Saturday, 31 December 2022
வலிகளும் வேதனைகளும்!
Friday, 30 December 2022
பழிவாங்கும் நடவடிக்கையே!
நமது நாட்டு துணைப்பிரதமர், ஸாஹிட் ஹாமிடி அவர்களால் இந்தியர் விவகாரங்களுக்காக, அவருக்கு வேண்டிய யாரோ ஒருவரை நியமித்து அதன் மூலம் இந்தியர்களின் வாழ்க்கையைப் பிரகாசிக்க நினைத்ததற்கு நன்றி! நன்றி!
Thursday, 29 December 2022
ஏற்றுக்கொள்ள முடியவில்லை!
Datuk Seri Ramesh Rao
இந்தியர்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு நபரான டத்தோஸ்ரீ ரமேஷ் ராவ் இந்தியர்களின் சிறப்பு அதிகாரியாக, துணைப்பிரதமர் ஸாஹிட் ஹாமிடியால் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்!
இந்தியர்களின் மேம்பாடு பற்றி பேசியவர், தொடர்ந்து பேசியவர், பிரதமர் அன்வார் இப்ராகிம் மட்டுமே! தேர்தல் காலங்களில் தொடர்ந்து பேசியவர். ஆனால் இன்று ஏனோ இந்த நியமனம் பற்றி எந்தக் கருத்தையும் உதிர்க்கவில்லை! அவர் செய்ய வேண்டிய வேலையை துணைப்பிரதமர் செய்கிறார்!
நமக்குத் தெரிந்தவரை துணைப்பிரதமர், ஒற்றுமை அரசாங்கத்தில் குழப்பத்தை ஏற்படுத்துகிறார் என்றே தோன்றுகிறது! ஒற்றுமை அரசாங்கத்தை சோதனை செய்து பார்க்கிறார்! ஏற்கனவே அவர் செய்த நியமனத்தை பிரதமர் ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் இப்போது ரமேஷ் ராவை களம் இறக்கி இருப்பதாகத் தெரிகிறது! காரணம் இது இந்தியர் பிரச்சனை. இந்தியர்கள் தான் 85 விழுக்காட்டினர், பொதுத்தேர்தலில் அன்வாரை ஆதரித்தவர்கள்! அதனால் ஸாஹிட் ஹாமிடி இப்போது இந்தியர்களைப் பழி வாங்குகிறார் என்று நாம் நினைப்பதில் தவறில்லை!
ஸாஹிட் ஹாமிடி பற்றி புதிதாகத் தெரிந்து கொள்ள ஒன்றுமில்லை. அவர் மீது 47 நீதிமன்ற வழக்குகள் உள்ளன. அவருக்கு உதவியாளராக இருந்தவர் ரமேஷ் ராவ்! இதனைவைத்தே ரமேஷ் ராவின் குணாதிசயங்கள் எப்படி இருக்கும் என ஊகிக்கலாம்! அவரும் தனது சேவையைப்பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் ஸாஹிடியையும் முன்னாள் பிரதமர் நஜீபையும் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள் என்கிறார்! இதைத்தான் வேலிக்கு ஓணான் சாட்சி என்று சொல்லுவார்கள்!
பொதுவாகவே ஸாகிட் ஹாமிடி மேல் நமக்கு நம்பிக்கை இல்லை அவரை அறிந்தவர்கள் 'இவரா துணைப்பிரதமர்?' என்று ஆச்சரியம் அடைவார்கள்! ஆனால் என்ன செய்வது? ஒற்றுமை அரசாஙத்தின் தூண்களில் அவரும் ஒருவர்! அவரை விட்டுவிட்டு ஒற்றுமை அரசாங்கத்தை அமைக்க முடியாது! நாம் அதில் தலையிடவில்லை. தலையிட வேண்டிய அவசியமுமில்லை.
ஆனால் அவர் துணைப்பிரதமர் என்பதற்காக இந்தியர்களைப் பழி வாங்க நினைப்பது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. தேசிய முன்னணி ஆட்சியில் இருந்த போது இந்தியர்கள் புறக்கணிக்கப்பட்டார்கள். ம.இ.கா. வும் அவர்களோடு சேர்ந்து ஆட்டமாய் ஆடினார்கள். இப்படி ஒரு சூழலில் இந்தியர்கள் தேசிய முன்னணியை ஆதரிக்கவில்லை. ஆதரிக்கவில்லை என்பதற்காக இப்போது, அன்வார் இப்ராகிம் பிரதமராக இருக்கும் போதும், பழிவாங்கும் வேலையில் தேசிய முன்னணியும், ம.இ.கா. வும் ஈடுப்பட்டிருக்கின்றன என்பதாகத்தான் நாம் இந்த நியமனத்தை எடுத்துக் கொள்கிறோம்!
இது நியாயமான நியமனம் அல்ல என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம்!
Wednesday, 28 December 2022
அவரின் கீழ் வரவில்லை!
Tuesday, 27 December 2022
இது அவரது இயல்பே!
டாக்டர் மகாதிர்
டாக்டர் மகாதிர் மீண்டும் தனது இயல்பான குணத்தைக் காட்ட ஆரம்பித்துவிட்டார்!
அவரின் இயல்பான குணம் என்பது தன்னைப்பற்றி மற்றவர்கள் பேச வேண்டும். அப்படி பேச வேண்டுமென்றால் அவர் பதவியைவிட்டு விலகிய பின்னர் யார் யார் பதவிகளுக்கு வந்தார்களோ அவர்களையெல்லாம் குறை கூற வேண்டும்! இது தான், இன்றுவரை, அவர் கடைப்பிடித்து வரும் ஒரு கொள்கையாகவே வைத்திருக்கிறார்!
அவர் பதவியில் இருந்த காலத்தில் அனுதினமும் வெளிநாட்டு தூதர்கள், பத்திரிக்கையாளர்கள், முக்கியமான பதவிகளில் உள்ளவர்கள் - இப்படி பல்வேறு தரப்பினர் அவரைச் சந்திப்பதை வாடிக்கையாகக் கொண்டிருந்தனர். அவருக்கு நிறைய மதிப்பு, மரியாதைகள் இருந்தன. உலகளவில் பெயர் பெற்றிருந்தார். அதனால் அவருக்கு ஏகப்பட்ட மாலை மரியாதைகள்!
அப்படியே சுமார் 22 ஆண்டு காலம் பதவியில் இருந்து கொண்டு ஆரவாரமான வாழ்க்கையை வாழ்ந்தவர். பிரச்சனை என்னவெனில் ஓய்வுக்குப் பின்னரும் அதே ஆரவாரம் தொடரும் எனும் அவரது எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை! இதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. பதவியில் இருக்கும் போது தான் வரவேற்பும், மாலை மரியாதைகளும்! பதவியில் இல்லாத போது அனைத்தும் அர்த்தமற்றதாகிவிடும்!
இப்படி ஒரு சூழலை அவர் எதிர்பாரக்கவில்லை! இதன் பின்னர் உலக அரசியல்வாதிகளை ஈர்ப்பதற்கும், உள்ளூர் மக்களை ஈர்ப்பதற்கும் பலவித உபாயங்களையும் உபத்திரவங்களையும் அவர் கையாண்டார். அதில் முக்கியமானது 'பிரதமர் சரியில்லை!' என்கிற அவரின் குற்றச்சாட்டு!
டாக்டர் மகாதிர் தனது பணி ஒய்வுக்குப்பின்னர் வந்த அனைத்து பிரதமர்களையும் குறை கூறாமல் விட்டதில்லை! ஒவ்வொரு பிரதமரும் அவரிடம் ஏதோ ஒரு வகையில் பணி செய்தவர்கள் தாம். துணைப்பிரதமராகவும் இருந்தவர்கள்! ஆனால் அவர் அனைவரையுமே குற்றம் சொன்னார்.
இங்கு ஒன்றை நாம் கவனிக்க வேண்டும். மலேசியா இந்த அளவுக்கு மிக மோசமான ஒரு சூழல் ஏற்படுவதற்கு டாக்டர் மகாதிரே காரணம் என்பது தான் பலரது குற்றச்சாட்டு. அன்று இவர் செய்த பல தவறுகள் தான் நாட்டின் இன்றைய நிலைக்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது. அவரோ, தான் செய்த தவறுகள் தெரியக்கூடாது என்பதற்காக அவருக்குப் பின் வந்த பிரதமர்களைத் தொடர்ந்தாற் போல குறை சொல்லிக் கொண்டிருக்கிறார்!
எப்படி இருந்தாலும் மக்கள், கடந்த பொதுத்தேர்தலில், அவருக்குச் சொல்ல வேண்டியதை சொல்லிவிட்டனர். இப்போது அவரது ஆதங்கத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்! அவ்வளவு தான்! எந்தக் காலத்திலும் தனது இயல்பை மாற்றிக்கொள்ள முடியாதவர்!
Monday, 26 December 2022
மீண்டும் ம.இ.கா. வா?
இந்திய சமூகத்தின் சிறப்பு அதிகாரி: ரமேஷ் ராவ்
பிரதமர் அன்வார் அவர்களின் நியமனம் என்று நான் சொல்ல மாட்டேன்! எப்படியோ ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு நியமனம்!
துணைப்பிரதமராக ஸாஹிட் ஹமிடியை நியமித்ததில் நமக்கு ஆட்சேபணையில்லை. அது ஒற்றுமை அரசாங்கத்தின் தலைவிதி. அதனை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.
ஆனால் நமக்கு ஹமிடி மேல் எந்த நல்லெண்ணமும் இல்லை. அவர் இந்தியர்களைப் புறந்தள்ளியவர். ஒதுக்கி வைத்தவர். அவரின் அமைச்சுக்குக் கீழ் இந்தியரின் விவகாரங்கள் அமைய வேண்டும் என்பது ஏற்றுக்கொள்ள இயலாது! அது இந்தியர்களைக் கிண்டல் செய்வது போல உள்ளது!
தேசிய முன்னணி எல்லாகாலங்களிலும் இந்தியர்க்கு எதிரான கட்சியாகவே இருந்து வந்திருக்கிறது. அவர்களோடு சேர்ந்து ம.இ.கா.வும் செயல்பட்டு வந்திருக்கிறது. இரு கட்சிகளுமே கூட்டுக் களவாணிகள்!
