Thursday 29 December 2022

ஏற்றுக்கொள்ள முடியவில்லை!

 

                                                                Datuk Seri Ramesh Rao

இந்தியர்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு நபரான டத்தோஸ்ரீ ரமேஷ் ராவ் இந்தியர்களின் சிறப்பு அதிகாரியாக,   துணைப்பிரதமர் ஸாஹிட்  ஹாமிடியால் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்!

இந்தியர்களின் மேம்பாடு பற்றி பேசியவர்,  தொடர்ந்து பேசியவர்,  பிரதமர் அன்வார் இப்ராகிம் மட்டுமே! தேர்தல் காலங்களில் தொடர்ந்து பேசியவர். ஆனால் இன்று ஏனோ  இந்த நியமனம் பற்றி எந்தக் கருத்தையும்  உதிர்க்கவில்லை! அவர் செய்ய வேண்டிய வேலையை துணைப்பிரதமர் செய்கிறார்! 

நமக்குத் தெரிந்தவரை துணைப்பிரதமர்,  ஒற்றுமை அரசாங்கத்தில் குழப்பத்தை ஏற்படுத்துகிறார்  என்றே தோன்றுகிறது! ஒற்றுமை அரசாங்கத்தை சோதனை செய்து பார்க்கிறார்! ஏற்கனவே அவர் செய்த நியமனத்தை  பிரதமர் ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் இப்போது ரமேஷ் ராவை களம் இறக்கி இருப்பதாகத் தெரிகிறது!  காரணம் இது இந்தியர் பிரச்சனை.  இந்தியர்கள் தான் 85 விழுக்காட்டினர்,    பொதுத்தேர்தலில் அன்வாரை ஆதரித்தவர்கள்!  அதனால்  ஸாஹிட் ஹாமிடி இப்போது இந்தியர்களைப் பழி வாங்குகிறார் என்று நாம் நினைப்பதில் தவறில்லை!

ஸாஹிட் ஹாமிடி பற்றி புதிதாகத் தெரிந்து கொள்ள ஒன்றுமில்லை. அவர் மீது 47 நீதிமன்ற வழக்குகள் உள்ளன.  அவருக்கு உதவியாளராக இருந்தவர் ரமேஷ் ராவ்! இதனைவைத்தே ரமேஷ் ராவின் குணாதிசயங்கள் எப்படி இருக்கும் என ஊகிக்கலாம்! அவரும் தனது சேவையைப்பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் ஸாஹிடியையும் முன்னாள் பிரதமர் நஜீபையும் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள் என்கிறார்! இதைத்தான் வேலிக்கு ஓணான் சாட்சி என்று சொல்லுவார்கள்!

பொதுவாகவே ஸாகிட் ஹாமிடி மேல் நமக்கு நம்பிக்கை இல்லை அவரை அறிந்தவர்கள் 'இவரா துணைப்பிரதமர்?' என்று ஆச்சரியம் அடைவார்கள்! ஆனால் என்ன செய்வது?  ஒற்றுமை அரசாஙத்தின் தூண்களில் அவரும் ஒருவர்! அவரை விட்டுவிட்டு ஒற்றுமை அரசாங்கத்தை அமைக்க முடியாது! நாம் அதில் தலையிடவில்லை. தலையிட வேண்டிய அவசியமுமில்லை.

ஆனால் அவர் துணைப்பிரதமர் என்பதற்காக இந்தியர்களைப் பழி வாங்க நினைப்பது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.  தேசிய முன்னணி ஆட்சியில் இருந்த போது இந்தியர்கள் புறக்கணிக்கப்பட்டார்கள்.  ம.இ.கா. வும் அவர்களோடு சேர்ந்து ஆட்டமாய் ஆடினார்கள். இப்படி ஒரு சூழலில் இந்தியர்கள் தேசிய முன்னணியை ஆதரிக்கவில்லை.  ஆதரிக்கவில்லை என்பதற்காக இப்போது,  அன்வார் இப்ராகிம்  பிரதமராக இருக்கும் போதும்,  பழிவாங்கும் வேலையில்  தேசிய முன்னணியும்,  ம.இ.கா. வும் ஈடுப்பட்டிருக்கின்றன என்பதாகத்தான் நாம் இந்த நியமனத்தை எடுத்துக் கொள்கிறோம்!

இது நியாயமான நியமனம் அல்ல என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம்!

No comments:

Post a Comment