Sunday 3 November 2019

அடிப்படையற்ற ஒரு செய்தி..!

விடுதலைப்புலிகளின் இயக்கத்தை மீண்டும் உயிர்ப்பிக்கும் முயற்சியில் இறங்கியிருப்பதாக காவல்துறையினரால் குற்றம் சாட்டப்பட்டு, கைது செய்யப்பட்டிருக்கும் 12 பேர்களில் சிலர் பயங்கரமான துன்புறுத்தல்களுக்கு உள்ளானதாக வெளிவந்த சேய்தியை மறுத்திருக்கிறார் காவல்துறையின் தலைவர் ஐஜிபி  டான்ஸ்ரீ அப்துல் ஹமிட் பாடோர்.

இந்தக் குற்றச்சாட்டை  அவர்கள் நேரடியாகவே தங்களது குடும்பத்தினரிடம் கூறியிருக்கின்றனர். 

ஆனாலும் ஐஜிபி, ஹமிட் இதனை மறுத்திருக்கின்றார்.  பொதுவாக காவல்துறை இது நாள் வரை அவர்கள் மீதான எந்தக் குற்றச்சாட்டையும் ஏற்றுக் கொண்டதில்லை.  இப்பவும் அது தான் நடந்திருக்கிறது என்பதில் ஒன்றும் அதிசயமல்ல.

ஐஜிபி சொன்ன ஒரு கருத்து நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. அவ்ர் என்ன சொல்ல வருகிறார்?  ஆதாரத்தைக் கொண்டு வாருங்கள் என்கிறார்!  'அது சிசிடிவி ஆதாரமாக இருக்கலாம் அல்லது வேறு ஏதேனும் ஆதாரமாகவும் இருந்தால் சரி! கொண்டு வாருங்கள்" என்கிறார்!

இதற்கு நம்மிடம் என்ன பதில் உண்டு? கைதிகள் அவர்களுடைய பாதுகாப்பில். ஆதாரங்கள் எல்லாம் அவர்களிடம் தான் உண்டு. அவர்கள் கைது செய்யப்பட்டது சோஸ்மா சட்டத்தின் கீழ்.  அந்த கைதிகளை 28 நாள்களுக்கு யாராலும் பார்க்க முடியாது என்பது சட்டம். அந்த 28 நாள்களில் என்ன நடக்கிறது என்று யாருக்கும் தெரியாது. 

கைது செய்யப்பட்டு தான் மூன்று நாள்கள் இருட்டறையில் இருந்ததாகக் கூறுகிறார் ஒருவர். அடுத்த மூன்று நாள்கள் கடுமையான குளிரான அறையில் அடைத்து வைக்கப்பட்டதாக அவர் கூறுகிறார். இன்னும் அதிக நேரம் குடும்பத்தோடு அவர்கள் இருந்திருந்தால் இன்னும் பல செய்திகள் அவர்களிடமிருந்து வெளியாகி இருக்கும்.

பொது மக்களிடமிருந்து ஆதாரம் கொண்டாருங்கள் என்றால் அவர்களை காவல்துறை பார்ப்பதற்குக் கூட அனுமதிக்காத நிலையில் அவர்களிடமிருந்து எந்த ஆதாரத்தை எதிர்ப்பார்க்கிறார்? அதைவிட அவர்களிடம் இருக்கும் ஆதாரத்தை நீதிமன்றத்தில் காட்டலாமே! அவர்கள் கூறுவது பொய் என்றால் காவல்துறையே முன் வந்து சிசிடிவியை நீதிமன்றத்தில் ஒப்படைக்கலாமே! அது இன்னும் எளிதாக இருக்குமே!

சிறையில் துன்பத்தை அனுபவிக்கும் ஒரு மனிதர் பொய் சொல்ல காரணம் இல்லை. இத்தனைக்கும் இவர்கள் செய்யாத குற்றத்தை செய்ததாக வற்புறுத்தப்படுகின்றனர்.

அவர்கள் கூறுவதில் உண்மை உண்டு என்று பொது மக்கள் நம்புகிறோம். அதனை தீர்த்து வைப்பது காவல்துறையின் கடமை!


No comments:

Post a Comment