Sunday 17 November 2019

காலிட் சமாட் என்ன கூற வருகிறார்?

கூட்டரசு பிரதேசஅமைச்சர் காலிட் அப்துல் சமாட், நடந்து முடிந்த இடைத்தேர்தலில் பக்காத்தானின் தோல்வி பற்றி என்ன கூற வருகிறார்?

தோல்விக்கு பிரதமர் டாக்டர் மகாதிர் மட்டும் காரணம் என்று சொல்லுவது தவறு. அனைத்துத் தரப்பினரும் அந்த தோல்விக்கு பொறுப்பு ஏற்க வேண்டும் என்கிறார்.

நம்பிக்கை கூட்டணி அந்த தோல்விக்குப் பொறுப்பேற்கலாம். அது தான் உங்களுக்கு மகிழ்ச்சி தரும் என்றால் அப்படியே செய்து விட்டுப் போங்கள். அது தான் பிரதமர் மகாதிருக்கு மகிழ்ச்சியளிக்கும் என்றால்  அதனையும் செய்துவிட்டுப் போங்கள்.

ஆனால் இன்னொரு பக்கமும் உண்டு. இந்த தோல்விக்கு டாக்டர் மகாதிர் தான் காரணம் என்று பொது மக்கள் நினைத்தால் அப்போது என்ன சொல்லுவீர்கள்? 

என்னைப் போன்ற சராசரிகள் எல்லாம் இந்த இடைத் தேர்தல் தோல்விக்கு டாக்டர் மகாதிர் தான் காரணம் என்றால் என்ன சொல்லப் போகிறீர்கள்?  இதில் ரகசியம் ஒன்றுமில்லை.  டாக்டர் மகாதிர் தான் காரணம் !

ஒரு செயல்படாத அரசாங்கத்தை இப்போது வழி நடத்துபவர் யார்? அதற்குக் காரணம் நம்பிக்கை கூட்டணியா? தலைமை பீடத்தில் இருந்து கொண்டு வலுக்கட்டாயமாக அரசாங்கத்தை வலுவிழக்கச் செய்து கொண்டிருப்பவர் யார்?

செயல்படாத ஓர் அரசாங்கத்தை மக்கள் ஏன் ஆதரிக்க வேண்டும்? ஒரு சில விஷயங்களில் நாடு சரியான பாதையில் போகிறது என்பது உண்மை தான்.  ஆனால் பொது மக்களுக்கு அதனால் என்ன பயன்? 

சராசரி மக்களின் தேவை என்ன?  விலைவாசிகள் குறைய வேண்டும்.  இது வரை குறையவில்லை!  பெட் ரோல் விலை குறைந்தால் விலைவாசிகள் குறையும் என்றார்கள்.  அப்படியெல்லாம் குறைவதாகத் தெரியவில்லை.  வேலை வாய்ப்புக்களை உருவாக்க வேண்டும் என்கிறார்கள். இருந்த வேலையும் போய் இப்போது நடு ரோட்டில் நிற்க வேண்டிய நிலை.  இலஞ்சம் ஒழிந்தது என்றார்கள். இப்போது அது மீண்டும் தலைத் தூக்குகிறது என்கிறார்கள்! 

அதாவது குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால் முன்னாள் பிரதமர் நஜிப்பின்'பொற்காலம்'  மீண்டும் தொடருமோ என்கிற ஐயம் மக்களுக்கு ஏற்பட்டு விட்டது!

உடனடியாக நாட்டில் நல்லது நடக்க வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். அது நடப்பதாகத் தெரியவில்லை. அதற்குக் காரணம் பிரதமர் மகாதிர் தான் என்பது மக்களின் முடிவு.

காலிட் சமாட் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் பிரதமர் டாக்டர் மகாதிர் தான் காரணம்!

No comments:

Post a Comment