Friday 13 October 2017

எறும்புத்தின்னியா, அலுங்கா..?


ஒரு சில ஆண்டுகளுக்கு முன் தமிழகக் தொலைக்காட்சியில் ஒரு செய்தி வெளியாகியது. ஊட்டி மலைப்பகுதியில்  ஓர் அரிய விலங்கைக் காண நேர்ந்ததாகவும் அது  என்ன விலங்கு என்று தெரியவில்லை என்பதாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது அந்த விலங்கையும் காட்டினார்கள்.

அட! இதென்ன? நம்ம ஊரில் அலுங்கு என்று சொல்லுவோமே அதுவல்லவா இது! பிறகு அவர்களே அது எறும்புத்தின்னி என்று யாரோ சொல்ல செய்தியாளரும் அதனை எறும்புத்தின்னி என்று சொன்னதாக ஞாபகம்.



எறும்புத்தின்னி என்பது புதிதாகக் கண்டுபிடித்த பெயரா என்பது உறுதியாக எனக்குத்   தெரியவில்லை. ஆனால் இதன் பெயர் அலுங்கு என்பது பல வருடங்களுக்கு முன்னரே எனக்குத் தெரியும். 

தோட்டப்புறங்களில்  இருந்தவர்கள் அறிவர். ஒரு காலக் கட்டத்தில் வேலை முடிந்த பின்னர் தங்களில் கைகளில் ஈட்டியையும் கூடவே நாய்களையும் கூட்டிக் கொண்டு இளைஞர்கள் வேட்டைக்குச் செல்வார்கள். அவர்களின் இலக்கு பெரும்பாலும் காட்டுப் பன்றிகள் அல்லது உடும்பாக இருக்கும். அந்த நேரத்தில் இந்த அலுங்குகளும் 'மாட்டுவது' உண்டு! இந்த விலங்கு மனிதர்களைப் பார்த்தாலே சுருண்டு கொள்ளும் தன்மை உடையது! ஆனால் அந்த நேரத்தில் அதன் மேல் ஓடுகள் எப்படி இருக்கும் என்பதையெல்லாம் நான் அறியவில்லை. எப்படியோ  அதன் இறைச்சியை நான் சாப்பிட்டுருக்கிறேன்! இந்த விலங்கின் மேல் செதில்,  ஆமை ஓடு போன்று கடினமாக இருக்கும் என்பதாகச் சொல்லப்படுகின்றது. அந்தக் காலத்தில் எப்படி இதனை எல்லாம் சமாளித்து அதன் பின் சமைத்தார்கள் என்பது புரியவில்லை! 

இந்த விலங்கின் ஆங்கிலப் பெயர் Pangolin. இப்போது இந்த விலங்கு பார்ப்பது கூட அரிதிலும் அரிது. வெறும் எறும்புகளைத் தின்று உயிர் வாழும் இந்த அலுங்கு மிகவும் சாதுவான - அப்பிராணியான ஒரு விலங்கு.  மிகவும் அரிய வகை பிராணி. இதனைப் பிடிப்பதோ, விற்பதோ சட்டப்படி தடை  செய்யப்பட்டு விட்டது.

சரி, இதன் பெயர் எறும்புத்தின்னியா, அலுங்கா? அந்தக் காலத்தில் தமிழகத்திலிருந்து  இங்கு வந்தவர்கள் இதனை அலுங்கு என்று தான் சொன்னார்கள். அப்படியென்றால் இந்தப் பெயர் தமிழகத்திலிருந்த வந்த பெயர் தான். இந்தப் பிராணி மிகவும் அருகிப் போனாதால் பிற்காலத்தில் இப்படி ஒரு பிராணி இருப்பதையே தமிழர்கள் அறியவில்லை.  மறந்து போனார்கள்! இப்போது அதற்குப் புதிதாக "எறும்புத்தின்னி" என்று பெயர் சூட்டி விட்டார்கள்! எப்படியோ எறும்பைஅலுங்கு தின்னட்டும். நாம் அலுங்கை தின்ன வேண்டாம்!

காரணம் நமக்குக் கை விலங்கு வேண்டாம்!


No comments:

Post a Comment