Wednesday 13 November 2019

ஏன் இந்த அவசரம்...?

பத்து நாடாளுமன்ற தொகுதியின்   நடப்பு நாடாளுமன்ற உறுப்பினர்  பி.பிரபாகரன் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்திருக்கிறது!

பதினான்கு அரசு சாரா அமைப்புக்கள் இந்த கோரிக்கையை எழுப்பியிருக்கின்றன.  அத்தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்  தியான் சுவா மீண்டும் அத்தொகுதியில் போட்டியிட வேண்டும் என்பதாக அவர்கள் கூறுகின்றனர்.

அவர்கள் சொல்லுவதில் ஏதும் தவறுகள் இருப்பதாக நாம் சொல்ல முடியாது.   அப்படி நாம் சொல்லவும் இல்லை.

ஆனாலும் ஏன் இந்த அரசு சாரா அமைப்புக்கள் இந்த அளவுக்கு அவசரம் காட்டுகின்றன?

தியான் சுவாவையும் பிரபாகரனையும் நாம் ஒப்பிட முடியாது. தியான் சுவா மிகவும் அனுபவப்பட்டவர். கல்வி தகுதியிலும் மிகுந்த உயர்ந்த நிலையில் இருப்பவர். அவருடைய அரசியல் பாணி என்பது வேறு. 

பிரபாகரன் நிலை வேறு.  அவர் இன்னும் ஒரு சட்டத்துறை மாணவரே. அவருடைய நேரம். திடீரென நாடாளுமன்ற உறுப்பினரானார்! அவர் தனது கல்வியை முடித்து அரசியலுக்கு வந்திருந்தால் அவருக்கும் பல தகுதிகள் வந்திருக்கும். அதில் சந்தேகமில்லை.

நாம் கேட்கிற கேள்விகள் எல்லாம் இந்த அமைப்புக்கள் ஏன் இந்த அளவுக்கு அவசரம் காட்டுகின்றன என்பது தான். அவருடைய பதவி காலம் முடியும் வரை அவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துவிட்டு போகட்டுமே.  இப்போது அவரை ராஜினாமா செய்யுங்கள் என்றால் அங்கு மீண்டும் இடைத் தேர்தல் வரும்.  அதற்கான செலவுகள் பல இலட்சங்களைத் தாண்டும்.  நாட்டில் பணம் என்ன கொட்டிக் கிடக்கின்றதா? 

அரசு சாரா அமைப்புக்களுக்குப் பணம் வேண்டும்; மானியங்கள் வேண்டும். ஒரு வேளை அவர்கள் எதிர்பார்த்த அளவு பிரபாகரனிடமிருந்து கிடைக்கவில்லையோ!  அதற்குத்தான் இந்த அவசரமோ1

எது எப்படி இருந்தாலும் நாம் சொல்ல வருவதெல்லாம் இது தான். தேர்தல் ஆணையம் இது பற்றி ஒன்றும் சொல்லவில்லை. சொல்லாது! தியான் சுவா இது பற்றி ஒன்றும் சொல்லவில்லை.  அவர் சொல்லமாட்டார். காரணம்  அதனை அவர் விரும்பமாட்டார்.  பிரபாகரனின் பதவி காலம் முடியும் வரை நான் காத்திருப்பேன் என்பார். அவர் உண்மையான ஒரு மக்கள் தொண்டன்.

இந்த நேரத்தில் யாரும் பிரபாகரனை ராஜினாமா செய்யுங்கள் என்று சொல்ல மாட்டார்கள்.  இப்போது அவரின் ராஜினாமா தேவை இல்லாதது. அவரும் இப்போது பி.கே.ஆர். உறுப்பினர். அவர் பி.கே.ஆரைத்தான் நாடாளுமன்றத்தில் பிரதிநிதிக்கிறார். தேர்தல் காலத்தில் டாக்டர் மகாதிரே அவருக்காக பிரச்சாரம் செய்திருக்கிறார். அது சாதாரண விஷயம் அல்ல.

ஆனால் அவர் தற்காலிகம் என்பது நமக்குத் தெரியும். அவருக்கும் தெரியும்.

உங்களுடைய சுயநலனுக்காக அவசரம் காட்ட வேண்டாம் என்பதே நமது  வேண்டுகோள்.

இருந்துவிட்டுப் போகட்டுமே!

No comments:

Post a Comment