இப்படி இந்தியர்களால் வெறுத்து ஒதுக்கப்பட்ட ம.இ.கா. என்னும் பேரழிவை இப்போது ஸாஹிட் ஹமிடி அந்தக் கட்சியைச் சார்ந்த ஒருவரையே சிறப்பு அதிகாரியாக நியமித்திருப்பது எந்த வகையிலும் நியாயமாகத் தெரியவில்லை! அதற்கு ஏதோ ஒரு பின்னணி இருக்க வேண்டும். ஆனால் அது நமக்குத் தேவையில்லை!
நமது தேவை என்பது இந்தியர் விவகாரங்கள், பிரதமர் துறையின் கீழ் வரவேண்டும். அது தான் நமக்கு நம்பிக்கையைக் கொடுக்கும். அங்கும் ஏதோ ஒருவரையல்ல. அங்கும் குறைந்தபட்சம் துணை அமைச்சர் தகுதியில் ஒருவரை நியமிக்க வேண்டும்.
இப்போது, நம்மைப் பொறுத்தவரை, இந்த துணைப்பிரதமரின் கீழ் இந்தியர்க்கான சிறப்பு அதிகாரி நியமனம் என்பதெல்லாம் இந்திய சமுதாயம் ஏற்றுக் கொள்ளாது! ஏற்கனவே சொன்னது போல இது போன்ற நியமனங்கள் இந்தியர்களைக் கேவலப்படுத்துவதற்குச் சமம்! அதுவும் ஹமிடி போன்றவர்கள் இந்தியர்களை மனிதர்களாகக் கூட மதிப்பதில்லை.
நாம் சொல்ல வருவதெல்லாம் இந்தியர் விவகாரங்கள் பிரதமர் துறையின் கீழ் வரவேண்டும். அதன் அதிகாரிகளாக நிச்சயமாக ம.இ.கா.வினர் வரவே கூடாது. கட்சி சார்பற்றவராகக் கூட இருக்கலாம். ஆனால் சமுதாயத்தை அறிந்தவராக இருக்க வேண்டும்.
இந்தியர் விவகாரங்கள் என்பது சாதாரண விஷயம் அல்ல. அவர்களுக்குள்ள பிரச்சனைகள் ஏராளம். பிரச்சனைகளை அணுக, தீரக்க நல்ல திறமையாளர்கள் தேவை. இதனை ஏதோ ஒர் அதிகாரியைப் போட்டால் போதும் என்றால் அடுத்த ஐந்து ஆண்டுகளை வீணடிப்பதாகும். எதுவும் ஆகப்போவதில்லை! நாம் யாரை வேண்டாம் என்கின்றோமோ மீண்டும் மீண்டும் அவர்களைக் கொண்டு வந்து நம் கண்முன் நிறுத்தினால் நிச்சயமாக மக்களின் வரிப்பணம் பாழ்!
இந்த நியமனம் வீணடிப்பே!
Sunday, 25 December 2022
இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்!
அனைத்து கிறிஸ்துவ பெருமக்கள்
அனைவருக்கும்
எங்களது
கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகள்.
CCCCCCCCCCCCCCCCCCCCCCCCCCCCCCCCCCCCCCCCCCCC
Saturday, 24 December 2022
வீரம் பிறக்க இத்தனை ஆண்டுகளா!
சமீபகாலமாக ஒரு செய்தி ம.இ.கா.வினர் மிகவும் துணிச்சலோடு பரப்பிக் கொண்டிருக்கின்றனர்!
ஆமாம்! 25 ஆண்டுகளுக்கு முன்னர் பினாங்கு மாநிலத்தில், அன்வார் இப்ராகிம் துணைப்பிரதமராக இருந்த போது, பேசிய பேச்சு ஒன்று இப்போது பரவலாக ம.இ.கா.வினரால் மக்களின் கவனத்திற்குக் கொண்டுவர மிகவும் பிரயாசைப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்!
அவர் பேசியதாவது: "நான் நினைத்தால் பினாங்கு மாநிலத்தில் கோவில்களில் மணியோசையே கேட்கமுடியாதபடி செய்ய முடியும்!" என்று அவர் கூறியதாக இப்போது அதனை ஒரு புகாராக,இந்தியர்களின் கவனத்திற்குக் கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன!
இப்படி ஒரு பதிலை துணைப்பிரதமர் கூறுவதற்கான காரணங்கள் என்ன? அவர் முன் வைக்கப்பட்ட கேள்வி தான் என்ன என்பது அவர்களுக்கும் தெரியவில்லை! நமக்கும் தெரியவில்லை! கேள்வி என்ன என்பது தெரிந்தால் தானே கொடுக்கப்பட்ட பதில் சரியா, தவறா என்று நாம் சொல்ல முடியும்?
இதில் கவனிக்கப்பட வேண்டிய முக்கிய விஷயம் என்னவென்றால் அந்த 25 ஆண்டு கணக்கை எடுத்துக் கொண்டால் அப்போது நம்பிக்கைக் கூட்டணி ஆட்சியில் இல்லை! அது ஒரு முக்கியமான விஷயம். ஆட்சியில் இருந்தவர்கள் யார்? தேசிய முன்னணி தான். அதாவது ம.இ.கா.வினர்! அந்த காலகட்டத்தில் பதவியை அனுபவித்தவர்கள் ம.இ.கா.வினர். பதவியை அலங்கரித்தவர்கள் ம.இ.கா. வினர்! இந்தியர்களின் பெயரைச்சொல்லி வயிறு வளர்த்தவர்கள் ம.இ.கா.வினர். இந்தியர்களின் பெயரைச் சொல்லி இந்தியர்களை மொட்டை அடித்தவர்கள் ம.இ.கா.வினர்! பட்டம் பதவிகளோடு சுகபோகங்களை அனுபவித்தவர்கள் ம.இ.கா.வினர்! எல்லாமே அவர்கள் தான்!
தங்களை வீராதி வீரர்களாக வேடம் போடும் இந்த கொள்ளைக் கூட்டம் அப்போது எங்கே போனது என்பது தான் நமது கேள்வி. அது இந்தியர்களின் உரிமை என்பது தானே உங்கள் வாதம்? அந்த உரிமைக்காக ஏன் உங்கள் வாயைத் திறக்கவில்லை? இப்படித்தானே எங்களது உரிமைகள் அனைத்தையும் இந்த சமுதாயம் இழந்தது? இந்திய சமுதாயத்தின் உரிமைகள் பறிபோவதற்கு ம.இ.கா. தான் காரணம் என்பதைத் தானே இப்போது நாங்கள் சொல்லி வருகிறோம்! அதைத்தானே இந்த நிகழ்வின் மூலம் நீங்கள் உறுதிப் படுத்துகிறீர்கள்!
பதவியில் இருந்த போது அமைதியாக இருந்துவிட்டு, நல்லபிள்ளையாக இருந்துவிட்டு, இந்த சமுதாயத்தை அடகு வைத்துவிட்டு, இந்த சமுதாயத்தை கூறுபோட்டு விற்றுவிட்டு, பதவிகள் பறிபோன காலத்தில் நியாயம் பேச வருகிறீர்களோ? எங்களது உரிமைகள் பறிபோனதால் தானே இந்த சமுதாயம் இன்று நிலைகெட்டு தடுமாறி நிற்கிறது? உரிமைகள் போனால் தானே ம.இ.கா.வை இந்திய சமுதாயம் புறக்கணித்தது
கடைசியாக, அன்று அன்வார் பேசியதை ஏன் அன்றே உங்களால், அன்றே பேசி, அன்றே தீர்வு காணாமல், எங்களது உரிமைகளை விட்டுக் கொடுத்துவிட்டு இப்போது நியாயம் பேச வருகிறீர்கள்? ஒன்று தெரிகிறது: உங்களிடம் ஒரு பிரச்சனையைக் கொண்டுபோனால் அதற்குத் தீர்வு காண 25 ஆண்டுகள் பிடிக்கும் என்கிற உண்மையை இப்போதாவது ஒப்புக் கொண்டீர்களே!
கோழைகள்! கொத்தடிமைகள்!
Friday, 23 December 2022
பிரதிநிதித்துவம் தேவையா?
இன்று நம்மிடையே பேசுபொருளாக இருப்பது "இந்தியர்களுக்கு இந்தியர்களின் பிரதிநிதித்துவம் இல்லாத போது உங்களின் பிரச்சனைகளுக்கு யாரைத் தேடி போவீர்கள்?" என்கிற கேள்வி எழுப்பபபடுகிறது.
நாம் அதனைப் புரிந்து கொள்கிறோம். இந்தக் கேள்வியை எழுப்புபவர்கள் பெரும்பாலும் ம.இ.கா. வினர் தான்! ம.இ.கா. தலைவர்கள் தாம்! நாம் உங்கள் தயவு வேண்டாம் என்னும் சொல்லும் போது அவர்கள் இப்படி கேள்வி கேட்கிறார்கள். அவர்கள் தயவைத் தேடிப் போன போது அவர்கள் நம்மை கண்டு கொள்ளவில்லை!
நாம் இங்கு சொல்லி வருவதெல்லாம் அதாவது இந்தியர்களின் மனக்குறை என்னவென்றால் நம்மைப் பிரதிநிதிக்கிறோம் என்று சொன்னவர்கள் நம்மைப் பிரதிநிதிக்கவில்லை என்கிற குற்றச்சாட்டு தான்! சுருக்கமாகச் சொன்னால் கடந்த பல ஆண்டுகளாக இந்தியர்களை யாரும் பிரதிநிதிக்கவில்லை என்பது தான் நிதர்சனம்! இந்தியர்களின் பிரதிநிதித்துவம் என்பது தோல்வியடைந்து விட்டது!
