Friday 1 November 2019

இவர், நாட்டின் பிரதமரா..?


ஆமாம் நாட்டின் பிரதமர் மகாதிரை நோக்கித் தான்  நாம் இந்தக் கேள்வியை  எழுப்ப் வேண்டி உள்ளது!

எல்லாக் காலங்களிலும் அவர் இந்தியர்களுக்கு  எதிரானவராகவே தன்னை அடையாளப்படுத்தி வந்திருக்கிறார். தன்னை பூமிபுத்ராக்களின் ஏகபோக தலைவனாகவும் காவலனாகவும்  காட்டிக் கொள்ளுகிறார்!

முன்பு அவர் பிரதமராக இருந்த போது இந்தியர்களின் முன்னேற்றத்திற்கு, அன்றைய அமைச்சர் சாமிவேலுவுடன் சேர்ந்து கொண்டு, தடையாக இருந்தார்.  பின்னர் அவர் சாமிவேலுவை குற்றம் சாட்டினார்.

இப்போதும் அவர் அதே நடைமுறையைப் பின்பற்றுகிறார் என்றே தோன்றுகிறது. இப்போது குறை சொல்ல பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தியைப் பயன்படுத்திக் கொள்ளுகிறார்! அவ்வளவு தான் வித்தியாசம். 

ஆனால் இப்போது அவர் செய்து வருகின்ற காரியங்கள் இந்தியர்களை வெறுப்பேற்ற வேண்டும் என்பது போல் அவரது நடவடிக்கைகள் அமைந்திருக்கின்றன. .

அவருடைய வயதுக்கும், அவருடைய அனுபவத்திற்கும் அவர் செய்கின்ற காரியங்கள் நமக்குச் சரியானதாகப்  படவில்லை! 

இந்திய சமுதாயம் என்பது அரசாங்கத்தின் உதவியோடு திட்டம் போட்டே வீழ்த்தப்பட்ட ஒரு சமுதாயம். பாரிசான் ஆட்சியில் அது நடந்தது. ஆனால் இப்போதும் தொடர்கிறது என்பது தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.  அன்று என்ன நடந்ததோ அது தான் இப்போதும் தொடர்கிறது. 

புதிய அரசாங்கம் அமைந்த போது இந்தியர்களுக்கு நிறைய எதிர்பார்ப்புக்கள் இருந்தன.  நிறைவேற்றப்படும் என்பதாக உறுதிமொழிகள் கூறப்பட்டன. 

ஆனால் டாக்டர் மகாதிர் இந்தியர்களை  தனது சொந்த நலனுக்காக பயன்படுத்திக் கொண்டார், அவர் இரண்டாவது முறையாக பதவி ஏற்ற போது அவரிடம் ஒரே ஒரு நோக்கம் தான் இருந்தது.   பிரதமர் நஜிப்பை பதவியில் இருந்து அகற்ற வேண்டும் என்பது மட்டும் தான்.  மற்றபடி அவருக்கு வேறு இலட்சியங்கள் எதுவும் இருப்பதாகத்  தெரியவில்லை.

அந்த ஒரு நோக்கத்திற்காக  வந்த  அவ்ருக்கு அந்த நோக்கம் நிறைவேறிவிட்டது.  மற்றபடி அவர் பழைய பிரதமர் தான்  

ஜாகிர் நாயக்கை அவரால் அடக்க முடியவில்லை. ஆனால் மிக  எளிதாக தமிழர்களை  விடுதலைப்புலிகள்  ஆதரவாளர்கள் என்று சொல்லி  அடக்க முடிகிறது. 

நடப்பு அரசாங்கத்தில் உள்ளவர்கள் யாரும் அவரது நடவடிக்கைகளுக்கு ஆதரவாக இல்லை என்பது நமக்குத் தெரியும்.  ஆனால் பிரதமர்  என்கிற அதிகாரத்தை நாம் அவருக்குக் கொடுத்து வைத்திருக்கிறோம்.  அதனை மிகவும் தவறான வழிகளில் அவர் பயன்படுத்துகிறார் என்பதும் நமக்குத் தெரிகிறது.

தமிழர்களிடம் தனது அச்சுறுத்தலைக் காட்டும் அவர் சீனர்களிடம் காட்ட முடிகிறதா? முடியவில்லையே! அவர்களிடம் உள்ள பொருளாதார பலத்தால் அவர்கள் பக்கம் அவரால் நெருங்க முடியவில்லை!

பிரதமர் பதவியைத் தூக்கிக் கொடுத்து விட்டோம். அவருடைய அநியாயங்களைப் பொறுத்துத் தான் ஆக வேண்டும்!

நல்லதே நடக்கும்!

No comments:

Post a Comment