Sunday 24 November 2019

நமக்கு நாமே எதிரியா...?

நமக்கு நாமே எதிரியா?  மீண்டும் நாம் நினைத்துப் பார்க்க வேண்டிய  ஒரு கேள்வி. 

ஒரு காலத்தில் நமக்கு நாமே எதிரிகளாக செயல்பட்டோம். அதனை தண்ணீர் விட்டு வளர்த்தவர்கள் அரசியல்வாதிகள்! அப்போது நாம் படிக்காத அறிவிலிகளாக இருந்தோம். அதனால் அரசியல்வாதிகள் நம்மை அடிமைகளாகப் பயன்படுத்திக் கொண்டார்கள். 

ஆனால் இப்போது நமக்கு என்ன கேடு? படித்தவர்களாக இருக்கிறோம். படித்தவன் கேடு கெட்டவனாக இருக்க முடியாது! வாய்ப்பில்லை!

தமிழ்ப்பள்ளிகளுக்காக - தமிழ்ப்பள்ளிகளின் நலனுக்காக - தமிழ் மாணவர்களின் நலனுக்காக - எத்தனையோ பேர் களத்தில் இறங்கி  வேலை செய்கின்றனர்.   பொருள் உதவி, இலவச கல்வி வகுப்புக்கள், உடல் உழைப்பு - இப்படி அவர்களால் இயன்றதைச் செய்கின்றனர். அவர்களை நாம் பாராட்ட வேண்டும்.  பாராட்ட மனமில்லை என்றால் சும்மா இருந்தால் போதும்.  படித்தவனாக இருந்தால் அவனுக்கு அந்த மனம் வேண்டும். அது தான் அவன் படித்தவன் என்பதற்கான அடையாளம்.

சமீபத்தில் படித்த ஒரு செய்தி. கிள்ளான் சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியைப் பற்றியான ஒரு செய்தி. ஓம்ஸ். ப. தியாகராஜன் தமிழ்ப்பள்ளிகளுக்கு நிறையவே பல வழிகளில் உதவி செய்தவர், உதவி செய்தும் வருகிறவர். தமிழ் சார்ந்த அமைப்புக்களுக்கும் உதவி செய்து வருபவர். தமிழர் சார்ந்த நலனுக்கும் உதவி செய்து வருபவர். சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியின் வளர்ச்சிக்கு ஓம்ஸ் ப.தியாகராஜன் பெரிய அளவில் உதவியாக இருந்திருக்கிறார். அவர் சேவையை மதித்து சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியில் "ஓம்ஸ் ப.தியாகராஜன் அறிவகம்" என்பதாக ஒரு கட்டிடத்திற்கு அவரின் பெயரைச் சூட்டி இருக்கிறார்கள். தவறு ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் இன்னொரு நாளிதழ் அது பற்றியான செய்தி வெளியிடும் போது "ஓம்ஸ் ப.தியாகராஜன்" பெயரை முற்றிலுமாக அழித்துவிட்டு செயதியை வெளியிட்டிருக்கிறார்கள்! 

இது ஒரு தவறான நடைமுறை. தமிழர்களுக்குள்ளேயே தமிழர்கள் அடித்துக் கொள்ளட்டும் என்கிற நடைமுறை. திருவள்ளுவருக்கு காவி உடை உடுத்துவதற்கும் இதற்கும் வித்தியாசம் ஒன்றும் இல்லை. தமிழ் இனத்தை அழிக்கத் துடிக்கும் திராவிடர்களின் திருவிளையாட்டு என்று சொல்லலாம்!

ஓம்ஸ் ப.தியாகராஜன் மட்டும் அல்ல இன்னும் இந்த சமுதாய நலனுக்காக பலர் உழைத்துக் கொண்டிருக்கின்றனர். பொருள் உதவி, உழைப்பு இன்னும் பல வழிகளில். அவர்களை நாம் மனதார பாராட்டுவோம். நம்மால் முடியாவிட்டாலும் செய்கிறவர்களைப் பாராட்டுவோம்.  

நமக்கு நாமே  துரோகிகளாக மாற வேண்டாம். இந்த சமுதாயத்திற்குத் துரோகம் செய்பவர்களை துரத்தியடிப்போம்!

No comments:

Post a Comment