அதனால் தான் நமக்கு எந்தப் பிரதிநிதித்துவமும் வேண்டாம் என்கிற நிலைக்கு மலேசிய இந்தியர்கள் வந்துவிட்டார்கள். இப்போது யாரைத் தேடி நாம் போவோம்? மேலே அமைச்சர்கள் இருக்கிறார்கள். ஒவ்வொரு தொகுதியுலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றனர். சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றனர். இத்தனை ஆண்டுகள் நாம் அவர்களைக் கண்டு கொள்ளவில்லை. அதனால் என்ன? இனிமேல் நாம் அவர்களை வேலை வாங்குவோம். அவர்கள் ஒன்றும் மறுக்கவில்லையே! நாம் அவர்களை பயன்படுத்திக் கொள்ளவில்லை! அதுதான் பிரச்சனை!
இன்னொன்றையும் நான் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். சிங்கப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைத்து இனங்களையும் தானே பிரதிநிதிக்கின்றனர். அவர்கள் இந்தியர்களையா தேடி ஓடுகிறார்கள்? நாம் மற்ற இனத்தவர்களைப் பயன்படுத்திக் கொள்வதில்லை! அவ்வளவு தான்.
இனி மலேசிய இந்தியர்களின் பிரச்சனை என்பது அரசாங்கத்தின் பிரச்சனை. நமது பிரச்சனைகளை அரசாங்கத்திற்குக் கொண்டு செல்லுவது நாடாளுமன்றத்தில் இந்தியப் பிரதிநிதிகள் இருக்கிறார்கள். அரசாங்கம் அவர்களின் உதவியை நாடலாம். அரசாங்கம் தான் பொறுப்பேற்க வேண்டும். பழங்குடி மக்களின் பிரச்சனைகளுக்கு அரசாங்கம் தானே தீர்வுகளைக் கண்டுவருகிறது? நமது பிரச்சனைகளும் அப்படி தான்.
இந்தியர்களைப் பிரதிநிதிக்கிறோம் என்று கூறியவர்களை நம்பி இந்திய சமுதாயம் ஏமாந்தது தான் மிச்சம்! இனி அரசாங்கம் தான் அந்தப் பொறுப்புக்களை ஏற்றுக்கொள்ல வேண்டும். ஏன் வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுக்காக தனி கட்சி எதுவும் இல்லையே! அங்கங்கு உள்ள கட்சிகளில் இணைந்து தானே பலர் அரசியலில் பங்கேற்கின்றர்.
இனி புதிய பாதையில் தான் மலேசிய இந்தியர்கள் பயணிக்க வேண்டும்!
Thursday, 22 December 2022
இந்தியத் தலைவர்களால் மட்டுமே முடியும்!
நாம் இத்தனை ஆண்டுகள் கட்டிக்காத்துவந்த 'இந்தியத் தலைவர்களால் மட்டுமே முடியும்!' என்கிற நம்பிக்கை சில ஆண்டுகளாக சரிந்து வருவதைப் பார்க்கும் போது இது சரியா, தவறா என்பது நமக்கும் புரியவில்லை!
ஒரு வேளை "இந்தியத் தலைவர்களால் மட்டும் தான் முடியும்!" என்று மீண்டும் மீண்டும் நம் தலையில் அடித்து அடித்து அப்படி ஒரு நிலையை உருவாக்கி விட்டார்களோ!
இது ஏதோ ஒரு வகையில் தோட்டப்புற கலாச்சாரமாக இருக்குமோ? ஆமாம், தோட்டப்புறங்களில் பிரச்சனைகள் வரும்போது பெரிய கங்காணியைப் போய் பார்க்கும் போக்கு மக்களிடம் இருந்ததே! அதன் நீட்சியாகத்தான் ம.இ.கா.தலைவர்களைப் போய் பார்த்து அரசாங்கப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணப்படுகின்ற பழக்கதோஷம் நமக்கு ஏற்பட்டிருக்கிறதோ!
ஆமாம், தோட்டப்புறங்களிலே ஒரு குறுகிய எல்லைக்குள் இருந்தோம். அங்கு தமிழர்கள் தான் இருந்தார்கள். அவர்கள் தான் பிரச்சனைகளைத் தீர்த்து வைத்தார்கள். அங்கு தான் ம.இ.கா. தலைவர்கள் இருந்தார்கள். அவர்கள் மூலம் சில பல பிரச்சனைகள் தீர்த்துவைக்கப்பட்டன. இதுவே நாளடைவில் ம.இ.கா.தலைவர்களால் தான் முடியும் என்கிற ஒரு நம்பிக்கையை அவர்கள் மீது நமக்கு ஏற்படுத்திவிட்டது!
அதற்கேற்றாற் போல துன் சம்பந்தன் அவர்கள் வெளிநாட்டவர்களின் தோட்டங்கள் விற்பனைக்கு வந்த போது தோட்டப்பாட்டாளிகளிடம் பத்து பத்து வெள்ளியாக வசூல் செய்து தோட்டங்களை வாங்கினார். அதுவே ம.இ.கா. தலைவர்கள் மீது இன்னும் அதிகம் நம்பிக்கையை ஏற்படுத்திவிட்டது. அதுமட்டும் அவர் செய்யவில்லை. தோட்டபுறங்களில் குடியுரிமை கிடைக்க வழி செய்தார் அடையாளக்கார்டு கிடைக்க வழி செய்தார். அப்படி அடையாளக்கார்டு கிடைக்கப்பெற்றவர்களில் நானும் ஒருவன்.
துன் சம்பந்தன் அவர்களின் இது போன்ற செயல்களினால் ம.இ.கா. தமிழர்களிடையே தவிர்க்க முடியாத ஒரு கட்சியாக, தமிழர்களிடமிருந்து பிரிக்க முடியாத ஒரு கட்சியாக பின்னிப் பிணைந்துவிட்டது என்று தான் சொல்ல வேண்டும்.
அப்படி தமிழர்களுடன் பின்னிப்பிணைந்து விட்ட ஒரு கட்சி துன் சம்பந்தன் அவர்களுக்குப் பின் "தடி எடுத்தவனெல்லாம் தண்டல்" போன்ற நபர்களிடம் கைமாறி அவர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட ஒரு கட்சியாக மாறிப்போனது! அதன் பிறகு எல்லாமே மாறிப் போனது!
அந்த தண்டல்கள் தான் இப்போது இன்றுள்ள நிலைக்குப் பொறுப்பேற்க வேண்டும். இப்போது இவர்கள் "எங்களால் தான் செய்ய முடியும்" என்று துன் சம்பந்தன் காலத்து கதையையே பேசிக் கொண்டிருக்கிறார்கள்! அவர்களால் முடியாது என்பதை அவர்கள் நிருபித்து விட்டார்கள்! எவ்வளவோ நல்ல காரியங்கள் நாங்கள் செய்திருக்கிறோம் என்று அவர்கள் சொன்னாலும் ஒரு சில செய்யக்கூடாத காரியங்களைச் செய்து இந்தியரிடையே கெட்ட பெயரை சம்பாதித்துக் கொண்டார்கள்!
எங்களால் தான் செய்ய முடியும் எனறு அவர்கள் சொன்னாலும் மக்களின் தீர்ப்பு என்னவோ அவர்களுக்கு எதிராகத்தான் இருக்கிறது!
Wednesday, 21 December 2022
ஏன் இந்த இழிநிலை?
மலேசியாவில் நமது இந்திய இனம் - இந்தியர் என்று சொன்னாலும் - அது தமிழர்களைத்தான் குறிக்கும் - மிகவும் ஒரு தாழ்வான நிலைக்குத் தாழ்ந்து போனதற்கு யார் காரணமாக இருக்கக் கூடும்?
நாம் யார் யாரையோ குற்றம் சொல்லலாம். ஆனால் முக்கியமான பொறுப்பு என்றால் அது அரசாங்கத்தைத்தான் சாரும். தமிழ் மக்கள் முன்னேற்றத்திற்கு மிகப் பெரியத் தடை என்பது அரசாங்கம் தான்.
மலாய் மக்களின் இன்றைய மாபெரும் வளர்ச்சிக்கு அரசாங்கம் தானே காரணம்? சரியான திட்டம் போட்டு, திட்டங்களை நிறைவேற்றியதால் தான் இன்று இந்த அளவுக்கு வளர்ச்சியை அவர்கள் பெற்றிருக்கிறார்கள்.
தமிழர்கள் மட்டும் ஏன் வளர்ச்சி அடைய முடியவில்லை! நாட்டில் இருக்கிற அனைத்து இனங்களும் சேர்ந்து வளரும் போது தான் அது வளர்ச்சியாக இருக்கும். ஆனால் நடந்தது என்ன? ஓர் இனம் வளர்ச்சி அடைய வேண்டும் என்பதற்காக தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டார்கள் என்பது தான் உண்மை. நமக்கு எந்த வளர்ச்சியும் தேவை இல்லை என்று அரசாங்கத்தில் உள்ளவர்கள் நினைத்ததால் தான் இன்று நமது சமூகம் ஏழ்மையில் தள்ளப்பட்டிருக்கிறது.
அரசாங்கத்தில் வேலை வாய்ப்புகள் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டன. தனியார் துறைகளில் கீழ் மட்டமான வேலைகளில் மட்டுமே ஒதுக்கப்பட்டன. வேலை இல்லாததால் சிறைகள் அதிக இந்தியர்களைக் கொண்டிருக்கின்றன! ஆமாம் அவர்கள் என்ன செய்வார்கள்? கல்வியில் பல்வேறு துறைகளிலும் புறக்கணிப்பு. மேற்கல்வி என்றாலே நமக்கு இல்லை என்கிற நிலை உருவாகிவிட்டது. அரசாங்கக் கல்லூரிகளில் வாய்ப்புகள் கிடைத்தால் குறைவான கட்டணம். இந்திய சமூகத்திற்கு அதுவே பொறுத்தமானதாக இருக்கும். ஆனால் அவர்கள் தங்கள் சொந்தப்பணத்தில் படிக்க வேண்டும் அல்லது ஏதோ ஒரு கிடைத்த வேலைக்குப் போக வேண்டும். அது தான் நடந்தது. கிடைத்த வேலைகளுக்குப் போனார்கள்.
நல்ல கல்வியாளர்களைக் கொண்ட ஒரு சமூகம் நாம். இதுபோன்ற புறக்கணிப்பால் நமது இளைஞர்கள் கீழ்நிலை வேலைகளைச் செய்யும் ஒரு சூழல் ஏற்பட்டுவிட்டது.
