Friday 15 November 2019

இது தான் மடத்தனம்...!


"இந்திய வீடமைப்பு மேம்பாட்டாளர்கள் தங்கள் தொழிலில் வல்லுநர்களாகவும், சிறந்த கட்டடக்  கலைஞர்களாகவும் இருக்கின்றனர். நல்ல தொழில் தேர்ச்சி பெற்றவர்களாகவும் திகழ்கின்றனர்.  அதே சமயத்தில் தங்களது தொழில் வளர்ச்சி பெறுவதற்கான எந்த ஒரு வாய்ப்பையும் அவர்கள் பெற்றிருக்கவில்லை. சட்டப்படி அவர்கள் தொழிலை  அரசாங்கத்தில் (எஸ்.எஸ்.எம்) பதிவு பெற்றவர்களாக இல்லை. வங்கியில் வரவு செலவு கணக்கு இல்லை. வருமான வரி ஆவணங்கள் இல்லை!" 

ஆமாம் இத்தனை இல்லைகளை வைத்துக் கொண்டு தான் வீடமைப்பாளர்கள் தங்களுக்கு அரசாங்கம் உதவி செய்ய வில்லை என்று குற்றம் சாட்டுகிறார்கள். பெரிய குத்தகையாளர்களுக்கே அனைத்தும் கிடைக்கின்றன என்றால் அவர்களிடம் தேவையான ஆவணங்கள் இருக்கின்றன. கடன் கிடைப்பதற்கான  முன்னுரிமை அவர்களுக்குத் தான் தரப்படும்.  இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.

அத்தனை இல்லைகளை பட்டியலிடுபவர் வேறு யாருமில்லை. பேரா மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் சிவநேசன். அவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்புண்டு.  அவர் அரசாங்கத்தில் உள்ளவர்.   அரசாங்கம் இந்திய வீடமைப்பாளர்களுக்கு உதவி செய்ய தயாராக இருக்கிறார்கள்.  ஆனால் அவர்களிடம் போதுமான ஆவணங்கள் இல்லை என்பது தான் அவர்கள் மீது அவர் வைக்கும் குற்றச்சாட்டு.

நாம் இப்போது தெரிந்து கொண்டது பேரா மாநில நிலவரம் மட்டுமே.  அப்படி என்றால் மற்ற மாநிலங்களின் நிலவரம் எப்படி? ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் அல்லவா! மற்ற மாநிலங்களின் நிலவரமும் அப்படித் தானே இருக்க வேண்டும்!  

என்னைச் சுற்றிலுள்ள ஒரு சிலரை கூர்ந்து பார்க்கிறேன். ஒரு   வீடமைப்பாளர் - இத்தனைக்கும் தொழிலுக்குப் புதியவர் - அவரிடம் குறை சொல்ல ஒன்றுமில்லை. இன்னும் ஒரு சில நண்பர்கள். பல ஆண்டுகளாக தொழிலில் கொட்டை போட்டவர்கள்.  அரசாங்கம் எங்களுக்கு எந்த காலத்திலும் உதவுவதில்லை என்று பேசுபவர்கள். ஆனால் எந்த ஒரு ஆவணமும் இல்லாதவர்கள்! ஏன் இல்லை என்று கேட்டால் "அதுக்கு வருமான வரி, அது இதுன்னு பணம் கட்டணும்! எதற்கு இதெல்லாம்!"  என்று பதிலளிப்பவர்கள்!

ஒன்று மட்டும் நாம் சொல்லலாம்.  வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று நினைப்பவர்கள். பெரிய அளவில் பேர் போட வேண்டும் என்று நினைப்பவர்கள். எந்த சவால்களையும்  ஏற்கத் தயார் என்று எண்ணுபவர்கள் - இவர்கள் தான் முறைப்படி எதனையும் செய்யத் தயாராக இருப்பார்கள்.

மற்றவர்கள் எல்லாம் ஏதோ அன்றாடக் காய்ச்சிகளின் பிழைப்பை பிழைப்பவர்கள்! வந்தால் வரவு அவ்வளவு தான்! 

சிவநேசன் சொல்லுவது சரி தான். நமது தவறுகளை ஏற்றுக் கொள்ளுவோம்!

No comments:

Post a Comment