Sunday 4 December 2022

இது முடிவல்ல!

 

இது முடிவல்ல! ஆரம்பம் ஒரு வேளை நமக்கு ஏற்புடையதாக இல்லாமல் இருக்கலாம்! ஆனால் இது முடிவல்ல என்பதை நம்புங்கள்.

பிரதமர் அன்வாரின் அமைச்சரவையைப்பற்றி தான்  பேசுகிறேன். இதனை  அனைவருமே மேலோட்டாமாகவே பார்க்கிறோமே தவிர  அதில் இன்னும் பல விஷயங்கள் அடங்கியிருக்கின்றன என்பதை  மறந்து விடுகிறோம்.

இருந்தாலும் இப்போது நமக்கு அன்வார் இப்படி நியாயமின்றி நடந்து கொண்டாரே என்று நமது கோபங்களைக் கொட்டித் தீர்க்கிறோம். இதில் ம.இ.கா. வினரின் பங்களிப்புக் கொஞ்சம் அதிகம். காரணம் தொடர்ந்து தோல்விகளைக் கண்டு கொண்டிருக்கும் அவர்களுக்கு இப்போது  நல்லதொரு  வாய்ப்பு! "ஒரு அமைச்சர் தானே! இதுக்குத்தானா ம.இ.கா. வுக்கு எதிராக ஓட்டுப் போட்டீர்கள்?" இப்படி ஒரு எகத்தாளம் அவர்கள் பக்கமிருந்து!

ஓட்டுப்போடுவது எத்தனை  அமைச்சர்கள் என்பதற்காக  அல்ல! இந்தியர்கள் மேம்பாடு, இந்தியர்களின் நலன், தமிழ்ப்பள்ளிகள், வேலை வாய்ப்புகள் - இதனை நோக்கித் தான் நமது பயணம்  செல்லுகிறதே தவிர வேறு எந்த நோக்கமும் நமக்கில்லை.

இந்த அமைச்சரவையைப் பற்றி அவசரப்பட வேண்டிய அவசியமில்லை. ஏதோ எல்லாமே ஒரு முடிவுக்கு வந்துவிட்டது என்று அவசரப்படத் தேவையில்லை. இது அரசியல். நாளையே காட்சிகள் மாறலாம். மாறாது என்று எதுவுமில்லை.

இப்படி செய்ததற்கான நோக்கம் என்ன என்பது முழுமையாக அறிந்துகொள்ள முடியவில்லை. நாம் வேண்டுமானால் ஒருசில விஷயங்களை அனுமானிக்கலாம்  என்பதைத் தவிர நம்மால் அதற்கும் மேல் அனுமானிக்க முடியாது.

அன்வாரின் பெரும் பலவீனம் அவரோடு ஒற்றுமை அரசாங்கத்தில்  பங்கு பெற்றிருக்கும் அம்னோ என்பதை நாம் அறிவோம்.  அவர்கள் ஒற்றுமை அரசாங்கத்தில் வரும் முன்னரே ஒரு சில நிபந்தனைகளோடு  அவர்கள் உள்ளே வந்தவர்கள். அந்த நிபந்தனைகளை மாமன்னரிடம் அறிவித்துவிட்டு வந்தவர்கள்.  அதனால் தான் அம்னோவில் உள்ள அத்தனை ஊழல்வாதிகளும் பின்புறவாசல் வழியில் உள்ளே புகுந்துவிட்டனர்!

ஆனால் நாம் புரிந்து கொள்ள வேண்டியது ஒன்று தான். அவர்கள் ஊழல்வாதிகளாக இருக்கலாம். அதனை நீதிமன்றம் கவனித்துக் கொள்ளும்.  ஆனால் அன்வாரின் அமைச்சரவையில் இருந்து கொண்டு  அவர்களால் ஊழல் செய்ய முடியாது என்பது தான் இங்கு நாம் கவனிக்க வேண்டியது. ஊழலை அவர்களால் தொடர முடியாது. அது தான் நமக்கும் தேவை.  இனி ஊழல் செய்ய வழியில்லை என்பது  அவர்களுக்கே தெரியும்.

நம்முடைய நிலை எல்லாம் அவசரப்பட வேண்டாம் என்பது தான். சீனர்களின்  பிரதிநிதித்துவமும் அப்படி ஒன்றும் பெரிய அளவில் இல்லை. அப்படியிருக்க நமக்கு இரண்டு அமைச்சர்கள் என்றாலே சீனர்களுக்கு அதுவும் அதிருப்தியைத் தரும்.

சீனர்களே அன்வாரின் அரசாங்கம் நிலைத்து நிற்க தங்களது பதவியை விட்டுக்கொடுக்கவும் தயார் என்று அவர்கள் கூறும் போது நாமோ ஒரு அமைச்சரா? என்று அடித்துக் கொள்ளுவதும், ஒரு சாரார் கேலி செய்வதும் தேவை இல்லாத வேலை.

ஒன்றை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.இது முடிவல்ல! ஆரம்பம் தான்! எல்லாம் சரியாகவே போய்க் கொண்டிருக்கின்றன! நம்புங்கள்!

No comments:

Post a Comment