கல்வி, வேலை வாய்ப்பு - இந்த இரண்டுமே இல்லாத ஒரு சூழல் என்றால் இந்த சமூகம் என்னவாகும்? அது தான் இன்று நம்மை மிகவும் கீழ் நிலைக்குத் தள்ளிவிட்டது. இன்று குடும்பம் குடும்பமாக வீதிகளில் தள்ளப்பட்டவர்கள் யார்? வீடு இல்லை! வேலை இல்லை! அவர்கள் வீதிக்குத்தானே வரவேண்டும்? பிச்சை தானே எடுக்க வேண்டும்? வேறு என்ன அவர்களால் செய்ய முடியும்?
நல்ல அரசாங்கம், நல்ல தலைவர்கள் இல்லாத ஒரு சமூகம் என்றால் அது இந்திய சமூகம் தான். நல்லது, கெட்டது கேட்க ஆளில்லை! அதனால் தான் இன்று நமக்கு இந்த இழிநிலை!
Tuesday, 20 December 2022
இதனை ம.இ.கா. ஏற்கிறதா?
நமது பிரதமர் அன்வார் இப்ராகிம், எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது கூறிய ஒரு குற்றச்சாட்டு இப்போது அவர் பிரதமர் ஆன பிறகும் அதே குற்றச்சாட்டை மீண்டும் கூறியிருக்கிறார்.
Monday, 19 December 2022
ஆதரவை பெற்றார் அன்வார்!
பிரதமர் அன்வார் இப்ராகிம் மீதான நம்பிக்கை தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது மிகவும் மகிழ்ச்சிக்குரிய விஷயமாகும்.
இப்படி ஒரு பிரச்சனையைக் கொண்டு வந்தவரே எதிர்கட்சியைச் சேர்ந்த முன்னாள் பிரதமர் முகைதீன் யாசின் தான். "நாடாளுமன்றத்தில், அன்வார், நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்க தயாரா?" என்று சவால் விட்டவர் முகைதீன். "சந்திக்க தயார்!" என்று அன்றே பிரதமர் அன்வார் அவருக்குப் பதில் கொடுத்துவிட்டார். அன்று அந்த வாய்ப்போரினால் ஏற்பட்டது தான் இந்த வாக்கெடுப்பு.
நாம் யாரையும் குற்றம் சொல்லவில்லை. முகைதீன் கேட்டதிலும் நியாயமுண்டு. அன்வார் தனது பலத்தை நிருபிக்க வேண்டியது அவரின் கடமை. அதனைத் தான் நாடாளுமன்றத்தில் பிரதமர் அன்வார் செய்தார். ஆனால் முகைதீன் எதிர்பாராத ஒன்று நடந்துவிட்டது! வாக்கெடுப்பில் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு அன்வாருக்கு கிடைத்ததில் முகைதீன் மகிழ்ச்சி அடையவில்லை! அதனால் தான் அவரது கட்சியினர் நாடாளுமன்றத்தின் முதல் நாளே பிரதமர் அன்வாரை அவதூறாகப் பேசி அவரைக் கேவலப்படுத்தினர்! நாமும் அவர்களைப் புரிந்து கொள்ளுகிறோம். அது கையாலாகதவனின் பேச்சு என்பது நமக்குப் புரிகிறது! விரக்தியால் பேசுவதை அலட்சியப்படுத்திவிட்டு அடுத்த வேலையைக் கவனிக்க வேண்டியது தான்!
நாடாளுமன்றத்தில் அதீதமான ஆதரவு கிடைத்த பின்னர் அடுத்த என்ன நடக்கும்? ஒன்றும் நடக்காது! மீண்டும் மீண்டும் "உனது பலத்தை நிருபிக்க முடியுமா?" என்கிற கேள்விகள் எழாது! இனி பிரதமர் தனது வேலைகளைக் கவனிக்கலாம். அவர் கவிழ்த்திடுவார்! இவர் கவிழ்த்திருவார்! என்கிற அச்ச உணர்வு தேவையில்லை!
இதற்கு முன்னர் நடந்த இரண்டு அரசாங்கங்களில், "எப்போது யார் கவிழ்ப்பார்! அவன் கவிழ்த்துவிடுவானா! இவன் கவிழ்த்துவிடுவானா! கவிழாமல் இருப்பதற்கு யாருக்குப் பதவி கொடுக்கலாம்! யாருக்கு மந்திரி பதவி கொடுக்கலாம்!" இப்படித்தான் அந்த முகைதீன், இஸ்மாயில் அரசாங்கங்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்தன! அந்த அரசாங்கங்களினால் அவர்களுக்குத்தான் இலாபம்! மக்களுக்கு எந்த வகையிலும் இல்லை!
ஆனால் இப்போது அது போன்ற பிரச்சனை எழ வாய்ப்பில்லை. நாட்டின் மேம்பாட்டுக்கான திட்டங்கள் தீட்டி மக்களின் வாழ்க்கை சூழலை உயர்த்த வேண்டும். வெறும் அரசியல் நடத்துவதற்கு இப்போதைய பிரதமர் தயாராக இல்லை. ! மக்களின் நலனை அவர் முன் வைக்கிறார். வேலையற்றோருக்கு வேலை வாய்ப்புகள் ஏற்படுத்த வேண்டும், மூடிக்கிடக்கும் நிறுவனங்கள் திறக்கப்பட வேண்டும், விலைவாசிகள் குறைய வேண்டும் என்று இப்படி பல பிரச்சனைகளோடு களம் காண்கிறார் நமது பிரதமர்.
இந்த அபரிதமான ஆதரவு என்பது அடுத்த ஐந்து ஆண்டுகள் நாட்டு மக்களுக்கு நல்ல சேவையைச் செய்ய பிரதமருக்குக் கொடுக்கப்பட்ட அங்கீகாரம் என எடுத்துக் கொள்ளலாம்.
நம்மைப் பொறுத்தவரை நாட்டு நலனே முக்கியம்! பிரதமர் அன்வார் காலத்தில் நாட்டின் முன்னேற்றம் வெற்றிகரமாக இருக்கும் என நிச்சயமாக நம்பலாம்!
Sunday, 18 December 2022
ம.இ.கா. பெரிகாத்தான் பக்கம் நெருங்குகிறதா?
Saturday, 17 December 2022
அன்வாருக்கு ஆதரவு!
ஒற்றுமை அரசாங்கம் அமையும் என்று பேசப்பட்ட போது அதனை யாரும் நம்பவில்லை! அப்போதே முன்னாள் பிரதமர் முகைதீன் தனது எதிர்ப்புக்குரலை எழுப்பினார்! முகைதீன் ஏற்கனவே நன்றாக நடந்து கொண்டிருந்த அரசாங்கத்தை கவிழ்த்தவர்! அதனால் அவர் சொல்லுவதை எளிதில் எடுத்துக் கொள்ள முடியாது. கவிழ்ப்பதில் சுகம் கண்டவர்!
ஒற்றுமை அரசாங்கம் அமைந்து ஒரு மாதம் நெருங்கிவிட்டது. வருகிற 19-ம் தேதி, திங்கள் கிழமை நாடாளுமன்றம் கூடுகிறது. அப்போது பிரதமர் அன்வார் இப்ராகிம் மீதான நமபிக்கைத் தீர்மானம் கொண்டு வரப்படும் என்பதை பிரதமர் அப்போதே அறிவித்துவிட்டார்.
ஆமாம், நம்பிக்கைத் தீர்மானம் என்பது மிகவும் முக்கியமானது. இதற்கு முன்னர் முகைதீன் , இஸ்மாயில் இருவரும் பிரதமர்களாக இருந்தபோது நடந்த கூத்தடிப்புகள் இன்னும் நினைவில் நிற்கின்றன! தங்களது அரசாங்கம் நீடிக்க வேண்டும் என்பதற்காக பலருக்குப் பதவிகள் தாராளமாக அள்ளி அள்ளிக் கொடுத்தனர்! பதவிகளோடு பணமும் துள்ளி விளையாடியது! அதனல் கோடிக்கணக்கான மக்களின் வரிப்பணம் பாழடிக்கப்பட்டது. மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டது என்பது பற்றி ஆளுங்கட்சி அரசியல்வாதிகள் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை! அவர்கள் கவலைப்பட மாட்டார்கள்! அவர்கள் நோக்கமே கொள்ளையடிப்பது தானே!
இப்போது இன்னும் சில விஷயங்கள் பொதுவெளிக்கு வந்திருக்கின்றன. ஆமாம், கோவிட் 19 வை வைத்து கோடிக்கணக்கில் பணம் செலவிடப்பட்டிருக்கின்றது. எல்லாம் மக்கள் பணம். கேட்க நாதியில்லை!
இவ்வளவு பிரச்சனைகளுக்குக் காரணம் பொறுப்பான ஓர் அரசாங்கம் இல்லை! பொறுப்பற்ற அரசாங்கத்தில் கொள்ளையடிக்கும் கூட்டம்!
ஒற்றுமை கூட்டணியில் பங்கு பெற்றிருக்கும் கட்சிகளின் தலைவர்கள் ஒன்றிணைந்து தங்களின் பிளவுபடாத ஆதரவை பிரதமர் அன்வாரின் நடப்பு அரசாங்கத்திற்குக் கொடுத்திருக்கிறார்கள். அப்படியென்றால் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஒற்றுமை அரசாங்கம் எந்தத் தடையுமின்றி தனது பணிகளைச் செய்ய எந்த ஒரு முட்டுக்கட்டையும் இராது என்பது உறுதி.
நாட்டுக்குத் தேவை நிலையான அரசாங்கம். இலஞ்சம், ஊழல் இல்லாத அரசாங்கம். விலைவாசிகளைக் கட்டுப்படுத்துதல். மலேசியர்களுக்கு வேலை வாய்ப்புகள். இப்படி பல வகைகளின் மலேசியர்கள் பழிவாங்கப்பட்டிருக்கிறார்கள். நிறைய குறைபாடுகள் உள்ளன. இவைகள் எல்லாம் களையப்பட வேண்டும். அதனை சரிசெய்வதற்கு ஒற்றுமை அரசாங்கத்தால் முடியும். பிரதமர் அன்வார் தலைமையில் அது முடியும் என்பதே மக்களின் கணிப்பு.
