விக்னேஸ்: சிவா! இந்தா எடுத்துக்கோ!
ம.இ.கா. தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன், கடைசியாக 'பெருந்தன்மையோடு' தங்களது வசம் இருந்த அறுபது ஆண்டுகால குப்பைகளை டத்தோஸ்ரீ அன்வார் அமைச்சரைவையில் உள்ள வி.சிவக்குமாரிடம் ஒப்படைத்துவிட்டார்!
"இனி உங்கள் பொறுப்பு!" என்று ம.இ.கா.வின் பொறுப்பை, குவிந்துகிடந்த குப்பைகளை, சிவக்குமாரிடம் ஒப்படைத்து விட்டார்!
"இனி இருப்போமோ இல்லையோ! இந்தியர்களின் ஆதரவு நமக்கு இல்லை! முற்றிலுமாக நிராகரித்துவிட்டார்கள்! எங்களுக்கும் கடைசி காலத்தில் சில 'கைமாத்து' வேலைகள் எல்லாம் உள்ளன! நாங்கள் அதைப் பார்த்துக் கொள்ளுகிறோம்! நாங்கள் சேர்த்து வைத்திருக்கும் குப்பைகளை அதிகம் கிளறாதீர்கள்! ரொம்பவும் நாறும்! அந்த நாத்த வேலையை மறந்து விடுங்கள்! மற்றபடி எங்கள் கண்களையே அப்படியே உங்களிடம் ஒப்படைத்து விட்டோம்! எங்கள் கண்கள் கலங்காதபடி பார்த்துக் கொள்வது உங்கள் பொறுப்பு! இந்தியர்கள் முன்னேறுவதும் இனி உங்கள் பொறுப்பு!"
ஆனாலும் இது பற்றி மனிதவள அமைச்சர் வி.சிவக்குமார் அவர்களின் பதில் என்னவாக இருக்கும்? நிச்சயமாக அவருக்கு இதெல்லாம் சவால் நிறைந்த வேலை. அவரால் முடியாது என்றெல்லாம் சொல்ல மாட்டார். இந்தியரின் முன்னேற்றம் என்பது அவரின் பட்டியலில் உள்ள முதல் வேலை. ஆனாலும் அவருக்கு ஒதுக்கப்பட்ட துறை என்பதோ வேறு.
இப்போது இந்தியரிடையே உள்ள முதல் பிரச்சனை என்பது வேலையில்லாப் பிரச்சனை. அவர் அந்தத் துறையைச் சார்ந்தவர். அதனால் இந்தியர்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய வேலை வாய்ப்புகளை அவரது மனிதவள அமைச்சின் மூலம் கிடைக்கச் செய்வார் என நம்பலாம். அவர் மலேசியர் அனைவருக்கும் அமைச்சர் என்பது உண்மையே. இந்தியர்களுக்குக் கிடைக்க வேண்டிய வாய்ப்பினைப் பெற்றுத்தருவதும் அவரது வேலை தான்.
அமைச்சர் சிவக்குமார் "மித்ரா" விஷயத்தில் மிகவும் நிபுணத்துவம் பெற்றவர். ஆனால் என்ன செய்வது? பாரிசான் கட்சி, இப்போது ஒற்றுமை அரசாங்கத்தின் ஒரு பகுதியாக இருப்பதால் ம.இ.கா. தலைகள் தப்பிக்கலாம் என்கிற சந்தேகம் எழுவது இயல்பு! ஆமாம், ஆனானப்பட்ட அம்னோ தலைவரே தலைநிமிர்ந்து நடக்கும் போது ம.இ.கா. தலைவர்கள் மட்டும் தலைகுனிந்தா நடப்பார்கள்!
ஆனால் அவ்வளவு சீக்கிரத்தில் நாம் ஒரு முடிவுக்கு வந்துவிட முடியாது. நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளில் ஒற்றுமை அரசாங்கம் தலையிடாது என நம்பலாம். பழையவைகளைக் கிண்டி கிளற வாய்ப்பு என்பது குறைவு தான். குறிப்பாக ஒற்றுமை அரசாங்கத்தில் உள்ள கட்சிகளில் தேசிய முன்னணி ஊழல் விஷயத்தில் முதன்மையான கட்சி என்பதில் சந்தேகமில்லை.
எப்படியோ ம.இ.கா.தலைவர் தனது கட்சியின் குப்பைகளை இடம் மாற்றி விட்டிருக்கிறார்! அது இந்தியர்களின் பிரச்சனை என்பதால் ஒற்றுமை அரசாங்கமும் அதனை அலட்சியப்படுத்த முடியாது.
எதனையும் சமாளிக்கும் திறன் புதிய அரசாங்கத்திற்கு உண்டு. சிவக்குமாரும் தனது கடமையைச் செய்வதில் தயக்கமில்லாதவர் என நம்பலாம்!
No comments:
Post a Comment