தொழில் உங்களைத் தனித்துக் காட்டும்
ஆச்சி மசாலா நிறுவனர் - பத்மசிங் ஐசக்
நாம் வேலை செய்வதையே தொழிலாகக் கொண்டு விட்டோம்!
நம்மிடையே ஒரு நாட்டு வழக்கு உண்டு. கோழி மேய்த்தாலும் கும்பனியில் மேய்க்க வேண்டும் என்பார்கள்! அதாவது அரசாங்கத்து வேலைக்கு ஈடு இணையில்லை என்பது அதன் பொருள். இதற்கு ஒரு விளக்கம் சொல்லுவார்கள். அதைக் கேட்பதற்கு ஒரு கூட்டம்! இப்படியே நம் மீது ஒரு கருத்தைத் திணித்து நம்மை அதற்கு அடிமையாக்கி விட்டார்கள்.
ஒரு காலக் கட்டத்தில் வெளி நாடுகளுக்குப் போய் தங்களது தொழிலை கடல் வழியாக அறிமுகப்படுத்தியவர்கள் தமிழர்கள். அந்த அளவுக்கு தமிழர்களின் வாணிபம் கொடிகட்டிப் பறந்தது.
இப்போது வெளி நாடுகளுக்குப் போய் தான் நமது பொருள்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்கிற நிலையெல்லாம் இல்லை. கணினியை வைத்துக் கொண்டே பல காரியங்களைச் சாதித்து விடலாம்.
தமிழ் நாட்டிலிருந்து என்னன்னவோ பொருள்கள் இங்கு வந்து குவிகின்றன. அதே போல நமது நாட்டிலும் உள்ளூரில் தயாராகும் பொருள்களும் ஏராளம். ஒரு சில பொருள்கள் பிற இனத்தவரிடமும் பிரபலமாக விளங்குகின்றன.
இது விளம்பர உலகம். வாய் வழி மூலம் என்பதும் உண்டு. அது தரத்தில் உயர்தரமானவை என்றால் மட்டுமே எடுபடும். விளம்பரம் என்பது மிக விரைவில் மக்களிடம் போய் சேருகின்றன. வாய்மொழியோ அல்லது விளம்பரமோ எல்லாமே தரத்தின் அடிப்படையில் தான் விற்பனை ஆகின்றன.
எது எப்படியிருந்தாலும் இது வணிக உலகம். மேலே நாம் பார்க்கும் மசாலா "கிங்" என்று போற்றப்படும் பத்மசிங் ஐசக் ஏதோ பணக்கார வம்சத்தில் இருந்து வந்தவர் என்று நாம் நினைத்தால் மிக மிகத் தவறு! சாதாரண ஏழைக் குடும்பம் தான். அடித்துப் பிடித்து தனது வாழ்க்கையை வளமாக்கிக் கொண்டார். எல்லாம் கடின உழைப்பு தான். சும்மா எதுவும் வருவதில்லை. உழைக்க தயாராய் இருந்தால் உலகமே நமது கைக்கு வரும்! இன்று பத்மசிங் தொழில் உலகில் தமிழகத்தின் அசைக்க முடியாத மனிதராக வலம் வருகிறார்.
எது அவரைத் தனித்துக் காட்டுகிறது? தொழில் உலகம் தான். இன்று அவருடைய பொருள்கள் இந்தியாவில் மட்டும் அல்ல உலக அளவில் உள்ள இந்தியர்களால் பெரிதும் வரவேற்கப்படுகின்றன. அவருடைய பொருள்களைத் தெரியாதவர்கள் இல்லை என்கிற அளவுக்குப் பிரபலமாக இருக்கின்றன!
அவர் வெறும் பணத்திற்காகவா மதிக்கப்படுகிறார்? இல்லை! அவருடைய சாதனைகளுக்காக போற்றப்படுகிறார்! ஆமாம்! அது சாதனை தான். குறிப்பிட்ட சில பொருள்களை வைத்துக் கொண்டு அவைகளை இலட்சக்கணக்கில் உலகெங்கும் வினியோகம் செய்வது சாதனை தானே!
யாரால் இந்த சாதனைகளைச் செய்ய முடியும்? ஒரு தொழிலதிபரால் தான் செய்ய முடியும்!
தொழிலில் உங்கள் சாதனைகளைக் காட்டுங்கள்! தனித்து நில்லுங்கள்!
No comments:
Post a Comment