பொதுவாக இந்த கோவிட்-19 தொற்று காலக் கட்டத்தில் பலர் வேலை இழந்திருக்கின்றனர்.
நாம் பெரும்பாலும் தொழிற்சாலைகளில் வேலை செய்பவர்களைத் தான் தெரிந்து வைத்திருக்கிறோம்.
சுற்றுலாத் துறையையே அதிகம் நம்பியிருக்கும் நமது ரிக்ஷா ஓட்டிகளைக் கொஞ்சம் கூட யோசித்துப் பார்த்ததில்லை! அவர்களுக்கும் குடும்பங்கள் உண்டு. பள்ளி செல்லும் பிள்ளைகள் உண்டு. வீட்டு வாடகை உண்டு. இப்படி உண்டு! உண்டு! உண்டு! என்று நிறைய உண்டுகள் இவர்களுக்கும் உண்டு!
ஆனால் நாம் இவர்களைப் பார்ப்பது என்பது குறைவு தான். எல்லா நகரங்களிலும் இவர்களைப் பார்க்க முடிவதில்லை. நாம் தினசரி வாழ்க்கையில் இவர்களைப் பார்க்க முடியாததினால் நாம் இவர்களை மறந்தே போனோம்.
ரிக்ஷாக்கள் இப்போது பெரும்பாலும் சுற்றுப்பயணிகளால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. சுற்றுப்பயணிகள் போகின்ற இடங்கள் என்றால் அது மலாக்கா, பினாங்கு போன்ற நகரங்கள் தான். மற்ற நகரங்களில் ரிக்ஷாக்கள் இருப்பதாகத் தெரியவில்லை.
சுற்றுலாப் பயணிகள் என்றால் உள்நாட்டு, வெளிநாட்டுப் பயணிகள் சேர்ந்தே இவர்களின் பிழைப்புக்கு வழிவகுக்கின்றனர். வெளிநாட்டவர்களின் வரவை முற்றிலுமாக இழந்துவிட்டோம். உள்நாட்டிலும் பல கட்டுப்பாடுகள். தூரப்பயணங்கள், வெளி மாநிலப் பயணங்கள் எல்லாம் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் இருக்கின்றன.
சுற்றுலாத்துறையைச் சார்ந்த பல துறைகள் இன்று வெறுமையாகி விட்டன. ரிக்ஷா தொழில் என்பது சுற்றுலாத் துறையில் ஒரு சிறிய பகுதி தான். ஆனால் சுற்றுலாத் துறையின் பெரும் பங்காற்றியவை என்றால் அது பேரூந்துகளாகத்தான் இருக்க வேண்டும். அவைகள் எல்லாம் ஒரே மாதத்தில் அனைத்தும் தவிடுபொடியாகி விட்டன. புத்தியுள்ளவர்கள் பிழைத்துக் கொண்டனர். புத்தி இல்லாதவர்கள் குமுறிக் கொண்டிருக்கின்றனர்!
சுற்றுலாத் துறை என்பது நாட்டிற்கு நல்ல வருவாய்த் தருகின்ற ஒரு துறை. அதனை நசிந்து போகாதபடி பார்த்துக் கொள்வது அரசாங்கத்தில் கடமை. மேல்மட்டத்திலிருந்து கீழ்மட்டம் வரை ஆயிரக்கணக்கானோர் பணி புரிகின்றனர். பல குடும்பங்கள் இந்தத் துறையை நம்பி வாழ்கின்றனர்.
சுற்றுலாத் துறை இன்னும் முழுமையாக இயங்கவில்லை என்பது வேதனை தான். ஆனால் யாரையும் குற்றம் சொல்ல முடியாது. உலகமெங்கும் இந்த நிலை தான். விமானங்கள் இன்னும் முழுமையாக இயங்கவில்லை. அதனால் வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகள் இல்லை. உள்நாட்டிலும் மக்கள் முழுமையாக நடமாட முடியவில்லை. அதிலும் தடைகள்.
இந்த நீண்ட கால கோவிட்-19 க்குப் பின்னர் சுற்றுலாத் துறையின் நிலை என்ன ஆகும் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இந்த நிலையில் ரிக்ஷாகாரர்களின் நிலை என்ன ஆகும் என்பதும் தெரியவில்லை.
பார்ப்போம்! பொறுத்திருப்போம்!
No comments:
Post a Comment