Tuesday 20 December 2022

இதனை ம.இ.கா. ஏற்கிறதா?

 

நமது பிரதமர் அன்வார் இப்ராகிம், எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது கூறிய ஒரு குற்றச்சாட்டு இப்போது அவர் பிரதமர் ஆன பிறகும் அதே குற்றச்சாட்டை மீண்டும் கூறியிருக்கிறார்.

நமது ம.இ.கா. தலைவர்கள் அப்போதும் அந்த குற்றச்சாட்டுக்குப் பதில் சொல்லவில்லை. இப்போதும் அவர்கள் வாயைத் திறக்கவில்லை. வழக்கம் போல மௌன சாமியார்களாக வேடம் போடுகின்றனர்!

பிரதமர் சொன்ன அதே குறையை நம் மக்கள்  காலங்காலமாக சொல்லி வருகிறார்கள். ஆனால் அதனை யாரும் கண்டுகொள்ளவில்லை.

அதனையே இப்போது நாடாளுமன்றத்தில் சொல்லியிருக்கிறார். ஆமாம், இந்நாட்டில் வாழும் இந்தியர்கள், பழங்குடியினர் இரு சமூகத்தினருமே மிக மிக ஏழ்மையான நிலையில் இருக்கின்றனர் என்று பகிரங்கமாக அறிவித்திருக்கின்றார்.  நமது சமூகம் இப்படி பழங்குடியினர் அளவுக்குக் கீழே தள்ளப்பட்டுவிட்டனரே என்று நினைக்கும் போது நமக்கு அது மகிழ்ச்சி அளிப்பதாக இல்லை.

ம.இ.கா.வினர் கொஞ்சம் மனம் வைத்திருந்தால்  இந்தியர்களுக்கு நல்லதொரு முன்னேற்றத்தைக் கொண்டு வந்திருக்கலாம்.  ஆனால் ம.இ.கா. தலைவர்கள் நமது மக்களின்  முன்னேற்றத்தைக் கண்டு கொள்ளவில்லை. அவர்கள் தங்கள் சொந்த நலனில் தான் அக்கறை கொண்டிருந்தனர். துன் சாமிவேலு தொடங்கி  இப்போது தலைவர்களாக உள்ளவர்கள் வரை கொஞ்சம் கவனியுங்கள். பிச்சை எடுப்பவர்கள், சிறைத் தண்டனை அனுபவிப்பவர்கள் பெரும்பாலும்  இந்தியர்களே. ம.இ.கா.வினர் அதற்காக பெருமைப்படலாம். நம்மால் அது முடியாது. நம் இனம், நம் மக்கள், நம் இந்தியர்கள், நம் தமிழர்கள், நம் சமூகத்தவர்கள் - இவர்களெல்லாம் கேவலமாக வாழ்வதைக் கண்டு பெருமைப்பட முடியுமா?

அரசு, இந்தியர்களின் முன்னேற்றத்திற்காகக்,  கொடுத்த அனைத்து  நிதி உதவிகளும் தலைவர்களுக்குத்தான் போய்ச் சேர்ந்ததே தவிர  தமிழர்களின் முன்னேற்றத்திற்காக போய்ச் சேரவில்லை!  இந்தியர்களின் மேம்பாடு என்பது ம.இ.கா. தலைவர்களின் மேம்பாடு என்றால் நிச்சயமாக இந்தியர்களின் முன்னேறிவிட்டனர் என்று சொல்லலாம்! காரணம் அவர்கள் பிள்ளைகள் தான் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, அமரிக்கா போன்ற நாடுகளில்  பலர் படித்துக் கொண்டிருக்கின்றனர், சொத்துகள் வாங்கியிருக்கின்றனர்!

இந்தியர்களுக்கென்று ஒரு கட்சி இருந்தால் அவர்களின் குறைகளை இந்தியத் தலைவர்களிடம்  எடுத்துச் சொல்ல முடியும் இல்லையென்றால் யாரிடம் கொண்டு செல்வீர்கள் என்பது நல்ல கேள்வி. இத்தனை ஆண்டுகள் அப்படித்தானே இருந்தோம்?  அது தோல்வியில் தானே முடிந்தது! அப்புறம் என்ன இந்தியர் கட்சி? நீங்கள் வெற்றியைக் கொண்டு வந்திருந்தால் 'இந்தியர் கட்சி என்பது சரிதான்' என்று நமபலாம். ஆனால் இப்போது நம்பக் கூடிய வாதமாக இல்லையே!

பிரதமர் சொன்ன இந்தியர்-பழங்குடியினர் ஒப்பீடு சரிதானா? பொறுத்திருந்து பார்ப்போம்! வாழ்க தமிழர்!


No comments:

Post a Comment