Sunday 11 December 2022

ஏமாற்றம்! ஏமாற்றம்! ஏமாற்றம்!

 

கடந்த சில தினங்களாக இந்தியரிடையே அதிகமாக பயன்படுத்தப் படுகின்ற  வார்த்தை என்றால் அது ஏமாற்றம்! ஏமாற்றம்! ஏமாற்றம்!

ஊடகங்களிலும் சரி,  எந்த ஒரு வலைத்தளங்களிலும் சரி பிரதமர் அன்வார் எப்போது அமைச்சரைவையை அறிவித்தாரோ அன்றிலிருந்து இந்தியர்கள் தமது அதிருப்தியைத் தெரிவித்து வருகின்றனர்.

தவறு ஒன்றுமில்லை! நாம் அனைவருமே மனிதர்கள். கோபதாபம் இல்லாமல் இருக்க முடியாது. கோபம் இருக்கத்தான் வேண்டும். சூடு சுரணை இருக்கத்தான் வேண்டும்.

கோபம் இல்லாததால் தான், சூடு சொரணை இல்லாததால் தான்  கடந்த அறுபது ஆண்டுகளாக நாம் ஏமாற்றப்பட்டு வந்தோம்! இப்போது நமக்குக் கோபம் வருகிறது என்றால் நாம் விழித்துக் கொண்டோம் என்பது தான் பொருள். அதுவும் புதிய அரசாங்கம் அமைந்த உடனையே நமது கோபத்தைக் காட்ட ஆரம்பித்துவிட்டோம்! நன்று! நன்று! நண்பனே! பாராட்டுகிறேன்!

இந்தக் கோபம் வந்த நேரம் தான் சரியான நேரமாக இல்லை. சென்ற 2018 பொதுத் தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணி பெரும்பான்மையான தொகுதிகளை வென்று ஆட்சி அமைத்தது. அதனால் நான்கு அமைச்சர்களை நியமிக்கப்பட்டார்கள். அதனை நாம் வரவேற்றோம். ஆனால் ஆட்சி கவிழ்க்கப்பட்டது! இந்த முறையோ நம்பிக்கைக் கூட்டணிக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. அதனால் தான் ஒற்றுமை அரசாங்கம் அமையுங்கள் என்று மாமன்னர் அறிவுறுத்தினார். அப்படி ஒரு சூழலில் தான் தேசிய முன்னணியுடன் கூட்டணி அமைக்கும் துர்பாக்கிய நிலை   நம்பிக்கைக் கூட்டணிக்கு ஏற்பட்டுவிட்டது. அதனால் ஏற்பட்ட விபரீதங்கள் தான் இன்றைய அமைச்சரவை!

நம்பிக்கைக் கூட்டணியுடன்  இணைந்த கட்சிகள் தங்களுக்கு எத்தனை  அமைச்சர் பதவிகள் வேண்டும் என்று கட்டாயப்படுத்தியதன் விளைவு தான் பல நெருக்கடிகளை ஏற்படுத்திவிட்டன. அதனால் தான் பிரதமர் அன்வாரும் எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு எல்லாக் கட்சிகளையும் அரவணைத்துக் கொண்டு போக வேண்டிய  நெருக்கடி.

இந்தியர்களின் கோபம்  பிரதமர் அன்வாருக்கு புரியாதது அல்ல. தெரியாததும் அல்ல. இந்தியர்களின் ஆதரவு அவருக்கு அதிகளவு இருக்கின்றது  என்பது அவருக்குத் தெரியும்.  ஆனால் இருந்த - இருக்கின்ற  -நிலைமையில் அவரால் செய்ய முடிந்ததை அவர்   செய்திருக்கிறார்.  

இன்றைய நிலைமை இது தான். இது முற்றுப்புள்ளி அல்ல. இன்னும்  வாய்ப்புகள் உண்டு. இனி நாம் செய்ய வேண்டியது எல்லாம் கடந்த காலங்களில் ம.இ.கா.வைப் பற்றியான என்ன குறைபாடுகள் சொன்னோமோ அவைகள்  எல்லாம் இந்த ஆட்சியில் நிவர்த்தி செய்யப்பட வேண்டும். இனி நமது சமுதாயத்தின் தேவைகள் என்ன என்பதைப்பற்றி சிந்தியுங்கள். குறைகளைச் சுட்டிக் காட்டுங்கள். 

தேசிய முன்னணி ஆட்சியில் நமது குறைகளைக் கொட்டுவதற்கு இடமில்லை! இப்போது அது உண்டு. போதுமான அமைச்சர்கள் இல்லை என்று சொல்லி அதனையே ஒரு குறையாக சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம்!

இனியும் ஏமாற்றம்! ஏமாற்றம்! ஏமாற்றம்! என்று சொல்லி நம்மையே ஏமாற்றிக்கொள்ளாமல் ஆக்ககரமாக என்ன செய்ய வேண்டுமோ அதனைச் செய்வோம்! அதற்கான அமைச்சர்கள் இருக்கிறார்கள். அவர்கள் செய்வார்கள் என்பது மட்டும் உறுதி!

No comments:

Post a Comment