Wednesday 14 December 2022

துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி

 

மலேசிய வரலாற்றில், ஓர் இந்தியப் பெண்மணி,  முதல் முறையாக துணயமைச்சர் என்கிற  பெருமையைப் பெறுகிறார்,  சரஸ்வதி கந்தசாமி.

அவரை  நாம் வாழ்த்துகிறோம். தமிழ்ச் சமுதாயத்தின் முதல் பெண்மணி, இந்தப் பதவியை வகிப்பவர்,  என்கிறை வகையில் இந்த தமிழ்ச் சமுதாயம் அவரை வாழ்த்த கடமைப்பட்டிருக்கிறது.

பி.கே.ஆர். கட்சியின் தேசிய உதவித்தலைவர் என்கிற பொறுப்பிலும் அவர் தான்  முதல் இந்தியப் பெண்மணி. அதுவும் பெரிய பொறுப்பான பதவி தான். இப்போது அரசாங்கத்தில் முதல் இந்தியப் பெண்  அமைச்சர்  என்பதிலும் நமக்குப் பெருமையே!

அம்மையார்,  அரசியலில் பதவி வகிப்பவர்  என்கிற முறையில் பலருக்குப் பரிட்சியமானவராக இருக்கலாம். என்னைப் போன்றவர்கள் தமிழ் மலர் பத்திரிக்கையைப் படிப்பதின் மூலம் அறிந்திருக்கிறோம். தமிழர் முன்னேற்றம் பற்றி சிந்திப்பவர், பேசுபவர். அவரது எழுத்தில் அது தெரியும். மக்களைப் பற்றி சிந்திப்பவர்களை இந்த சமுதாயம் வரவேற்கும், வரவேற்கிறது!

விருந்தும் மருந்தும் மூன்று நாள்களுக்குத் தான்.அதற்கு மேல் போகக் கூடாது போனால்  திகட்டிவிடும்! பரவாயில்லை, நாம் அதனை மூன்று வாரங்களுக்குக் கொடுப்போம். 

மாலை,  மரியாதை,  விருந்து, உபசரிப்பு போன்றவைகள் இப்போது அவருக்கு  நடந்து கொண்டிருக்கிறது. நடக்கட்டும். ஆனால்  எல்லாமே அளவு தான். இந்த மாலை,மரியாதைகளின் மூலம் கடந்த காலங்களில் நாம் இழந்தவை மானம், மரியாதையைத்தான்!  அவர்களுக்குப் போட்ட மாலை மரியாதைகளைக் கணக்கில் கொண்டால் பத்து பிள்ளைகளைப் படிக்க வைத்திருக்கலாம்! அளவு மீறுதல் என்பது நம்மிடம் உண்டு. அதுவே இளிச்சவாயர்கள் என்கிற பெயரைப் பெற்றுக் கொடுக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இனி அவர் தனது கடமைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க அவரை அனுமதியுங்கள். அவரது பதவி எந்த வகையில் இந்தியர்களின் முன்னேற்றத்திற்கு உதவும் என்பது இன்னும் நமக்குத் தெளிவாகத் தெரியவில்லை. இன்னும் ஒருசில வாரங்களில் அனைத்தும் தெரியவரும்.

ஆனாலும் எதற்காகவும் அவர் காத்துக் கொண்டிருக்கமாட்டார். தனது பணிகளை அவர் ஆரம்பித்துவிடுவார். அவர் இந்தியர்களையும் தனது கவனத்தில் கொள்வார் என்பதை  நாம் நம்புகிறோம்.

துணை அமைச்சருக்கு நமக்கு வாழ்த்துகள்!


No comments:

Post a Comment