Saturday 10 December 2022

இந்த முடிவு சரிதானா?

 மலேசிய இந்தியர் காங்கிரஸ் எடுத்த முடிவு சரிதானா?

"நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தில் எங்களுக்கு எந்த துணை அமைச்சர் பதவியும் வேண்டாம்" என்று ம.இ.கா. அறிவித்துவிட்டது. அவர்கள் எடுத்த அந்த முடிவு சரிதானா அதற்கான பின்னணி எதுவும் உண்டா, வேறு ஏதேனும் திட்டங்கள் உண்டா என்று சில பல  சந்தேகத்தை அந்த முடிவு எழுப்பத்தான் செய்கிறது.

சமீபத்தில் நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற ம.இ.கா. நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ சரவணன் மட்டுமே. அவர் ஏற்கனவே முழு அமைச்சராக பொறுப்பில் இருந்தவர்.  

இந்த முறை நம்பிக்கைக் கூட்டணி அவருக்கு எந்தவொரு அமைச்சர் பொறுப்பையும் கொடுக்கவில்லை. அதற்கு நம்பிக்கைக் கூட்டணி பொறுப்பு ஏற்க முடியாது. அது முற்றிலுமாக தேசிய முன்னணியின் பொறுப்பு.  வேறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இல்லாததால் ம.இ.கா. வைச் சேர்ந்தவர்கள் துணை அமைச்சராக ஆக வாய்ப்பில்லை. ஆனாலும்  மேலவை உறுப்பினராகி,  துணை அமைச்சராக நியமிக்கப்படலாம். அதற்கான வாய்ப்பும் டத்தோ சிவராஜுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும்  பாடாங் செராயில்  நம்பிக்கைக் கூட்டணி வெற்றி பெறவில்லை. அதுவும் ஒரு பின்னடைவு.

டத்தோ சிவராஜின் தோல்வி என்பதை நாம் இப்படித்தான் பார்க்க வேண்டியுள்ளது:  இந்திய சமுதாயம் ம.இ.கா. வை ஒரு நன்றிகெட்ட கட்சியாகத்தான் இந்தியர்கள் பார்க்கிறார்கள்! அப்படியே அவருக்கு அமைச்சர் பதவி கொடுத்தாலும் அவரால் இந்தியர்களுக்கு எந்த பலனும் வரப்போவதில்லை என்பதாகத்தான் இந்தியர்கள் பார்க்கிறார்கள்! எப்படியோ ஒரு கெட்ட அபிப்பிராயம் இந்தியர்களின் மத்தியில் ம.இ.கா. மீது  ஏற்பட்டுவிட்டது! அவர்கள் அதை சரி செய்ய எந்த முயற்சியும் எடுக்கவில்லை. எடுக்கவில்லை என்றாலும் மன்னிக்கலாம். ஆனால் அவர்கள் தொடர்ந்து இந்தியர்களை முட்டாளாகவும், மடையர்களாகவும் நினைத்துக் கொண்டு செயல்படுவது தான் நம்மால் அவர்களை  மன்னிக்க முடியவில்லை!

நம்பிக்கைக் கூட்டணியும் ம.இ.கா. வைச் சேர்ந்தவர்களை அமைச்சராக நியமிக்கவும் வாய்ப்பில்லை. அது இந்தியர்களிடையே வெறுப்பைத்தான் ஏற்படுத்தும். அதையும் நாம் கவனிக்க வேண்டும்.  இப்போது ம.இ.கா.வே அதனைப் புரிந்து கொண்டது எனலாம்!  

ஆனால் இதற்கு  அப்பால் வேறு காரணங்கள் இருக்க வாய்ப்புண்டா? ஆமாம், முன்னாள் பிரதமர் முகைதீன் தலைமையில் பெரிகாத்தான் நேஷனல் என்று ஒரு கட்சி இருப்பதை மறந்துவிட முடியாது. நடப்பு அரசாங்கத்தை கவிழ்த்தே தீருவேன் என்று கங்கணம் கட்டிக் கொண்டு திரிகிறாரே!  அப்படி ஒரு சூழல் ஏற்பட்டால் ம.இ.கா. அப்படியே அங்கு அவர்கள்  பக்கம் சாய்ந்து விடலாம்! வாய்ப்பில்லை என்று சொல்லிவிட முடியாது. ஏற்கனவே முகைதீன்  அமைச்சரவையில் அவர்களுடன் இருந்தவர்கள் தானே ம.இ.கா.வினர்! ஒரு தனி நபராக கட்சி மாற முடியாது என்றாலும் ஒரு கட்சியாக மாற முடியும் தானே!

இன்றைய நிலையில் எங்கு போனால் தனக்கு இலாபம் என்று சந்தர்ப்பத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதாகவே நான் நினைக்கிறேன்! அதனால் தான் துணை அமைச்சர் பதவி வேண்டாம் என்று வெளிப்படையாக அவர்கள் கூறிவிட்டார்கள்!

இன்றைய நிலையில் அவர்களின் நிலைப்பாடு சரிதான்! ஆனால் அது இந்தியர்களின்  நிலைப்பாடு அல்ல! அது அவசியமில்லை என்று அவர்கள் நினைக்கிறார்கள்!

No comments:

Post a Comment