Monday 16 October 2017

தீடீர் அல்ல, தீபாவளி..!


தீபாவளி, தீடீரென வரும் பெருநாள் அல்ல. ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடித்தான் வருகிறோம்.  மற்ற பெருநாட்களைப் போல தீபாவளியும் ஒவ்வொரு ஆண்டும் வந்தும் போயும் கொண்டிருக்கிறது.

ஆனாலும் செலவு என்று வரும் போது,  எப்போதும் போல, இப்போதும், முன்னை விட, மிகவும் எச்சரிக்கையாக பணத்தின் மீது  கை வைக்க வேண்டியிருக்கிறது. ஒவ்வொரு காசாகப் பார்த்து செலவு செய்வது என்பது மிகவும் முக்கியம். பொதுவாக அது எல்லாக் காலங்களிலும் முக்கியம். பெருநாள் காலங்களில் மற்றக் காலங்களை விட  முக்கியம்.

நமது நாட்டின் மூன்றாவது பெரும்பான்மை இனத்தைச் சார்ந்தவர்கள் நாம்.  ஆனால் செலவுகள் என்று வரும் போது நாம் தான் முன்னணியில் இருக்கிறோம்! கல்யாணமா, காது குத்தா, கல்யாண நாளா, பிறந்த நாளா - நம்மைப் போல செலவு செய்வதில் நம்மை அடித்துக் கொள்ள ஆளில்லை! வீண் விரயம் செய்வதில் நம்மைப் போல் ஆளில்லை! பணத்தை வீணடிப்பதில் நம்மைப் போல் ஆளில்லை! நம்மிடம் சிக்கனம் மட்டும் இருந்தால் நம்மை அடித்துக் கொள்ள ஆளில்லை!

ஆமாம்! சிக்கனம்! சிக்கனம்! சிக்கனம்! தலைக்கனம் கூட இருக்கலாம் சிக்கனம் இல்லை என்றால் என்றென்றும் சிங்கக்குகை தான் வாழ்க்கை! மறந்து விடாதீர்கள்! சமீபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை செய்து கொண்டார்கள். பொருளாதார சிக்கலாகத்தான் இருக்க வேண்டும். அது தானே நம் கண்ணுக்குத் தெரிகிறது.  வேறு என்ன?

தீபாவளி எப்போதும் போல ஒவ்வொரு ஆண்டும் வரத்தான் செய்யும். அது வரத்தான் வேண்டும். அதனை நாம் தடை செய்ய முடியாது. செலவுகளைத் தடை செய்வதற்கு சில வழி முறைகள் இருக்கின்றன. முதலில் ஒரு பட்டியல் தயார் செய்யுங்கள். துணிமணிகளுக்கான செலவு. பலகாரங்கள் வாங்குவதற்கான செலவு; அல்லது செய்வதற்கானச் செலவு. வருகையாளர்களுக்கான செலவு. வீட்டு அலங்காரங்கள் - இப்படி முக்கியமான செலுவுகளுக்காக   ஒரு பட்டியல் போடுங்கள். இப்போது தோராயமாக தீபாவாளிச் செலவுக்கென ஒரு தொகை தெரியும்.  அது கூடுதல் என்றால் எப்படி குறைக்கலாம் என்று மீண்டும் மீள் பார்வை செய்யுங்கள். கடைசியாக, இவ்வளவு தான் என்று ஓர் இலக்கை நிர்ணயத்துக் கொள்ளுங்கள். நீங்கள் நிர்ணயத்த  அந்தத் தொகை உங்கள் எல்லைக்குள் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். அதனையே உறுதியாகப் பற்றிக் கொள்ளுங்கள். அதை மீறக்கூடாது என்பது தான் நமக்கு நாமே ஏற்படுத்திக் கொண்ட தடை. பெருநாள் காலங்களில் மதுவகைகளுக்கு இடமில்லை. அது தேவையும் இல்லை.

இப்படித் திட்டம் போட்டுத் தான் நாம் நமது பெருநாட்களைக் கொண்டாட வேண்டும்.   நமது வீட்டில் நடைபெறுகின்ற எந்த நிகழ்வுகளாக இருந்தாலும் சரி, ஒரு பட்டியலைப் போட்டு, அப்புறம் தான் அந்த நிகழ்வுகள் கொண்டாடப்பட வேண்டும். பணத்தைத் தண்ணீராகச்  செலவு செய்வது  தான் நம்முடைய இயல்பு. அதன் பிறகு வருந்துவதும் நமது இயல்பு.

அதனால் தீபாவளி தீடீரென வரவில்லை. உங்களுக்கென ஒரு இலக்கை நிர்ணயத்துக் கொண்டு பெருநாளை மகிழ்ச்சியாகக் கொண்டாடுங்கள். அது உங்கள் பணம். அதனை எப்படி செலவு செய்ய வேண்டும் என்பது உங்கள் கையில்.  பணம் வரும், போகும். போவதைக் கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள்.

தீபாவளி வாழ்த்துகள்!                                                                                                                                                                                                                                                                                                                          


No comments:

Post a Comment