Saturday 24 December 2022

வீரம் பிறக்க இத்தனை ஆண்டுகளா!

 

சமீபகாலமாக ஒரு செய்தி ம.இ.கா.வினர் மிகவும் துணிச்சலோடு பரப்பிக் கொண்டிருக்கின்றனர்!

ஆமாம்! 25 ஆண்டுகளுக்கு முன்னர் பினாங்கு மாநிலத்தில், அன்வார் இப்ராகிம்  துணைப்பிரதமராக  இருந்த போது, பேசிய பேச்சு ஒன்று இப்போது பரவலாக ம.இ.கா.வினரால்  மக்களின் கவனத்திற்குக் கொண்டுவர  மிகவும் பிரயாசைப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்!

அவர் பேசியதாவது: "நான் நினைத்தால் பினாங்கு மாநிலத்தில் கோவில்களில் மணியோசையே கேட்கமுடியாதபடி செய்ய முடியும்!"  என்று அவர் கூறியதாக இப்போது அதனை ஒரு புகாராக,இந்தியர்களின் கவனத்திற்குக் கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன!

இப்படி ஒரு பதிலை துணைப்பிரதமர் கூறுவதற்கான காரணங்கள் என்ன? அவர் முன் வைக்கப்பட்ட கேள்வி தான் என்ன என்பது அவர்களுக்கும் தெரியவில்லை! நமக்கும் தெரியவில்லை! கேள்வி என்ன என்பது தெரிந்தால் தானே கொடுக்கப்பட்ட பதில் சரியா, தவறா என்று நாம் சொல்ல முடியும்?

இதில் கவனிக்கப்பட வேண்டிய முக்கிய விஷயம் என்னவென்றால் அந்த 25 ஆண்டு கணக்கை எடுத்துக் கொண்டால் அப்போது நம்பிக்கைக் கூட்டணி ஆட்சியில் இல்லை! அது ஒரு முக்கியமான விஷயம். ஆட்சியில் இருந்தவர்கள் யார்? தேசிய முன்னணி தான். அதாவது ம.இ.கா.வினர்! அந்த காலகட்டத்தில் பதவியை அனுபவித்தவர்கள் ம.இ.கா.வினர். பதவியை அலங்கரித்தவர்கள் ம.இ.கா. வினர்!  இந்தியர்களின் பெயரைச்சொல்லி வயிறு வளர்த்தவர்கள் ம.இ.கா.வினர். இந்தியர்களின் பெயரைச் சொல்லி இந்தியர்களை மொட்டை அடித்தவர்கள் ம.இ.கா.வினர்! பட்டம் பதவிகளோடு சுகபோகங்களை அனுபவித்தவர்கள் ம.இ.கா.வினர்! எல்லாமே அவர்கள் தான்!

தங்களை வீராதி வீரர்களாக வேடம் போடும் இந்த கொள்ளைக் கூட்டம் அப்போது எங்கே போனது என்பது தான் நமது கேள்வி. அது இந்தியர்களின் உரிமை என்பது தானே உங்கள் வாதம்? அந்த உரிமைக்காக ஏன் உங்கள் வாயைத் திறக்கவில்லை? இப்படித்தானே எங்களது உரிமைகள்   அனைத்தையும் இந்த சமுதாயம் இழந்தது? இந்திய சமுதாயத்தின் உரிமைகள் பறிபோவதற்கு ம.இ.கா. தான் காரணம் என்பதைத் தானே இப்போது நாங்கள் சொல்லி வருகிறோம்! அதைத்தானே இந்த நிகழ்வின் மூலம் நீங்கள் உறுதிப் படுத்துகிறீர்கள்!

பதவியில் இருந்த போது அமைதியாக இருந்துவிட்டு, நல்லபிள்ளையாக இருந்துவிட்டு,  இந்த சமுதாயத்தை அடகு வைத்துவிட்டு,  இந்த சமுதாயத்தை கூறுபோட்டு விற்றுவிட்டு, பதவிகள் பறிபோன காலத்தில் நியாயம் பேச வருகிறீர்களோ? எங்களது உரிமைகள் பறிபோனதால் தானே  இந்த சமுதாயம் இன்று நிலைகெட்டு தடுமாறி நிற்கிறது? உரிமைகள் போனால் தானே ம.இ.கா.வை இந்திய சமுதாயம் புறக்கணித்தது

கடைசியாக, அன்று அன்வார் பேசியதை ஏன் அன்றே உங்களால், அன்றே பேசி,  அன்றே தீர்வு காணாமல், எங்களது உரிமைகளை விட்டுக் கொடுத்துவிட்டு இப்போது நியாயம் பேச வருகிறீர்கள்? ஒன்று தெரிகிறது: உங்களிடம் ஒரு பிரச்சனையைக் கொண்டுபோனால் அதற்குத் தீர்வு காண 25 ஆண்டுகள் பிடிக்கும் என்கிற உண்மையை இப்போதாவது ஒப்புக் கொண்டீர்களே!

கோழைகள்! கொத்தடிமைகள்!

No comments:

Post a Comment