இதென்னடா வம்பு என்று நினைக்க வேண்டியிருக்கிறது!
நாட்டின் நிதியமைச்சர் சொல்லுகிறார்: "இந்தியர்களே! மித்ரா நிதியகத்தில் இன்னும் மூன்று கோடி வேள்ளி பயன்படுத்தப்படாமல் சும்மா வீணே கிடக்கிறது! உங்களுக்கு இருப்பது இன்னும் நாற்பது நாள்கள் தாம். அதற்குள் நீங்கள் விண்ணப்பம் செய்யுங்கள். அந்தப் பணத்தைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். பிறகு அரசாங்கத்தைக் குறை சொல்லாதீர்கள்" என்பது தான் அவர் கொடுத்த செய்தி.
தேசிய வர்த்தக சம்மேளனம், மலேசிய இந்திய தொழியியல் சங்கங்களின் சம்மேளனம் கொடுத்த தீபாவளி விருந்தின் போது நிதியமைச்சர், லிம் குவான் எங் இதனை அறிவித்திருக்கிறார்.
அவர் அறிவித்த அந்த இடம், அந்த நேரம் அனைத்தும் முக்கியத்துவம் வாய்ந்தவை. இன்று இந்திய வர்த்தகர்கள், தங்களது தொழிலை வளர்க்க, மேம்படுத்த பல இடர்பாடுகளைச் சந்திக்கின்றனர். அந்த முட்டுக்கட்டைகளில் முதன்மையானது நிதி நெருக்கடி தான்.
அதனால் தான் வர்த்தக சமூகத்திற்கு அரசாங்க உதவி தேவை என்பதற்காக இந்த மித்ரா உருவாக்கப்பட்டது. முந்தைய அரசாங்கத்திலும் செடிக் என்னும் அமைப்பு தோற்றுவிக்கப்பட்டு அந்த நிதியும் வர்த்தகர்களுக்குப் போய்ச் சேரவில்லை! அரசியல்வாதிகள் கபளீகரம் செய்து விட்டதாக செய்திகள் கூறின.
இந்த முறை நிதியமைச்சரே மித்ரா அமைப்பில் இன்னும் மூன்றுகோடி வெள்ளி பயன்படுத்தாமல் இருப்பதாகக் கூறியிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக இருந்தாலும் இன்னொரு பக்கம் மித்ரா அமைப்பின் தலைவரான அமைச்சர் வேதமூர்த்தியின் அறிக்கை வேறு மாதிரியாக இருக்கிறது!
ஆம், பொன் வேதமூர்த்தி அவர்கள் மித்ரா அமைப்பில் இனி எந்த நிதியும் இல்லை என்பதாக கை விரித்து விட்டார்! இந்த ஆண்டு இந்தியர்களின் மேம்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட பத்து கோடி வெள்ளியும் செலவிடப்பட்டு விட்டதாக அறிக்கை விட்டிருக்கிறார்!
இந்த நேர்த்தில் நம்மிடமும் ஒரு கேள்வி உண்டு. ஒருவர் இருக்கிறது என்கிறார்! ஒருவர் இல்லை என்கிறார்! இருக்கிறது என்று சொல்லுபவர் இந்தியரிடையே நல்ல பேர் வாங்கச் சொல்லுகிறாரா, தெரியவில்லை! இல்லை என்கிறவர் அரசாங்கத்திடம் நல்ல பேர் வாங்கச் சொல்லுகிறாரா, தெரியவில்லை! மூன்று கோடி வெள்ளியை அரசாங்கத்திடம் ஒப்படைத்து நல்ல பேர் வாங்குபவர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள்! ஏற்கனவே பாரிசான் ஆட்சியிலும் இது நடந்திருக்கிறதே! நிதிக்கு யாரும் விண்ணப்பம் செய்யவில்லை என்று கூறி அரசாங்கத்திடம் ஒப்படைத்துவிட்டதாகவும் அங்கிருந்து அது மாயமாய் மறைந்து விட்ட செய்திகள் எல்லாம் நாம்மிடம் உண்டே!
பொறுத்திருப்போம்! இது பற்றி இன்னும் செய்திகள் வரத்தானே செய்யும்! அது வரை காத்திருப்போம்!
No comments:
Post a Comment