சோஸ்மா சட்டத்துடன் பி.கே.ஆர். கட்சி உடன்படவில்லை என்பதாக கூறியிருப்பது ஒன்றும் புதிதல்ல. ஜ.செ.க. வின் நிலையும் அது தான். ஏன், மகாதிரின் பெர்சாத்து கட்சியின் நிலைமையும் அது தான். சோஸ்மா சட்டம் தேவையில்லை என்பது தான் அனைத்துப் பக்காத்தான் கூட்டணியின் தேர்தல் வாக்குறுதி. அனைத்துக் கட்சிகளும் ஏற்றுக் கொண்ட வாக்குறுதி.
கடந்த பொதுத் தேர்தலின் போது, தாங்கள் பதவிக்கு வந்தால், சோஸ்மா சட்டம் அகற்றப்படும் என்று அன்று அவர்கள் கொடுத்த அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.
அப்படி நிறைவேற்றப்படாத அந்த வாக்குறுதி இன்று பிரதமர் மகாதிரால் தமிழர்களுக்கு எதிராக, விடுதலைப்புலிகளின் பெயரால், பயன்படுத்தப்படுகிறது என்பது தான் எதிர்பாராத ஒன்று.
விடுதலைப்புலிகள் எப்படி உள்ளே வந்தார்கள்? ஜாகிர் நாயக் என்கிற ஓர் இஸ்லாமிய அறிஞர், ஸம்ரி வினோத் என்கிற உள்ளூர் இஸ்லாமிய அறிஞர், இவர்களை வைத்து அவர்கள் உள்ளே புகுந்து விட்டார்கள்! ஆமாம், அப்படித்தான் விடுதலைப்புலிகளின் ஊடுருவல் நிகழ்ந்துவிட்டது.
ஜாகிர் நாயக்கையும், ஸ்ம்ரி வினோத்தையும் விமர்சித்தால் இது தான் நடக்கும் என்பதை பிரதமர் மகாதிர் காட்டி விட்டார்!
ஜாகிர் நாயக் எல்லாக் காலத்திலும் தீவிரவாதம் பேசியவர். அவர் மீது சோஸ்மா சட்டம் பாயவில்லை. ஸம்ரி வினோத், அவரும் ஜாகிர் நாயக்கோடு சேர்ந்து கொண்டு மதக்கலவரத்தை ஏற்படுத்த தூண்டியவர்! அவர் மீது சோஸ்மா சட்டம் பாயவில்லை!
ஆனால் அவர்களை எதிர்த்தவர்கள் மீது சோஸ்மா சட்டம் பாய்ந்திருக்கிறது! இதன் பின்னணியிலிருந்து செயல்படுபவர் பிரதமர் மகாதிர் தான் என்பதை நாம் அறிந்திருக்கிறோம்!
இந்த சோஸ்மா சட்டத்தை பக்காத்தான் தலைவர்கள் யாரும் ஆதரிக்கவில்லை. காரணம் இந்தச் சட்டத்தின் மூலம் எந்த விசாரணையுமின்றி அவர்கள் 28 நாள்கள் காவலில் வைக்கப்படுவர். ஜாமினில் அவர்கள் வெளி வர முடியாது. குடும்ப உறுப்பினர் அல்லது அவர்களது வழக்கறிஞர்கள் யாரும் அவர்களைப் பார்க்க அனுமதி இல்லை.
இப்போது கைது செய்யப்பட்டவர்கள் கூட ஒரு பக்கம் இருட்டறையில் இன்னொரு பக்கம் பயங்கர குளிர் அறைகளில், கற்பனைக் கதைகளை ஒத்துக்கொள்ள தொடர் விசாரனை - இப்படித்தான் அமையும் காவல் துறையினரின் புலனாய்வு.
பயங்கரவாதிகள் என உறுதியாகத் தெரிந்தால் அவர்களை நீதிமன்றத்தில் நிறுத்துங்கள் என்பது தான் நமது கோரிக்கை.
இப்போது பிரதமர் மகாதிரும், காவல்துறையும் செய்திருப்பது உலகத் தமிழர்களைக் கேவலப்படுத்தும் நோக்கம் கொண்டது என்பதைத் தவிர வேறொன்றுமில்லை.
No comments:
Post a Comment