Thursday 8 December 2022

ஏன் துணைப் பிரதமர்?

 

பொதுவாகவே, மலேசியர்களில் பலர், டத்தோஸ்ரீ  அகமட் சாஹிட் ஹாமிடி, நாட்டின் துணைப் பிரதமராக நியமனம் செய்யப்பட்டிருப்பதை ஒரு பெரிய குறையாகவே கருதுகின்றனர்.. அவருடைய ஆதரவாளர்களைத் தவிர மற்றபடி அவருக்கு எந்த வரவேற்பும் மக்களிடையே இல்லை என்பது அனைவருக்குமே தெரிந்த ஒன்று தான். ஏன்? அவரது கட்சியே அவருக்கு ஆதரவளிக்கவில்லை என்பது தான் மிகவும் சோகம்!

மக்கள் அவரை வெறுக்க காரணம் அவர் ஊழல்வாதி என்பது தான். ஊழல் மன்னன் என்று பெயர் எடுத்தவர்! அதற்கேற்றாற் போல  நீதிமன்றமும் அவர் மீது 47 குற்றச்சாட்டுகளைச் சுமத்தியிருக்கிறது!  தனது பதவியை வைத்து குற்றச்சாட்டுகளிலிருந்து தப்பித்து விடலாம் என்று அவர் நினைத்தாலும் அவரால் தப்பிக்க இயலாது! அது தான் இன்றைய அரசு!

யாராலும் விரும்பாத ஒரு மனிதர் எப்படி துணைப் பிரதமர் ஆக முடியும் என்கிற கேள்விக்குப் பதில் சொல்லுவது மிகவும் கடினம். இதெல்லாம் அரசியல் விளையாட்டு என்பது நமக்குத் தெரியும்.

இந்த நியமனம் பிரதமரால் விரும்பி செய்யப்பட்ட நியமனமாக நாம் நினைக்க வேண்டிய அவசியமில்லை. ஒற்றுமை அரசாங்கம் தேவை என்கிற நிலை ஏற்பட்ட போது  தேசிய முன்னணியின் 30 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கம் அமைக்க தவிர்க்க முடியாத சக்தியாக  விளங்கினர். அவர்கள் இல்லாமல் அரசாங்கம் அமைக்க  இயலாது என்கிற கட்டாய நிலை ஏற்பட்ட போது  தேசிய முன்னணி ஒரு சில கோரிக்களை வைத்து ஒற்றுமை அரசில் இணைந்து கொண்டது.

அவர்களின் கோரிக்கையின்படி சில முக்கிய பதவிகள் அவர்கள் கைகளில்  வந்துவிட்டன. அப்படி வந்தது தான் துணைப் பிரதமர், உள்துறை அமைச்சு போன்ற பதவிகள். அப்படி வந்தவர்கள் தான் நாம் யாரும் விரும்பாத, மக்கள் விரும்பாத,  ஸாஹிட் ஹமிடி, துங்கு ஸாஃருல் போன்றவர்கள்.

அதனால் தான் பிரதமர் அன்வார் இப்ராகிம் அமைச்சரவையில்  இவ்வளவு குளறுபடிகளா என நாம் பார்க்கிறோம். ஆனால் அன்வார் இப்ராகிம் இதெல்லாம் அறியாதவர் அல்ல. அவர்கள் முக்கிய பதவிகளில் இருப்பதால் மட்டும் அவர்களால தங்களது விருப்பத்திற்கு ஆட முடியாது என்பது அவர்களுக்கே தெரியும்.  அதனால் அவர்களும் அதிகம் ஆட்டம் காட்ட மாட்டார்கள் என நம்பலாம்.

இங்கு நாம் சொல்ல விரும்புவது துணைப் பிரதமர் பதவி மட்டும் அல்ல, அம்னோ தரப்பினர் வகிக்கும் அனைத்துப் பதவிகளும்  நிச்சயமாக கண்காணிக்கப்படும் என நம்பலாம். இதற்கெல்லாம் துப்பறியும் நிபுணர்களை வைத்துத் தான் கண்காணிக்கபட வேண்டும் என்பதல்ல. வரவு செலவுகளை வைத்தே பிரச்சனைகளைக் கையாளலாம். அதனையெல்லாம் அறிந்தவர் தான் பிரதமர் அன்வார். ஏன்? நிதி அமைச்சரே அவர் தானே!

நாம் சொல்லுவது,  நடப்பு அரசாங்கத்தால் எந்தப் பிரச்சனைகளையும் கையாள முடியும் என்பது தான். பயப்படத் தேவையில்லை. பார் போற்றும் அளவுக்கு அரசாங்கம், பிரதமர் அன்வாரின் கீழ் செயல்படும் என நம்பலாம். 

No comments:

Post a Comment