Sunday 18 December 2022

ம.இ.கா. பெரிகாத்தான் பக்கம் நெருங்குகிறதா?

 

ம.இ.கா. இரண்டுங்கெட்டான் நிலையில் இருப்பதாகவே நமக்குத் தோன்றுகிறது!

அவர்கள் எந்தப் பக்கம் சாயலாம் என்பதில் ஒரு தீர்க்கமான முடிவை எடுக்க முடியாமல் திணறுகிறார்கள்! தேசிய முன்னணியை ஆதரிக்கலாமா அல்லது பெரிகாத்தான் கூட்டணியை ஆதரிக்கலாமா என்று அவர்களால் தீர்மானிக்க முடியவில்லை.

சம்பாத்தியம் தேவை என்றால் இப்போதைக்கு தேசிய முன்னணி சரியான கட்சி அல்ல! அதற்குப்  பெரிக்காத்தான்  கூட்டணியே  வாய்ப்புக்கள் அதிகம். ஆனால் அவர்களால் இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு ஆட்சி அமைக்க முடியுமா என்று கேள்வியும் எழுகிறது. இது அரசியல் என்பதால் எதுவும் நடக்கலாம். முன்னாள் பிரதமர் முகைதீன் யாசின் அதற்கான வேலையில் தொடர்ந்து அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஈடுபடுவார் என்பதை மறுக்க இயலாது!

ஆனால் இது நாள்வரை வாய்மூடி மௌனியாக இருந்த ம.இ.கா.  ஏன் தீடீரென்று 'ஒப்பந்தம் சரியாக இல்லை! ஏபுடையதாக இல்லை!'  என்று பேச ஆரம்பித்திருக்கிறது?  சொல்லப்பட்ட கருத்து ம.இ.கா.வின் கருத்து அல்ல  அது தனிப்பட்ட, பொதுச்செயலாளரின் கருத்து என்பதாகச் சொல்லப்படுகிறது!

அது தனிப்பட்ட கருத்தாகவே இருந்துவிட்டு போகட்டும். நமக்கு ஒரு சில புரியவில்லை.  அனைத்துக் கட்சிகளும் செய்து கொண்ட இந்த ஒப்பந்தம் அப்படி ஒன்று பெரிய பெரிய நிபுணத்துவம் பெற்றவர்களால்  எழுதப்பட்ட ஒப்பந்தம் அல்ல!  இதனை ஒரு சாதாரண ஒப்பந்தமாகத் தான் எடுத்துக் கொள்ள வேண்டும். இது நீதிமன்றத்திற்குப் போனால் 'நிற்கும்' என்று சொல்ல வழியில்லை! அந்த அளவுக்கு அது ஒரு சாதாரண ஒப்பந்தம். ஒரு நம்பிக்கை கொடுக்கும் ஒப்பந்தம். மற்ற கட்சிகள் தன்னை ஆதரிப்பதாகக் கூறும், கொஞ்சம் நம்பிக்கையை ஏற்படுத்தும், ஒப்பந்தம். அவ்வளவு தான்.

அந்த ஒப்பந்தம் அப்படி ஒன்றும் நுணுகி ஆராயும் அளவுக்குப் பெரிதாக இருப்பதாகத் தெரியவில்லை! நமக்குத் தேவை ஓரு நிலையான அரசாங்கம்.  அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு மக்களுக்கு நல்ல சேவைகளைக் கொடுக்க நல்லதொரு அரசாங்கம் தேவை. அதே சமயத்தில் பிரதமர் அன்வார் இப்ராகிம் தனது கடமைகளைச் செய்ய வேண்டும். அதற்கு அனைத்து நாடாளுமன்றமும் ஒத்துழைக்க வேண்டும்.

இது தான் நிலைமை. ஏன் ம.இ.கா.வில் இந்த தடுமாற்றம்? அதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். இவர்கள் ஏனோ  கொஞ்சம் ஆட்டம் காட்டுகிறார்கள்! எதையோ எதிர்பார்க்கிறார்கள் என்று சொல்லலாம்!

அவர்களின் தடுமாற்றம் ஒரு முடிவுக்கு வரும் என நம்பலாம்!

No comments:

Post a Comment