Thursday 14 November 2019

இது கூட நல்லாயிருக்கு..!


சமயங்களில் சில செய்திகள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன! சில சமயங்களில்  சில முட்டாள் தனங்கள் எப்படி புத்திசாலித் தனங்களாக மாறுகின்றன என்பதெல்லாம் நமக்கு வியப்பு ஏற்படுத்துகின்றன!

பதிலடிக்குப் பதிலடி என்பது இப்போதெல்லாம் சர்வ சாதாரணம். நீதி நியாயம் பற்றியெல்லாம் யாரும் கவலைப்படுவதில்லை.

1எம்டிபி ஊழல் பெருச்சாளி, கோடிஸ்வரர் ஜோலோ இந்தியாவில் இருக்கிறார் என்கிற செய்தியைப் படித்த போது அப்படித்தான் நினைக்கத் தோன்றியது. "கேட்க நல்லாயிருக்கே!"  என்பது தான் எனது எண்ணமாக இருந்தது!

ஜோலொ மலேசிய நாட்டின் தேடப்படும் ஓர் ஊழல் குற்றவாளி.   அவரை இன்னும் மலேசியாவினால் நாட்டிற்குள் கொண்டுவர முடியவில்லை. அவரை இங்கு அனுப்பி வைக்க எந்த நாடும் தயாராக இல்லை.

அவரை ஏன் இங்கு கொண்டுவர முடியவில்லை என்பதற்குப் பல காரணங்கள் உண்டு.  கடைசியாக அவரைப் பற்றி பேசிய நமது பிரதமர், டாக்டர் மகாதிர்,  ஜோலோ,  தஞ்சம் அடைந்திருக்கும் நாடு ஒரு வலிமையான நாடு என்றும்  அந்த நாட்டோடு சண்டைபோட்டு  நம்மால் வெற்றி பெற முடியாது என்றும் கூறியிருந்தார். அது எந்த நாடு என்று அவர் குறிப்பிடவில்லை!  நம்மைப் பொறுத்தவரை அது ஏதோ ஒரு சீன நாடாகத்தான் இருக்கும்  என்பது தான் நமது அனுமானம். அவ்வளவு தான்!

அதே சமயத்தில் இங்கே ஜாகிர் நாயக் என்னும் இஸ்லாமிய அறிஞர் தஞ்சம் புகுந்திருக்கிறார்.  இவர் இந்தியாவால் தேடப்படும் ஒரு குற்றவாளி.  இவரும் ஊழல் பெருச்சாளி என்பது தான் அவர்களின் குற்றச்சாட்டு. பணச்சலவை, பண பரிமாற்றம்,  பயங்கரவாதத்தை ஊக்குவித்தல் என்பது இவரின் பொழுது போக்கு! இவரை எந்த ஓர் இஸ்லாமிய நாடும் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லாத நிலையில் இவர் இந்த நாட்டை விட்டு அவரால் வெளியேற முடியவில்லை.  சோறு கண்ட இடம் சொர்க்கம் என்கிற நிலையில் தான் இவர் இருக்கிறார்!

கோடீஸ்வரர் ஜோலோவை ஏதோ ஒரு நாடு மலேசியாவிடம் ஒப்படைக்க தயாராக இல்லை. காராணம் ஜோலோ தான் பிறந்த நாடான மலேசியாவில் தனக்கு நீதி கிடைக்காது என்கிறார்!

இதையே தான் ஜாகிர் நாயக்கும் சொல்லுகிறார். தான் பிறந்த நாடான இந்தியாவில் தனக்கு நீதி கிடைக்காது என்கிறார்!

நமது மலேசிய ;பிரதமர், டாக்டர் மகாதிர் வேறு மாதிரி சொல்லுகிறார்! கோடிசுவரர் ஜோலோவுக்கு மலேசியாவில் நீதி கிடைக்கும் ஆனால் இஸ்லாமிய அறிஞர் ஜாகிர் நாயக்கிற்கு இந்தியாவில் நீதி கிடைக்காது என்கிறார்! இப்போது நமது பிரதமர் இன்னொரு நாட்டிற்கும் பிரதமரோ என்று நமக்கும்  நினைக்கத் தோன்றுகிறது!

நமது வேலை இந்த காமெடிகளையெல்லாம் பார்த்து இரசிப்பதை தவிர வேறு என்ன செய்ய முடியும்!

No comments:

Post a Comment