இந்த எதிர்கட்சிகளின் ஒப்பந்தம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நல்ல பயனை அளிக்கும் என நம்பலாம்! வாழ்த்துகள்!
Friday, 16 December 2022
சம்பளம் வேண்டாம்!
"எனக்குச் சம்பளம் வேண்டாம்!" பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம்!
இப்படி சொல்லுவதால் பிரதமர் ஏதோ ஒரு பெரிய தியாகத்தைச் செய்துவிட்டதாக நினைக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் இத்தனை ஆண்டுகள் இப்படி சொல்லுவதற்கு ஓர் ஆளில்லையே என்பது தான் நமது ஆதங்கம். இது நாள் வரை ஆட்சியில் இருந்தவர்கள் ஏன் இது பற்றி யோசிக்கவில்லை? பதவிக்காக என்ன என்ன தில்லுமுள்ளுகளைப் பண்ணினார்கள் என்பது நமக்குத் தெரியும். ஆனால் ஒரு சிறு தியாகத்தைச் செய்ய யாருக்கும் மனசு வரவில்லையே! இவர்கள் தான் ஏழைகளின் காவலன் என்று சொன்னவர்கள்! ஏழைகளின் சிரமத்தை அவர்கள் அலட்சியப்படுத்தி விட்டார்களே! அது தான் நமக்கு வருத்தம்!
பிரதமர் மட்டும் அல்ல, கொரொனா காலந்தொட்டு பேரரசர் கூட எந்த சம்பளமும் வாங்கவில்லை என்பதாக பிரதமர் கூறியிருக்கிறார். அது தான் மக்கள் மீதுள்ள அவரது இரக்கம், பற்று, பாசம். மக்கள் நலனை முன்நிறுத்துகிறார் பேரரசர். ஆனால் நமது அரசியல்வாதிகள்? நாள் முழுவதும், மக்களின் நலனே எங்கள் நலன் என்று கூவி கூவி அரசியல் பேசும் இவர்களுக்கு அப்படியெல்லாம் ஒரு சிறு தியாகத்தைக் கூட செய்யத் தயாராக இல்லை; மனம் வரவில்லை!
ஆனாலும் ஏதோ ஒரு கட்டாயத்தின் பேரில், அமைச்சரவையில் உள்ளவர்கள், தங்களது சம்பளத்திலிருந்து இருபது விழுக்காடு பிடித்தம் செய்ய அனுமதித்திருக்கிறார்கள்! வேறு வழியில்லை! அதற்காக அவர்களைப் பாராட்டுவோம். ஏதோ இப்போதாவது அவர்களது ஞானக்கண்கள் திறந்தனவே!
நமக்கு ஒரளவு சில விஷயங்கள் தெரிகின்றன. ஏன், புரிகிறது என்றே சொல்லலாம். இன்று அரசியல்வாதிகள், அமைச்சர்கள் தான் வாழ்க்கையை அனுபவிக்கின்றனர். விலைவாசி ஏற்றங்கள் எல்லாம் அவர்களில் பலருக்குத் தெரிவதில்லை! அதிலும் அவர்களின் வீட்டார் செய்யும் அடாவடித்தனம் அதிகம்! ஏதோ வானத்திலிருந்து குதித்து வந்தவர்கள் போல நினைத்துக் கொண்டு படோடப வாழ்க்கை வாழ்வதிலேயே குறியாய் இருக்கின்றனர்! குறிப்பாக மனைவியரின் சுகபோக வாழ்க்கை தான் இன்று அமைச்சர்களுக்குக் கெட்ட பெயரை ஏற்படுத்துகிறது! இதற்குச் சான்று: ரோஸ்மா நஜிப்! இது ஒன்றே போதும்!
அமைச்சர்கள் சம்பளமே வாங்க வேண்டாம் என்று நாம் சொல்ல வரவில்லை. வேலையே இல்லாமல் மக்கள் கஷ்டப்படுகிறார்களே! அவர்களை நினைத்துப் பாருங்கள். அதை நினைத்தாவது நீங்கள் பாதி சம்பளம் வாங்குங்களேன்? என்ன கெட்டுவிடப் போகிறது?
எப்படியோ பிரதமர் அன்வார் அமைச்சர்களையும் இந்த கடினமான நேரத்தில் அவர்களது சம்பளத்தைக் குறைக்கும்படி செய்திருக்கிறார். இது ஒரு கூட்டு முயற்சி. அனைவரும் சேர்ந்து பிரச்சனைகளை எதிர்கொள்வோம்!
Thursday, 15 December 2022
ஏன் ம.இ.கா. விற்கு இந்த நிலை?
Wednesday, 14 December 2022
துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி
மலேசிய வரலாற்றில், ஓர் இந்தியப் பெண்மணி, முதல் முறையாக துணயமைச்சர் என்கிற பெருமையைப் பெறுகிறார், சரஸ்வதி கந்தசாமி.
அவரை நாம் வாழ்த்துகிறோம். தமிழ்ச் சமுதாயத்தின் முதல் பெண்மணி, இந்தப் பதவியை வகிப்பவர், என்கிறை வகையில் இந்த தமிழ்ச் சமுதாயம் அவரை வாழ்த்த கடமைப்பட்டிருக்கிறது.
பி.கே.ஆர். கட்சியின் தேசிய உதவித்தலைவர் என்கிற பொறுப்பிலும் அவர் தான் முதல் இந்தியப் பெண்மணி. அதுவும் பெரிய பொறுப்பான பதவி தான். இப்போது அரசாங்கத்தில் முதல் இந்தியப் பெண் அமைச்சர் என்பதிலும் நமக்குப் பெருமையே!
அம்மையார், அரசியலில் பதவி வகிப்பவர் என்கிற முறையில் பலருக்குப் பரிட்சியமானவராக இருக்கலாம். என்னைப் போன்றவர்கள் தமிழ் மலர் பத்திரிக்கையைப் படிப்பதின் மூலம் அறிந்திருக்கிறோம். தமிழர் முன்னேற்றம் பற்றி சிந்திப்பவர், பேசுபவர். அவரது எழுத்தில் அது தெரியும். மக்களைப் பற்றி சிந்திப்பவர்களை இந்த சமுதாயம் வரவேற்கும், வரவேற்கிறது!
விருந்தும் மருந்தும் மூன்று நாள்களுக்குத் தான்.அதற்கு மேல் போகக் கூடாது போனால் திகட்டிவிடும்! பரவாயில்லை, நாம் அதனை மூன்று வாரங்களுக்குக் கொடுப்போம்.
மாலை, மரியாதை, விருந்து, உபசரிப்பு போன்றவைகள் இப்போது அவருக்கு நடந்து கொண்டிருக்கிறது. நடக்கட்டும். ஆனால் எல்லாமே அளவு தான். இந்த மாலை,மரியாதைகளின் மூலம் கடந்த காலங்களில் நாம் இழந்தவை மானம், மரியாதையைத்தான்! அவர்களுக்குப் போட்ட மாலை மரியாதைகளைக் கணக்கில் கொண்டால் பத்து பிள்ளைகளைப் படிக்க வைத்திருக்கலாம்! அளவு மீறுதல் என்பது நம்மிடம் உண்டு. அதுவே இளிச்சவாயர்கள் என்கிற பெயரைப் பெற்றுக் கொடுக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இனி அவர் தனது கடமைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க அவரை அனுமதியுங்கள். அவரது பதவி எந்த வகையில் இந்தியர்களின் முன்னேற்றத்திற்கு உதவும் என்பது இன்னும் நமக்குத் தெளிவாகத் தெரியவில்லை. இன்னும் ஒருசில வாரங்களில் அனைத்தும் தெரியவரும்.
ஆனாலும் எதற்காகவும் அவர் காத்துக் கொண்டிருக்கமாட்டார். தனது பணிகளை அவர் ஆரம்பித்துவிடுவார். அவர் இந்தியர்களையும் தனது கவனத்தில் கொள்வார் என்பதை நாம் நம்புகிறோம்.
துணை அமைச்சருக்கு நமக்கு வாழ்த்துகள்!
Tuesday, 13 December 2022
பதவி பறிக்கப்படும்!
Monday, 12 December 2022
தப்பிப்பாரா பிரதமர் அன்வார்?
Sunday, 11 December 2022
ஏமாற்றம்! ஏமாற்றம்! ஏமாற்றம்!
கடந்த சில தினங்களாக இந்தியரிடையே அதிகமாக பயன்படுத்தப் படுகின்ற வார்த்தை என்றால் அது ஏமாற்றம்! ஏமாற்றம்! ஏமாற்றம்!
ஊடகங்களிலும் சரி, எந்த ஒரு வலைத்தளங்களிலும் சரி பிரதமர் அன்வார் எப்போது அமைச்சரைவையை அறிவித்தாரோ அன்றிலிருந்து இந்தியர்கள் தமது அதிருப்தியைத் தெரிவித்து வருகின்றனர்.
தவறு ஒன்றுமில்லை! நாம் அனைவருமே மனிதர்கள். கோபதாபம் இல்லாமல் இருக்க முடியாது. கோபம் இருக்கத்தான் வேண்டும். சூடு சுரணை இருக்கத்தான் வேண்டும்.
கோபம் இல்லாததால் தான், சூடு சொரணை இல்லாததால் தான் கடந்த அறுபது ஆண்டுகளாக நாம் ஏமாற்றப்பட்டு வந்தோம்! இப்போது நமக்குக் கோபம் வருகிறது என்றால் நாம் விழித்துக் கொண்டோம் என்பது தான் பொருள். அதுவும் புதிய அரசாங்கம் அமைந்த உடனையே நமது கோபத்தைக் காட்ட ஆரம்பித்துவிட்டோம்! நன்று! நன்று! நண்பனே! பாராட்டுகிறேன்!
