Friday 22 November 2019

அவர்களும் நமது பிள்ளைகள் தாம்..!

UPSR தேர்வில் நமது தமிழ்ப்பள்ளி மாணவர்களின்  தேர்ச்சி விகிதம் நமக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்பது உண்மையே. குறை சொல்ல ஒன்றுமில்லை.

ஆனால் நாம் தொடர்ச்சியாக 8ஏ, 7ஏ, 6ஏ   பெற்ற மாணவர்களைப் பற்றி பெருமை பட்டுக் கொண்டிருக்கிறோம். அதில் தவறில்லை. வெற்றியின் மூலம் பெறப்படுகின்ற மகிழ்ச்சியை நாம் அனைவரும் பகிர்ந்து கொள்ளுகிறோம். அதனை நாம் தவிர்க்க முடியாது.

இன்னொரு பக்கம் குறைவான மதிப்பெண்கள் எடுத்தவர்கள் அல்லது முழுமையாக தோல்வி அடைந்தவர்கள் - இவர்களையும் நாம் மறந்துவிட முடியாது.  தோல்விக்குப் பலவித காரணங்கள்.  வாழ்கின்ற சூழல், ஏழ்மை, கல்வியின் மேல் ஒருவித வெறுப்பு என்று பல காரணங்கள். 

எப்படியும் இவர்கள் இன்னும் மூன்றாண்டுகள் தொடர்ந்த படிக்க வேண்டிய சூழல் உண்டு. சிலருக்கு நான்காண்டுகள் ஆகலாம். ஆனால் அவர்கள் மீண்டும் தங்களது  SRP  தேர்வை எழுத வேண்டி வரும். அதனால் UPSR - ல் ஏற்பட்ட தோல்விவை அவர்கள் இங்கு சரி செய்து கொள்ளலாம். 

எத்தனையோ மாணவர்களை நான் பார்த்திருக்கிறேன்.  UPSR - ல் தோல்வி அடைந்தாலும் அடுத்த வருகின்ற SRP - யில் வெற்றி பெற்ற மாணவர்கள் பலர் உண்டு.  முதல் ஆறு ஆண்டுகள் கல்வியில் கவனக் குறைவாக இருந்தவர்கள் அடுத்த மூன்றாண்டுகளில் அதனை சரி செய்து விடலாம்.

அதனால் இப்போது தோல்வி அடைந்த மாணவர்களை ஒரேடியாக மட்டம் தட்டாதீர்கள்.  அவர்கள் அனைத்தையும் இழந்துவிட்டவர்கள் போல திட்டித் தீர்க்காதீர்கள்.  அவர்களுக்கும் நல்லதொரு எதிர்காலம் உண்டு. ஒவ்வொரு மாணவனும் மூன்று தேர்வுகளைத் தாண்டினால் தான் கல்லூரி, தொழிற்கல்வி, பலகலைக்கழகம் என்று அடுத்தடுத்து செல்ல முடியும். 

அதனால் அவர்கள் எதனையும் இப்போது இழந்து விடவில்லை. அடுத்த வரும் தேர்வுகளில் அவர்கள் மாறலாம். நல்லபடியாக தேர்வுகள் எழுதலாம். கெட்டிக்கார மாணவர்களாக வெற்றி பவனி வரலாம். தேவை எல்லாம் பெற்றோரின் அரவணைப்பு. அவர்களுக்கான டியூஷன் வகுப்புக்கள். அவ்வளவு தான்!

இன்றைய தோல்வி நாளைய வெற்றியாக அமைய வாழ்த்துகள்!

No comments:

Post a Comment