Wednesday 20 November 2019

அமைச்சரவை மாற்றமா...?

அமைச்சரவையில்  விரைவில் மாற்றம் ஏற்படும் என்பதாக பிரதமர் டாக்டர் மகாதிர் அறிவித்திருக்கிறார்.  

அவருடைய பெர்சாத்து கட்சியிலிருந்து,  ஒரு வேளை,  அவர்  ஒரு சிலரை அமைச்சரவைக்குக் கொண்டு வரலாம். இருப்பவர்களை ஒரு சிலரை வீட்டுக்கு அனுப்பி வைக்கலாம்.  அல்லது  மாற்றம் என்பதை விட அமைச்சரவை விரிவாக்கம் செய்யலாம்.

ஆனாலும் மக்களால் பெரிதாக எதிர்பார்க்கப்படும்  பிரதமர் மாற்றம் ஏற்படுமா என்பதற்கான அறிகுறி எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. 

நடந்து முடிந்த நாடாளுமன்ற இடைத் தேர்தலில்  நம்பிக்கைக் கூட்டணிக்கு ஏற்பட்ட தோல்வி என்பது  சாதாரண தோல்வி அல்ல.  யாரும் எதிர்பார்க்காத பயங்கர தோல்வி!

அதற்கு மூல காரணம் டாக்டர் மகாதிர் தான் என்பது நமது  மக்களின் கணிப்பு.  ஆனாலும் டாக்டர் மகாதிர் அதனை ஏற்றுக் கொள்ளுவார் என்று எதிர்பார்க்க முடியாது.  வழக்கம் போல மற்றவர் மீது பழிபோடுவார் என்பது நாம் அறிந்தது தான்.

இந்த அமைச்சரவை மாற்றத்தினால் டாக்டர் மகாதிர் என்ன எதிர்பார்க்கிறார்?  தான் இனி நீண்ட நாள் பதவியில் இருக்க வாய்ப்பில்லை என்று நினைக்கிறாரா? அப்படி சொல்லவும் முடியாது. அவர் அதனை எல்லாம் ஏற்றுக்கொள்ள மாட்டார்! தானே விலக வேண்டும் என்கிற முடிவை அவரே எடுத்தால் ஒழிய  அவரை யாரும் பதவி விலகுங்கள் என்று சொல்ல முடியாது. 

ஆனாலும் தஞ்சோங் பியாய் இடைத் தேர்தல் அவருக்கு ஒரு சிறிய நெருடல்களையாவது ஏற்படுத்தியிருக்கும் என நம்பலாம்.  அதன் தொடர்பில் தான் பெர்சாத்து கட்சியின் உயர்மட்டத் தலைவர்களின் சமீபத்திய சந்திப்பு என்று சொல்லலாம்.  பெர்சத்துவில் உள்ளவர்கள் நிச்சயமாக டாக்டர் மகாதிர் பதவி விலகுவதை விரும்பாதவர்கள்.  அவர் பதவியில் தொடர வேண்டும் என்பதையே அவர்கள் வலியுறுத்தியிருப்பார்கள் என நம்பலாம். தனது கட்சியினரின் ஆதரவையே அவர் விரும்புகிறாரே தவிர பக்காத்தான் கூட்டணியின் ஆதரவு அவருக்குத் தேவை இல்லை!

அதனால் தான் அவர் பக்காத்தான் கூட்டணி தலவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்த விரும்பவில்லை. .  இவர்களுடன் நடத்தினால் மோதல்கள் ஏற்படக்கூடிய வாய்ப்புக்கள் ஏற்படும்.  அதனை அவர் விரும்பமாட்டார்.

இந்த அமைச்சரவை மாற்றத்தினால் அவர் என்ன செய்ய விரும்புகிறார்? தனது பதவியை மேலும் உறுதிப்படுத்துவதாக இருக்கலாம். அல்லது தனது கட்சியினரின் பங்கேற்பை இன்னும் அதிகப்படுத்தலாம். தனது கட்சியே அதிகாரத்தில் இருப்பதை விரும்பலாம்.

எல்லாம் ஓர் அனுமானம் தான்! இது அரசியல்.  குறிப்பிட்டு சொல்ல வழியில்லை!

No comments:

Post a Comment