இந்தக் கோபம் வந்த நேரம் தான் சரியான நேரமாக இல்லை. சென்ற 2018 பொதுத் தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணி பெரும்பான்மையான தொகுதிகளை வென்று ஆட்சி அமைத்தது. அதனால் நான்கு அமைச்சர்களை நியமிக்கப்பட்டார்கள். அதனை நாம் வரவேற்றோம். ஆனால் ஆட்சி கவிழ்க்கப்பட்டது! இந்த முறையோ நம்பிக்கைக் கூட்டணிக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. அதனால் தான் ஒற்றுமை அரசாங்கம் அமையுங்கள் என்று மாமன்னர் அறிவுறுத்தினார். அப்படி ஒரு சூழலில் தான் தேசிய முன்னணியுடன் கூட்டணி அமைக்கும் துர்பாக்கிய நிலை நம்பிக்கைக் கூட்டணிக்கு ஏற்பட்டுவிட்டது. அதனால் ஏற்பட்ட விபரீதங்கள் தான் இன்றைய அமைச்சரவை!
நம்பிக்கைக் கூட்டணியுடன் இணைந்த கட்சிகள் தங்களுக்கு எத்தனை அமைச்சர் பதவிகள் வேண்டும் என்று கட்டாயப்படுத்தியதன் விளைவு தான் பல நெருக்கடிகளை ஏற்படுத்திவிட்டன. அதனால் தான் பிரதமர் அன்வாரும் எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு எல்லாக் கட்சிகளையும் அரவணைத்துக் கொண்டு போக வேண்டிய நெருக்கடி.
இந்தியர்களின் கோபம் பிரதமர் அன்வாருக்கு புரியாதது அல்ல. தெரியாததும் அல்ல. இந்தியர்களின் ஆதரவு அவருக்கு அதிகளவு இருக்கின்றது என்பது அவருக்குத் தெரியும். ஆனால் இருந்த - இருக்கின்ற -நிலைமையில் அவரால் செய்ய முடிந்ததை அவர் செய்திருக்கிறார்.
இன்றைய நிலைமை இது தான். இது முற்றுப்புள்ளி அல்ல. இன்னும் வாய்ப்புகள் உண்டு. இனி நாம் செய்ய வேண்டியது எல்லாம் கடந்த காலங்களில் ம.இ.கா.வைப் பற்றியான என்ன குறைபாடுகள் சொன்னோமோ அவைகள் எல்லாம் இந்த ஆட்சியில் நிவர்த்தி செய்யப்பட வேண்டும். இனி நமது சமுதாயத்தின் தேவைகள் என்ன என்பதைப்பற்றி சிந்தியுங்கள். குறைகளைச் சுட்டிக் காட்டுங்கள்.
தேசிய முன்னணி ஆட்சியில் நமது குறைகளைக் கொட்டுவதற்கு இடமில்லை! இப்போது அது உண்டு. போதுமான அமைச்சர்கள் இல்லை என்று சொல்லி அதனையே ஒரு குறையாக சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம்!
இனியும் ஏமாற்றம்! ஏமாற்றம்! ஏமாற்றம்! என்று சொல்லி நம்மையே ஏமாற்றிக்கொள்ளாமல் ஆக்ககரமாக என்ன செய்ய வேண்டுமோ அதனைச் செய்வோம்! அதற்கான அமைச்சர்கள் இருக்கிறார்கள். அவர்கள் செய்வார்கள் என்பது மட்டும் உறுதி!
Saturday, 10 December 2022
இந்த முடிவு சரிதானா?
"நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தில் எங்களுக்கு எந்த துணை அமைச்சர் பதவியும் வேண்டாம்" என்று ம.இ.கா. அறிவித்துவிட்டது. அவர்கள் எடுத்த அந்த முடிவு சரிதானா அதற்கான பின்னணி எதுவும் உண்டா, வேறு ஏதேனும் திட்டங்கள் உண்டா என்று சில பல சந்தேகத்தை அந்த முடிவு எழுப்பத்தான் செய்கிறது.
சமீபத்தில் நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற ம.இ.கா. நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ சரவணன் மட்டுமே. அவர் ஏற்கனவே முழு அமைச்சராக பொறுப்பில் இருந்தவர்.
இந்த முறை நம்பிக்கைக் கூட்டணி அவருக்கு எந்தவொரு அமைச்சர் பொறுப்பையும் கொடுக்கவில்லை. அதற்கு நம்பிக்கைக் கூட்டணி பொறுப்பு ஏற்க முடியாது. அது முற்றிலுமாக தேசிய முன்னணியின் பொறுப்பு. வேறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இல்லாததால் ம.இ.கா. வைச் சேர்ந்தவர்கள் துணை அமைச்சராக ஆக வாய்ப்பில்லை. ஆனாலும் மேலவை உறுப்பினராகி, துணை அமைச்சராக நியமிக்கப்படலாம். அதற்கான வாய்ப்பும் டத்தோ சிவராஜுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும் பாடாங் செராயில் நம்பிக்கைக் கூட்டணி வெற்றி பெறவில்லை. அதுவும் ஒரு பின்னடைவு.
டத்தோ சிவராஜின் தோல்வி என்பதை நாம் இப்படித்தான் பார்க்க வேண்டியுள்ளது: இந்திய சமுதாயம் ம.இ.கா. வை ஒரு நன்றிகெட்ட கட்சியாகத்தான் இந்தியர்கள் பார்க்கிறார்கள்! அப்படியே அவருக்கு அமைச்சர் பதவி கொடுத்தாலும் அவரால் இந்தியர்களுக்கு எந்த பலனும் வரப்போவதில்லை என்பதாகத்தான் இந்தியர்கள் பார்க்கிறார்கள்! எப்படியோ ஒரு கெட்ட அபிப்பிராயம் இந்தியர்களின் மத்தியில் ம.இ.கா. மீது ஏற்பட்டுவிட்டது! அவர்கள் அதை சரி செய்ய எந்த முயற்சியும் எடுக்கவில்லை. எடுக்கவில்லை என்றாலும் மன்னிக்கலாம். ஆனால் அவர்கள் தொடர்ந்து இந்தியர்களை முட்டாளாகவும், மடையர்களாகவும் நினைத்துக் கொண்டு செயல்படுவது தான் நம்மால் அவர்களை மன்னிக்க முடியவில்லை!
நம்பிக்கைக் கூட்டணியும் ம.இ.கா. வைச் சேர்ந்தவர்களை அமைச்சராக நியமிக்கவும் வாய்ப்பில்லை. அது இந்தியர்களிடையே வெறுப்பைத்தான் ஏற்படுத்தும். அதையும் நாம் கவனிக்க வேண்டும். இப்போது ம.இ.கா.வே அதனைப் புரிந்து கொண்டது எனலாம்!
ஆனால் இதற்கு அப்பால் வேறு காரணங்கள் இருக்க வாய்ப்புண்டா? ஆமாம், முன்னாள் பிரதமர் முகைதீன் தலைமையில் பெரிகாத்தான் நேஷனல் என்று ஒரு கட்சி இருப்பதை மறந்துவிட முடியாது. நடப்பு அரசாங்கத்தை கவிழ்த்தே தீருவேன் என்று கங்கணம் கட்டிக் கொண்டு திரிகிறாரே! அப்படி ஒரு சூழல் ஏற்பட்டால் ம.இ.கா. அப்படியே அங்கு அவர்கள் பக்கம் சாய்ந்து விடலாம்! வாய்ப்பில்லை என்று சொல்லிவிட முடியாது. ஏற்கனவே முகைதீன் அமைச்சரவையில் அவர்களுடன் இருந்தவர்கள் தானே ம.இ.கா.வினர்! ஒரு தனி நபராக கட்சி மாற முடியாது என்றாலும் ஒரு கட்சியாக மாற முடியும் தானே!
இன்றைய நிலையில் எங்கு போனால் தனக்கு இலாபம் என்று சந்தர்ப்பத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதாகவே நான் நினைக்கிறேன்! அதனால் தான் துணை அமைச்சர் பதவி வேண்டாம் என்று வெளிப்படையாக அவர்கள் கூறிவிட்டார்கள்!
இன்றைய நிலையில் அவர்களின் நிலைப்பாடு சரிதான்! ஆனால் அது இந்தியர்களின் நிலைப்பாடு அல்ல! அது அவசியமில்லை என்று அவர்கள் நினைக்கிறார்கள்!
Friday, 9 December 2022
அடுத்த ஐந்து ஆண்டுகள் எப்படியிருக்கும்?
Thursday, 8 December 2022
ஏன் துணைப் பிரதமர்?
பொதுவாகவே, மலேசியர்களில் பலர், டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹாமிடி, நாட்டின் துணைப் பிரதமராக நியமனம் செய்யப்பட்டிருப்பதை ஒரு பெரிய குறையாகவே கருதுகின்றனர்.. அவருடைய ஆதரவாளர்களைத் தவிர மற்றபடி அவருக்கு எந்த வரவேற்பும் மக்களிடையே இல்லை என்பது அனைவருக்குமே தெரிந்த ஒன்று தான். ஏன்? அவரது கட்சியே அவருக்கு ஆதரவளிக்கவில்லை என்பது தான் மிகவும் சோகம்!
மக்கள் அவரை வெறுக்க காரணம் அவர் ஊழல்வாதி என்பது தான். ஊழல் மன்னன் என்று பெயர் எடுத்தவர்! அதற்கேற்றாற் போல நீதிமன்றமும் அவர் மீது 47 குற்றச்சாட்டுகளைச் சுமத்தியிருக்கிறது! தனது பதவியை வைத்து குற்றச்சாட்டுகளிலிருந்து தப்பித்து விடலாம் என்று அவர் நினைத்தாலும் அவரால் தப்பிக்க இயலாது! அது தான் இன்றைய அரசு!
யாராலும் விரும்பாத ஒரு மனிதர் எப்படி துணைப் பிரதமர் ஆக முடியும் என்கிற கேள்விக்குப் பதில் சொல்லுவது மிகவும் கடினம். இதெல்லாம் அரசியல் விளையாட்டு என்பது நமக்குத் தெரியும்.
