Saturday 2 November 2019

பட்டியலை வெளியிடுங்கள்...!


சுவாராம் விடுத்த கோரிக்கையை நாமும் ஆதரிக்கிறோம்.

தீவிரவாத அமைப்புக்களோ,  பயங்கரவாத அமைப்புக்களோ எந்தப் பெயரைச் சொன்னாலும் சரி அரசாங்கம் அதன் பட்டியலை பொது மக்களின் பார்வைக்கு வெளியிட வேண்டும் என்பதில்  சுவாராமுடன் சேர்ந்து நாமும் அரசாங்கத்திற்கு அழைப்பை விடுக்கிறோம். 

இப்படி செய்வதில் பல பிரச்சனைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க முடியும். 

பயங்கரவாதம் அல்லது தீவிரவாதம் என்பது எப்படி தீர்மானிக்கப்படுகின்றது என்பது விளக்கப்பட வேண்டும்.

சான்றுக்கு சமீபத்தில் ஏற்பட்ட குளறுபடிகள்.  விடுதலைப்புலி ஆதரவாளர்கள் என்று சொல்லி கைது செய்யப்பட்ட 12 பேர்  பற்றியான செய்திகள் எந்த அடிப்படையில் கைது செய்யப்பட்டாரகள் என்கிற விவரம் தெரியாமல் நாம் இன்னும் காத்துக் கிடக்கிறோம்.

மாவீரர் தினத்தன்று அஞ்சலி செலுத்த வந்தவர்கள் பயங்கரவாதிகள் என்று முத்திரைக் குத்துவது எந்த வகையில் நியாயம் என்பது நமக்குப் புரியவில்லை!

விடுதலைப்புலிகளின் மேல் உலகத் தமிழர்களுக்கு ஓர் அனுதாபம் உண்டு. ஈழ விடுதலைக்காக பல இலட்சம் பேர் தங்கள் உயிரைக் காவு கொடுத்திருக்கின்றனர்.  அது ஒரு விடுதலைப் போராட்டம்.  எந்த வகையிலும் அதனைப் பயங்கரவாதமாக எடுத்துக்கொள்ள முடியாது.

இப்போது மலேசிய காவல்துறை செய்த இந்தக் கைதுகள் தமிழர்களை உலக அரங்கில் தலைக்குனிவை ஏற்படுத்துவதாகவே அமைந்திருக்கிறது. ஒரு நினைவு தினத்தைக் கொண்டாடியவர்களைக் கைது செய்து அவர்களைப் பயங்கரவாதிகள் என முத்திரைக் குத்துவது பைத்தியக்காரத்தனத்தின் உச்சம்!

அப்போதும் சரி இப்போதும் சரி தலைவர்கள்  யாரேனும் இறந்து போனால் அவர்களுக்காக மரியாதை செய்வது என்பது காலங்காலமாக நடந்து வருகின்ற ஒரு நடைமுறை தமிழர்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அது இரங்கல் தினம் அல்லது நினைவு தினம், மரண தினம் என்று எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.

இது  போன்ற  கைது  நடவடிக்கைகளைப் பார்க்கும் போது வீட்டில் இறந்து போகும் பெரியவர்களுக்குக் கூட மரியாதை செய்வது என்பது  பயங்கரவாதப் பட்டியலில் வருமோ என்று யோசிக்க வேண்டியுள்ளது!

எது தான் பயங்கரவாதம் என்பதைப் பட்டியிலிடுங்கள்.  பயங்கரவாதிகளையும் பட்டியிலிடுங்கள். நாங்களும் தெரிந்துகொள்ளுகிறோம்.

அப்பாவிகளைக் கைது செய்து அவர்களின் குடும்பங்களை நோகடிக்காதீர்கள் என்பது தான் நமது வேண்டுகோள்!

No comments:

Post a Comment