புத்தகங்களிலும் அனுபவங்கள் கிடைக்கும்
புத்தகங்கள் படிப்பதின் மூலமும் நாம் அனுபவத்தைத் தேடிக் கொள்ளலாம். குறிப்பாக தொழில் அதிபர்களின் வாழ்க்கையைப் படிப்பதால் நல்லதொரு அனுபவம் கிடைக்கும்.வாழ்க்கையில் முன்னேறியவர்கள், குறிப்பாக வியாபாரத் துறையில் முன்னேறியவர்களின் புத்தகங்கள் உங்களுக்கு நல்ல பயன் அளிக்கும்.
அவர்கள் தங்களின் அனுபவங்களை நமக்குக் கொட்டிக் கொடுத்திருக்கிறார்கள். நாம் எதிர்பார்க்காத அனுபவங்களை எல்லாம் அவர்கள் பெற்றிருக்கிறார்கள். தொழில்களில் படு வீழ்ச்சி அடைந்திருக்கிறார்கள். படு மேன்மையும் அடைந்திருக்கிறார்கள்.
அடுத்து என்ன என்று தான் அவர்கள் சிந்தித்தார்களே தவிர தொழிலை விட்டு ஓடிவிட வேண்டும் என்கிற சிந்தனை அவர்களுக்கு ஏற்பட்டதே இல்லை! எங்கே தவறு செய்தோம் என்பதைத் தீவிரமாக ஆராய்ந்தறிந்து அந்த தவறுகள் மீண்டும் நிகழாமல் இருக்க உறுதி செய்து கொண்டு மீண்டும் களத்தில் இறங்கினார்கள்.
வெற்றி பெற்ற இந்த தோல்வியாளர்கள் அனைவருமே வெற்றி ஒன்றே தங்களது இலட்சியமாக நினைத்து இயங்கினார்கள். தோல்வி என்பது தற்காலிகம் என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள்! பதினெட்டு தொழில்களில் தோல்வியடைந்த ஒருவர் தனது பத்தொன்பதாவது தொழிலான ஒரு விற்பனையாளனாக மாபெரும் வெற்றி பெற்றார். வெற்றியாளனாக வலம் வந்த ஒருவர் அனைத்தையும் இழந்து ஓட்டாண்டியாக காலையில் கண் விழிக்கிறார். நாளிதழைப் பார்க்கிறார். வங்கிகளின் வேலை நிறுத்தம்! அது போதும் துள்ளி எழுகிறார். அந்த ஒரு நாளில் பேச்சு வார்த்தைகளை மீண்டும் நடத்தி சரிந்து போன தனது தொழிலைத் தூக்கி நிறுத்துகிறார்!
இதெல்லாம் வெற்றியாளர்கள் மூலம் நமக்குக் கிடைக்கும் செய்திகள். அவர்களின் வாழ்க்கையை நீங்கள் படித்தால் தோல்வி என்பது தற்காலிகம் என்பதை உணர்வீர்கள். எனக்கு இந்த புத்தகங்கள் மிகுந்த உந்துதல்களைக் கொடுத்தன. தொழிலில் நீடிக்க வைத்தன.
நாம் வாழ்க்கையில் ஒவ்வொன்றையும் நல்லது கெட்டது அனைத்தையும் அனுபவித்துத் தான் நாம் முன்னேற வேண்டுமென்றால் அது ஏற்புடையது அல்ல. மற்றவர்களுடைய அனுபவங்களை நம்முடைய அனுபவங்களாக எடுத்துக் கொண்டு - அதனை ஒரு படிப்பினையாக எடுத்து கொண்டு - முன்னேற முயற்சி செய்தல் அவசியம்.
கோடிசுவரரான ஒரு தொழில் அதிபர் தான் செய்து வரும் தொழிலில் அவர் தனது பொருள்களைச் சில்லறை வணிகர்களுக்குக் கடன் கொடுத்தது இல்லை என்கிறார். அதனால் அவருடைய தொழிலுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பது அவரின் அனுபவம். நமக்கும் அது பொருந்தும். வீட்டுத் தளவாடப் பொருள்களை விற்பனை செய்யும் இங்குள்ள பாக்கிஸ்தானிய வணிகர்கள் நூறு வெள்ளி பொருளை மூன்று மாத தவணையில் நூற்று முப்பது வெள்ளிக்கு விற்கின்றனர். இது ஒரு வியாபார தந்திரம். இதெல்லாம் நமக்கும் அனுபவங்கள்.
அனுபவங்கள் நம்மைச் சுற்றியும் கிடைக்கும். புத்தகங்களிலும் கிடைக்கும். புத்தகங்களில் பெரிய பெரிய கோடிசுவரர்களின் அனுபவங்கள் மிகத் தாராளமாக கிடைக்கும்! அவர்கள் வணிகர்கள் மட்டும் அல்ல. வணிக அறிஞர்கள் என்று கொள்ளலாம்!
No comments:
Post a Comment