இந்த நியமனம் பிரதமரால் விரும்பி செய்யப்பட்ட நியமனமாக நாம் நினைக்க வேண்டிய அவசியமில்லை. ஒற்றுமை அரசாங்கம் தேவை என்கிற நிலை ஏற்பட்ட போது தேசிய முன்னணியின் 30 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கம் அமைக்க தவிர்க்க முடியாத சக்தியாக விளங்கினர். அவர்கள் இல்லாமல் அரசாங்கம் அமைக்க இயலாது என்கிற கட்டாய நிலை ஏற்பட்ட போது தேசிய முன்னணி ஒரு சில கோரிக்களை வைத்து ஒற்றுமை அரசில் இணைந்து கொண்டது.
அவர்களின் கோரிக்கையின்படி சில முக்கிய பதவிகள் அவர்கள் கைகளில் வந்துவிட்டன. அப்படி வந்தது தான் துணைப் பிரதமர், உள்துறை அமைச்சு போன்ற பதவிகள். அப்படி வந்தவர்கள் தான் நாம் யாரும் விரும்பாத, மக்கள் விரும்பாத, ஸாஹிட் ஹமிடி, துங்கு ஸாஃருல் போன்றவர்கள்.
அதனால் தான் பிரதமர் அன்வார் இப்ராகிம் அமைச்சரவையில் இவ்வளவு குளறுபடிகளா என நாம் பார்க்கிறோம். ஆனால் அன்வார் இப்ராகிம் இதெல்லாம் அறியாதவர் அல்ல. அவர்கள் முக்கிய பதவிகளில் இருப்பதால் மட்டும் அவர்களால தங்களது விருப்பத்திற்கு ஆட முடியாது என்பது அவர்களுக்கே தெரியும். அதனால் அவர்களும் அதிகம் ஆட்டம் காட்ட மாட்டார்கள் என நம்பலாம்.
இங்கு நாம் சொல்ல விரும்புவது துணைப் பிரதமர் பதவி மட்டும் அல்ல, அம்னோ தரப்பினர் வகிக்கும் அனைத்துப் பதவிகளும் நிச்சயமாக கண்காணிக்கப்படும் என நம்பலாம். இதற்கெல்லாம் துப்பறியும் நிபுணர்களை வைத்துத் தான் கண்காணிக்கபட வேண்டும் என்பதல்ல. வரவு செலவுகளை வைத்தே பிரச்சனைகளைக் கையாளலாம். அதனையெல்லாம் அறிந்தவர் தான் பிரதமர் அன்வார். ஏன்? நிதி அமைச்சரே அவர் தானே!
நாம் சொல்லுவது, நடப்பு அரசாங்கத்தால் எந்தப் பிரச்சனைகளையும் கையாள முடியும் என்பது தான். பயப்படத் தேவையில்லை. பார் போற்றும் அளவுக்கு அரசாங்கம், பிரதமர் அன்வாரின் கீழ் செயல்படும் என நம்பலாம்.
Wednesday, 7 December 2022
ஏன் கூடுதல் அமைச்சர்கள்?
ஏன் இந்திய சமுதாயத்திற்குக் கூடுதல் அமைச்சர்கள் தேவை? அதுவும் இந்திய அமைச்சர்கள்?
மலேசியர்கள் அனைவரும் ஒரே இனமாக செயல்பட வேண்டும். ஒரே குரல், ஒரே மக்கள் - இப்படிப் பேசுவதில் தவறு ஒன்றுமில்லை.
நமது தொகுதி சட்டமன்ற அல்லது நாடாளுமன்ற உறுப்பினர் ஒரு மலாய்க்காரர் என்றால் அல்லது சீனர் என்றாலும் ஒரு சில விஷயங்களை நாம் அவர்களிடம் கொண்டு செல்ல முடியாது! இந்தியர்கள் நிறைய பேர் குடியுரிமை இல்லாமல் இருக்கிறார்கள் என்றால் அந்தப் பிரச்சனையை ஒரு மலாய்க்காரரால் அரசாங்கத்திற்குக் கொண்டு செல்ல முடியாது! அது அவரது சமுகத்தினரிடையே சலசலப்பை ஏற்படுத்தும். மேலிடத்திலும் வரவேற்பைப் பெறாது! பிரச்சனையைக் கொண்ட செல்ல ஓர் இந்தியர் தேவை. அதில் ம.இ.கா. தோற்றுவிட்டது என்பது வேறு கதை.
அதுவே தமிழ்ப்பள்ளிகளின் பிரச்சனை என்றாலும் அதுவும் மலாய்க்காரர்களால் முழுமனதுடன் செயல்பட முடியாது. மலாய் அரசியல்வாதிகளில் பெரும்பாலும் ஒரே மொழி என்கிற கொள்கை உடையவர்கள்! அதுவும் ஒரு தடையாகவே இருக்கும். அதுவே ஒரு சீனராக இருந்தால் பிரச்சனைகளைக் கொண்டு செல்ல கொஞ்சம் எளிதாக இருக்கும். சென்ற பக்காத்தான் ஆட்சியில் துணைக் கல்வி அமைச்சராக இருந்தவர் ஒரு சீனப் பெண்மனி. சீனர் என்றால் கூட நமக்குத் தடையில்லை. ஆனால் மலாய்க்காரர்களின் போக்கு வேறு மாதிரி.
இப்போது இன்னொரு அமைச்சர், குறிப்பாக இந்திய அமைச்சர் ஒருவர், இந்தியர்களின் நலன் காக்க தேவைப்படுகிறார். இந்தியர் நலன் பற்றி யாருக்கும் அக்கறை இல்லை, இதுவரையிலும் அக்கறைக் காட்டவில்லை. அதனால் ஏற்பட்ட பாதகங்கள் என்ன? எல்லாத் துறையிலும் நாம் பின்தங்கி இருக்கிறோம். அதை ஒப்புக்கொள்ள ம.இ.கா. தயாராகயில்லை. அவர்களைப் பொறுத்தவரை நாம் முன்னேறிவிட்ட சமூகம்! அதற்கு மேல் அவர்கள் பேச தயாராகயில்லை!
அதே போல ஆலயங்கள் வரும் போதும் கொஞ்சம் சிக்கல்கள் உள்ளன. அனுமதி இல்லாத இடங்களில் எல்லாம் கோவில்களைக்கட்டி கும்பாபிஷேகம் செய்து வைத்திருக்கிறோம். ஒரு ஒழுங்கு இல்லை. யார் வீட்டு நிலத்திலோ கோயில்கள். பிரச்சனைகள் பல! அதைத் தீர்ப்பதற்கு நாம் மலாய்க்கார சட்டமன்ற உறுப்பினரிடம் போவது நமக்கே நியாயமாகத் தோன்றாது!
இப்படிப் பல பிரச்சனைகள். இந்தியர்கள் அல்லாத பிற இனத்தவர் இருந்தால் நம்முடைய பிரச்சனைகளைச் சரியாகக் கொண்டு செல்ல இயலாது. அதனால் தான் ம.இ.கா.வினர் பல பிரச்சனைகளை நம்மிடமே விட்டுவிட்டனர்!
ஆனால் இப்போது பிரச்சனைகள் பெரிதாக வளர்ந்துவிட்டன. மூடி மறைப்பதில் பயனில்லை. இப்போது நாம் முற்றிலுமாக ஒருமைப்பாட்டு கூட்டணியைத் தான் நம்பியிருக்கின்றோம். அதற்காகத்தான் நமக்கு இந்தியர்களின் நலன் காக்க இந்தியர்களின் அமைச்சர்கள் தேவை என்கிறோம்.
நலமே நடக்கும் என நம்புகிறோம்!
Tuesday, 6 December 2022
அடுத்த இந்திய அமைச்சர்?
Dato' Sivaraj Chandran
பிரதமர் அன்வார் இப்ராகிம் அமைச்சரவையில் மேலும் ஓர் இந்தியர் நியமிக்கப்படுவார் என்பதற்கான சாத்தியக்கூறுகள் தென்படுகின்றன.
பாடாங் செராய் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட தயார் நிலையில் இருந்த ம.இ.கா.வின் டத்தோ சிவராஜ் சந்திரன் ஒரு சில தினங்களுக்கு முன்னர் போட்டியிடுவதிலிருந்து விலகிக் கொண்டார்.
இப்போதைய, பிரதமர் அன்வார் இப்ராகிமின் ஒற்றுமை அரசாங்கத்தில் தேசிய முன்னணி கூட்டணி முக்கிய பங்கு வகிக்கின்றது. தேசிய முன்னணி கூட்டணியில் ம.இ.கா. வும் பங்காளிக்கட்சியாக அங்கம் வகிப்பதால் இந்த நாடாளுமன்ற போட்டியிலிருந்து விலகுவது எதிர்பார்க்கப்பட்டது தான்.
"நான் மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே இந்தத் தொகுதியில் எனது வேலைகளை ஆரம்பித்து விட்டேன். அப்படியிருக்க என்னை போட்டியிலிருந்து விலகச் சொல்லுவது நியாயமல்ல!" என்று அவர் ஏற்கனவே முரண்டு பிடித்தாலும் பின்னர் ஒற்றுமை அரசாங்கத்தின் புரிந்துணர்வுக்கு ஏற்ப அவர் போட்டியிலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்து விட்டார். இப்போது இங்கு நம்பிக்கைக் கூட்டணிக்கும் பெரிக்காத்தான் கூட்டணிக்கும் நேரடி போட்டி ஏற்பட்டிருக்கிறது.
சிவராஜின் விலகலுக்குப் பின்னால் ஒரு சில மறைமுக புரிந்துணர்வும் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அவருக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்படும் என்றும் பேசப்படுகின்றது. வெகு விரைவில் அவர் செனட்டர் ஆக்கப்பட்டு அமைச்சர் ஆகும் சூழல் ஏற்படும் என்று எதிர்பாரக்கப்படுகின்றது.
நம்பிக்கைக் கூட்டணி, பாடாங் செராயில், வெற்றி பெற்றால் இது சாத்தியமாகலாம். சாத்தியமாக வேண்டும் என்பதே நமது நம்பிக்கை. பெரிக்காத்தனையும் முகைதீனையும் வளர விடுவது நாட்டுக்கு நல்லதல்ல. கொள்ளையர்களை வளரவிடுவதற்குச் சமம்! அதுவும் முகைதீன் சொல்லவே வேண்டாம்! அவருடைய குறுகிய கால ஆட்சியில் நாட்டையே கொள்ளையடித்தவர்!
