Friday 16 December 2022

சம்பளம் வேண்டாம்!

 

"எனக்குச் சம்பளம் வேண்டாம்!"  பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம்!

இப்படி சொல்லுவதால் பிரதமர் ஏதோ ஒரு பெரிய தியாகத்தைச் செய்துவிட்டதாக நினைக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் இத்தனை ஆண்டுகள் இப்படி சொல்லுவதற்கு ஓர் ஆளில்லையே என்பது தான் நமது ஆதங்கம்.  இது நாள் வரை ஆட்சியில் இருந்தவர்கள் ஏன் இது பற்றி யோசிக்கவில்லை? பதவிக்காக என்ன என்ன தில்லுமுள்ளுகளைப் பண்ணினார்கள் என்பது நமக்குத் தெரியும்.  ஆனால் ஒரு சிறு தியாகத்தைச் செய்ய யாருக்கும் மனசு வரவில்லையே! இவர்கள் தான் ஏழைகளின் காவலன் என்று சொன்னவர்கள்! ஏழைகளின் சிரமத்தை அவர்கள் அலட்சியப்படுத்தி விட்டார்களே! அது தான் நமக்கு வருத்தம்!

பிரதமர் மட்டும் அல்ல, கொரொனா  காலந்தொட்டு பேரரசர் கூட எந்த சம்பளமும் வாங்கவில்லை என்பதாக பிரதமர் கூறியிருக்கிறார். அது தான் மக்கள் மீதுள்ள அவரது இரக்கம், பற்று, பாசம். மக்கள் நலனை முன்நிறுத்துகிறார் பேரரசர். ஆனால் நமது அரசியல்வாதிகள்? நாள் முழுவதும், மக்களின் நலனே எங்கள் நலன் என்று கூவி கூவி அரசியல் பேசும் இவர்களுக்கு அப்படியெல்லாம் ஒரு சிறு தியாகத்தைக் கூட செய்யத் தயாராக இல்லை; மனம் வரவில்லை!

ஆனாலும் ஏதோ ஒரு கட்டாயத்தின் பேரில், அமைச்சரவையில் உள்ளவர்கள்,  தங்களது சம்பளத்திலிருந்து இருபது விழுக்காடு  பிடித்தம் செய்ய அனுமதித்திருக்கிறார்கள்! வேறு வழியில்லை!  அதற்காக அவர்களைப் பாராட்டுவோம். ஏதோ இப்போதாவது அவர்களது ஞானக்கண்கள் திறந்தனவே!

நமக்கு ஒரளவு சில விஷயங்கள் தெரிகின்றன. ஏன்,  புரிகிறது என்றே சொல்லலாம்.  இன்று அரசியல்வாதிகள், அமைச்சர்கள் தான் வாழ்க்கையை அனுபவிக்கின்றனர். விலைவாசி ஏற்றங்கள் எல்லாம் அவர்களில் பலருக்குத் தெரிவதில்லை! அதிலும் அவர்களின் வீட்டார் செய்யும் அடாவடித்தனம் அதிகம்!  ஏதோ வானத்திலிருந்து குதித்து வந்தவர்கள் போல நினைத்துக் கொண்டு படோடப வாழ்க்கை வாழ்வதிலேயே குறியாய் இருக்கின்றனர்! குறிப்பாக மனைவியரின் சுகபோக வாழ்க்கை தான் இன்று அமைச்சர்களுக்குக் கெட்ட பெயரை ஏற்படுத்துகிறது! இதற்குச் சான்று: ரோஸ்மா நஜிப்! இது ஒன்றே போதும்!

அமைச்சர்கள் சம்பளமே  வாங்க வேண்டாம் என்று நாம் சொல்ல வரவில்லை. வேலையே இல்லாமல் மக்கள் கஷ்டப்படுகிறார்களே! அவர்களை நினைத்துப் பாருங்கள். அதை நினைத்தாவது நீங்கள் பாதி சம்பளம் வாங்குங்களேன்? என்ன கெட்டுவிடப் போகிறது?

எப்படியோ பிரதமர் அன்வார் அமைச்சர்களையும் இந்த கடினமான நேரத்தில் அவர்களது சம்பளத்தைக் குறைக்கும்படி செய்திருக்கிறார். இது ஒரு கூட்டு முயற்சி. அனைவரும் சேர்ந்து பிரச்சனைகளை எதிர்கொள்வோம்!

No comments:

Post a Comment