Thursday 22 December 2022

இந்தியத் தலைவர்களால் மட்டுமே முடியும்!

 

நாம் இத்தனை ஆண்டுகள் கட்டிக்காத்துவந்த 'இந்தியத் தலைவர்களால் மட்டுமே முடியும்!' என்கிற நம்பிக்கை சில ஆண்டுகளாக சரிந்து வருவதைப் பார்க்கும் போது இது சரியா, தவறா என்பது நமக்கும் புரியவில்லை!

ஒரு வேளை "இந்தியத் தலைவர்களால் மட்டும் தான் முடியும்!" என்று மீண்டும் மீண்டும் நம் தலையில் அடித்து அடித்து  அப்படி ஒரு நிலையை உருவாக்கி விட்டார்களோ!

இது ஏதோ ஒரு வகையில் தோட்டப்புற  கலாச்சாரமாக இருக்குமோ? ஆமாம், தோட்டப்புறங்களில்  பிரச்சனைகள் வரும்போது பெரிய கங்காணியைப் போய் பார்க்கும் போக்கு மக்களிடம் இருந்ததே! அதன் நீட்சியாகத்தான்  ம.இ.கா.தலைவர்களைப் போய் பார்த்து அரசாங்கப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணப்படுகின்ற பழக்கதோஷம் நமக்கு ஏற்பட்டிருக்கிறதோ! 

ஆமாம், தோட்டப்புறங்களிலே ஒரு குறுகிய எல்லைக்குள் இருந்தோம். அங்கு தமிழர்கள் தான் இருந்தார்கள். அவர்கள் தான் பிரச்சனைகளைத் தீர்த்து வைத்தார்கள். அங்கு தான் ம.இ.கா. தலைவர்கள் இருந்தார்கள். அவர்கள் மூலம் சில பல பிரச்சனைகள் தீர்த்துவைக்கப்பட்டன. இதுவே நாளடைவில் ம.இ.கா.தலைவர்களால் தான் முடியும் என்கிற ஒரு நம்பிக்கையை அவர்கள் மீது நமக்கு ஏற்படுத்திவிட்டது!

அதற்கேற்றாற் போல  துன் சம்பந்தன் அவர்கள் வெளிநாட்டவர்களின்  தோட்டங்கள் விற்பனைக்கு வந்த போது தோட்டப்பாட்டாளிகளிடம் பத்து பத்து வெள்ளியாக வசூல் செய்து தோட்டங்களை வாங்கினார். அதுவே ம.இ.கா. தலைவர்கள் மீது இன்னும் அதிகம் நம்பிக்கையை ஏற்படுத்திவிட்டது. அதுமட்டும் அவர் செய்யவில்லை. தோட்டபுறங்களில் குடியுரிமை கிடைக்க வழி செய்தார் அடையாளக்கார்டு கிடைக்க வழி செய்தார். அப்படி அடையாளக்கார்டு கிடைக்கப்பெற்றவர்களில் நானும் ஒருவன்.

துன் சம்பந்தன் அவர்களின் இது போன்ற செயல்களினால்  ம.இ.கா. தமிழர்களிடையே தவிர்க்க முடியாத ஒரு கட்சியாக, தமிழர்களிடமிருந்து பிரிக்க முடியாத ஒரு கட்சியாக பின்னிப் பிணைந்துவிட்டது என்று தான் சொல்ல வேண்டும்.

அப்படி தமிழர்களுடன் பின்னிப்பிணைந்து விட்ட ஒரு கட்சி துன் சம்பந்தன் அவர்களுக்குப் பின்  "தடி எடுத்தவனெல்லாம் தண்டல்"  போன்ற   நபர்களிடம் கைமாறி  அவர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட ஒரு கட்சியாக மாறிப்போனது! அதன் பிறகு எல்லாமே மாறிப் போனது!

அந்த தண்டல்கள் தான் இப்போது இன்றுள்ள நிலைக்குப் பொறுப்பேற்க வேண்டும். இப்போது இவர்கள்  "எங்களால் தான் செய்ய முடியும்" என்று துன் சம்பந்தன் காலத்து கதையையே பேசிக் கொண்டிருக்கிறார்கள்! அவர்களால் முடியாது என்பதை அவர்கள் நிருபித்து விட்டார்கள்!  எவ்வளவோ நல்ல காரியங்கள் நாங்கள் செய்திருக்கிறோம் என்று அவர்கள் சொன்னாலும் ஒரு சில செய்யக்கூடாத காரியங்களைச் செய்து இந்தியரிடையே கெட்ட பெயரை சம்பாதித்துக் கொண்டார்கள்!

எங்களால் தான் செய்ய முடியும் எனறு அவர்கள் சொன்னாலும் மக்களின் தீர்ப்பு என்னவோ அவர்களுக்கு எதிராகத்தான் இருக்கிறது!

No comments:

Post a Comment