அமைச்சரவையில் ஒரே இந்தியர் தானா? என்கிற கேள்வி பல தரப்பினரிடமிருந்தும் எழுப்பப்படுகின்ற ஒரு கேள்வி. அதற்குத் தக்க விடை கிடைக்கும் என்பதை நம்பலாம்.
நல்லதே நடக்கும் என நம்புவோமோ!
Monday, 5 December 2022
இந்தா எடுத்துக்கோ!
விக்னேஸ்: சிவா! இந்தா எடுத்துக்கோ!
ம.இ.கா. தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன், கடைசியாக 'பெருந்தன்மையோடு' தங்களது வசம் இருந்த அறுபது ஆண்டுகால குப்பைகளை டத்தோஸ்ரீ அன்வார் அமைச்சரைவையில் உள்ள வி.சிவக்குமாரிடம் ஒப்படைத்துவிட்டார்!
"இனி உங்கள் பொறுப்பு!" என்று ம.இ.கா.வின் பொறுப்பை, குவிந்துகிடந்த குப்பைகளை, சிவக்குமாரிடம் ஒப்படைத்து விட்டார்!
"இனி இருப்போமோ இல்லையோ! இந்தியர்களின் ஆதரவு நமக்கு இல்லை! முற்றிலுமாக நிராகரித்துவிட்டார்கள்! எங்களுக்கும் கடைசி காலத்தில் சில 'கைமாத்து' வேலைகள் எல்லாம் உள்ளன! நாங்கள் அதைப் பார்த்துக் கொள்ளுகிறோம்! நாங்கள் சேர்த்து வைத்திருக்கும் குப்பைகளை அதிகம் கிளறாதீர்கள்! ரொம்பவும் நாறும்! அந்த நாத்த வேலையை மறந்து விடுங்கள்! மற்றபடி எங்கள் கண்களையே அப்படியே உங்களிடம் ஒப்படைத்து விட்டோம்! எங்கள் கண்கள் கலங்காதபடி பார்த்துக் கொள்வது உங்கள் பொறுப்பு! இந்தியர்கள் முன்னேறுவதும் இனி உங்கள் பொறுப்பு!"
ஆனாலும் இது பற்றி மனிதவள அமைச்சர் வி.சிவக்குமார் அவர்களின் பதில் என்னவாக இருக்கும்? நிச்சயமாக அவருக்கு இதெல்லாம் சவால் நிறைந்த வேலை. அவரால் முடியாது என்றெல்லாம் சொல்ல மாட்டார். இந்தியரின் முன்னேற்றம் என்பது அவரின் பட்டியலில் உள்ள முதல் வேலை. ஆனாலும் அவருக்கு ஒதுக்கப்பட்ட துறை என்பதோ வேறு.
இப்போது இந்தியரிடையே உள்ள முதல் பிரச்சனை என்பது வேலையில்லாப் பிரச்சனை. அவர் அந்தத் துறையைச் சார்ந்தவர். அதனால் இந்தியர்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய வேலை வாய்ப்புகளை அவரது மனிதவள அமைச்சின் மூலம் கிடைக்கச் செய்வார் என நம்பலாம். அவர் மலேசியர் அனைவருக்கும் அமைச்சர் என்பது உண்மையே. இந்தியர்களுக்குக் கிடைக்க வேண்டிய வாய்ப்பினைப் பெற்றுத்தருவதும் அவரது வேலை தான்.
அமைச்சர் சிவக்குமார் "மித்ரா" விஷயத்தில் மிகவும் நிபுணத்துவம் பெற்றவர். ஆனால் என்ன செய்வது? பாரிசான் கட்சி, இப்போது ஒற்றுமை அரசாங்கத்தின் ஒரு பகுதியாக இருப்பதால் ம.இ.கா. தலைகள் தப்பிக்கலாம் என்கிற சந்தேகம் எழுவது இயல்பு! ஆமாம், ஆனானப்பட்ட அம்னோ தலைவரே தலைநிமிர்ந்து நடக்கும் போது ம.இ.கா. தலைவர்கள் மட்டும் தலைகுனிந்தா நடப்பார்கள்!
ஆனால் அவ்வளவு சீக்கிரத்தில் நாம் ஒரு முடிவுக்கு வந்துவிட முடியாது. நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளில் ஒற்றுமை அரசாங்கம் தலையிடாது என நம்பலாம். பழையவைகளைக் கிண்டி கிளற வாய்ப்பு என்பது குறைவு தான். குறிப்பாக ஒற்றுமை அரசாங்கத்தில் உள்ள கட்சிகளில் தேசிய முன்னணி ஊழல் விஷயத்தில் முதன்மையான கட்சி என்பதில் சந்தேகமில்லை.
எப்படியோ ம.இ.கா.தலைவர் தனது கட்சியின் குப்பைகளை இடம் மாற்றி விட்டிருக்கிறார்! அது இந்தியர்களின் பிரச்சனை என்பதால் ஒற்றுமை அரசாங்கமும் அதனை அலட்சியப்படுத்த முடியாது.
எதனையும் சமாளிக்கும் திறன் புதிய அரசாங்கத்திற்கு உண்டு. சிவக்குமாரும் தனது கடமையைச் செய்வதில் தயக்கமில்லாதவர் என நம்பலாம்!
Sunday, 4 December 2022
இது முடிவல்ல!
இது முடிவல்ல! ஆரம்பம் ஒரு வேளை நமக்கு ஏற்புடையதாக இல்லாமல் இருக்கலாம்! ஆனால் இது முடிவல்ல என்பதை நம்புங்கள்.
பிரதமர் அன்வாரின் அமைச்சரவையைப்பற்றி தான் பேசுகிறேன். இதனை அனைவருமே மேலோட்டாமாகவே பார்க்கிறோமே தவிர அதில் இன்னும் பல விஷயங்கள் அடங்கியிருக்கின்றன என்பதை மறந்து விடுகிறோம்.
இருந்தாலும் இப்போது நமக்கு அன்வார் இப்படி நியாயமின்றி நடந்து கொண்டாரே என்று நமது கோபங்களைக் கொட்டித் தீர்க்கிறோம். இதில் ம.இ.கா. வினரின் பங்களிப்புக் கொஞ்சம் அதிகம். காரணம் தொடர்ந்து தோல்விகளைக் கண்டு கொண்டிருக்கும் அவர்களுக்கு இப்போது நல்லதொரு வாய்ப்பு! "ஒரு அமைச்சர் தானே! இதுக்குத்தானா ம.இ.கா. வுக்கு எதிராக ஓட்டுப் போட்டீர்கள்?" இப்படி ஒரு எகத்தாளம் அவர்கள் பக்கமிருந்து!
ஓட்டுப்போடுவது எத்தனை அமைச்சர்கள் என்பதற்காக அல்ல! இந்தியர்கள் மேம்பாடு, இந்தியர்களின் நலன், தமிழ்ப்பள்ளிகள், வேலை வாய்ப்புகள் - இதனை நோக்கித் தான் நமது பயணம் செல்லுகிறதே தவிர வேறு எந்த நோக்கமும் நமக்கில்லை.
இந்த அமைச்சரவையைப் பற்றி அவசரப்பட வேண்டிய அவசியமில்லை. ஏதோ எல்லாமே ஒரு முடிவுக்கு வந்துவிட்டது என்று அவசரப்படத் தேவையில்லை. இது அரசியல். நாளையே காட்சிகள் மாறலாம். மாறாது என்று எதுவுமில்லை.
இப்படி செய்ததற்கான நோக்கம் என்ன என்பது முழுமையாக அறிந்துகொள்ள முடியவில்லை. நாம் வேண்டுமானால் ஒருசில விஷயங்களை அனுமானிக்கலாம் என்பதைத் தவிர நம்மால் அதற்கும் மேல் அனுமானிக்க முடியாது.
அன்வாரின் பெரும் பலவீனம் அவரோடு ஒற்றுமை அரசாங்கத்தில் பங்கு பெற்றிருக்கும் அம்னோ என்பதை நாம் அறிவோம். அவர்கள் ஒற்றுமை அரசாங்கத்தில் வரும் முன்னரே ஒரு சில நிபந்தனைகளோடு அவர்கள் உள்ளே வந்தவர்கள். அந்த நிபந்தனைகளை மாமன்னரிடம் அறிவித்துவிட்டு வந்தவர்கள். அதனால் தான் அம்னோவில் உள்ள அத்தனை ஊழல்வாதிகளும் பின்புறவாசல் வழியில் உள்ளே புகுந்துவிட்டனர்!
ஆனால் நாம் புரிந்து கொள்ள வேண்டியது ஒன்று தான். அவர்கள் ஊழல்வாதிகளாக இருக்கலாம். அதனை நீதிமன்றம் கவனித்துக் கொள்ளும். ஆனால் அன்வாரின் அமைச்சரவையில் இருந்து கொண்டு அவர்களால் ஊழல் செய்ய முடியாது என்பது தான் இங்கு நாம் கவனிக்க வேண்டியது. ஊழலை அவர்களால் தொடர முடியாது. அது தான் நமக்கும் தேவை. இனி ஊழல் செய்ய வழியில்லை என்பது அவர்களுக்கே தெரியும்.
நம்முடைய நிலை எல்லாம் அவசரப்பட வேண்டாம் என்பது தான். சீனர்களின் பிரதிநிதித்துவமும் அப்படி ஒன்றும் பெரிய அளவில் இல்லை. அப்படியிருக்க நமக்கு இரண்டு அமைச்சர்கள் என்றாலே சீனர்களுக்கு அதுவும் அதிருப்தியைத் தரும்.
சீனர்களே அன்வாரின் அரசாங்கம் நிலைத்து நிற்க தங்களது பதவியை விட்டுக்கொடுக்கவும் தயார் என்று அவர்கள் கூறும் போது நாமோ ஒரு அமைச்சரா? என்று அடித்துக் கொள்ளுவதும், ஒரு சாரார் கேலி செய்வதும் தேவை இல்லாத வேலை.
ஒன்றை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.இது முடிவல்ல! ஆரம்பம் தான்! எல்லாம் சரியாகவே போய்க் கொண்டிருக்கின்றன! நம்புங்கள்!