசாதாரண முயற்சிகள் தேவை.

ஆனால் அதுவே நாம் உழைத்து உழைத்து ஓடாய் தேய்ந்து போனால் என்ன நடக்கும்? ஏதோ ஒரு சில உறுப்புக்கள் மட்டுமே தேய்ந்து போகும் வாய்ப்புண்டு. நீண்ட நாள் வேலை செய்யும் போது ஒரு சில உறுப்புக்கள் தேய்ந்து போகும். அதற்கும் சில பயிற்சிகள் மூலம் சரி செய்யலாம். அல்லது மருந்து மாத்திரைகளும் சரி செய்து விடும்.  ஆனாலும் நாம் சரியாக வேலை செய்திருக்கிறோம் என்னும் மனநிறைவோடு நாம் மருத்துவம் செய்வோம். கடைசிக்காலம் கூட மகிழ்ச்சியாக இருக்கும். ஆமாம்! நாம் இருந்த காலம் வரை நாம் நமது காலத்தை வீணடிக்கவில்லை என்பதே மகிழ்ச்சிக்குரிய விஷயம் தானே!

மகிழ்ச்சி அடையுங்கள். ஆனால் மனதிலே கொஞ்சம் நேர்மறையான எண்ணத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். உழைத்து, உழைத்து  நானும் உயர்ந்தேன். என் குடும்பத்தினையும் உய்ர்த்தினேன்! உழைத்து, உழைத்து ஓடாய் தேய வில்லை! ஓகோ, ஓகோ என்று வாழ்வற்கு ஓடி ஓடி உழைத்தேன்! 

ஆக, அது என் வாழ்க்கை! என் குடும்பம் உயர வாழ்ந்த வாழ்க்கை! நான் ஓடாயும் தேயவில்லை. துருப் பிடித்த வாழ்க்கையும் வாழவில்லை. உழைத்து உழைத்து என்னை நானே  மெருகேற்றினேன்!

நாம் தேய்ந்தாலும் பரவாயில்லை; துருப்பிடிக்க வேண்டாம்!

No comments:

Post a Comment