Sunday 3 November 2019

தமிழர் புறக்கணிப்பு வேண்டாம்..!


வருகின்ற டிசம்பர் மாதத்தில் மேலவை உறுப்பினர்களில் பலர் விடை பெறுகிறார்கள் என அறிகிறோம்.

முந்தைய பாரிசான் கட்சியைச் சேர்ந்த செனட்டர்கள் பலரின் தவணைக் காலம் முடிவடைகிறது.  அந்த இடங்களை நிரப்ப புதிய முகங்களை எதிர்பார்க்கலாம்.

நமக்கும் சில கோரிக்கைகள் உண்டு. 

சமீப காலங்களில்  மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய செனட்டர்களில்  ஒருவர் கூட தமிழர் இல்லை என்பதாக நாம் அடையாளம் காண்கிறோம்.

அப்படி என்றால் பி.கே.ஆர்.  கட்சியிலோ அல்லது ஜனநாயக செயல் கட்சியிலோ  தமிழர்கள் இல்லை என்கிற நிலை நிலவுகிறதா என்பது நமக்குத் தெரியவில்லை.  அப்படி ஒரு நிலை இல்லை என்பது நமக்குத் தெரியும். 

ஆனாலும் ஏனோ  இந்தக் கட்சிகளால் தமிழர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். உண்மையைச் சொன்னால் இந்தக் கட்சிகளின் அடிமட்டத் தொண்டர்கள்  என்றால் அவர்கள் தமிழர்களாகத்தான் இருப்பார்கள். ஆனால் பதவி என்று வரும் போது அந்தப் பதவிகளுக்கு மட்டும் தமிழர்கள் தகுதி இல்லாதவர்கள் என முத்திரைக் குத்தப்படுகிறார்கள்.

இதனை ஒரு சரியான நடைமுறை என நம்மால் ஏற்றுக்கொள்ளப்பட முடியாது.

நாம் அனைவரும் மலேசியர்கள் என்கிற எண்ணத்தை வளர்த்துக் கொள்ள  வேண்டும்  என்று நாம் பேசுகிறோம்; எழுதுகிறோம். அது சரி தான்.  ஆனால் அது இந்தியர்களுக்கு மட்டும் என்றால் அது சரியாக வராது.  

இப்போது கல்வி சம்பந்தமான ஒரு பிரச்சனை என்றால் சீனர்கள் கல்வி துணை அமைச்சரைச் சந்திக்கிறார்கள். அது சரியோ தவறோ அவர்கள் குறைகளைச் சொல்ல அவர்களுக்கு ஒரு இடம் இருக்கிறது. அது இந்தியர்களுக்கு இல்லை!

செனட்டர்களில் தமிழர்கள் இல்லையென்றால் அவர்கள் பிரச்சனைகளை மேலவையில் எழுப்புவதற்கு ஒருவரும் இருக்கப் போவதில்லை.  இந்திய செனட்டர்கள் என்றால் அவர்கள் பொதுவான பிரச்சனைகளைத்தான்  பேசுவார்கள். தமிழ் சம்பந்தப்பட்ட பிரச்சனையோ, தமிழர் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளையோ அவர்கள் பேச மாட்டார்கள். காரணம் அவர்களில் பலருக்கு தமிழர் நலன், தமிழ் மொழி பற்றி அறியாதவர்கள்.

அதனால் தான் நாங்கள் சொல்ல வருவதெல்லாம் இந்தப் புதிய முகங்களில் தமிழர்களில் இருக்க வேண்டும் என்கிறோம். காலங்காலமாக தமிழர்கள் ஓரங்கட்டப்பட்டு விட்டார்கள்.  அது தொடரக் கூடாது என்பதே நமது விருப்பம்.

புறக்கணிப்பு வேண்டாம்!

No comments:

Post a Comment